Thursday, January 4, 2018

நலம் விசாரித்த ரஜினி... முகம்கொடுக்காத ஸ்டாலின்... என்ன நடந்தது கோபாலபுரத்தில்? #VikatanExclusive

ரஜினி ஸ்டாலின் கலைஞர் கோபாலபுரம்
சீரியஸாக அரசியல் தொடர்பான ட்வீட்களை நடிகர் கமல் பதிவிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், ''நீங்கள் எப்போது அரசியல் பிரவேசம் செய்வீர்கள்'’ என்று ஊடகத்தினர் கேட்ட கேள்விக்கு, ''நான் ஏற்கெனவே அரசியலில்தானே இருக்கிறேன்” என்று பளிச்சென பதில் சொன்னார் கமல். ஆனால் ரஜினி , 1996-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மீது கடுமையான விமர்சனங்களை வைத்தது, 1998-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாள்கள் முன்பு கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கருத்துகளைக் கூறியது, 2004-ல் பா.ம.க-வுக்கு எதிராக அரசியல் விமர்சனங்களை முன்வைத்தது என வெளிப்படையாகவே அரசியலில் தன்னை  அடையாளப்படுத்திக் கொண்டிருந்தாலும், ‘'காலம் கனியும்போது எனது அரசியல் பிரவேச முடிவை வெளியிடுவேன்'’, “ஆண்டவனுக்குதான் தெரியும்” என்பது போன்று தொடர்ந்து கூறிவந்தார். கிட்டத்தட்ட 21 வருடம் கழித்து 2018-ல் அவருக்கு காலம் கனிந்திருக்கும் நிலையில், ‘'நான் அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் சந்திப்போம்’' என்று சூளுரை விடுத்திருக்கிறார். தனது இந்தப் பரபரப்பான அரசியல் அறிவிப்பை அடுத்து முக்கிய நபர்களைச் சந்தித்து வருகிறார் ரஜினி. அதன் ஒருகட்டமாக நேற்று சென்னைக் கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்தார். அவருடனான ரஜினியின் இந்தச் சந்திப்பை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்கவில்லை என்று நேற்று சந்திப்பின்போது உடனிருந்த கழக வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து அவர்கள் கூறுகையில்...
ஸ்டாலின்
''நேற்று காலை நடிகர் ரஜினி வீட்டிலிருந்து போன் செய்து கருணாநிதியைச் சந்திக்க நேரம் கேட்டார்கள். சாதாரணமாகக் கட்சி ஆள்கள் அப்பாயின்மென்ட் கேட்டால் உடனடியாக நேரம் ஒதுக்கித் தந்துவிடும் கருணாநிதியின் உதவியாளர்கள், ரஜினி அப்பாயின்மென்ட் கேட்டதும்... அவர் தற்போது அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருக்கும் சூழலில் நேரம் ஒதுக்கச் சற்றே யோசித்தார்கள். பிறகு, ‘நீங்கள் நேரடியாக ஸ்டாலினிடமே கேட்டுக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளனர். ஸ்டாலின்...'நேரம் ஒதுக்குவதா... வேண்டாமா’ என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே மீடியா தரப்புக்குச் செய்தி சென்றுவிட்டதால், ரஜினியைத் தவிர்க்கமுடியாமல் மாலைக்கு மேல் கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியை வந்து சந்திக்க ரஜினிக்கு கால அவகாசம் ஒதுக்கியிருக்கிறார். சரியாக இரவு 8:20 மணிக்கு கோபாலபுரத்துக்கு வருகை தந்திருக்கிறார் ரஜினி. கோபாலபுரம் இல்லத்துக்கு வரும் முக்கிய விருந்தினர்களை வாசல்வரை சென்று வரவேற்கும் ஸ்டாலின், நேற்று ரஜினி வந்தபோது வீட்டுக்குள்ளேயே நின்று வரவேற்றிருக்கிறார். ரஜினியை, நேரே மாடியில் இருக்கும் கருணாநிதியின் அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அறையில் ஸ்டாலின், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் கருணாநிதியின் உதவியாளர் தவிர வேறு யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. ரஜினி கருணாநிதியைச் சந்தித்து உடல்நிலை பற்றி விசாரிக்க, அதற்கு கருணாநிதியின் உதவியாளரிடமிருந்து மட்டுமே பதில் வந்திருக்கிறது. ஸ்டாலின் மௌனமாகவே இருந்திருக்கிறார். அடுத்து தயாளு கோபாலபுரத்தில் ரஜினி பின்னணியில் ஸ்டாலின்அம்மாளைப் பார்க்க, ‘அம்மா எங்கே இருக்கிறார்’ என்று ரஜினி கேட்டதும், 'அம்மா நன்றாக இருக்கிறார்’ என்று கூறி ஸ்டாலின் தயாளு அம்மாளின் அறைக்கு அவரை அழைத்துச் சென்று காண்பித்தார். இதுமட்டுமே இருவருக்கும் இடையே நிகழ்ந்த அதிகபட்ச உரையாடல். இதையடுத்து ரஜினி அந்த இடத்திலிருந்து கிளம்பியிருக்கிறார். ரஜினி கிளம்பியதும் பத்திரிகையாளர்கள் ஸ்டாலினை மொய்க்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறினார். அதனால் கருணாநிதியின் உதவியாளரை உடனடியாக அழைத்து, ‘மீடியாவுக்கு என்ன சொல்வது?’ என்று கேட்டு, அதன் பிறகுதான், 'உடல்நிலை குறித்து விசாரிப்பதற்கே இந்தச் சந்திப்பு. தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் விருந்தினரை வரவேற்று உபசரித்தோம்’ என்று மீடியாவுக்கு பதிலளித்தார்.

