Monday, February 5, 2018

vikatan.com

மொபைல் கட்டணம் ரூ.1.5 லட்சம்... 4 ஆண்டுகளில் ரூ.120 கோடி சொத்து... துணைவேந்தர்களின் ஊழல்கள்!
ஞா. சக்திவேல் முருகன்


கல்வித் துறை சீர்கெட்டிருக்கிறது என்பதற்கு, லஞ்ச ஒழிப்புத் துறையால் அண்மையில் கையும் களவுமாகக் கைதுசெய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரே சாட்சி. உயர்கல்வித் துறையில் அலுவலக உதவியாளர் பணி முதல் உதவிப் பேராசிரியர், பேராசிரியர் என அனைத்துப் பணிகளுக்குமே பணம் இருந்தால் மட்டுமே வேலை.



மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ஊழல் குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், பல்கலைக்கழகப் பணிகளுக்கான லஞ்சமாக, 29 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை நேரடியாகவே பெற்றிருக்கிறார் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி. இவற்றை வாங்கிக் கொடுக்க, உதவி புரிந்திருக்கிறார் வேதியியல் துறைத் தலைவர் தர்மராஜ். இவர்களுக்கு உடந்தையாக இருந்த தொலைதூர இயக்குநர் மீதும் தற்போது வழக்குப் பதிவாகியுள்ளது.

துணைவேந்தர் கணபதியின் வீடுகளில் சோதனை செய்தபோது, பணி நியமனங்களுக்காக ஏற்கெனவே பெற்ற விவரங்கள்கொண்ட ஆவணங்களும் டைரியும் சிக்கியுள்ளன. துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கணபதி, துணைவேந்தராகப் பதவியேற்றவுடன் 82 காலிப் பணியிடங்களை நிரப்ப விளம்பரம் செய்தார். விண்ணப்பம் செய்தவர்களிடம் பேரம் பேசப்பட்டு, யார் அதிகளவில் பணம் கொடுக்கத் தயாராக இருந்தார்களோ, அவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். நேர்காணலுக்குப் பிறகு, உடனடியாக சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டு பணியில் உடனடியாகச் சேரவும் ஆணை வழங்கப்பட்டு, ஒரே நாளில் பணியிலும் சேர்க்கப்பட்டனர். இந்த விஷயத்தை உயர்கல்வித் துறையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றபோது, பணி நியமனங்களை நிறுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், `முன்கூட்டியே சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டு, பணி ஆணையும் வழங்கப்பட்டதால், பணி நியமனத்தை நிறுத்த முடியாது!' என்று துணைவேந்தர் கணபதி மறுத்துவிட்டதாகச் சொல்கின்றனர் உயர் கல்வித் துறை அதிகாரிகள். துணைவேந்தராக கணபதி பதவியேற்ற பிறகு, 2016-17 ம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர்களிடம் 20 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், அதுகுறித்து தற்போது விசாரணை நடந்துவருவதாகவும் தெரிகிறது. இந்த விசாரணையில், மேலும் பல பேராசிரியர்கள் சிக்க வாய்ப்புள்ளது.

இதேபோன்று கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் மீது, மேஜை, நாற்காலி போன்ற உபகரணங்கள் வாங்கிய ஊழல் வழக்கும் குறிப்பிடத்தக்கதே! இந்த வழக்கில், ஒப்பந்தத்தாரர் கொடுத்த புகார் விசாரிக்கப்பட்டு, லஞ்சம் பெற்றது நிரூபிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது கோவை சிறையில் இருக்கிறார் முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன். இவருடைய அறைக்குப் பக்கத்து அறையில்தான் அடைக்கப்பட்டிருக்கிறார் கணபதி.

