Wednesday, January 3, 2018

அரசு மருத்துவமனையில், 'ஆப்பரேஷன்'; அரியலூர் பெண் கலெக்டர் அசத்தல்

Added : ஜன 03, 2018 01:34 | 



பெரம்பலுார் : அரியலுார் பெண் கலெக்டர், அரசு மருத்துவமனையில், குடல்வால் ஆப்பரேஷன் செய்து கொண்டார்.

அரியலுார் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா, 38. இவர், 2017, ஜூலை, 12ல் பொறுப்பேற்றது முதலே, மக்கள் நலனில், அக்கறையுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சில நாட்களாக, இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில், கலெக்டருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

தொடர்ந்து, குடும்பத்தாரிடம், அரியலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூற, அவர்களும் அழைத்துச் சென்றனர். கலெக்டரை பரிசோதித்த டாக்டர்கள், குடல் வால் வளர்ந்துள்ளதால், உடனடியாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அங்கேயே, ஆப்பரேஷன் செய்யுமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

நேற்று முன்தினம் இரவு, முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், கலெக்டருக்கு ஆப்பரேஷன் செய்தனர். ஆப்பரேஷனுக்கு பின், அங்கேயே உள்நோயாளியாக தங்கி, சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, நலமுடன் உள்ளார்.

கலெக்டராக உள்ளவர், தனியார் மருத்துவமனைகளை தவிர்த்து, அரசு மருத்துவமனையில் ஆப்பரேஷன் செய்து, சிகிச்சை பெற்று வருவதை அறிந்த பொதுமக்கள், அவரை நேரில் பார்த்து பாராட்டி, நலம் பெற வாழ்த்தினர்.
வக்கீல் கொலை: 6 பேர் கைது : கள்ளக்குறிச்சி அருகே பதற்றம்

Added : ஜன 03, 2018 01:23

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், வக்கீலை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை கும்பலை சேர்ந்த, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனுாரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் நாராயணன்,42; வக்கீல். இவரது மனைவி வெண்ணிலா, 38; இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயபிரகாஷ் நாராயணன், கள்ளக்குறிச்சியில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:30 மணிக்கு, ராயல் என்பீல்டு புல்லட்டில், தென்கீரனுாருக்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து, இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல், ஜெயபிரகாஷ் நாராயணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பிச் சென்றது.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் உடலை கைப்பற்றி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயபிரகாஷ் நாராயணனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த, கிருஷ்ணனுக்கும்,40, கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. 


மேலும், ஜெயபிரகாஷ் நாராயணன், கடந்த சில மாதங்களுக்கு முன், தன் நிலத்திற்கு, ஏரியிலிருந்து வண்டல் எடுத்தபோது, முறைகேடாக மண் எடுப்பதாக கிருஷ்ணன், அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். இதனால், விரோதம் அதிகமானது.
இந்நிலையில்,சீனுவாசன் என்பருடன், கிருஷ்ணனுக்கு தகராறு ஏற்பட்டது.
அதில் ஜெயபிரகாஷ் நாராயணன், சீனுவாசனுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்ததை அடுத்து, கிருஷ்ணனும், அவரது சகோதரரும் சிறை சென்றுள்ளனர்.
ஜெயபிரகாஷ் நாராயணன் தனக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கருதிய கிருஷ்ணன், அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.


