Wednesday, February 28, 2018

இதை எல்லாம் சாப்பிட்டுவிட்டு ஃப்ளைட்டில் ஏறாதீர்கள்!

By சினேகா | Published on : 26th January 2018 01:11 PM |

பயணம் என்றாலே நம்மில் பலர் குஷியாகிவிடுவோம். பேக்கிங் முதற்கொண்டு ஒவ்வொரு விஷயமாக பார்த்து பார்த்து தயார் செய்வோம். பஸ், ரயில் பயணங்களை விட விமானப் பயணம் நம்முடைய மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.



ஒவ்வொரு பயணத்துக்கு முன்பும் என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும், எதையெல்லாம் சாப்பிட கொண்டு போகலாம் என்பதையெல்லாம் சரியாக திட்டமிடுவோம்.



ஆனால் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி சுத்தமாக நினைக்க மாட்டோம். ஆம். விமானப் பயணத்துக்கு முன்னால் எந்தெந்த உணவுகளை சாப்பிடக் கூடாது என்பதை நம்மில் பலர் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. ஃப்ளைட்டில் பறக்கும் போது, உங்கள் வயிற்றில் இருக்கக் கூடாத உணவுகள் சிலவற்றைப் பார்க்கலாம்.



1. பொறிக்கப்பட்ட / வறுக்கப்பட்ட உணவு வகைகள்

வீட்டிலிருந்து கிளம்பும் அவசரத்தில் எதுவும் சாப்பிடாமல் ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தவுடன் பசி வயிற்றைக் கிள்ளும். அப்போதைய அவசரப் பசிக்கு சாப்பிடக் கிடைக்கும் உடனடி உணவான பர்கர் அல்லது ஃபிங்கர் சிப்ஸை வாங்கி சாப்பிடாதீர்கள்.



வறுக்கப்பட்ட உணவுகளில் சோடியம் உள்ளது. மேலும் அதிலுள்ள எண்ணெய் மற்றும் கொழுப்புச் சத்து உங்களுக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடலாம். எனவே ஃப்ளைட் ஏறுவதற்கு முன் எண்ணெயில் வறுக்கப்பட்ட அல்லது பொறிக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்த்துவிடுங்கள்.

2. ப்ரொகோலி

முட்டை கோஸ், ப்ரொகோலி போன்ற பச்சைக் காய்கறிகளை விமானப் பயணத்தில் தவிர்த்துவிடுங்கள்.



காரணம் இவை வாயு பிரச்னையை விளைவித்து விடலாம். வேர்க்கடலை சாப்பிடுவதையும் தவிர்த்துவிடுங்கள்.



3. செயற்கை குளிர்பானம்

பயணம் செய்யும் போது பலருக்கு செயற்கை குளிர்பானம் குடிக்கும் பழக்கம் உள்ளது.



அது விமானப் பயணத்துக்கு முன் தவிர்ப்பது நலம். காரணம் அது ஏப்பத்தை ஏற்படுத்தி வாயுத் தொல்லைக்கும் வழி வகுக்கும்.



4. ஆப்பிள்
ஆப்பிள் உடல் நலத்துக்கு நல்லதுதான். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளது என்பதும் உண்மைதான்.
ஆனால் அது ஜீரணமாக நேரமாகும் ஆதலால் விமானம் ஏறும் முன் ஆப்பிளை சாப்பிட வேண்டாம்.
5. மது
விமானப் பயணத்துக்கு முன் ஒருபோதும் மது அருந்துவது கூடாது. ஏற்கனவே உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது மது அருந்துவதால் வேறு லெவலுக்கு உங்கள் தலை சுழலத் தொடங்கிவிடலாம்.
சிலருக்கு கடுமையான தலைசுற்றல் ஏற்படும். விமானத்திலிருந்து தரை இறங்கினாலும் மது அருந்தியிருந்தால் நீங்கள் தரை இறங்கியிருக்கமாட்டீர்கள். காரணம் ஹாங் ஓவர் பிரச்னை.  

