Thursday, December 28, 2017

தென்காசியில் நில அதிர்வு

Added : டிச 28, 2017 00:06

திருநெல்வேலி: தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு லேசான நிலஅதிர்வு
உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியில் தெருக்களுக்கு ஓடிவந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு 9:00 மணிக்கு லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. அச்சன்புதுார், மேக்கரை மற்றும் கேரளாவில் ஆரியங்காவு, தென்மலை, புனலுார் ஆகிய இடங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதில் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளன. ஏதோ பாதிப்பு ஏற்படுகிறது என உணர்ந்த மக்கள் தெருக்களுக்கு ஓடிவந்தனர். . நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை துவங்கி நெல்லை வழியாக துாத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரை வரையிலும் பூமியின் அடுக்குகளில் பிளவு இருப்பது ஏற்கனவேகண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டில் செங்கோட்டை மேக்கரை அருகே அடவிநயினார் அணை அருகே நிலஅதிர்வு சுமார் 2 ரிக்டர் அளவுக்கு இருந்தது.
அரசு பஸ்சில் கலெக்டர் பாட்டு பாடி குதூகலம்

Added : டிச 28, 2017 00:08

கடலுார்: மனுநீதி நாள் முகாமில் பங்கேற்க, அரசு பஸ்சில் பயணம் செய்த கடலுார் கலெக்டர்,
இந்தியில் பாட்டு பாடி அசத்தினார்.

கடலுார் மாவட்டத்தில், அனைத்து அதிகாரிகளும் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக, மனுநீதி நாள் முகாம், கிராமசபா போன்றவற்றில் பங்கேற்க, கலெக்டர் பிரசாந்த் வடநேரே, சக அதிகாரிகளுடன் அரசு பஸ்சில் பயணம் செய்து வருகிறார். பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி கிராமத்தில், மனுநீதி நாள் மற்றும் கிராமசபா கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க, கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு, அரசு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை, 8:00 மணிக்கு பஸ் புறப்பட்டதும், பணிகள் காரணமாக, அதிகாரிகள் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தனர். அவர்களது டென்ஷனை குறைக்க முடிவு செய்த கலெக்டர்,
பாட்டு பாடுமாறு, அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.கலெக்டர் எதிரில் பாட்டு பாடுவதற்கு அதிகாரிகள் தயங்க, முதல் பாடலை, கலெக்டரே இந்தியில் பாடி, பலத்த கைதட்டலை பெற்றார். இதையடுத்து, டி.ஆர்.ஓ., விஜயா, தமிழில் பாடினார். பின், மற்ற அதிகாரிகளும் பல்வேறு பாடல்களை பாடி, அசத்தியபடி பயணத்தை தொடர்ந்தனர்.பாடலுக்கு ஏற்றவாறு, இருக்கையில் இருந்தபடியே, அதிகாரிகள் ஆடி மகிழ்ந்தனர்.
சிறை விதிகளை படிக்கும் லாலு பிரசாத்
சொகுசு வசதி இல்லாததால் புலம்பல்


ராஞ்சி: இதற்கு முன், ஏழு முறை சிறை சென்றிருந்தாலும், முதல் முறையாக சிறை விதிகளின்படி நடத்தப்படுவதால், சிறை விதிகள் குறித்து படித்து வருகிறார், பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான, லாலு பிரசாத் யாதவ்.



பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீது, கால்நடை தீவன ஊழல் வழக்குகள் உள்ளன. ஏற்கனவே ஒரு வழக்கில் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை பெற்ற லாலு, ஜாமினில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில், மற்றொரு ஊழல் வழக்கில் அவரை குற்றவாளி என, ஜார்க்கண்ட் மாநிலம்,

ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. தண்டனை விபரம், 2018, ஜன., 3ல் அறிவிக்கப்பட உள்ளது.

முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலானபா.ஜ., அரசு அமைந்துள்ள ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள சிறையில், லாலு பிரசாத் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன், ஊழல் வழக்குகளில், பீஹார் சிறையில், ஐந்து முறையும், ஜார்க்கண்ட் சிறையில், இரண்டு முறையும் அவர் அடைக்கப் பட்டுள்ளார்.ஆனால், அப்போது ஆட்சி, அதிகாரம் கையில் இருந்ததால், சிறையில் இருந்தாலும், சொகுசுவசதிகள் அனைத்தும் கிடைத்தன.

ஜார்க்கண்ட் சிறையில், 2013ல், லாலு அடைக்கப் பட்டிருந்தபோது, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாஅரசு அமைந்திருந்தது. லாலுவின் கூட்டணி கட்சி என்பதால், அரசு விருந்தினர் மாளிகையை, சிறை யாக மாற்றி, அதில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது, ஹோத்வார் மத்திய சிறையில், லாலு அடைக்கப்பட்டு உள்ளார். அரசியல் கைதிகள்,

ஆறு பேரை அடைக்கக் கூடிய பகுதியில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு, 'டிவி' மற்றும் நாளிதழ்கள் வழங்கப் படுகின்றன.ஒரு வாரத்தில் மூன்று பேர் மட்டுமே சந்திக்க முடியும் என்பது சிறை விதி. சிறையில்அடைக்கப்பட்ட சில மணி நேரத்தி லேயே மூன்று பேரை, லாலு சந்தித்து உள்ளார். மற்றவர்களுக்கு அனுமதி அளிக்க படவில்லை. இதையடுத்து, தற்போது சிறை விதிகள் குறித்து லாலு பிரசாத் படித்து வருவ தாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்த்ரைடிஸ் பயணியருக்கு சலுகை தர இயலாது

Added : டிச 28, 2017 06:12




புதுடில்லி: ராஜ்யசபாவில், ரயில்வே இணையமைச்சர், ராஜன் கோஹைன், எழுத்து மூலம் அளித்த பதிலில், 'ஆர்த்ரைடிஸ் எனப்படும், மூட்டு அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள பயணியருக்கு, சிறப்பு ஒதுக்கீடு இல்லை; கட்டணத்தில் சலுகையும் அளிக்க இயலாது' என, கூறியுள்ளார். ரயில் பயணியருக்கு, ஏற்கனவே, 50 பிரிவுகளில் சலுகைகள் அளிக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்படுவதால், இதற்கு மேல் சலுகை அளிக்க இயலாது என, அமைச்சர் தெரிவித்தார்.
திருமலையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை

Added : டிச 28, 2017 02:54 | 



  திருப்பதி : 'திருமலையில், இந்தாண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவும் நடக்காது' என, தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி, அனில் குமார் சிங்கால் கூறியதாவது: திருமலையில் எப்போதும், ஆகம விதிப்படி நடக்கும் உற்சவங்கள், தெலுங்கு புத்தாண்டான உகாதி மட்டுமே விமரிசையாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசி, உகாதி, பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களின் போது, திருமலை ஏழுமலையான் கோவில், மாட வீதிகளில், மலர் அலங்காரங்கள், மின் விளக்கு அலங்காரங்கள் உள்ளிட்டவை செய்யப்படும்.

ஆங்கில புத்தாண்டிற்கு, திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் வருவர். அதனால், அவர்களுக்காக சில அலங்காரங்கள் செய்வது வழக்கம். ஆனால், இம்முறை ஆந்திர அறநிலையத்துறை, 'ஆங்கில புத்தாண்டின் போது, கோவில்களில் எவ்வித அலங்காரங்களும் செய்யக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளது. அதனால், திருமலையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ஏதும் நடக்காது. வைகுண்ட ஏகாதசியின் போது செய்த அலங்காரங்கள், பக்தர்களின் பார்வைக்காக ஒரு வாரத்திற்கு அப்படியே வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கலுக்கு 'லீவு'; சர்ச்சைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி

Added : டிச 28, 2017 04:49 |



வரும் ஆண்டில், பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்து, இந்த ஆண்டில் ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்திய அரசு, முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தமிழகத்தில், பொங்கல் பண்டிகையன்று, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் உட்பட, பல மாநிலங்களில், அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்தாண்டு பொங்கலுக்கு மத்திய அரசு, கட்டாய விடுமுறை அறிவிக்கவில்லை; விருப்பம் உள்ளோர், விடுப்பு எடுக்க அனுமதித்திருந்தது. அதற்கு, தமிழகத்தில் உள்ள, மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், மத்திய அரசு தன் அறிவிப்பை திரும்ப பெற்றது.

இந்நிலையில், 2018க்கான, விடுமுறை பட்டியலை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில், பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோல, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, புனித வெள்ளி, மிலாடிநபி உள்ளிட்ட, 17 தினங்கள், 2018ல், கட்டாய விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஜன., 1, ஹோலி, ஓணம், சிவராத்திரி உள்ளிட்ட, 18 நாட்கள், விருப்ப விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

விடுமுறை நாட்களை, பல்வேறு துறைகளின் அதிகாரிகள் அடங்கிய, தமிழ்நாடு பிராந்திய, மத்திய அரசு ஊழியர் நல சங்க ஒருங்கிணைப்பு குழு கூடி முடிவெடுத்துள்ளது.

- நமது நிருபர் -

தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்குவது மார்ச் மாதம் அமலுக்கு வரும்




ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் பணி மார்ச் மாதம் அமலுக்கு வரும் என தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 28, 2017, 04:00 AM

திருமலை,
திருமலையில் உள்ள அன்னமயபவனில் தேவஸ்தான மூத்த அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 2 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசிக்க, கடந்த 18–ந்தேதியில் இருந்து 23–ந்தேதி வரை திருமலையில் 14 இடங்களில் 117 கவுண்ட்டர்களில் ஆதார் அட்டையின் மூலமாக தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட் டோக்கன்) வழங்கப்பட்டது. முதல் ஐந்து நாட்கள் மொத்தம் 60 ஆயிரம் பேருக்கு தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட்டது. 23–ந்தேதி 18 ஆயிரம் பேருக்கு தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட்டது. தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டத்தைப் பற்றி ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் மூலமாக பக்தர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதற்கு பக்தர்கள், இந்தத் திட்டம் சிறப்பாக உள்ளது, அதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என 90 சதவீதம் பக்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன பக்தர்களுக்கு தரிசன அனுமதி சீட்டு கொடுத்து முடிந்ததும், அந்தத் தரிசன அனுமதி சீட்டு கிடைக்க பெறாத திவ்ய தரிசன பக்தர்கள் பலர் திருமலைக்கு வந்து தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டையை பெற்று விரைவில் சாமி தரிசனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டையை எடுத்து வராத பக்தர்கள் பலர் வழக்கம்போல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் சென்று ஏழுமலையானை தரிசித்தனர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்க ஒரு பக்தருக்கு 33 வினாடிகள் ஆகிறது. 33 வினாடிகளை மேலும் குறைத்து இன்னும் குறைந்த நேரத்தில் தரிசன அனுமதி அட்டை வழங்க கம்ப்யூட்டர் மென்பொருள் தொழில் நுட்பத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதம் நிரந்தரமாக அமலுக்கு வரும்.

திருமலையில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களைபோல், திருப்பதியிலும் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்படும். திருப்பதியில் எங்கெங்கு கவுண்ட்டர்களை அமைக்கலாம் என ஏற்கனவே திட்டமிட்டு உள்ளோம். திருப்பதியில் தரிசன அனுமதி அட்டை வழங்க விரைவில் கவுண்ட்டர்கள் அமைக்கும் பணியை என்ஜினீயர்கள் தொடங்குவார்கள்.

இவ்வாறு அனில்குமார் சிங்கால் பேசினார்.

NEWS TODAY 29.01.2026