அ.தி.மு.க.விலும் தொடர்ந்து உள்கட்சி சிக்கல் நீடித்துவரும் சூழலில், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்குப் பெரிதாக யாரும் போட்டியாக இருக்கமாட்டார்கள் என்று ஸ்டாலின் எண்ணியிருந்த நிலையில், தற்போது ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுதான் ஸ்டாலின் முகம்கொடுத்துக் கூட பேசாததற்குக் காரணம். 'முரசொலி' பவளவிழாவில்கூட இதே காரணப் பின்னணியில்தான் ரஜினி மேடையேற மறுத்தார்” என்று கழக வட்டாரங்கள் கூறுகின்றன. 

'பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் பண்படுத்திய திராவிட மண்’ என்று ஒருபுறம் ஸ்டாலின் பேசிவந்தாலும்.. துரைமுருகன், 'ரஜினியின் அரசியல் வருகையால் தி.மு.க-வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’ என்று கூறி வந்தாலும் 1996-ல் ரஜினியின் அரசியல் கருத்துகளை வரவேற்றதுபோல தற்போதைய கழக வட்டாரங்கள் அவரது அரசியல் அறிவிப்பை வரவேற்கவில்லை என்பதாகவே தெரிகிறது.

ஜனவரி 6-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

By DIN | Published on : 03rd January 2018 07:49 PM

ஜனவரி 6-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாக பிரம்ம மஹோத்சவ சபாவின் 171-வது தியாகராஜர் ஆராதனை விழா நேற்று தொடங்கியது. விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித், குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்

தியாகராஜரின் 171வது ஆராதனை விழாவை முன்னிட்டு ஜனவரி 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

சைக்கிளுக்கு திரும்புவோம்!

By பா. ராஜா  |   Published on : 04th January 2018 02:25 AM  |

இரு சக்கர சைக்கிள். குறைந்த தூரத்துக்குச் சென்று வர சிறந்த போக்குவரத்து சாதனம். ஆனால், இன்று அதிக செலவு ஏற்படுத்தாத அந்த வாகனம் பெரும்பாலான வீடுகளில் பயனில்லாமல் படுத்துறங்குகிறது. பல்லாண்டுகளுக்கு முன்பு வாங்கியது என்று கூறி, நினைவுப் பொருளாகப் பாதுகாக்கப்படுகிறது. அடுத்துள்ள பல்பொருள் அங்காடிக்குச் செல்ல வேண்டுமென்றாலும், அதிக ஒலியெழுப்பி, அதிவேகத்துடன் சென்றுவருவதில்தான் நம் இளைஞர்களுக்கு அலாதி இன்பம். 