துணைவேந்தர்களின் ஊழல்கள் குறித்து பேராசிரியர்கள் சிலரிடம் பேசினோம்... ``துணைவேந்தர் பணிக்கு லஞ்சம் கொடுத்துச் சேர்பவர்கள், தாங்கள் கொடுத்த பணத்தைவிட பல மடங்கு பணத்தை எப்படியாவது சேர்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். தாங்கள் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற, ஒவ்வொரு நாளும் எவ்வளவு தொகையைப் பெற வேண்டும் என நிர்ணயித்துச் செயல்படுகின்றனர். பழைய தேர்வுத்தாளை எடைக்குப் போடுவதிலிருந்து, பல்கலைக்கழகக் கட்டடங்களுக்கு வெள்ளை அடிப்பது, கட்டுமானப் பணிகளை ஒதுக்கீடு செய்வது, உபகரணங்கள் வாங்குவது என அனைத்திலும் கமிஷன் பெறுகின்றனர்" என்றார்.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் பேராசிரியர் ஒருவர், ``பல்கலைக்கழக வளாகத்தில் பிச்சைக்காரர்கள் இருந்தால், அவர்களிடம்கூட கமிஷன் பெறும் அளவுக்கு மாறியிருக்கிறது. `எங்களுடைய வளாகத்தில்தானே பிச்சையெடுத்தாய்!' என்பதோடு, `இவ்வளவு தொகை கமிஷனாகக் கொடுக்க வேண்டும்' என்ற நிலையில்தான் துணைவேந்தர்கள் இருக்கின்றனர். இவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் கடை வைத்திருப்பவர்களிடமும் கேன்டீன் நடத்துபவர்களிடமும் கணிசமான அளவிலான பணத்தை வசூல்செய்கின்றனர். கட்டடங்கள் கட்ட ஒப்பந்ததாரர்களிடமும், மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த இணைப்புக் கல்லூரி முதலாளிகளிடமும் பெரிய தொகையைப் பெறுகின்றனர்.

பணி நியமனங்களில் அதிகளவில் பணம் பெறுகின்றனர். துறைகளில் காலியிடங்கள் இருந்தால், பணி உயர்வு எனும் போர்வையில் ஏற்கெனவே பணியில் இருப்பவர்களிடம் லஞ்சம் பெறுவது உண்டு. துறையில் இருப்பவர்கள் பணம் கொடுக்காதபோது, விளம்பரம் செய்து வெளிநபர்களின் விண்ணப்பத்தைப் பெற்று பணி நியமனம் செய்கின்றனர். துறைகளில் ஒதுக்கப்படும் நிதியில், `வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களைப் பார்வையிடுகிறேன்' என்ற போர்வையில் குடும்பத்துடன் சுற்றுலா செல்கின்றனர். பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை, மொபைல்போன் கட்டணமாக 1.5 லட்சம் ரூபாயை பல்கலைக்கழக நிதியிலிருந்து செலுத்தியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! இதுபோன்ற ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன.

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் சேர்ந்த துணைவேந்தர்கள் குறித்தும், அவர்களின் பணிக்குப் பிறகு சேர்த்த சொத்துமதிப்பையும் கணக்கீட்டால் இன்னும் பல விவரங்கள் வெளியாகும். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துணைவேந்தராக இருந்தவர், 120 கோடி ரூபாய் வரை பணம் சேர்த்திருக்கிறார்" என்றார்.



பாரதியார் பல்கலைக்கழக செனட் உறுப்பினரும், அரசு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் தலைவருமான வீரமணி, ``துணைவேந்தராகச் சேர்பவர்கள், அமைச்சருக்கும் ஆளும் கட்சியினருக்கும் பெரிய அளவில் பணம் கொடுத்துச் சேர்கின்றனர். இதனால், துணைவேந்தராகச் சேர்ந்தவுடன் முடிந்தளவுக்குப் பணம் பார்க்க ஆரம்பிக்கின்றனர். பணம் கொடுத்து பதவி பெறும் பேராசிரியர்கள், மாணவர்களிடம் வசூலிக்கத் தயங்குவதில்லை. இதனால், கல்வித்தரம் கெட்டுவிட்டது. உயர்கல்வித் துறையில் லஞ்சம், எம்.எல்.எம் போல் மேலிடத்திலிருந்து சாதாரணப் பணி வரை பரவிவிட்டது.

தற்போது வேலையில் சேர்பவர்கள் அனைவரும் பணம் கொடுத்தே சேர்கின்றனர். பணம் கொடுத்துச் சேர்பவர்களின் வேலையையும் பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதி அடிப்படையிலேயே பணி என்பதில் உறுதியாக இருந்தால் போதும். அரசு சரியாக இருந்தால் அரசு அதிகாரிகளும் சரியாக இருப்பார்கள்" என்றார்.

