Monday, April 16, 2018


18-இல் அட்சய திருதியை: தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு

By DIN | Published on : 16th April 2018 04:25 AM | 

அட்சய திருதியை புதன்கிழமை (ஏப்.18) வரும் நிலையில், நுகர்வோர் தேவைக்காக தங்க வியாபாரிகள் கொள்முதலை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்குவது தற்போது மக்களிடையே வாடிக்கையாகிவிட்டது. அன்றைய நாளில் தங்கம் வாங்கினால் தீராத கடன்களும், ஏழ்மையும் மிகக்குறுகிய காலத்தில் தீரும் என்ற நம்பிக்கை ஹிந்து சமய மக்களிடம் இருந்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளில் நகைக் கடைகளில் பெண்கள் கூட்டம் அலைமோதுவது உண்டு.

இவ்வாண்டு வரும் 18-ஆம் தேதி அட்சய திருதியை வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.24 ஆயிரத்தை நெருங்கும் நிலைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தங்கத்தை சேமிக்கவும், அட்சய திருதியை நாளில் வாங்குவதற்கும் ஆர்வம் கொண்ட மக்களிடம் இந்த விலை உயர்வு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியது: சிரியா மீது மற்ற நாடுகள் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளன. பிரிட்டன், பிரான்ஸýடன் இணைந்து அமெரிக்கா, சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும், சீனாவும் செயல்பட்டு வருகின்றன. இந்த போர் உலக நாடுகளில் உள்ள பெரிய முதலீட்டாளர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் பங்கு சந்தையை தவிர்த்து தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ஆம் தேதி, பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, ஒரு கிராம் தங்கம் ₹3,023 -க்கும், ஒரு சவரன் ₹24,184-க்கும் விற்கப்பட்டது. 17 மாதத்துக்கு பிறகு தற்போதுதான் தங்கம் விலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்றார்.

'ஓபி' அடிக்கும் அதிகாரிகள்  தலைமை செயலர் கோபம் 


dinamalar 16.04.2018

'தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், அதிகாரிகள் சரியாக பணிக்கு வருவதில்லை; பணி நேரத்தில், அலுவலகத்தில் இருப்பதில்லை' என, பரவலாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தலைமை செயலகத்திலும், இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது, நிர்வாகத்தை பெரிதும் பாதிக்கும் அளவுக்கு அதிகரித்து உள்ளது, உயர் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமீபத்தில், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நடந்த, துறை செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இது குறித்து, விவாதிக்கப்பட்டுள்ளது.



இதைத் தொடர்ந்து, தலைமை செயலர், துறை செயலர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், 'அலுவலகங்களுக்கு, அதிகாரிகளும்,

பணியாளர்களும், உரிய நேரத்துக்குள் வருவதையும், அலுவலக நேரத்தில், அவர்கள் பணியில் இருப்பதையும், உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

நாட்டில் 24 போலி பல்கலைகள்  யு.ஜி.சி., பட்டியல் வெளியீடு

dinamalar 16.04.2018

நாடு முழுவதும் செயல்படும், போலி பல்கலைகளின் பெயர் பட்டியல், பல்கலை மானியக்குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.





கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கான அங்கீகாரம் வழங்குதல், கட்டமைப்பு, ஆராய்ச்சி நிதிகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு மேற்கொள்கிறது. யு.ஜி.சி., கட்டுப்பாட்டில் செயல்படும், 'நாக்' அமைப்பு,

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம், ஆசிரியர்கள் குறித்து ஆய்வு செய்து, சிறப்பு அந்தஸ்தை தருகிறது.

இதுபோன்ற, அங்கீகாரம், அந்தஸ்து, கட்டமைப்பு ஏதும் இல்லாத போலி கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் சேர்க்கையை நடத்துகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தகுதி சான்றிதழ்கள், எந்த வகையிலும் பயனளிக்காது.

இதனால், ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கை பணிகள் துவங்கும் முன், போலி பல்கலைகளின் பட்டியலை, யு.ஜி.சி., வெளியிடுவது வழக்கம். தற்போது, நாடு முழுவதும், 24 பல்கலைகள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஒரு பல்கலையும் இடம் பெறவில்லை.

டில்லியில் 7 பல்கலைகள், உத்தரபிரதேசத்தில், 8; மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் தலா, 2; பீஹார், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று, இடம் பெற்றுள்ளன. வெளி மாநிலங்களில் கல்வி பயில செல்லும் மாணவர்கள், இப்பட்டியலை கவனித்து செயல்பட வேண்டியது அவசியம்.