சைக்கிள்தானே என்று சிலருக்கு ஏளனம். ஆனால் அதை சாதாரணமாக எடை போட்டுவிட வேண்டாம். 19-ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சைக்கிள்கள் இன்று உலகம் முழுவதும் சுமார் 100 கோடி எண்ணிக்கையில் புழக்கத்தில் உள்ளது. உலகின் பல நாடுகளில் சைக்கிள் ஒரு முக்கிய போக்குவரத்து சாதனமாக விளங்குகிறது. அதைப் பயன்படுத்துவதன் மூலம் காற்றில் ஏற்படும் மாசைக் குறைக்கலாம். ஒலி மாசைக் குறைக்கலாம். எரிபொருளை சேமிக்கலாம். போக்குவரத்து மிகுந்த பகுதியிலும் எளிதாக ஓட்டிச் செல்லலாம்.
டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் அதிகமானோர் சைக்கிளை பயன்படுத்தி வருகின்றனர். பல நாடுகளில் குழந்தைகள் எப்படிப் பொறுப்புடன் சைக்கிள் ஓட்ட வேண்டுமென்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் பயிற்சியளிக்கப்படுகிறது.
பல்வேறு நாடுகளில் அஞ்சல் துறை தமது பிரதான தபால் விநியோக வாகனமாக இன்றளவும் சைக்கிளைப் பயன்படுத்தி வருகின்றன. லண்டன் ஆம்புலனஸ் சர்வீஸானது, விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு சைக்கிளை இன்றும் பயன்படுத்துகிறது.


நகரமயமாக்கம், தாராளமயமாக்கம் இவையெல்லாம் நமக்கு புதுப்புது நோய்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் முக்கியக் காரணம், காற்று மாசு. நம்மைச் சுற்றி, நாம் மேற்கொள்ளும் பல்வேறு செயல்பாடுகள் மாசு அதிகமேற்படக் காரணமாகின்றன. அவற்றில் காற்று மாசு முக்கியப் பங்கு வகிக்கிறது. காற்றில் கலந்துள்ள புகை நமக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை இதில் முதலிடம் வகிக்கிறது.


புகையில் உள்ள நச்சுப் பொருள்கள் நமக்குப் பல்வேறு நோய்களை உண்டாக்குகின்றன. இந்தியாவில் 2015-ஆம் ஆண்டில் மட்டும் காற்று மாசால் சுமார் 12 லட்சம் பேர் உயிரிழந்தனர். நம் நாட்டில் 2010 முதல் 2015 வரையிலான 5 ஆண்டுகளில் காற்று மாசின் அளவு 13% அதிகரித்துள்ளது. இவையெல்லாம் நவீன நகர வாழ்க்கை குறித்து நமக்கு கிடைக்கும் அபாய எச்சரிக்கைகள்.


மோட்டார் வாகனங்களின் புழக்கமும் அதிகரித்து வருகிறது. மாதந்தோறும் புதுப் புது வடிவங்களில் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இத்தகைய வாகனங்களைப் பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குவதோடு, பல்வேறு நோய்களையும் சேர்த்து இலவச இணைப்பாக வாங்கி வருகிறோம். இரு சக்கர வாகன விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வருமானம் குறைவாக உள்ள மாநிலங்களில் இரு சக்கர வாகன விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இவற்றைப் பயன்படுத்துவது தனி நபருக்கு சுகமாக இருக்கலாம். வசதியாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஆபத்தானதாகும்.


மேலும், சாலைகளில் ஓடுவதற்கு தகுதியற்ற வாகனங்களும் சாலைகளில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. இவற்றால் காற்று மாசு அதிகரிப்பதோடு, விபத்துகளும் அதிகரிக்கின்றன.


சுற்றுச்சூழல் மேம்பாட்டைப் பொருத்தவரையில், தற்போது காற்று மாசு குறித்து அதிகம் பேசப்படுகிறது. காற்று மாசைக் குறைக்க, தனியார் வாகனங்கள் பயன்படுத்துவதை மாதத்தில் ஒருநாள் நிறுத்திவிட்டு, அரசுப் போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துவது, மின்சார கார்கள், பயோ-கேஸ், இயற்கை எரிவாயுவில் இயங்கும் கார்களின் புழக்கத்தை அதிகரிப்பது என பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும், பலன் ஒன்றும் இல்லை.


