Wednesday, January 3, 2018

ரஜினியை ‘ஆடு ராஜா ஆடு’ என விமரிசித்துள்ள இயக்குநர் விசு! ‘வான்கோழிகள் மயிலாகுமா?’ எனவும் கேள்வி...!

y DIN | Published on : 02nd January 2018 02:24 PM

2017-ம் ஆண்டின் கடைசி நாளன்று வருகின்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இவருடைந்த அறிவிப்பிற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் ஒருசேர எழுந்து வரும் நிலையில் தற்போது இயக்குநர் விசு அவர்களும் இது குறித்த விமரிசனத்தை முன் வைத்துள்ளார்.

முதலில் அதிமுக-வில் இருந்த இயக்குநர் விசு பின்னர் பாஜக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போதைய தமிழக அரசியல் சூழலைப் பற்றிய தனது கருத்துகளை அவ்வப்பது முன் வைத்துக் கொண்டும் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு கமலின் அரசியல் வருகையைக் கடுமையாக எதிர்த்துப் பதிவிட்டிருந்த இவர், தற்போது ரஜினியின் அரசியல் வருகை குறித்தும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

“கான மயிலாட, கண்டிருந்த வான்கோழி,
தானும் அதுவாகப் பாவித்து தன் பொல்லாச்சிறகை விரித்து ஆடினால்?!

காட்டுல மயில் அழகா தோகையை விரிச்சு சூப்பரா dance ஆடுமாம்...
உடனே வான் கோழிக்கு அடி வயிறு எரியுமாம்
பொறாமை புடுங்கித் தின்னுமாம்...

அதுவும் அசிங்கமான உடம்பை வச்சுக்கிட்டு
கண்றாவியா தத்தக்கா பொத்தக்கான்னு dance ஆடுமாம்...
ரஜினி நீ மயில்... மற்ற உதிரி கோஷ்டிகள் வான்கோழி...
நீ ஆடு ராஜா ஆடு...

உன் இறகால் நொந்து போன தமிழ்நாட்டு மக்களின்
இருதயங்களை ஆன்மீக வருடல் வருடி இருக்கிறாய்...
நன்றி ரஜினி நன்றி...!

-இயக்குநர் விசு”

இவ்வாறு, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும் ரஜினி குறிப்பிட்ட ஆன்மிக அரசியல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் இயக்குநர் விசு.

ஆன்மிக அரசியல் என்றால் என்ன?

By DIN | Published on : 03rd January 2018 01:34 AM




தான் தெரிவித்த ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


சென்னை போயஸ் கார்டனில் காரில் அமர்ந்தபடியே செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ஆன்மிக அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ''ஆன்மிக அரசியல் என்றால் உண்மையான, நேர்மையான, நாணயமான, ஜாதி, மதச்சார்ப்பற்ற அறவழி அரசியல் ஆகும். ஆன்மிகம் ஆத்மாவோடு தொடர்புடையது'' என்று விளக்கம் அளித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, தனது அரசியல் ஆன்மிக அரசியலாக இருக்கும் என்று பேசினார். இது பல்வேறு சர்ச்சைகளையும், 


விவாதங்களையும் கிளப்பின. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆன்மிக அரசியலுக்கான விளக்கத்தை நடிகர் ரஜினிகாந்த் செவ்வாயக்கிழமை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் நடத்துவது ஜனநாயகப் போராட்டம்: அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி

By DIN  |   Published on : 03rd January 2018 01:37 AM  |
rajini-7zc
சுதந்திரப் போராட்டம் போன்று, இது எனது ஜனநாயகப் போராட்டம் என்று அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்துத் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சென்னையில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவர் பேசியது:-
ஆரம்ப கால கட்டத்தில் இரண்டு மாதங்கள் பத்திரிகையில் வேலை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத நிலையில், ஏதாவது வேலைக்குப் போக வேண்டும் என்று தோன்றியது. அப்போது என் நண்பர் சந்திரசேகர் ராவ், பத்திரிகையில் பிழை திருத்துநராக வேலை பார்த்து வந்தார். 'சம்யுக்த கர்நாடக' என்ற தினசரி பத்திரிகையில் என்னையும் வேலைக்குச் சேர்த்து விட்டார். 2 மாதங்கள் அங்கே பிழை திருத்துநராக வேலை பார்த்தேன்.