தமிழ்நாடு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அமைப்பின் தலைவர் அருள் அறம், செயலாளர் சதாசிவத்திடமும் பேசியபோது, ``பல்கலைக்கழகங்களுக்கு இனியாவது தகுதியானவர்களை மட்டுமே துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும். ஆசிரியர்கள் நியமனத்திலும் பல்கலைக்கழக நிதிப் பயன்பாட்டிலும் வெளிப்படைத்தன்மையும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுச் செயல்படுதலும் வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டும் உயர்கல்வித் துறையின் தரம் உயரும்" என்றனர்.
vikatan.com

``விஜிலென்ஸை எப்படி உள்ளே விட்டார்கள்?'' - பதிவாளரைக் கடிந்துகொண்ட துணைவேந்தரின் மனைவி!

இரா. குருபிரசாத் Coimbatore:

உதவிப் பேராசிரியர் பணிக்காக, சுரேஷ் என்பவரிடமிருந்து ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதற்கு இடைத்தரகராக இருந்த, வேதியியல் துறைப் பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல, தொலைதூரக் கல்விக்கூட இயக்குநர் மதிவாணன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



வருமானவரித்துறை மற்றும் சி.பி.ஐ ரெய்டுபோல, பல்வேறு இடங்களில் சுமார் 13 மணி நேரத்துக்கு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரெய்டில் ஈடுபட்டனர். துணைவேந்தர் கணபதியின் வீடு, தர்மராஜ், மதிவாணன் வீடு, இவர்களது அலுவலகங்களில் தொடர்ந்து ரெய்டு நடத்தப்பட்டது. அதேபோல, திருச்சியில் உள்ள கணபதியின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.

துணைவேந்தரை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தமிழக அரசின் ஆதரவுடன் நடந்த இந்த ரெய்டில் வெளிவந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பாரதியார் பல்கலைக்கழகத்தில், கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பேராசிரியர் பணி நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. இதில், பல்கலைக்கழகத்தில் உள்ள பலருக்கு தொடர்பு உள்ளது என்றும் அடுத்தகட்டமாக, அவர்களும் கைதாவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கோவை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இன்று திருச்சிக்கு விரைந்துள்ளனர். அவரது வீடு, புதிதாகக் கட்டிவரும் மருத்துவமனை உள்ளிட்ட சொத்துப் பட்டியல் குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காகப் போலீஸார் திருச்சி விரைந்துள்ளனர். துணைவேந்தர் கணபதி கைது சம்பவத்தால், அவரது குடும்பம் அதிர்ச்சியிலும், கடும் கொந்தளிப்பிலும் உள்ளனர்.



 இந்நிலையில் இன்று மாலை, பதிவாளர் வனிதாவை தொடர்புகொண்ட துணைவேந்தர் கணபதியின் மனைவி சொர்ணலதா, ``விஜிலென்ஸ் வரும்போது, செக்யூரிட்டிகள் ஏன் அலர்ட் செய்யவில்லை. அப்படி அலர்ட் செய்திருந்தால், இந்நேரம் இதுபோன்று நடந்திருக்காது’’ என்று கடிந்துள்ளார். இதையடுத்து, செக்யூரிட்டிகளை அழைத்த பதிவாளர் வனிதா, "எப்படி அவர்களை உள்ளே விட்டீர்கள். ஒரு அலர்ட் செய்ய மாட்டீர்களா" என்று கேட்டுள்ளார். அதற்கு செக்யூரிட்டிகளோ, "அவங்க ஐ.டி கார்டு காட்றப்ப நாங்க என்ன மேடம் பண்ண முடியும்" என்று பதிலளித்துள்ளனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் செக்யூரிட்டிகளை அனைவரும், ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
vikatan.com

கல்வித் துறையில் ஊழல்... பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தால் மட்டும் போதுமா... தீர்வு என்ன?!