பெங்களூரு நகரில் காற்று மாசு ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவை போக்குவரத்து வாகனங்களே. காற்று மாசில் 42% அளவு வாகனங்களால் ஏற்படுகிறதாம். இந்த பெருநகரச் சாலைகளில் சுமார் 70 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இதில் 20% வாகனங்கள் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. இப் பிரச்னைக்குத் தீர்வு காண, மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்த அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை, கொல்கத்தா, புது தில்லி, புணே, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்கள் எல்லாமே காற்று மாசு அதிகமுள்ள நகரங்கள் பட்டியலில் உள்ளன.
காற்று மாசைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருபுறம் நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்களாகிய நமது பங்கும் இதில் அவசியம் இருக்கிறது. அதை உடனே நாம் தொடங்க வேண்டும்.


முதலில், பரண்களிலும் வீட்டு மூலைகளிலும் தூசில் புதைந்து உறங்கும் சைக்கிள்களை வெளியே இறக்குங்கள். அல்லது, புதிதாக சைக்கிளை வாங்குங்கள்! அங்காடிகளுக்குச் சென்று வர, குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் கொண்டுவிட... என்று குறைந்த தூரப் பயணத்துக்கு அதைப் பயன்படுத்தத் தொடங்குவோம். உடற்பயிற்சிக்காக சைக்கிளைப் பயன்படுத்துவோம். சிறிது காலம் கஷ்டமாக இருக்கும். போகப் போக பழகிவிடும்.
நாம் அன்றாடம் சைக்கிளைப் பயன்படுத்துவதன் மூலம் நம் ஆயுள் காலம் அதிகரிக்கிறதாம். உடற்பயிற்சிக்கு உகந்த வாகனம். இதய நோய், மூட்டு வலியைத் தடுக்க உதவுகிறது. எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இறப்பு விகிதத்தைக் குறைக்கிறது. இவ்வளவு பலன்கள் இருக்கும்போது, நம் உடல் நலத்தைப் பேண சைக்கிளைப் பயன்படுத்துவதில் தவறில்லையே.
பொது சுகாதாரத்தைப் பொருத்தவரையில், சைக்கிள் ஓட்டுவது உடல் நலனுக்கு உகந்தது என்று உலக சுகாதார நிறுவனம் சான்றளித்துள்ளது. என்ன சைக்கிளைத் தேடத் தொடங்கிவீட்டீர்களா!

தீயா வேலை செய்யணும்


By ஆர். நடராஜ் | Published on : 04th January 2018 02:25 AM

தீயோடு விளையாடக்கூடாது என்பார்கள். ஆனால் தினமும் விளையாடிக்கொண்டிருக்கிறோம். 2015-இல் வெள்ளம், 2016-இல் வார்தா புயல், 2017-இல் தீயால் ஆபத்து என்றார்கள். தமிழகம் 2017-இல் தீ கண்டத்திலிருந்து தப்பித்துக்கொண்டாலும் ஆபத்து துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.ஆனால் டிச.29, மும்பை நகரில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீவிபத்து 14 உயிர்களை பலி கொண்டது!


மூன்று பெரிய விபத்துக்கள் மும்பையில் 29-ஆம் தேதி நிகழ்ந்தன. ஆகஸ்ட் 29-இல் பருவ மழை காரணமாக அடித்த புயல் 10 உயிர்களை பலி கொண்டது. சரியாக ஒரு மாதம் கழித்து செப்டம்பர் 29 பரேல் ரயில் நிலையம் எல்பின்ஸ்டன் சாலை இணைப்பு மேம்பாலத்தில் நெரிசலில் 23 பயணிகள் சிக்கி உயிர் இழந்தனர்.