முதல் பேட்டி: சென்னைக்கு வந்த பின்னர் 1976-ஆம் ஆண்டு எனது முதல் பேட்டி 'பொம்மை' இதழில் வந்தது. நான் எப்போதுமே பத்திரிகையாளர்களை விட்டு விலகியே இருப்பேன். ஏனென்றால் அரசியல் குறித்து கேள்வி எழுப்பும் போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியாது. ஆனால், அரசியலுக்கு வந்து விட்டேன். இத்தனை நாள்களாக நடந்த 'ரசிகர்கள் சந்திப்பை' உலகம் முழுவதும் கொண்டு போய்ச் சேர்த்தீர்கள். நேர்மையான வழியில் அந்த செய்திகள் வெளிவந்தன. 


சுதந்திரப் போராட்டம் மாதிரி இது ஜனநாயகப் போராட்டம் என்று நினைக்கிறேன். சுதந்திரத்துக்கான எல்லா போராட்டங்களும் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கியிருக்கின்றன. இதுவும் அப்படித்தான். ஊடகங்கள் இந்தப் போராட்டத்துக்கு துணையாக இருக்க வேண்டும் என்றார் ரஜினிகாந்த்.

தத்தளிக்கும் போக்குவரத்துக் கழகங்கள்

By பழ. நெடுமாறன்  |   Published on : 03rd January 2018 02:15 AM
 
மக்களுக்கு குறைந்த செலவில் போக்குவரத்து வசதி அளிப்பதற்காகத் தொடர்வண்டித்துறையை தேசிய மயமாக்கியது மத்திய அரசு. அதே நோக்கத்துடன் மாநில அரசுகள் பேருந்துகள் போக்குவரத்தைத் தேசியமயமாக்கின. இந்தியாவிலேயே தமிழ்நாடு இத்துறையில் சிறப்பான இடத்தினைப் பெற்றிருந்தது. கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்திலும் தமிழ்நாட்டின் சகல பகுதிகளுக்குச் செல்லும் வகையிலும் பயண வசதி கிடைத்தது. தமிழக அரசுக்குச் சொந்தமான 8 போக்குவரத்துக் கழகங்களின் மூலம் 23 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 12 ஆயிரம் பேருந்துகள் கிராமப்புறப் பகுதிகளில் இயங்குகின்றன.

நாள்தோறும் அரசுப் பேருந்துகளில் 2 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பயணம் செய்கின்றனர். 40 இலட்சம் மாணவர்களுக்கு இலவச பயணச் சீட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கான 50% மானியத்தை அரசு அளிக்கிறது. பாக்கியுள்ளதை போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கின்றன. இது தவிர விடுதலைப் போராட்டத் தியாகிகள், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்கள், மிகை நோயாளிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கும் இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. 


ஆனால், தமிழக அரசுப் போக்குவரத்துறையின் இப்போதைய நிலைமை அதிர்ச்சி தரத்தக்கதாக அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ரூ.3000 கோடி இழப்பு ஏற்படுகிறது. அரசு ரூ.1000 கோடி ரூபாய் மட்டுமே மானியமாகத் தருகிறது. இழப்பை ஈடுகட்டுவதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் அதனுடைய தலைமை அலுவலகங்கள், பேருந்து பணிமனைகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் வங்கிகளிலும், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதிக் கழகத்திலும் அடமானம் வைக்கப்பட்டு ஏறத்தாழ ரூ.15 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய பணம், தற்போதைய ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய பல்வேறு வகையான நிதி ஆகியவற்றைக் கொடுக்க முடியாத நிலைக்கு போக்குவரத்துக் கழக நிருவாகம் ஆளாகியுள்ளது. கடந்த 15 ஆண்டு காலமாக இத்தகைய விரும்பத்தகாத நிலைமை நீடித்து வருகிறது.


பேருந்து ஒன்றினை 6 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது சுமார் 7 இலட்சம் கிலோ மீட்டர்கள் ஓடிய பேருந்துகளை அதற்கு மேலும் பயன்படுத்துவது கூடாது. ஆனால், தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் உள்ள பேருந்துகளில் 70%க்கும் மேற்பட்டவை இந்த அபாயகரமான கட்டத்தைத் தாண்டியவையாகும். இதன் விளைவாக விபத்துகள் ஏற்பட்டு அப்பாவி மக்கள் பலியாகிறார்கள். நடுவழியிலேயே பேருந்துகள் பழுதாகி நிற்கின்றன. மக்கள் சாலைகளில் நின்று தவிக்கிறார்கள்.