சக்தி தமிழ்ச்செல்வன் Chennai:

சமீபகாலமாக நடந்த முறைகேடுகளில் இரண்டு முறைகேடுகள், கல்வித் துறையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளன. முதலாவது, பாலிடெக்னிக் தகுதித் தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில் இதுவரை எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டிருப்பது. இரண்டாவது, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமன ஊழலில் துணைவேந்தர் கணபதியைத் தொடர்ந்து மேலும் பலரைக் கைதுசெய்திருப்பது. இந்த இரண்டு முறைகேடுகளும் இன்று புதிதாக நடப்பவையல்ல. `அரசு வேலைவாய்ப்பு' என்றாலே, `அதுக்கு நிறைய பணம்' செலவாகும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் தோன்றி பல வருடங்கள் ஆகிவிட்டன. அமைச்சர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துவரும் நிலையில், ஊழலற்ற, நேர்மையான அடுத்த தலைமுறையை உருவாக்கவேண்டிய மாபெரும் பொறுப்பு கல்வித் துறைக்கு உண்டு.

ஊழல்களில் சம்பந்தப்பட்ட துணைவேந்தர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாலும், அதற்கு அவர்கள் மட்டும்தான் காரணமா? இந்த அளவுக்குக் கல்வித் துறையில் ஊழல் பெருக என்ன காரணம்? லஞ்சம் வாங்குவது ஒரு பெருங்குற்றமல்ல என்ற மனநிலைக்கு அவர்கள் செல்வதற்கு என்ன காரணம்? ஒட்டுமொத்தக் கல்வித் துறையே பணம் சார்ந்த ஒன்றாக மாறிவிட்ட சூழலையும் இதனுடன் சேர்த்துப் பார்க்கவேண்டியுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களிடம் கேட்டோம்.



குடியாத்தம் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் ப.சிவக்குமார், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர். பேராசிரியர் பணி நியமனத்தில் இதுபோன்ற ஊழல் நடைபெறுவது குறித்து அவரிடம் பேசினேன்... ``1985-களில் சுயநிதிக் கல்லூரிகளின் வருகை ஆரம்பித்தது. அப்போதுதான் கல்வி வியாபாரமும் ஆரம்பமானது. அந்தக் காலகட்டத்தில் கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் நியமனத்தில் பங்குவகித்தனர். அப்போதும் சிறு சிறு பிரச்னைகள் எழும். அதை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நாங்கள் எதிர்த்துள்ளோம். ஆனால், அப்போது நடைபெறும் ஊழல்களைவிட பல மடங்கு மோசமான முறைகேடுகள் இப்போது நடைபெறுகின்றன.

கல்வி வியாபாரிகள் ஒருபக்கமும், வேலையை ஏலம்விடும் வியாபாரிகள் மறுபக்கமும் உள்ளனர். குறிப்பாக, அரசு வேலைகளை நம்பி தமிழ்நாடு தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் வாரியம் (TRB) மூலம் நடத்தப்படும் தேர்வுகளை எழுதிவிட்டு, ஏழை மக்கள் பலர் வேலைவாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஊழல் மூலம் அவர்களது வாய்ப்பு பறிக்கப்படுகிறது. உயர்கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தொடங்கி இந்நாள் அமைச்சர் அன்பழகன் வரை உயர்கல்வித் துறையில் உரிய நடவடிக்கை எடுத்தார்களா என்பது கேள்விக்குறியே!

பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தற்கொலை செய்துகொண்டார். அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் துறையில் ஊழல் நடைபெற்றது குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகின. அரசு உதவி பெறும் கல்லூரிகளில், கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற நியமனங்களில் ஊழல் நடைபெற்றது குறித்து, ஆசிரியர் சங்கங்கள் போராடிவருகின்றன. துணைவேந்தர் பணி நியமனத்தில் கல்வியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன. சமூகச் செயற்பாட்டாளர் பாலம் நாராயணன், இதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தில் நடைபெற்ற கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்தான் வெளியே வந்துள்ளன. இதற்கு முன்னரே தனியார் மருத்துவக் கல்லூரியான எஸ்.ஆர்.எம் கல்லூரியின் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்தும் நமக்குத் தெரியும்.