நேற்று முன்தினம் நள்ளிரவு, கிருஷ்ணனும், அவரது சகோதரர் வேலு, 43, மற்றும் 25 - 35 வயதுடைய நான்கு பேர் சேர்ந்து கொலை செய்தது, போலீஸ் விசாரணையில், தெரிய வந்தது.
இதனால், ஆத்திரமடைந்த, ஜெயபிரகாஷ் நாராயணனின் உறவினர்கள், தென்கீரனுாரில் உள்ள கிருஷ்ணனின் வீட்டை தீ வைத்து கொளுத்தினர்.
கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர்.
இக்கொலையில், தொடர்புடைய கிருஷ்ணன் உட்பட, ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலையில் கூலிப்படையினருக்கு தொடர்புள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தென்கீரனுாரில் பதற்றத்தை தணிக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று அறிவிப்பு

Added : ஜன 03, 2018 01:01

சென்னை: பொங்கல் சிறப்பு பஸ்கள், முன்பதிவு மையங்கள் குறித்த அறிவிப்பு, இன்று வெளியாகிறது. தமிழர் பண்டிகையான பொங்கல், வரும், 14ல் கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் இருந்து, வெளியூர் செல்லும் பஸ்களில், 90 சதவீத முன்பதிவு முடிந்து விட்டது. மாநிலத்தின் பல நகரங்களில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்வோர், சிறப்பு பஸ்களுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னை, பல்லவன் இல்லத்தில், இன்று மாலை நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பின், சிறப்பு பஸ்கள், முன்பதிவு மையங்கள் குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிக்க உள்ளார்.
சித்தா டாக்டர்கள் 100 பேர் நியமனம்

Added : ஜன 03, 2018 00:43

சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 100 சித்தா டாக்டர்கள் உட்பட, 105 பேருக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர் பழனிசாமி வழங்கினார். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற, சித்தாவில், 100 பேர்; ஆயுர்வேதத்தில், ஒருவர்; ஓமியோபதியில், நான்கு பேர் என, 105 உதவி மருத்துவ அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள முதல்வரின், முகாம் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

முதல்வர் பழனிசாமி, 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், 105 மருத்துவர்களுக்கு, பணி ஆணை வழங்கப்படுகிறது. தமிழகத்தில், பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை, முறையாக தரப்படுகிறது. நாட்டிலேயே, சுகாதாரத்தில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. பணியாணை பெறுகின்ற, அனைத்து மருத்துவர்களும், சிறந்த முறையில் பணியாற்றி, மக்கள் சேவை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலர் கூடுதல் பொறுப்பு, சண்முகம், சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நஷ்டத்தில் இயங்கும் கிளைகளுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி, 'நோட்டீஸ்'

Added : ஜன 03, 2018 01:20


புதுடில்லி: நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத் துறை நிறுவனமான, பஞ்சாப் நேஷனல் வங்கி, நடப்பு ஆண்டில், நஷ்டத்தில் இயங்கும், 300 கிளைகளை மூட திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தில், வங்கிகளை லாபகர மாக மாற்றுவது குறித்து விவாதித்தார்.
அப்போது, வங்கித் துறையில், செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கு, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.


அதிலொரு முடிவாக, நஷ்டத்தில் இயங்கும், 300 கிளைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மூட, பஞ்சாப் நேஷனல் வங்கி முடிவு செய்துள்ளது.


இது குறித்து, அந்த வங்கியின் நிர்வாக இயக்குனர், சுனில் மேத்தா கூறியதாவது:
நாடு முழுவதும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, 7,000 கிளைகள் உள்ளன. அவற்றில், நஷ்டத்தில் இயங்கும், 300 வங்கிக் கிளைகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுஉள்ளது.
நடப்பு ஆண்டிற்குள், வங்கியை லாபகரமானதாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும். 


ஓராண்டிற்குப் பின்னரும் நஷ்டத்தில் இயங்கினால், அந்த வங்கிகளை மூட அல்லது மற்ற கிளைகளுடன் இணைப்பது அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.



ரூ.2,000 கள்ள நோட்டு  வங்கிகளில் ஊடுருவலா?
 
வங்கிகளுக்கு நேரடியாக சென்று வாங்கும், 2,௦௦௦ ரூபாய் நோட்டுகளில், கள்ள நோட்டு கலந்திருப்பது, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.2000,கள்ள நோட்டு,வங்கி,ஊடுருவலா?