இந்த நிலைமையில் ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் செய்த முறையீட்டின் விளைவாக கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி உயர் நீதிமன்றம் நடத்திய விசாரணையின்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய பணம் ரூ.1138.66 கோடியாகும். தற்போதைய ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய பணம் ரூ.5349.93 கோடியாகும். கடன்களுக்காகக் கட்ட வேண்டிய பணம் ரூ.10,576.29 கோடியாகும். இந்த அவல நிலைமையை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டனம் செய்தது. டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்த நிலைமையைச் சீர்படுத்துவதாக போக்குவரத்துத்துறையின் செயலாளர் அளித்த உறுதிமொழியை ஏற்று ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தொகை முழுவதையும் அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.


ஆனால், அக்டோபர் 9-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் அரசு சார்பில் இத்தொகை முழுமையும் ஒரே தவணையில் அளிக்க முடியாது எனவும், நவம்பர் 15 முதல் மூன்று மாதத்திற்கு ஒரு தவணை விகிதம் அளிப்பதாக உறுதி கூறப்பட்டது. தனது அதிருப்தியைப் பதிவு செய்த உயர்நீதிமன்றம் அக்டோபர் 16-ஆம் தேதிக்குள் ஓய்வுபெற்ற 25,846 ஊழியர்களுக்கு தலைக்கு ரூ.39 ஆயிரம் வீதம், ரூ.100.79 கோடியை அளிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது.
இதன்படி பணம் அளிக்கவும் போக்குவரத்துத்துறையால் இயலவில்லை. டிசம்பர் 25-ஆம் தேதிக்குள் ரூ.175 கோடி அளிப்பதாக உறுதி கூறியது. அது மட்டுமல்ல, கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு உயர் நீதிமன்றம் திறந்தவுடன் சனவரி 15-ஆம் தேதிக்குள் இரண்டாவது தவணையான ரூ.240 கோடியை அளிக்க வேண்டும் என்றும் மூன்றாவது தவணை குறித்து அன்று ஆணை பிறப்பிப்பதாகவும் அறிவித்துள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களுக்குரிய ஓய்வூதியத்தை நம்பி வாழும் முதியவர்களாவார்கள். அவர்களை தவிக்கவிட்டு வேடிக்கைப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமானது அல்ல. 


தனியார் நடத்தும் போக்குவரத்து நிறுவனங்கள் ஆதாயத்துடன் நடைபெறும்போது, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் இழப்புடன் இயங்குவது ஏன்? தேசியமயமாக்கும் கொள்கையே கேள்விக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது.


அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடைபெறும் ஊழல் இதற்கு முக்கியக் காரணமாகும். புதிய பேருந்துகள் வாங்குவதிலும், டயர்கள் மற்றும் உதிரி பாகங்கள் வாங்குவதிலும் பெரும் ஊழல் நடைபெறுகிறது. அரசுக்கு வேண்டாத ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை போக்குவரத்துக் கழகங்களின் தலைவர்களாக நியமிக்கும் போக்கு நீடிக்கிறது. இந்த அதிகாரிகள் ஆட்சி நிருவாகத்திற்கும், காவல் நிருவாகத்திற்கும் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் பெற்ற பயிற்சிக்கும் போக்குவரத்துத் துறைக்கும் எள் முனை அளவு கூட தொடர்பு இல்லை. இத்தகையவர்களால் எப்படித் திறம்பட செயல்பட முடியும்?


போக்குவரத்துக் கழகங்களின் இழப்பிற்கு மத்திய அரசின் போக்கு மற்றொரு காரணமாகும். மாநில அரசு நடத்தும் போக்குவரத்துக் கழகங்களுக்கு மத்திய அரசு வருமான வரி உள்பட பல்வேறு வரிகளை விதிக்கிறது. இதை எதிர்த்து ஆந்திர மாநில அரசு வழக்குத் தொடுத்தபோது உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு மத்திய அரசிற்குச் சாதகமாக அமைந்துவிட்டது. தொழில், வணிகம் ஆகியவற்றிற்கு வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கு உண்டு என அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பதின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மக்களுக்குப் போக்குவரத்து வசதிகளை குறைந்த செலவில் செய்து கொடுப்பதற்காகவும், தனியாரின் சுரண்டலை தடுப்பதற்காகவும், பேருந்து போக்குவரத்தை மாநில அரசுகள் நடத்த முன்வந்ததை மத்திய அரசு பாராட்டி அவற்றை ஊக்குவிக்கும் வகையில் வருமான வரி மற்றும் வரிகளை தள்ளுபடி செய்ய முன்வந்திருக்க வேண்டும். ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு வரி விதிப்பதைப் போல மாநில அரசின் நிறுவனங்களுக்கு வரி விதிப்பது எந்த வகையிலும் நீதியானது அல்ல.


போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு மத்திய அரசு சுங்க வரிகளை அதிகமான அளவிற்கு விதிக்கிறது. இந்த வரிகளை தள்ளுபடி செய்து சலுகை விலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை அளிப்பதற்கு மத்திய அரசு பிடிவாதமாக மறுக்கிறது. இந்தியாவில் கிடைக்கும் பெட்ரோலியப் பொருட்களில் 60% வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 40% மட்டுமே உள்நாட்டில் கிடைக்கிறது. உள்நாட்டில் கிடைக்கும் 40% கச்சா எண்ணெயிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றையாவது மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு சலுகை விலையில் மத்திய அரசு கொடுத்தால் இழப்பைக் குறைக்க முடியும்.


இந்தியாவில் உற்பத்தியாகும் சர்க்கரையில் 10% தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. இதில் பெரும்பகுதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், பொது வழங்கல் திட்டத்திற்காக மானிய விலையில் கணிசமான அளவு சர்க்கரையை மத்திய அரசு கட்டாயப்படுத்திப் பெற்றுக்கொள்கிறது. அதைப்போலவே சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு தேசிய அளவில் நான்காம் இடத்தில் உள்ளது. மத்திய அரசு தனது தேவைக்கான சிமெண்டை மானிய விலையில் பெற்றுக்கொள்கிறது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை, சிமெண்ட் ஆகியவற்றை மானிய விலையில் பெற்றுக்கொள்ளும் மத்திய அரசு, அதே சலுகையை மாநில அரசிற்கு பெட்ரோல், டீசல் வழங்குவதில் அளிக்க மறுக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் 269-ஆவது பிரிவின்படி தொடர்வண்டிப் பயணிகள் கட்டண வரிச் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் 1947-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி இந்த வரியை விதிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகள் பெற்றிருந்தன. 1961-ஆம் ஆண்டில் இந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக இந்த வரி தொடர்வண்டி பயண அடிப்படை கட்டணங்களோடு இணைக்கப்பட்டுவிட்டது.


ஆனால், இதற்கு ஈடான மானியம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. 1958-1960 ஆகிய இரண்டாண்டுகளில் மாநிலங்களுக்கு கிடைத்த பங்கின் அடிப்படையில் இந்த மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு கூறியது. ஆனால், அதற்குப் பிறகு தொடர்வண்டிக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டன. அதற்கு ஈடான மானியத்தை மத்திய அரசு வழங்க மறுக்கிறது. 1965-ஆம் ஆண்டிற்குப் பிறகு, மாநிலங்களுக்கு வழங்கப்படும் இந்த மானியத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.


பயணிகள் வருகையின்போது ஒவ்வொரு ஊரிலும், நகரத்திலும் அவர்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் போன்றவற்றை செய்ய வேண்டியப் பொறுப்பு மாநில அரசுகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உரியது. ஆனால், இதற்கான வரியை மத்திய அரசு திரட்டிக்கொள்கிறது. செலவை மட்டும் மாநிலங்களின் மீது சுமத்துகிறது.
மாநில அரசுகளுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகங்கள் செவ்வனே இயங்க வேண்டும் என்றால் மத்திய அரசின் உதவியும் இருக்க வேண்டும். வருமான வரி தள்ளுபடி, பெட்ரோல், டீசலுக்கான சுங்க வரி தள்ளுபடி போன்றவற்றை மத்திய அரசு அளிக்க முன்வர வேண்டும். மாநிலப் போக்குவரத்துக் கழகங்களில் ஊழலை முழுமையாக ஒழிப்பதற்கு அவற்றின் நிருவாக கட்டமைப்பை அடியோடு திருத்தியமைக்க வேண்டும். 


வாகனத் தொழில்நுட்ப அறிவுபெற்றவர்களை பொறுப்பான பதவிகளில் நியமிப்பதோடு, நிருவாகத்தில் தொழிலாளர்களுக்கும் பங்களிக்க வேண்டும். அப்போதுதான் தேசியமயமாக்கப்பட்ட பேருந்து போக்குவரத்துக் கழகங்கள் உண்மையில் மக்களுக்கு சிறந்த வகையில் தொண்டாற்ற முடியும்.

வங்கிகளும் பீதி செய்திகளும்!