பள்ளிக் கல்வி தொடங்கி பல்கலைக்கழகக் கல்வி வரை அனைத்து ஆசிரியர் பணி நியமனங்களிலும் ஊழல் நடைபெற்றால், எப்படிப்பட்ட கல்வியை நாம் மாணவர்களுக்கு அளிக்கப்போகிறோம்? இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அரசு, பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தாலும், ஆசிரியர் பணிகள் ஏலம்விடப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவை எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும்? தனியார் கல்லூரியின் கட்டணக் கொள்ளையும் அரசு நிறுவனங்களின் ஊழலும் கல்வியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இல்லாமல் செய்துவருகின்றன. பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமன்றி, கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துத் துணைவேந்தர் பணி நியமனங்களிலும் அரசு தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்'' என்று ஆதங்கத்தோடு தனது கருத்தைப் பதிவுசெய்தார்.

துணைவேந்தர் பதவி நியமனங்களில் சமூக நீதியோ, நேர்மைத்தன்மையோ இருப்பதில்லை என்ற கருத்தைத் தெரிவித்த எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்திடம் பேசியதிலிருந்து...



``இந்தக் கேள்வியே சற்று ஆச்சர்யமாக இருக்கிறது. எல்லா அரசுப் பணி நியமனங்களிலும் பணம் கொடுத்தால்தான் பதவி என்பதை வெளிப்படையாக அனைத்து மக்களும் பேசிக்கொள்கின்றனர். ஆசிரியர் பணி நியமனங்களிலும், துணைவேந்தர் பணி நியமனங்களிலும் என்ன மாதிரியான வெளிப்படைத்தன்மை இருக்கிறது? எதன் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது என்பது பற்றிய உண்மைத்தன்மையே இல்லை. இங்கு நடைபெறும் ஊழல் என்பது, வெறுமனே துணைவேந்தர் மட்டுமே சம்பந்தப்பட்டது கிடையாது; இது ஒரு பெரிய அங்கம்போல் செயல்படுகிறது. இதன் பின்னால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் எனப் பலர் இருப்பர். கல்வித் துறை, கடந்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் துறையாக மாறியிருக்கிறது. இதை ஊடகங்களும் பொதுமக்களும் பெரும் விவாதமாக மாற்றினால் மட்டுமே இந்தப் போக்கை மாற்ற முடியும்" என்றார்.

 கல்வித் தந்தைகளாக பல பணக்காரர்கள் வந்துவிட்ட கல்வித் துறை முழுக்கவே வியாபார மயமாகிவிட்டது. கிராமப்புற மாணவர்களும் ஏழை மாணவர்கள் பலரும் அரசுக் கல்லூரியை மட்டுமே நம்பி உயர்கல்வியை நோக்கிப் பயணிக்கின்றனர். பல்கலைக்கழகங்களில் நடக்கும் இதுபோன்ற ஊழல்கள், கல்வித் துறையின் மீதும் ஆசிரியர்கள் மீதும் உள்ள மதிப்பைக் கெடுத்துவிடுகின்றன; `கல்வியின் மூலம் மட்டுமே தனக்கான வாழ்வை மீட்க முடியும், சமூகத்தில் நல்ல நிலையை எட்ட முடியும்' என நம்பும் பல லட்சம் மாணவர்களையும் பெற்றோர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. இதுபோன்ற முறைகேடுகளைக் களையும் வகையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒரு தலைமுறையே பாதிக்கும் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்!
எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் நுழைவுத்தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