வங்கி ஏ.டி.எம்.,களில், கள்ள நோட்டு கலந்து வருவது வாடிக்கையாகி விட்டது. சமீப காலமாக, வங்கிக் கிளைகளில், நேரடியாக பணம் எடுப்போருக்கும், கள்ள நோட்டு கிடைப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, 2,000 ரூபாய் நோட்டுகள் தான், இப்படி கலந்து வருகின்றன. அவற்றை

திருப்பிக் கொடுத்தால், அதை அந்த கிளையிலேயே மாற்றித் தர மறுக்கின்றனர். அத்துடன், காவல் நிலையத்திலும் புகார் தருவர். தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தை இழந்தது மட்டுமின்றி, காவல் நிலையத்திற்கும் அலைய வேண்டியுள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

சமீபத்தில், சென்னையில், தேசியமய வங்கி வாடிக்கையாளர் ஒருவருக்கு, அதன் கிளையில் தரப்பட்ட பணத்தில், 2,000 ரூபாய் கள்ள நோட்டு வந்தது. வங்கி ஊழியர்கள், சிரத்தையாக இருந்திருந்தால், அந்த நோட்டு, கிளைக்குள் வந்திருக்காது என, அவரை போல் ஏமாந்தவர்கள், புகார் கூறுகின்றனர்.

இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலர், வெங்கடாசலம் கூறியதாவது: வங்கி ஊழியர்கள், கள்ள நோட்டுகள் சரிபார்க்கும் இயந்திரத்தில், சோதித்து பார்த்த பிறகே, அவற்றை வாங்க வேண்டும். எனினும், தமிழகத்தில் உள்ள, 16

ஆயிரம் கிளைகளில், பல கிளைகளில், அந்த கருவிகள் இல்லை. அவற்றை, அரசு வழங்க வேண்டும்.

மேலும், வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்களும் பொறுமை காப்பதில்லை; அவசரப்படுத்துவதால், ஊழியர்கள், கள்ள நோட்டை வாங்க நேரிடுகிறது. இருப்பினும், வங்கி ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


எனக்கே தெரியாது,கட்சி,பெயர்,சின்னம்,நடிகர்,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்,பளிச்அரசியலில் குதித்துள்ள, நடிகர் ரஜினி, தன் கட்சியின் பெயர், சின்னம் குறித்து, தனக்கு எதுவும் தெரியாது; போக போக தெரியும் என, நேற்று காலையில், சினிமா பாணியில் தெரிவித்தார். மாலையில், 'கட்சி கொடி தயாரிக்கும் பணி நடக்கிறது. பெயர், சின்னம் பற்றி விரைவில் அறிவிப்பேன்' என, பதில் அளித்தார். அதோடு, 'ஆன்மிக அரசியல்' குறித்தும் விரிவான விளக்கம் அளித்தார். தன் அரசியல் பிரவேசத்தை, உலகறிய செய்ததற்காக, பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தொடர்ந்து ஆதரவு தரவும், வேண்டுகோள் விடுத்தார்.



நடிகர் ரஜினியின், அரசியல் பிரவேசம், அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தையும், அரசியல் கட்சிகளிடம் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதையடுத்து, அவர், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

தன் ரசிகர்களையும், பொது மக்களையும் ஒருங்கிணைப்பதற்காக, ரசிகர் மன்றம் பெயரில், இணைய தளம் மற்றும், 'மொபைல் ஆப்' உருவாக்கி உள்ளார்.அதைத் தொடர்ந்து, மன்றத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி வேகம் பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும், ஆர்வமுடன் உறுப்பினராகி வருகின்றனர்.

நேற்று காலையில், சென்னை, போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன், நிருபர்களிடம் பேசிய ரஜினி, ''என் கட்சி பெயர், சின்னம் குறித்து எனக்கே தெரியாது; போக போக தான் தெரியும்,'' என்றார்.