By  எஸ்.ராமன்  |   Published on : 02nd January 2018 02:50 AM  |

வாராக்கடன்களின் சுமையால் சோர்ந்து போயிருந்த வங்கி துறைக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக, மறு முதலீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டு சில வாரங்கள் கூட முடியவில்லை. அதற்குள், நலிவுறும் வங்கிகளின் விதியை நிர்ணயிக்கும் நோக்கத்தில் புனையப்பட்ட "நிதி தீர்வு மற்றும் வைப்புத் தொகைக்கான காப்பீட்டுச் சட்ட மசோதா'வின் வரைவில், வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை சம்பந்தமான எதிர்மறை குறிப்பு பகுதிகள் வெளியாகி, அனைத்து தரப்பினரிடமிருந்தும் பல்வேறு மாறுபட்ட கருத்துகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. வங்கிகள் மட்டுமின்றி, காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற நிதி நிறுவனங்களும் இந்த மசோதோவின் வரம்புக்குள் அடங்கும்.

 ரூ.115 லட்சம் கோடி அளவிலான வங்கி டெபாசிட்டுகளின் பெரும்பகுதி, நடுத்தர மக்களின் பங்களிப்பாகும். அந்த டெபாசிட் தொகைதான் சிறு தொழில் முதல் பெரிய நிறுவனங்கள் வரை கடன் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. கல்வி, திருமணம், சொத்துகள் வாங்குதல், மருத்துவம், முதுமைக் காலம் போன்ற பல தேவைகளுக்காக சேமிக்கப்படும் வைப்புத் தொகையை அதன் முதிர்வு காலத்தில், வங்கி நிர்வாகத்தின் எந்த தலையீடுமின்றி, சுதந்திரமாக எடுத்து செலவழிக்கத்தான் ஒவ்வொரு வாடிக்கையாளரும் விரும்புவார். அந்த எதிர்பார்ப்புக்கு எதிர்மறையான எந்த நடவடிக்கையும், வங்கி வாடிக்கையாளரின் நம்பிக்கையை பாதித்துவிடும் வாய்ப்புகள் உள்ளன.


 உயர் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்ற மத்திய அரசின் பொருளாதாரக் கணைகளின் தாக்கத்திலிருந்து மெதுவாக மீண்டு வந்து கொண்டிருக்கும் நடுத்தர மக்களுக்கு, வங்கி வைப்புத் தொகை சார்ந்த எதிர்மறை செய்திகள், புதிய வகையான பீதியை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.


 வழக்கமான "பெயில்-அவுட்' முறையைப் பின்பற்றாமல், திவால் நிலைக்குத் தள்ளப்படும் வங்கிகளின் விதியை கையாள "பெயில்-இன்' என்ற மாறுபட்ட முறை இந்த வரைவில் குறிப்பிடப்பட்டிருப்பதுதான் அனைத்து விவாதங்கள் மற்றும் சந்தேகங்களுக்கும் வித்திட்டிருக்கிறது. இது மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மாறுபட்ட வழிமுறையாகும்.


 2008-ஆம் ஆண்டு அமெரிக்கா சந்தித்த பொருளாதார வீழ்ச்சி என்கிற சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டு திவாலான 400-க்கும் மேற்பட்ட வங்கிகளை அரசால் காப்பாற்ற முடியாமல் போன பிறகு, பிறந்த புதிய பொறுப்பு துறப்பு சித்தாந்தம்தான் "பெயில்-இன்' முறையாகும். திவால் நிலையில் தவிக்கும் வங்கிகளுக்கு போதிய நிதி ஆதாரத்தை வழங்கி அரசு காப்பாற்றினால் அது பெயில்-அவுட் முறையாகும்.


 பெயில்-இன் முறையில், நலிந்த வங்கிகள், தங்கள் நோய்க்கு சுயமாக மருந்து கண்டுபிடித்து, வாழ்வா அல்லது சாவா என்ற தங்கள் விதியை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அந்த விதி நிர்ணயப் போராட்டத்தில், வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி பலியாகும் அபாயம் காத்திருக்கிறது. தங்கள் நிர்வாக சீர்கேட்டினால் நலிவுறும் வங்கிகள், ஒரு தவறும் செய்யாத டெபாசிட்தாரர்களின் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பது அல்லது தப்பிப்பது இந்த முறையில் சாத்தியமாகும்.


 மேற்கண்ட புதிய சித்தாந்தம் அமெரிக்காவிலிருந்து ஜி-7 நாடுகளுக்குப் பரவி, இந்தியா போன்ற ஜி-20 நாடுகளுக்குள்ளும் கசிந்ததன் விளைவுதான் இந்த வரைவு மசோதாவில் அடங்கியிருக்கும் குறிப்புகளாகும்.