MUTHUKRISHNAN S



எய்ம்ஸ் என்ற 'ஆல் இந்தியா இன்ஸ்ட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்' மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு எழுத இன்று (5.2.18) முதல் மார்ச் 5-ம் தேதி வரை www.aiimsexams.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு வரும் மே மாதம் 26-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது. 12-ம் வகுப்பில் மொத்தமாக 60 மதிப்பெண்ணுடன் ( எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவிகிதம்) மற்றும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுடன் 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்வெழுதுவோர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, பாட்னா (பீகார்), போபால் (மத்தியப்பிரதேசம்), ஜோத்பூர் (ராஜஸ்தான்), புவனேஸ்வர் (ஒடிசா), ரிஷிகேஷ் (உத்ரகாண்ட்), ராய்பூர் (சத்தீஸ்கர்), குண்டூர் (ஆந்திரா), நாக்பூர் (மகாராஷ்ட்ரா) ஆகிய 9 இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 907 சீட்கள் இருக்கின்றன. மத்தியில் நரேந்திர மோடி அரசு அமைந்ததும் அனைத்து மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைத் தொடங்கப்படும் என்று அறிவித்தது. அதையடுத்து, உடனைடியாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு 2014-ம் ஆண்டு ஜூலையில் கடிதம் எழுதினார். அதில், `நடப்பு ஆண்டிலேயே எய்ம்ஸ் மருத்துவமனையைத் தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். மத்திய அரசு கேட்டபடி, ''செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சை செங்கிப்பட்டி, ஈரோடு பெருந்துறை, மதுரை தோப்பூர்'' ஆகிய இடங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க தேவையான இடம் தயார் நிலையில் உள்ளன' என்று கூறி இருந்தார். ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு வரவில்லை.
இனி அரக்கோணம் வரை சென்னைதான்... பெருநகர விரிவாக்க அரசாணை வெளியீடு!

ர.பரத் ராஜ்

சென்னைப் பெருநகரத் திட்ட விரிவாக்கம் செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையின்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம் வரை சென்னைப் பெருநகரக் குழுமத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.



கடந்த ஆண்டு, ஜூலை மாதம், தமிழக சட்டமன்றத்தில் பெருநகரச் சென்னை மாநகராட்சியின் எல்லைகளை விரிவாக்கம் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருக்கும் சில கிராமங்கள் சென்னை மாநகராட்சியின் கீழ் கொண்டுவரப்படும் என்று சொல்லப்பட்டது. மேலும், அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாவில் இருக்கும் சில இடங்களும் சென்னை மாநகராட்சிக்குக் கீழ் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து, சட்டமன்றத்தில் சொல்லப்பட்ட இடங்கள் குறித்து நன்கு ஆராயப்பட்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குள் சேர்ப்பது குறித்து முன்மொழியப்பட்டது. இதையடுத்து, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம் வரை பெருநகரச் சென்னைக் குழுமத்தின் எல்லையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை-யில் கணிதப் பாட தேர்ச்சி விகிதம் குறைந்ததுக்கு காரணம் என்ன?

விகடன்



பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரி செல்பவர்கள், முதல் செமஸ்டரில் தேர்ச்சி பெற பெரிய அளவில் போராடி வருகின்றனர். இதில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று, அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரியில் சேரும் மாணவர்களும் விதிவிலக்கல்ல என்பது அண்மையில் வெளியான முதல் செமஸ்டர் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மையான அங்கங்களாக கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்‌சர் கல்லூரிகள் இருக்கின்றன. இங்கு படிக்கும் மாணவர்களின் முதல் செமஸ்டர் முடிவு கடந்த வாரம் வெளியானது. இதில் கிண்டி பொறியியல் கல்லூரியில் 71.59 சதவிதம் பேரும், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் 53.21 சதவிகிதம் பேரும், எம்.ஐ.டி. கல்லூரியில் 66.27 சதவிகிதம் பேரும், ஆர்க்கிடெக்‌சர் கல்லூரியில் இருந்து 44.55 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்து கிண்டி பொறியியல் கல்லூரியின் டீனும், பேராசிரியருமான கீதாவிடம் பேசினோம். “பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்புக்குள் அடியெடுத்து வைப்பவர்கள் முதல் செமஸ்டரில் தடுமாறுவது உண்டு. குறிப்பாக, தமிழ் மீடியம் படித்தவர்கள் கல்லூரியில் அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டிருப்பதால் சிரமப்படுகின்றனர். மேலும், ஊரகப்பகுதியில் இருந்து வருபவர்களுக்குப் புதிய சூழல் பிடிபடாமல் இருக்கிறது. பள்ளியில் படிக்கும்போது வீட்டில் அம்மாவும், அப்பாவும் படி, படி என்று சொல்வார்கள். கல்லூரியில் சேரும்போது இங்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கிறது. அவர்களே பொறுப்பை உணர்ந்து படிக்க வேண்டி இருக்கிறது.

