Wednesday, February 28, 2018

94 தபால் அலுவலகங்களில் 'பாஸ்போர்ட்' சேவை மையம்

Added : பிப் 28, 2018 02:10

சென்னை: தமிழகத்தில், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் வசிப்போர், 'பாஸ்போர்ட் ' சேவையை பெறுவதில் சிரமம் இருந்தது. இதை, பாஸ்போர்ட் துறை அதிகாரிகள், மத்திய அரசுக்கு தெரிவித்ததால், மாவட்ட தலைமை தபால் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதன்படி, வேலுார் மற்றும் காரைக்காலில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று, கடலுார், விருதுநகர்; நாளை, திருவண்ணாமலை, விழுப்புரம் தலைமை தபால் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட உள்ளன.இவற்றில், வழக்கமான விண்ணப்பங்களும், புதுப்பிக்க கோரும் விண்ணப்பங்களும் மட்டும் ஏற்கப்படும். தத்கல் விண்ணப்பம், தடையின்மை சான்று ஆகிய வற்றுக்கு, பாஸ் போர்ட் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். தொடர்ந்து, தமிழகத்தில், 94 தபால் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கும் வகையில், தபால் துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த சேவை மையங்களின் சேவையை பெற, www.passportindia.gov.in என்ற இணையதளத்தில், பயணியர் கணக்கு துவக்க வேண்டும். பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஆன்லைனில் விண்ணப்பித்து, கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு, அசல் சான்றுகளுடன் நேரில் சென்று, கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026