 மறு முதலீட்டு திட்டம் போன்ற ஆதரவு திட்டங்கள் மூலம் நலிவுற்றிருக்கும் அரசு வங்கிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளின் இனிய ஸ்வரங்கள் ஒருபுறம் ஒலித்துக்கொண்டிருக்க, மறுபுறம், அதற்கு எதிர்மறையான முறைகளை உள்ளடக்கிய திட்டங்களைப் பற்றிய அபஸ்வரங்கள் வெளியானது சற்று முரண்பாடுதான்.


 இந்த மசோதாவின்படி, நலிவுறும் வங்கிகளை, நிதி ஆதாரங்கள் மூலம் அரசு காப்பாற்றாது; அதற்கு பதிலாக, அந்த வங்கியின் விதியை புதிதாக அமைக்கப்படவுள்ள தீர்வுக் கழகம் நிர்ணயிக்கும். முற்றிலும் திவால், நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது போன்ற முக்கிய முடிவுகள் தீர்வுக் கழகத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்படும். வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையில் ஒரு பங்கு திருப்பித் தரப்படலாம். பெரும்பங்கு, பங்குகளாக அல்லது கடன் பத்திரங்களாக மாற்றப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
 இம்மாதிரி மாற்று யோசனைகள், வங்கி வியாபாரத்தின் ஆணிவேரான வாடிக்கையாளரின் நம்பிக்கையைச் சிதைத்து விடும் வல்லமை படைத்தவை என்று வாதிடப்படுகிறது.
 இந்திய வங்கி வரலாற்றில், கடந்த 40 ஆண்டுகளில் வங்கிகள் திவாலாகி, அதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை இழந்ததாக சரித்திரம் இல்லை. உண்மையில், டெபாசிட்தாரர்களை காப்பாற்றுவதற்காகவே, பாங்க் ஆஃப் தஞ்சாவூர், பாங்க் ஆஃப் தமிழ்நாடு, பாங்க் ஆஃப் கொச்சின், குளோபல் டிரஸ்ட் பாங்க் போன்ற நலிவுற்ற வங்கிகள் மற்ற வங்கிகளோடு இணைக்கப்பட்டன. இம்மாதிரி பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவிர, டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மூலம் ஒவ்வொரு வங்கி டெபாசிட்டுக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு பாதுகாப்பும் நடமுறையில் உள்ளது. ஆனால், இந்த காப்பீட்டு நிறுவனம் இதுவரை, 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிளான ப்ரீமியம் வருமானத்தை மட்டும்தான் ஈட்டியிருக்கிறதே தவிர, இழப்பீட்டு தொகைக்கான விண்ணப்பங்களைச் சந்தித்தது இல்லை.


 மேலும், சமீப காலங்களில் வெளியாகும் உடனடித் திருத்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் வங்கிகள் பற்றிய செய்திகளும் வங்கி வாடிக்கையாளர்களை பீதியில் ஆழ்த்துகின்றன. இந்திய வங்கித் துறைக்கு இந்த நடைமுறை புதிது அல்ல. ஒரு வங்கியின் வியாபாரச் செயல்பாடுகள் அபாய கட்டத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே, ரிசர்வ் வங்கி, அதற்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ், சம்பந்தப்பட்ட வங்கிக்கு, அதன் குறைபாடுகளை நீக்கும் வண்ணம், நுண்ணிய ஆலோசனைகளை வழங்குகிறது. புதிய கடன் வழங்குதல் மற்றும் செலவுக் கட்டுப்பாடுகள், வாராக்கடன் வசூலை வேகப்படுத்துதல் போன்ற ஆலோசனை நடவடிக்கைகள் இதில் அடங்கும்.


 சமீப காலங்களில், சுமார் 10 அரசு வங்கிகள் இந்த நடவடிக்கையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இது வங்கிகளையும் அதன் வாடிக்கையாளர்களையும் பாதுகாக்கும் திட்டம்தானே தவிர, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு மூடு விழா கொண்டாடும் திட்டம் இல்லை என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும். அந்த புரிதல்தான், தேவையற்ற பீதியைக் களைய உதவும்.