இப்போது டிச.29 கமலா நூற்பாலை மேல்தளத்தில் விதிகள் மீறி கட்டப்பட்ட மதுபான விடுதியில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். அதில் 11 பேர் பெண்கள். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவிற்கு டிசம்பர் ஜனவரி மாதங்களில் வருகின்றனர். அவர்கள் குடியேறிய நாடுகளில் பனி மாதங்களில் குளிர் அதிகம். இங்கு மிதமான சீதோஷ்ண நிலை என்பதால் அதை நாடி வருகின்றனர். வந்த இடத்தில் குறுகிய காலத்தில் எல்லா சந்தோஷங்கள், கேளிக்கைகளை அனுபவிக்க அவசரம். கிடைத்த இடத்திலெல்லாம் கூடி மகிழ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.


விபத்து நடந்த மதுபான விடுதியிலும் அவ்வாறு வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பம் நண்பர்கள் உறவினருடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாட்டம் விபரீதத்தில் முடிந்தது. பிறந்த நாள் கேக் வெட்டிய பெண்ணும் இறந்ததுதான் கொடுமை. அதில் ஒருவர் வெளியில் கார் வரை வந்துவிட்டு, தனது உறவினர் பெண் உள்ளே இருக்கிறார் என்று பார்க்கச் சென்றவர் தீயில் அந்த பெண்ணோடு சேர்ந்து உயிரிழந்தார். விதியின் கொடுமையை என்ன என்பது!
பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கேக் வெட்டும்பொழுது மத்தாப்பு பட்டாசு வெடிக்கிறார்கள். வாயில் பெட்ரோல் வைத்து ஊதி நெருப்பினைக் கக்கும் சாகசமும் நடைபெறுகிறது. இம்மாதிரி தருணங்களில் விபத்து நிகழ காத்துக்கொண்டிருக்கிறது. மேலும் விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் வலுவானதாக இருக்காது. கேளிக்கை விடுதி என்பதால் மரத்திலான கூரை, தேக்குப் பலகைகள் பொருத்திய சுவர்கள் என்று எளிதில் தீ பற்றக்கூடிய பொருள்கள் அதிகமாக இருக்கும்.


மேலும் மின்சார இணைப்புகள் பாதுகாப்பின்றி கொடுக்கப்பட்டிருக்கும். மின்சாரக் கம்பிகள் தேவையான பருமன் இல்லாதவையாக இருக்கும். இதனால் மின் தடங்கல், கம்பிகளில் மின் கசிவால் தீப்பொறி ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். இந்தக் காரணங்களால்தான் 70% தீ விபத்துகள் ஏற்படுகின்றன.


கமலா மில் 'ரெஸ்டோபார்' விபத்தில் பலர் புகையில் சிக்கி வெளியேற முடியாமல் பலியாகியுளளனர்.


உயர் மாடி கட்டடங்களில் விபத்து ஏற்பட்டால் வெளியேற தனி படிக்கட்டுகள் இருக்க வேண்டும். உள்ளே வர ஒரு வழி, வெளியேற வேறு வழி வேண்டும். இது இல்லாததால்தான் 2004-ஆம் வருடம் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் வெளியேற வழியின்றி 94 குழந்தைகள் மிதிபட்டு இறந்தன. கமலா மில் விபத்திலும் இதுதான் முக்கிய காரணம். பலர் மூச்சுத்திணறலாலும் மிதிபட்டும் மாண்டனர்.


