Monday, February 5, 2018

அண்ணா பல்கலை-யில் கணிதப் பாட தேர்ச்சி விகிதம் குறைந்ததுக்கு காரணம் என்ன?

விகடன்



பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரி செல்பவர்கள், முதல் செமஸ்டரில் தேர்ச்சி பெற பெரிய அளவில் போராடி வருகின்றனர். இதில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று, அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரியில் சேரும் மாணவர்களும் விதிவிலக்கல்ல என்பது அண்மையில் வெளியான முதல் செமஸ்டர் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மையான அங்கங்களாக கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்‌சர் கல்லூரிகள் இருக்கின்றன. இங்கு படிக்கும் மாணவர்களின் முதல் செமஸ்டர் முடிவு கடந்த வாரம் வெளியானது. இதில் கிண்டி பொறியியல் கல்லூரியில் 71.59 சதவிதம் பேரும், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் 53.21 சதவிகிதம் பேரும், எம்.ஐ.டி. கல்லூரியில் 66.27 சதவிகிதம் பேரும், ஆர்க்கிடெக்‌சர் கல்லூரியில் இருந்து 44.55 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்து கிண்டி பொறியியல் கல்லூரியின் டீனும், பேராசிரியருமான கீதாவிடம் பேசினோம். “பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்புக்குள் அடியெடுத்து வைப்பவர்கள் முதல் செமஸ்டரில் தடுமாறுவது உண்டு. குறிப்பாக, தமிழ் மீடியம் படித்தவர்கள் கல்லூரியில் அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டிருப்பதால் சிரமப்படுகின்றனர். மேலும், ஊரகப்பகுதியில் இருந்து வருபவர்களுக்குப் புதிய சூழல் பிடிபடாமல் இருக்கிறது. பள்ளியில் படிக்கும்போது வீட்டில் அம்மாவும், அப்பாவும் படி, படி என்று சொல்வார்கள். கல்லூரியில் சேரும்போது இங்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கிறது. அவர்களே பொறுப்பை உணர்ந்து படிக்க வேண்டி இருக்கிறது.

மாணவர்களுக்கு உதவும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றம், பயிற்சி வகுப்புகள், 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்று சிறப்பு வகுப்புகள், சீனியர் மாணவர்களின் ஆலோசனைகள் எனப் பல வகையில் உதவி செய்கிறோம். ஆராய்ச்சி மாணவர்களின் உதவியுடன் அவ்வவ்போது மாதிரி தேர்வை நடத்தி இருக்கிறோம். இதன் விளைவாக, கடந்த ஆண்டுகளில் 60 சதவிகிதம் அல்லது அதற்குக் குறைவாகவே இருந்த தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 71.59 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

எப்போதுமே கணிதப்பாடத்தில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைவாகவே இருந்திருக்கிறது. இந்த ஆண்டில் கணிதப்பாடத்தில் அதிகம் கவனம் செலுத்தினோம். இதில் 78 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

ஆரம்பத்தில் மாணவர்களின் பிரச்னை என்று விசாரித்தபோது, பள்ளியில் கணிதக் கேள்விகள் நேரிடையாகக் கேட்கப்படுகின்றன. ஆனால், இங்கு அதுபோன்று கேட்கப்படுவதில்லை என்று மாணவர்கள் சொன்னார்கள். அவர்களிடம், பள்ளியில் கேட்கப்படுவதைப்போல் இங்கு எதிர்பார்க்கக் கூடாது என்பதை எடுத்துச் சொன்னோம். பள்ளியில் படிக்கும்போது தனியே அமர்ந்து படித்திருப்பார்கள். இனி, நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாக அமர்ந்து படியுங்கள். இங்கு குழுவாக இணைந்து படிக்கும்போது எளிதில் வெற்றியடைய முடியும் என்று ஆலோசனை வழங்கினோம்.

பொறியியல் கல்விக்கு கணிதப்பாடம் மிகவும் அவசியம். இதனை உணர்ந்து மாணவர்கள் புரிந்துகொண்டு படிக்க வேண்டும். முதலாவது செமஸ்டரில் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று சோர்ந்து விடாமல், அடுத்தடுத்த தேர்வுகளை மனதில் வைத்துப் படித்தால் சிறந்த கிரேடுகளை பெற முடியும்" என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மைக் கல்லூரிகளில் முதலாவது செமஸ்டரில் எழுதிய 1,158 பேரில் 829 பேர் மட்டுமே கணிதப்பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் 483 பேர் எழுதியதில் 257 பேர், குரோம்பேட்டை எம்.ஐ.டி-யில் 841 தேர்வு எழுதியதில் 558 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்று கல்லூரிகளிலும் சேர்த்து 2482 பேர் தேர்வு எழுதியதில் 1,644 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். 838 பேர் தேர்ச்சி பெறவில்லை. கிண்டி பொறியியல் கல்லூரியில், சிவில் இன்ஜினீயரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்புகள் தமிழ் மீடியத்தில் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களின் மதிப்பெண்கள் மட்டும் குறைந்திருக்கின்றன.

“பொறியியல் படிப்பில் முதல் செமஸ்டரில் கொஞ்சம் கூடுதல் திறனை செலுத்திப் படித்துவிட்டால், அடுத்த மூன்றரை ஆண்டுகளில் மீதமுள்ள ஏழு செமஸ்டரிலும் அதிக மதிப்பெண்களுடன் எளிதில் வெற்றி பெறவே வாய்ப்புகள் ஏராளம்” என்கிறார் கிண்டி பொறியியல் கல்லூரியின் டீன் கீதா.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...