 வாராக்கடன்களின் வரலாறு காணாத வளர்ச்சிதான் வாடிக்கையாளர்களின் பீதிக்கு வித்திடும் இம்மாதிரி பல நிகழ்வுகளுக்கு காரணமாக அமைகின்றன. தங்களுக்கு ஒதுக்கப்படிருக்கும் சமூக கடமைகளைத் தவிர்த்து, மற்ற விஷயங்களில் அரசு வங்கிகள், முற்றிலும் வியாபார நோக்குடன்தான் செயல்பட வேண்டும்.
 ஆனால், வங்கி நிர்வாகங்கள் பல்வேறு காரணங்களினால், தங்கள் அன்றாடச் செயல்பாடுகளில் அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க முடிவதில்லை என்பதுதான் உண்மை நிலைமை ஆகும்.


 இதற்கான காரணத்தின் ஒரு பகுதி, அரசியல்வாதிகள் மூலம் தங்கள் பணி மேம்பாட்டை மேம்படுத்த துடிக்கும் சில உயர்நிலை வங்கி அதிகாரிகளைச் சாரும். கடன் வழங்கும் முறையில் நுழையும் அரசியல் தலையீடுகளைப் பற்றி, வங்கிகள், வங்கி கூட்டமைப்பின் தலைமைக்கு ரகசிய அறிக்கை அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
 சுமார் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது கூடும் வங்கி நிர்வாக இயக்குநர் குழுக்கள், வங்கியின் வருவாயை உலுக்கும் பல்வேறு செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து, குறைபாடுகளைக் களைவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதற்கு, இயக்குநர் குழுவினரின் வங்கி சார்ந்த நிபுணத்துவம் மிக அவசியம். அம்மாதிரி நிபுணத்துவத்தை மேம்படுத்தும் விதமாக தற்போதைய வங்கி இயக்குநர் குழுக்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வங்கியின் இயக்குநர் குழுவில் அங்கம் வகிக்கும் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி, வெறும் பார்வையாளராக மட்டும் செயல்படுவதைத் தவிர்த்து, ரிசர்வ் வங்கியின் பொருளாதார தூதுவராக இயங்க வேண்டும்.


 கடன் வழங்குதல், வழங்கிய கடன்களின் நிர்வாகம், கடன் வசூல் ஆகியவற்றில் வங்கிப் பணியாளர்களின் திறன் உடனடியாக பல மடங்கு உயர்த்தப்பட வேண்டியது மிக அவசியம். மக்களின் வரிப்பணம் வாராக்கடன்கள் மூலமாக வீணடிக்கப்படுவதை தவிர்க்கும் பொறுப்புணர்வோடு வங்கி அதிகாரிகள் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
 அரசு வங்கிகளின் தற்போதைய பொருளாதார நிலைமையை மேம்படுத்த நிதி ஆதாரத்துடன், அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாத, நாட்டு நலனில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படக்கூடிய, திறமையான அதிகார வர்க்கம் தேவை.


 தற்போதைய கருத்து கணிப்புப்படி, பல அரசு வங்கிகள் முடக்க நிலையில்தான் உள்ளன. இந்த முடக்க நிலைமையை அப்படியே நீடிக்கவிட முடியாது. அரசு வங்கிகள் திவால் ஆனால், அரசே திவால் ஆனது போல்தான் என்பதால், நலிவுற்ற வங்கிகளை வங்கி இணைப்புகள் மூலம் காப்பாற்றும் நடவடிக்கை இந்த சூழலில் வங்கித் துறைக்கு அருமருந்தாகக் கருதப்படுகிறது.
 நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் அரசு வங்கிகள் திவாலாகும் பேச்சுக்கே இடமில்லை. ஆகவே, புதிய மசோதாவினால், அரசு வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் தங்கள் வைப்புத்தொகை பறிபோய்விடும் என்ற வாடிக்கையாளர்களின் அச்சம் தேவையற்றது என்று உறுதியாகச் சொல்லலாம்.
 அவசியமற்ற அச்சங்களைத் தவிர்த்து, பல அரசு நிதி திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அரசு வங்கிகள் விரைவில் தற்போதைய நிலைமையிலிருந்து மீண்டு எழுந்து, புத்துணர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்ற நம் அனைவரது நல்வாழ்த்துகளை இங்கு பதிவு செய்வோம்.
ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களின் பயண அட்டை ரத்து

By DIN | Published on : 03rd January 2018 04:41 AM |

ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை தெற்கு ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் கூறியது :


சென்னை புறநகர் உள்ளிட்ட ரயில்களில் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவர்களின் முகங்களை விடியோ எடுத்து அதை பயண அட்டை புகைப் படத்துடன் ஒப்பிட்டு ரயில்வே பாதுகாப்புப் படை நடவடிக்கை எடுத்து வருகிறது. 