1975-ஆம் ஆண்டு சென்னையின் முதல் உயர் மாடி ஆயுள் இன்ஷூரன்ஸ் கட்டடத்தில் பெரிய தீவிபத்து, தொடர்ந்து 1981-ஆம் வருடம் ஸ்பென்சர் வணிக வளாகத்தில் விபத்து, அடுத்து 1985-ஆம் வருடம் மூர் மார்க்கெட்டில் விபத்து, 2000-ஆம் வருடம் பாரிமுனை தபால் நிலையத்தில் தீ, 2008 தி.நகர் சரவணா வணிக வளாகத்தில் துவங்கி ரங்கநாதன் தெருவில் 80-க்கும் அதிகமான கடைகள் சேதமடைந்து இரண்டு கோடி ரூபாய் இழப்பு, 2012 எழிலகத்தில், 2016 பாரிமுனை வங்கி கட்டடத்தில், 2017 சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் என்று தொடர் தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன. சென்னையில் முக்கிய அடையாளங்களான இடங்கள் தீக்கிரையாயின.
எல்லா விபத்துகளையும் ஆராய்ந்தால் தவிர்த்திருக்க வேண்டியது நிகழ்ந்துவிட்டதே என்ற ஆதங்கம் ஏற்படும். எந்த ஒரு விபத்தும் பொறுப்பற்ற நடத்தையின் விளைவு என்பது தெளிவாகும். தனிநபர் அஜாக்கிரதை அல்லது விதிகள் மீறுவதற்கு துணை போகும் நிர்வாகம், கட்டமைப்புகளில் உறுதிக்குத் தேவையான தரமான பொருட்களை உபயோகிக்காமல் இருத்தல் போன்ற நேர்மையற்ற செயல்களால் விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
2014-இல் சென்னை புறநகர் மெளளிவாக்கத்தில் உயர் மாடி கட்டடம் ஸ்திரத்தன்மை இழந்து இடிந்ததில் 61 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நீதியரசர் ரகுபதி விசாரணை கமிஷன் போடப்பட்டு பரிந்துரை அளித்துள்ளது. விதிகள் எவ்வாறு மீறப்படுகின்றன என்பது விபத்து விசாரணையில் தெளிவாக தெரிய வந்துள்ளன.


ஒப்பளிக்கப்பட்ட தரையளவிற்கு அதிகமாக கட்டுதல், வரையறுக்கப்பட்ட கட்டட உயரத்திற்கு அதிகமாக எழுப்புதல், கட்டடத்தின் சுற்றுப்புறம் குறைந்த பட்சம் 7 மீட்டர் திறந்தவெளி, அவசர காலத்தில் உயிர் மீட்பிற்கு வசதியாக இருக்க வேண்டும் போன்ற பல விதிகள் மீறப்படுவதால் விபத்துகள் நடைபெறுகின்றன.


முதலில் விதிகளுக்கு உட்பட்டு ஒப்புதல் வாங்கி நிறைவேற்றிவிட்டு காலப்போக்கில் அனுமதியின்றி கூடுதல் கட்டுமானங்கள் இணைக்கப்படுகின்றன. நெரிசல் அதிகமாகின்றது. முக்கியமாக மின் இணைப்புகள் தேவையான தரமான கம்பிகள் மூலம் கொடுக்கப்படுவதில்லை. குளிர்சாதன பெட்டிகள் சகட்டுமேனிக்கு பொருத்தப்படுகின்றன.
எல்லா கட்டடங்களும் ஆண்டுக்கு ஒரு முறையாவது தணிக்கை செய்யப்பட வேண்டும். கட்டடத்தின் ஸ்திரத்தன்மை, மின் இணைப்புகள், எர்த்திங்க் - நிலத்தடி மின்வாங்கி சரிவர உள்ளதா என்பதை துறை வல்லுநர்கள் மூலம் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
உயர் மாடி கட்டடங்கள் வணிக வளாகங்கள் மருத்துவ மனைகள், எங்கு மக்கள் அதிகமாக கூடுகிறார்களோ அங்கு கட்டாயம் ஆபத்து நிகழும்போது எவ்வாறு வெளியேறுவது என்ற பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.


கமலா மில் விபத்திற்குப் பிறகு மும்பையில் பல இடங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு விதிகள் மீறிய கட்டடங்கள் இடிக்கப்பட்டன என்பது காலம் தாழ்ந்த உரிய நடவடிக்கை. சென்னையிலும் பல மருத்துவ மனைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்கது.


முக்கியமாக சிற்றுண்டி விடுதிகள், திரையரங்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரி, தீயணைப்பு அதிகாரி கொண்ட குழு திரையரங்குகளை உரிமம் வழங்கும்போதும் புதுப்பிக்கும்போதும் ஆய்வு செய்ய வேண்டும் என்று திரைப்பட சட்ட விதிகள் உள்ளன. ஆனால் நடைமுறையில் சாதாரணமாக வழங்கப்பட்டு
விடுகிறது.


1979-இல் தூத்துக்குடி லக்ஷ்மி டாக்கீசில் நடந்த தீவிபத்து 77 பேரை பலி கொண்டது. விபத்துக்கு காரணம் மின் கசிவு. தில்லி உபஹார் திரையரங்கில் 1997-இல் நடந்த கொடிய தீ விபத்தில் 59 அப்பாவி மக்கள் வெளியேற முடியாமல் நசுங்கி இறந்தனர். அஜாக்கிரதையாக இருந்துவிட்டால் எந்நேரமும் திரையரங்குகளில் விபத்து ஏற்படலாம்.