6. பீன்ஸ்
பீன்ஸில் புரதச் சத்து அதிகமுள்ளது. இது வாயுத் தொல்லையை ஏற்படுத்தலாம்.

வாயு வெளியான வானிலுள்ள விமானத்தினுள் நீங்கள் வேறு வாயுவை வெளியேற்றினால் மற்ற பயணிகளுக்கு அது அசெளகரியம் ஏற்படலாம் அல்லவா?

7. இறைச்சி
பொதுவாக அசைவ உணவுகளை விமானப் பயணத்துக்கு முன்னால் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இறைச்சி.





அது ஜீரணமாவது கடினம் என்பதால் உங்களுக்கு அசெளகரியமாக இருக்கும்.  
8. மசாலா உணவுகள்
கார சாரமாக மசாலா உணவுகளையும் விமானப் பயணத்துக்கு முன்னால் சாப்பிடக் கூடாது. காரணம் அத்தகைய உணவுகள் நிச்சயம் அதன் வேலையை உடம்பில் காட்டும்.
பிறகு ப்ளைட்டில் நீங்கள் இருக்கையில் இருப்பதை விட டாய்லெட்டில் இருக்கும் நேரம் தான் அதிகமாக இருக்கும்படியாகிவிடும். எனவே அத்தகைய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 
9. காபி
காபி பிரியர்களுக்கு ஒரு கப் காபி குடிக்காமல் எதுவும் ஓடாது. கையில் ஒரு புத்தகத்துடன் காபி குடித்தபடியே விமானத்தில் பயணம் செய்வதை நினைக்கையில் நன்றாகத் தான் இருக்கும்.
ஆனால் காபியை குடித்துவிட்டு விமானத்தில் ஏறினால் சிலருக்கு தலைச் சுற்றல் வாந்தி வரலாம். கஃபைன் சில சமயம் எதிர்பாராத விதமாக ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.


ஹஜ் பயணத்துக்கான விமானக் கட்டணங்கள் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

By DIN | Published on : 27th February 2018 06:09 PM

புதுதில்லி: இஸ்லாமியர்களின் புனித ஹஜ் பயணத்துக்கான விமானக் கட்டணங்கள் 35% வரை குறைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் மெக்காவுக்கு செல்வது என்பது இஸ்லாமியர்களின் ஐந்து புனித கடமைகளில் ஒன்றாகும். இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 25 ஆக உயர்ந்தது.

முன்னதாக ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் ஒரு நபருக்கு சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்வரை மானியமாக அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி இந்த ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ள நிலையில் இதற்காக சுமார் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

ஆனால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா நாட்டுக்கு ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் மானியத் தொகை இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக கடந்த 16-1-2018 அன்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் ஹஜ் பயணத்துக்கான விமானக் கட்டணங்கள் 35% வரை குறைக்கப்பட்டிருப்பதாக புதுதில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
மாநகர பேருந்துகளில் நடத்துநர் அமர்ந்து பயண சீட்டு வழங்கக்கூடாது: போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

By DIN | Published on : 27th February 2018 09:24 PM



சென்னை மாநகர பேருந்துகளில் இனி நடத்துநர் சீட்டில் அமர்ந்து கொண்டு பயண சீட்டு வழங்கக்கூடாது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் பல வழித் தடங்களில் 3200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை பயன்படுத்தியும், இலவச பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது வருகிறது. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் நஷ்டம் அதிகரித்து வருகிறது.

மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாநகர பேருந்துகளில் மட்டும்தான் நடத்துநர் இருக்கையில் அமர்ந்து கொண்டே பயண சீட்டு வழங்கும் நிலை உள்ளது. இதனால் இலவச பயணம் அதிகரித்து, போக்குவரத்து கழகத்திற்கு மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையை மாற்றி, போக்குவரத்து கழகத்தின் வருவாயை பெருக்க தற்போது சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நடத்துநர் இருக்கையை விட்டு எழுந்து சென்று பயணிகளுக்கு பயண சீட்டு வழங்க வேண்டும், இலவச பாஸ், மாதாந்திர பாஸ் போன்றவற்றில் பயணம் செய்யும் பயணிகளிடம் அவர்களின் பயண அட்டையை சோதிக்க வேண்டும். அவை போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்டதா அல்லது போலியாக தயாரிக்கப்பட்டதா என்பதை நடத்துநர் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து புகார் குறித்து பயணிகள் 9445030516 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் புகார் தெரிவிக்கையில் பேருந்து வழித்தடம் எண் பக்கவாட்டில் உள்ள சீட் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் கூற வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளனர்.
பிஎஃப் கணக்கை ஆதாருடன் இணைக்கும் வசதி அறிமுகம்

By DIN | Published on : 28th February 2018 01:17 AM

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்குகளை உமங் என்ற செயலி மூலம் ஆதார் எண்ணுடன் இணைக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இபிஎஃப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. அந்த அமைப்பின் இணையதளத்தில் பிஎஃப் கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் வசதி ஏற்கெனவே இருக்கிறது. அதனுடன் உமங் செயலி மூலம் ஆதாரை இணைக்கும் புதிய வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளவும், பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளவும் ஏற்கெனவே வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் கையொப்பம் அளிக்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி அவர்கள் இந்த வசதிகளைப் பெறலாம்.
உமங் என்ற செயலியானது செல்லிடப்பேசி மூலம் மத்திய அரசின் பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்காக தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வுக்கான தகுதியை முடிவு செய்வதில் எங்களுக்குத் தொடர்பில்லை: சிபிஎஸ்இ

By DIN | Published on : 28th February 2018 12:52 AM |



நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான தகுதியை முடிவு செய்வதில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு எழுதுவதற்கு தேசிய திறந்த நிலைப் பள்ளி மற்றும் மாநில திறந்த நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும், 12-ஆம் வகுப்பில் உயிரியல்அல்லது உயிரி தொழில்நுட்பத்தை கூடுதல் பாடமாகப் படித்த மாணவர்களுக்கும் தகுதி இல்லை என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையை சிபிஎஸ்இ அமைப்புதான் வகுத்துள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக அந்த அமைப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் 'நீட் தேர்வை நடத்துவது மட்டுமே எங்கள் பொறுப்பாகும். இந்திய மருத்துவ கவுன்சில் (ஐஎம்சி) வகுத்துள்ள தகுதி தொடர்பான நடைமுறைகளின்படி இத்தேர்வை நாங்கள் நடத்துகிறோம். இத்தேர்வு தொடர்பாக ஏதாவது குறை இருந்தால் இந்திய மருத்துவ கவுன்சிலை அணுக வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நீட் தேர்வானது வரும் மே 6-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்காக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இத்தேர்வுக்கு பதிவு செய்து கொள்வதற்கான கடைசித் தேதி மார்ச் 9 ஆகும். தேர்வுக் கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்துவதற்கான கடைசி நாள் மார்ச் 10 நள்ளிரவு 11.50 மணி.இதனிடையே மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு நீட் தேர்வு 150 இடங்களில் நடத்தப்படும். கடந்த ஆண்டு இத்தேர்வு 107 இடங்களில் நடத்தப்பட்டது. இம்முறை கூடுதலாக 43 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 4,000 அல்லது அதற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ள நகரங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன. அதன்படி, புதிய மையங்கள் ஆந்திரப் பிரதேசம் (5), அஸ்ஸாம் (2), குஜராத் (3), மகாராஷ்டிரம் (6), ஒடிஸா (4), தமிழ்நாடு (2), கேரளம் (5), தெலங்கானா (2), மேற்கு வங்கம் (3), உத்தரப் பிரதேசம் (3) ஆகிய மாநிலங்களில் அமைக்கப்படுகின்றன.

சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், ஹிமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடகம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட உள்ள தலா ஒரு மையமும் புதிய மையங்களில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓலா, உபருக்கு மாற்றாக உருவெடுக்கும் புதிய சக்தி: இத இதத்தான் எதிர்பார்த்தோம்

By DIN | Published on : 27th February 2018 03:36 PM |

செல்போன் ஆப்கள் மூலமாக கார்களை முன்பதிவு செய்துகொள்ளும் வசதியின் மூலம் மக்கள் பயனடைந்தார்களோ இல்லையோ ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் லாபம் அடைந்தன.

பல நேரங்களில் ஓட்டுநர்களின் நிலைதான் பரிதாபமாகிப் போனது. அதற்காக சுமார் 3 ஆயிரம் கார் ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து எடுத்திருக்கும் முடிவு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது சென்னையில் கார் ஓட்டும் சுமார் 3 ஆயிரம் கார் ஓட்டுநர்கள் இணைந்து சொந்தமாக ஒரு செல்போன் செயலியை உருவாக்க உள்ளனர். அதற்கு ஓட்டுநர் தோழர்கள் சங்கம் என்று பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த செயலி மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கமிஷனாக அதிகத் தொகையை ஓட்டுநர்களிடம் இருந்தும், பயணத்தை ரத்து செய்யும் போது அபராதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு தொகையையும் வசூலிப்பதாக உபர் மற்றும் ஓலா நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

புதிய செல்போன் செயலியை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சம்பத் என்பவர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், பயணிகளுக்கு சிறந்த சேவையும், அதன் மூலம் ஓட்டுநர்களுக்கு லாபமும் கிடைக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்படுகிறது. தற்போது ஓட்டுநர்களின் மொத்த வருவாயில் 20 முதல் 21 சதவீதத்தை கமிஷனாக செயலி நிறுவனங்களே பிடுங்கிக் கொள்கின்றன. ஜிஎஸ்டி 5 சதவீதமே இருக்கும் நிலையில், ஓட்டுநர்களிடம் இருந்து 7%ம் பிடிக்கப்படுகிறது.

தற்போது புதிய செயலி உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம், ஒரு பயணி தான் பயணித்த மொத்த தூரத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். மறைமுகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. அதே சமயம், பயணத்தை மாற்றும் போது அதற்காக எந்த கட்டணமும் தனியாக வசூலிக்கப்படாது என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 3 ஆயிரம் ஓட்டுநர்கள் இடம்பெற்றிருப்பார்கள். புறநகர்ப் பகுதிகளில் 1,200 பேர் பணியாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக புகார் அளித்து கடந்த ஜனவரி மாதம் கார் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது.
மருத்துவ மாணவர் சாவில் நீதி விசாரணை : உறவினர்கள் கோரிக்கை

Added : பிப் 28, 2018 00:55

ராமேஸ்வரம்: சண்டிகரில் மருத்துவ மாணவர் மரணம் தொடர்பாக , நீதி விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும், என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத்,24, சண்டிகரில் உள்ள பி.ஜி.ஐ. எம்.இ.ஆர்., மருத்துவ கல்லுாரியில் பட்ட மேற்படிப்பு படிக்க கடந்த டிச.,16ல் சேர்ந்தார்.விடுதியில் தங்கிய 73 நாட்களில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்ததாக கல்லுாரி தெரிவித்தது. அவரது உறவினர்கள் மற்றும் தமிழக அதிகாரிகள் கல்லுாரிக்கு சென்று மாணவர் தங்கியிருந்த அறை 205ஐ பார்த்தனர். அதில் கதவு, தாழ்ப்பாள் உடைக்காமல் இருந்தது. அவற்ைற உடைக்காமல் எப்படி உடலை மீட்டனர். கதவை பூட்டாமல் தற்கொலை செய்தாரா' என்ற கேள்விக்கு பதிலில்லை. எனவே மாணவர் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும். மாணவர் உடல் சண்டிகரில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து காரில் மாலை 4:00 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

NEWS TODAY 10.06.2026