இனி வருங்காலங்களில் ரயில் படிக்கட்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணித்தால் அவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூரைத் தொடர்ந்து தற்போது சென்னையிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் ரூ.500க்கு தரிசனம் - கூடுதல் விலையில் புண்ணிய தீர்த்தம் : நீராடல் முதல் தரிசனம் வரை முறைகேடு

Added : ஜன 03, 2018 04:48

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் அதிகாரிகள் ஆசியுடன் உலா வரும் வெளிநபர்கள் சிறப்பு தரிசனத்திற்கு ரூ.500ம், தீர்த்த பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தத்திலும் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். ஆனால் இங்குள்ள சிலர் அடாவடி வசூலால், பக்தர்கள் மனவேதனையில் செல்கின்றனர். கோயிலுக்கு தினமும் 50 ஆயிரம் வரை பக்தர்கள் வருவதால், நெரிசலை தவிர்க்க சிறப்பு தரிசனம் (ஒரு நபருக்கு ரூபாய் 50) வழியாக செல்ல பக்தர்கள் காத்திருப்பர்.

அதிகாரிகள் கவனிப்பு? : இதனை பயன்படுத்தி கோயிலுக்குள் உலா வரும் வெளிநபர்கள், பக்தர்களிடம் ரூபாய் 300 முதல் 500 வரை வசூலித்து, அதிகாரிகளை கவனித்த(!) பிறகு 'முக்கிய கதவு' வழியாக பக்தர்களை அழைத்து செல்கின்றனர். இதனால் 50 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கடும் மன வேதனையடைகின்றனர்.

வெளிநபர்கள் அடாவடி : இதுதவிர பஞ்சமிர்தம், ருத்ரா அபிேஷக பூஜைக்கு ரூபாய் 1,500க்கு டிக்கெட் இருந்தாலும், டிக்கெட் இன்றி பக்தர்களை சிறப்பு பூஜையில் பங்கேற்க வைத்து, அவர்களிடம் ரூபாய் 3 முதல் 5 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். மேலும் கோயிலுக்குள் ஒரு நாளைக்கு 3 முதல் 5 ஆயிரம் வரை விற்கும் கோடி தீர்த்த பாட்டில், ரூபாய் 20 க்கு விற்க வேண்டும். ஆனால் விலை பட்டியல் பலகையை கவிழ்த்து வைத்து கூடுதலாக விற்கின்றனர்.இதற்கு கோயில் அதிகாரிகள் சிலரின் ஆசியுள்ளதால் நாளுக்கு நாள் வெளி நபர்களின் அடாவடி அதிகரித்து கொண்டே வருகிறது.

கூடுதல் வசூல் : மேலும் கோயிலுக்குள் புனித நீராட ஒரு நபர் ரூபாய் 25க்கு டிக்கெட் வாங்க வேண்டும். ஆனால், தீர்த்தம் ஊற்றும் பணியாளர்கள் கோயில் வாசல் முன் நின்று
பக்தரிடம் ரூபாய் 100 முதல் 300 வரை பேரம் பேசி (கூட்ட நெரிசல் அதிகமுள்ள நாளில் இதை விட கூடுதலாக வசூலிப்பது), குறுக்கு வழியில் நீராட அழைத்து சென்று வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி துணை தலைவர் சரவணன் கூறியதாவது: கோயில் அதிகாரி ஒருவரின் ஆசியுடன் கோயிலுக்குள் உலா வரும் வெளிநபர்கள் பக்தரிடம் தரிசனத்திற்கு ரூபாய் 300 முதல் 500 வசூலித்தும், நீராடும் பக்தரிடம் ரூபாய் 25ஐ விட தீர்த்தம் ஊற்றும் பணியாளர்கள் கூடுதலாக 200 வரை வசூலிக்கின்றனர். கோடி தீர்த்தம் ஒருபாட்டிலுக்கு கூடுதலாக ரூபாய் 10 விற்கின்றனர். முறைகேடுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால் வெளிநபர்கள் அடாவடி வசூலை தடுக்க முடியவில்லை. முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரி, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம், என்றார்.

கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி கூறுகையில், ''கோயிலுக்குள் சுற்றி திரியும் வெளிநபர்கள் யார் என கண்டுபிடித்து அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் விலைக்கு தீர்த்த பாட்டில் விற்பதாக பக்தர்கள் ஒருவர் கூட புகார் கொடுக்கவில்லை. இருப்பினும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

NEWS TODAY 31.01.2026