கொடி தயாரிப்பு :

'ஆன்மிக அரசியல்' கடுமையாக விமர்சிக்கப்படுவது குறித்து கேட்ட போது, 'உண்மையான, நேர்மையான, நாணயமான, ஜாதி, மதச் சார்பற்ற அரசியலே, ஆன்மிக அரசியல்' என, பதில் அளித்தார். சென்னையில், நேற்று மாலை, பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'கட்சி பெயர், சின்னம், கொடி தயாரிப்பு பணி நடந்து வருகிறது' என்றார்.

சென்னையில் ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டது போல், பத்திரிகையாளர்களை சந்தித்து, தனித்தனியே பேசி, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது, அவர் பேசியதாவது: சென்னையில், ஆறு நாட்களாக, ரசிகர்களை சந்தித்து பேசிய விபரங்களை, உலகமறிய செய்த பத்திரிகைகளுக்கு நன்றி. நானும் சிறு வயதில், பத்திரிகையில் பிழை திருத்துபவராக பணியாற்றி உள்ளேன். நண்பர் ராமசந்திர ராவ், என்னை கன்னட தினசரி பத்திரிகை ஒன்றில், பிழை திருத்துனராக சேர்த்து விட்டார். அங்கு, இரண்டு மாதம் பணியாற்றினேன்.

தமிழ் வார இதழ் ஒன்றுக்கு, 1976ல், பேட்டி கொடுத்தேன். அதன் பின், 1996ல், பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதன் பின், இன்று வரை, அறிக்கை மட்டுமே கொடுத்து வருகிறேன். பத்திரிகையாளர்களை எப்படி கையாள வேண்டும் என, எனக்கு தெரியவில்லை. நான் ஏதாவது சொன்னால், அது, பெரிய விவாதமாகி விடுகிறது. இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமானது மட்டுமே. நான் ஏதாவது தவறாக செய்திருந்தால் மன்னிக்கவும்.

நம் எல்லாருக்கும் ஒரு கடமை உள்ளது. சுதந்திரப் போராட்டத்தை போல்,
தற்போது, ஜனநாயகப் போராட்டம் துவங்கி உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க, நிறைய போராட்டங்கள், தமிழகத்திலிருந்து தான் துவங்கி உள்ளன.

அரசியல் புரட்சி:

இங்கிருந்து, அரசியல் புரட்சி துவங்க வேண்டும் என்பதே, என் ஆசை. இந்த தலைமுறையில், இந்த போராட்டம் துவங்கினால், வரும் தலைமுறையினரும் சந்தோஷப்படுவர். அதற்கு, உங்கள் ஒத்துழைப்பு தேவை. விரைவில், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.


தனி விதம்!

நடிகர் ரஜினி, யாரை சந்திக்கிறாரோ, அது தொடர்பான விஷயங்களை நினைவுகூர்வதை வழக்கமாக்கி உள்ளார். சமீபத்தில், நெல்லை, கோவை, மதுரை, சென்னை மாவட்ட ரசிகர்களை சந்தித்த ரஜினி, அந்தந்த மாவட்ட மக்கள் குறித்தும், அந்தந்த ஊரில் நடந்த சம்பவங்களையும் கோடிட்டு காட்டிய பின்னரே, பேச்சை துவக்கினார். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோதும், இரண்டு மாதம், கன்னட பத்திரிகையில் வேலை பார்த்ததாக கூறினார்.

பல ஆயிரம் பேர் :

ரஜினி ஆரம்பித்துள்ள மன்றத்தில், இதுவரை, பல ஆயிரம் பேர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி மன்றம் பெயரில், இணையதளம் மற்றும், 'மொபைல் ஆப்' செயலியை துவக்கியுள்ள ரஜினி, அதில் சேருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அதன்படி, ரசிகர் மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என, பல ஆயிரம் பேர் இணைந்திருப்பதாக, ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

- நமது நிருபர் -

NEWS TODAY 31.01.2026