விதிகளும் சட்டங்களும் குறைவில்லாமல் இருக்கின்றன. ஆனால் நிறைவேற்றுவதில் தான் சுணக்கம். கட்டடங்களுக்கும் திரையரங்குகளுக்கும் சிபாரிசு பிடித்து அல்லது குறுக்கு வழியில் ஒப்புதலும் தடையின்மை சான்றிதழும் பெற்றுவிடுவதுபோல் மக்கள் விரோதமான செயல் வேறொன்றுமில்லை. விதிகளை மதிக்க வேண்டும்.


'பப் ' எனப்படும் மதுபானம் மற்றும் சிற்றுண்டி விநியோகிக்கும் விடுதிகள் பல நகரங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் 'பப்' போன்ற விடுதிகள் இல்லாவிட்டாலும் 'பார்' வசதியுடன் பட்டிதொட்டியிலெல்லாம் டாஸ்மாக் கடைகள் உள்ளன! அங்கு நெரிசலில் சுகாதாரமற்ற முறையில் மது விநியோகிக்கப்பட்டு அருந்துகிறார்கள். பீடி, சிகரட்டுக்கு குறைவில்லை.எங்கும் புகை மண்டலம். ஒரு விதியும் புகாத இடம்! இங்கு எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழலாம்.


தீயணைப்புத் துறை மிக கடினமான சூழலில் சிறந்த பணி செய்கிறது. எழிலகம் தீ விபத்திலும் சமீபத்தில் நடந்த கொடுங்கையூர் ரொட்டிக் கடை விபத்திலும் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.


தமிழகத்தில் 315 தீயணைப்பு நிலையங்களும் இரண்டு மீட்புப்பணி நிலையங்கள் (ஒகேனக்கல், கோத்தகிரி) உள்ளன. ஏழு புதிய தீயணைப்பு நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 349 நீர்தாங்கி வாகனங்கள், தண்ணீர் லாரிகள் 55, அவசர மீட்பு ஊர்திகள் 19, உயர் மாடி கட்டடங்களில் விபத்தினை சமாளிக்க 54 மீட்டர் முதல் 104 மீட்டர் வரை உயரம் செல்லக் கூடிய ஏணிகள் பொருந்திய வாகனங்கள் 5, மற்றும் பலவகை வாகனங்கள் தீயணைப்பதற்கு உதவுகின்றன.


அவசர காலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிக்கு எந்த அளவிற்கு மாநிலங்கள் தயார் நிலையில் உள்ளன என்பது பற்றி மேற்கொண்ட ஆய்வில் தயார் நிலை சுமார் 30 சதவிகிதத்திற்கும் குறைவு என்பது நிதர்சன உண்மை.


தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலங்களில் தயார் நிலை சிறப்பானது என்றாலும் முழுமையான பாதுகாப்பை எட்ட வேண்டும். அதற்கு பணியாளர்களுக்கு சிறப்பான பயிற்சி, உயர்தர நவீன மீட்புப் பணி உபகரணங்கள், தீயணைப்பு உத்திகள் மாற்றத்திற்கு ஏற்றவாறு திறன் மேம்பாடு அவசியமாகிறது. விதிகள் மீறப்பட்டால் உரிமம் பறிக்கப்படும் என்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அப்போதுதான் விதிகள் மீது பயம் இருக்கும்.
போக்குவரத்து விதிகள் இருந்தால் மீறுகிறார்கள். தேர்தல் விதிகள் மீறப்படுகின்றன. சட்டங்கள் இருந்தால் அதில் ஓட்டையைத் தேடுகிறார்கள். வரி விதித்தால் எவ்வாறு ஏய்க்கலாம் என்ற ஆராய்ச்சி செய்வதற்கு நிபுணர்கள் உள்ளார்கள்.