- நமது நிருபர் -
ஐ.ஆர்.சி.டி.சி., வாடிக்கையாளர் சேவை எண்

Added : ஏப் 16, 2018 01:00

டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பலதரப்பட்ட புகார்களுக்கு, இரு பிரத்யேக வாடிக்கையாளர் சேவை எண்களை, ஐ.ஆர்.சி.டி.சி., புதிதாக அறிமுகம் செய்துள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே மற்றும் உணவு சுற்றுலா கழகம் மூலம், லட்சக்கணக்கானோர் தினமும் டிக்கெட் முன்பதிவு செய்து, ரயில்களில் பயணித்து வருகின்றனர். சில சமயங்களில், இணையதளம் முடக்கம், டிக்கெட் முன்பதிவு, ரத்து உள்ளிட்டவற்றில், பல்வேறு குழப்பங்களை பயணியர் சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில், முன்பதிவு, இணையதள கோளாறு, கட்டணம் திரும்பப்பெறுதல், 'இ - வாலட்' தொடர்பாக மட்டுமின்றி, இதர புகார்களுக்கும் தீர்வு காணும் விதமாக, இரு புதிய வாடிக்கையாளர் சேவை எண்கள் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 0755 3934141, 0755 6610661 ஆகிய எண்களில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் சேவை பெறலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -
திருமலை காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு பொங்கலுடன் சட்னி

Added : ஏப் 16, 2018 05:12

திருப்பதி: திருமலையில் பக்தர்கள் காத்திருப்பு அறைகளில், பொங்கல் மற்றும் உப்புமா உள்ளிட்ட சிற்றுண்டிகளுடன், சட்னி வழங்கும் நடைமுறையை, தேவஸ்தானம் துவங்கி உள்ளது.திருப்பதி, திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம், 24 மணிநேரமும் அன்னதானம், சிற்றுண்டி, டீ, காபி, பால், மோர் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. காத்திருப்பு அறைகளிலும், பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளிலும், அன்னதானம், சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல், ரவை, சேமியா உப்புமா உள்ளிட்டவை வழங்கும் போது, அதற்கு இணையாக சட்னியும் வழங்க வேண்டும்' என, மாதந்தோறும், குறைகேட்பு நிகழ்ச்சியில், பக்தர்கள் தேவஸ்தானத்திடம் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இதையேற்று, தேவஸ்தான நிர்வாகம், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், பொங்கல் மற்றும் உப்புமா சிற்றுண்டிகளுடன், வேர்கடலை சட்னி வழங்கும் நடைமுறையை துவங்கி உள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமலை ஏழுமலையானை தரிசிக்க, வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில், பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.தற்போது, தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், தமிழ் புத்தாண்டு முதல் திருமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.அதனால், இதற்கு முன் தர்ம தரிசனத்தில், 3 மணிமுதல், 4 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வந்த பக்தர்கள், தற்போது, 15 மணிநேரம் காத்திருக்கின்றனர்.எனவே தேவஸ்தான நிர்வாகம், பக்தர்களின் காத்திருப்பு சிரமத்தை குறைக்க, தர்ம தரிசன பக்தர்களுக்கு, விரைவில், நேர ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது.
அரசு பெண் ஊழியர்கள் வெளிநாடு செல்ல சலுகை

Added : ஏப் 16, 2018 04:30

புதுடில்லி: 'மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், சி.சி.எல்., எனப்படும், குழந்தை பராமரிப்பு விடுப்பில், வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர்' என, பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

அனுமதி : மத்திய அரசு பணியாளர் நலத்துறை வெளியிட்ட அறிக்கை விபரம்:மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு, அவர்களது குழந்தைகளுக்கு, 18 வயது ஆகும் வரை, சி.சி.எல்., எனப்படும், குழந்தை பராமரிப்பு விடுப்பு அளிக்கப்படுகிறது. தங்கள் பணிக்காலத்தில், 730 நாட்கள், சி.சி.எல்.,லாக, அவர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.இந்த விடுப்பில் செல்வோர், வெளிநாட்டு பயணம் செல்லவும், தற்போது அனுமதி அளிக்கப்பட உள்ளது. சி.சி.எல்., விடுப்பு காலத்தில், எல்.டி.சி., எனப்படும், சுற்றுலா விடுப்பு சலுகையையும், அரசு ஊழியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.விடுமுறைஎல்.டி.சி.,யில், சுற்றுலா பயணம் செல்லவும், திரும்பி வரவும் ஆகும் செலவு தொகையை பெற்றுக் கொள்ளலாம்; சுற்றுலா பயண நாட்கள் விடுமுறை நாட்களாக கருதப்படும். சி.சி.எல்.,லில் வெளிநாட்டு பயணம் செல்ல, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், முன் அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


திணறல்!

ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் ஆந்திர அரசு...
நிதி பற்றாக்குறை, மென்பொருள் பிரச்னையால் சிக்கல் 

dinamalar 16.04.2018

அமராவதி : ஆந்திர அரசில் நிலவும் நிதிப் பற்றாக்குறை மற்றும் மென்பொருள் கோளாறால், ஒரு மாதத்துக்கும் மேல், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பில்களுக்கு, பணம் செலுத்தும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; ஆந்திர அரசில் பணியாற்றும், 7.9 லட்சம் ஊழியர்களில், 22 ஆயிரம் பேர், மார்ச் மாத சம்பளத்தை, இன்னும் பெற முடியாமல் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.