மாணவர்களுக்கு உதவும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றம், பயிற்சி வகுப்புகள், 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்று சிறப்பு வகுப்புகள், சீனியர் மாணவர்களின் ஆலோசனைகள் எனப் பல வகையில் உதவி செய்கிறோம். ஆராய்ச்சி மாணவர்களின் உதவியுடன் அவ்வவ்போது மாதிரி தேர்வை நடத்தி இருக்கிறோம். இதன் விளைவாக, கடந்த ஆண்டுகளில் 60 சதவிகிதம் அல்லது அதற்குக் குறைவாகவே இருந்த தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 71.59 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

எப்போதுமே கணிதப்பாடத்தில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைவாகவே இருந்திருக்கிறது. இந்த ஆண்டில் கணிதப்பாடத்தில் அதிகம் கவனம் செலுத்தினோம். இதில் 78 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

ஆரம்பத்தில் மாணவர்களின் பிரச்னை என்று விசாரித்தபோது, பள்ளியில் கணிதக் கேள்விகள் நேரிடையாகக் கேட்கப்படுகின்றன. ஆனால், இங்கு அதுபோன்று கேட்கப்படுவதில்லை என்று மாணவர்கள் சொன்னார்கள். அவர்களிடம், பள்ளியில் கேட்கப்படுவதைப்போல் இங்கு எதிர்பார்க்கக் கூடாது என்பதை எடுத்துச் சொன்னோம். பள்ளியில் படிக்கும்போது தனியே அமர்ந்து படித்திருப்பார்கள். இனி, நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாக அமர்ந்து படியுங்கள். இங்கு குழுவாக இணைந்து படிக்கும்போது எளிதில் வெற்றியடைய முடியும் என்று ஆலோசனை வழங்கினோம்.

பொறியியல் கல்விக்கு கணிதப்பாடம் மிகவும் அவசியம். இதனை உணர்ந்து மாணவர்கள் புரிந்துகொண்டு படிக்க வேண்டும். முதலாவது செமஸ்டரில் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று சோர்ந்து விடாமல், அடுத்தடுத்த தேர்வுகளை மனதில் வைத்துப் படித்தால் சிறந்த கிரேடுகளை பெற முடியும்" என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மைக் கல்லூரிகளில் முதலாவது செமஸ்டரில் எழுதிய 1,158 பேரில் 829 பேர் மட்டுமே கணிதப்பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் 483 பேர் எழுதியதில் 257 பேர், குரோம்பேட்டை எம்.ஐ.டி-யில் 841 தேர்வு எழுதியதில் 558 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்று கல்லூரிகளிலும் சேர்த்து 2482 பேர் தேர்வு எழுதியதில் 1,644 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். 838 பேர் தேர்ச்சி பெறவில்லை. கிண்டி பொறியியல் கல்லூரியில், சிவில் இன்ஜினீயரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்புகள் தமிழ் மீடியத்தில் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களின் மதிப்பெண்கள் மட்டும் குறைந்திருக்கின்றன.

“பொறியியல் படிப்பில் முதல் செமஸ்டரில் கொஞ்சம் கூடுதல் திறனை செலுத்திப் படித்துவிட்டால், அடுத்த மூன்றரை ஆண்டுகளில் மீதமுள்ள ஏழு செமஸ்டரிலும் அதிக மதிப்பெண்களுடன் எளிதில் வெற்றி பெறவே வாய்ப்புகள் ஏராளம்” என்கிறார் கிண்டி பொறியியல் கல்லூரியின் டீன் கீதா.
கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கைது விவகாரம் தொடர்பாக நாளை ஆளுநரிடம் அறிக்கை தாக்கல்

தினகரன் 5 hrs ago

கோவை : லஞ்ச புகாரில் கைதான துணைவேந்தர் கணபதி குறித்த அறிக்கையை நாளை ஆளுநரிடம் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. ஆளுநரிடம் அறிக்கை அளிக்கப்பட்டதும் கணபதி பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கோவை பாரதியார் பல்கலைகழகத்தை நிர்வகிக்க நிர்வாக குழு ஒன்றை அமைக்க உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

NEWS TODAY 14.02.2026