இந்த நிலை மாற வேண்டும். விபத்தின்மையே முழுமையான பாதுகாப்பு என்பதை விதிகளை நிர்வகிப்பவர்கள் உணர வேண்டும். அப்போதுதான் தேவையான விழிப்புணர்வு ஏற்படும்.
தீயா வேலை செய்யணும், தீவிரமாக தீ பாதுகாப்பு செய்யவில்லை என்றால் தீ எல்லாவற்றையும் விரயமாக்கிவிடும்.
ஹெச்-1 பி விசா நீட்டிப்பைத் தடுக்க அமெரிக்கா புதிய விதிமுறை?: இந்தியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு

By DIN | Published on : 04th January 2018 01:02 AM

வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய வழிவகை செய்யும் ஹெச்-1 பி விசா, நீட்டிப்பு செய்யப்படுவதைத் தடுக்க புதிய விதிமுறைகளை அமெரிக்கா வகுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதன்காரணமாக, தகவல்தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்துவரும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தி:


கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில், வெளிநாட்டவர்களுக்கு இங்கு பணிபுரிய அனுமதியளிக்கும் ஹெச்-1 பி விசா, நீட்டிப்பு செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்பட்சத்தில், நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெறுவதற்காக விண்ணப்பித்திருக்கும் ஹெச்-1 பி விசாதாரர்களுக்கு விசா நீட்டிக்கப்படமாட்டாது.
தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி, ஹெச்-1 பி விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் வரை பணிபுரிந்த பிறகு, மேலும் 3 ஆண்டுகளுக்கு விசா நீட்டிப்பு செய்துகொள்ள முடியும். அத்துடன், நிரந்தர குடியுரிமை கோரியிருப்பவர்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு மேலும் சில ஆண்டுகள் ஹெச்-1 பி விசா நீட்டிக்கப்பட்டு வருகிறது.


புதிய விதிமுறை அமலுக்கு வந்தால், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது நாடுகளுக்கு திரும்பிவிடுவார்கள். அதன்மூலம், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்று அந்த ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.


ஹெச்-1 பி விசா பெற்று அமெரிக்கா சென்று பணிபுரிபவர்களில் இந்தியர்கள் முதலிடத்திலும், சீனர்கள் இரண்டாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

ரயில்வே முன்பதிவுக்கு ஆதார் கட்டாயமில்லை: ரயில்வே துறை விளக்கம்

By DIN  |   Published on : 04th January 2018 02:14 AM |  

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் திட்டம் இல்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மக்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு, ரயில்வே இணையமைச்சர் ராஜேன் கோஹைன் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் திட்டம் எதுவுமில்லை. எனினும், மூத்த குடிமக்களுக்கான சலுகை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, தாமாக முன்வந்து ஆதார் எண்ணைத் தெரிவிக்கும் நடைமுறை, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், ரயில் டிக்கெட்டுகளை பயணிகள் முன்பதிவு செய்யும்போது, அவர்கள் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை இணைப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் மாதம் ஒன்றுக்கு முன்பதிவு செய்யும் எண்ணிக்கை, 12-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
நடுவானில் பெண் பைலட்டை தாக்கிய விவகாரம்: விசாரணைக்கு உத்தரவு

Added : ஜன 04, 2018 07:08




மும்பை: ஜெட் ஏர்வேஸ் விமானம் 324 பயணிகளுடன் லண்டனில் இருந்து புறப்பட்டு புத்தாண்டு தினத்தன்று (ஜன. 1-ம் தேதி) மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பைலட்டுகள் அமரும் காக்பிட்டில் இரு பைலட்டுகளுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு தகராறு முற்றிய நிலையில் ஆண் பைலட் பெண் பைலட்டை கன்னத்தில் அறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. கண்ணீருடன் காக்பிட்டை விட்டு வெளியே வந்த அந்த பெண் பைலட் சக பைலட்டுகளிடம் கூறியுள்ளார்.


இந்த விவகாரம் உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனர் ஜெனரல்(டி.ஜி.சி.ஏ.) கவனத்திற்கு சென்றது. விமான பாதுகாப்புவிதிமுறைகளை மீறி இரு பைலட்டுகளும் நடுவானில் சண்டையிட்டதால் அவர்களின் லைசென்ஸ்கள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

NEWS TODAY 31.01.2026