ஆந்திராவில், தெலுங்கு தேசத் தலைவர், சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். ஆந்திராவில் இருந்து, தெலுங்கானா மாநிலம் பிரிந்ததை அடுத்து, அமராவதியில் புதிய தலைநகரை நிர்மாணிக்கும் பணியில், முதல்வர், சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். இம்மாநிலத்தில், போலாவரம் நீர் பாசன திட்டம் உள்ளிட்ட மேலும் பல பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து போதிய நிதி வந்து சேராததால், ஆந்திர அரசு, கடும் நிதி பற்றாக்குறையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஆந்திர அரசின் நிதித்துறை தொடர்பான மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பில்களுக்கு, குறித்த நாளில் பணம் அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில், 7.9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு, ஒவ்வொரு மாத முடிவில் சம்பளம் அல்லது ஓய்வூதியம், அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு விடும். ஆனால், ஆந்திர அரசில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி மற்றும் மென்பொருள் பிரச்னையால், கடந்த மாதம், குறித்த நாளில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழக்கமான நாளில் சம்பளம் தரப்படவில்லை.

தீவிர முயற்சி :

மென்பொருள் கோளாறால், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களில் பெரும்பாலானோருக்கு, இம்மாதம், 7ம் தேதி தான் சம்பளம் தரப்பட்டுள்ளது. அதிலும், 22 ஆயிரம் அரசு ஊழியர்கள் இன்னும் சம்பளம் கிடைக்காமல் சிரமப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. மென்பொருளில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்ய, நிதித்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, ஆந்திர நிதித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிற்பட்ட மாவட்டங்கள் மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், போலாவரம் திட்டத்துக்கு, மத்திய அரசிடம் இருந்து, 3,000 கோடி ரூபாய் வர வேண்டும். மத்திய அரசு தரவேண்டிய நிதியுதவி தாமதமாகி வருவதால், ஆந்திர அரசின் நிதி இருப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், 8,000 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு, பல்வேறு காரணங்களை கூறி நிறுத்தி வைத்துள்ளது.

மாநில அரசு, சமீபத்தில், விரிவான நிதி மேலாண்மை தொழில்நுட்ப நடைமுறையை அமல்படுத்தியது. இத்திட்டம், ஒருங்கிணைந்த பணப் பட்டுவாடா கட்டமைப்பை உருவாக்கும்.

பாதிப்பு :

இருப்பினும், இந்த மென்பொருள் கட்டமைப்பை பயன்படுத்த, ஆந்திர அரசு ஊழியர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப்படவில்லை. பழைய மென் பொருளில் இருந்து, புதிய மென்பொருளுக்கு மாறுவதில் சில நடைமுறை பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளன; அவை சரி செய்யப்பட வேண்டும். இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, சம்பளம் செலுத்தும் பணி முடங்கியது. ஆந்திர அரசின் பல திட்ட பணிகளுக்கான பணப் பட்டுவாடாவும், பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில், 175 சட்டசபை தொகுதிகளில், கலாசார நிகழ்ச்சிகள், அரசு சார்பில் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற கலைஞர்களுக்கு, இதுவரை சம்பளம் தரப்படவில்லை. அந்த கலைஞர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் கூட தர முடியாதது வருந்தத்தக்க விஷயம்.

கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்கு, ஆந்திர அரசு, மூன்று கோடி ரூபாய் சம்பள பாக்கி வைத்து உள்ளது. சம்பளம் இன்றி வேலை செய்ய, பெரும்பாலான நடன ஆசிரியர்கள் மறுத்துவிட்டனர். இதனால், குச்சுபுடி நடனத்தை மக்களிடம் சென்றடையச் செய்யும் மாநில அரசின் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மகிழ்ச்சியில் ஜெகன்; பீதியில் சந்திரபாபு :



ஆந்திர அரசு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் தோல்வி அடைந்து விட்டதாக கூறி, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன்மோகன் ரெட்டி, மாநிலம் தழுவிய யாத்திரை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில், அவரது யாத்திரை, விஜயவாடாவுக்கு வந்தபோது, ஆயிரக்கணக்கான பொதுமக்களும், தொண்டர்களும் திரண்டு, வரவேற்பு அளித்தனர். இதுவரை, 1,780 கி.மீ., யாத்திரையை நிறைவு செய்துள்ள ஜெகன், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், யாத்திரை செல்லும் வகையில், அதன் வழித்தடத்தை அமைத்துள்ளார். ஒவ்வொரு இடத்திலும் பேசும்போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவதில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தோல்வி அடைந்து விட்டதாக வலியுறுத்தி வருகிறார். அவரது பேச்சுக்கு, ஆந்திர மக்களிடையே, பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாலும், அவரைக் காண, ஏராளமான கூட்டம் கூடுவதாலும், சந்திரபாபு நாயுடு கலக்கம் அடைந்துள்ளார். இந்த பிரச்னையை சமாளிக்கும் வகையிலேயே, மத்திய அரசுக்கு எதிராக, 20ம் தேதி, உண்ணாவிரத போராட்டத்துக்கு, சந்திரபாபு ஏற்பாடு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

NEWS TODAY 23.12.2025