Saturday, May 12, 2018

பணி விடுவிப்பு ஊழியருக்கு இலவச பாஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : மே 12, 2018 06:24

மதுரை : நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் நாகேந்திர பிள்ளை என்பவர் பணிபுரிந்தார். மருத்துவக் காரணங்கள் அடிப்படையில் 2015 ல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஓய்வு பெற்றவர்கள்,விருப்ப ஓய்வு பெற்றவர்களைப்போல் தனக்கும், மனைவிக்கும் இலவச பஸ் பாஸிற்குரியஅடையாள அட்டைவழங்க வேண்டும் என போக்குவரத்துக் கழக நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார்.நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நாகேந்திர பிள்ளை மனு செய்தார்.
நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவு: மனுதாரர் 2016ல் அளித்த மனுவைதிருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் தகுதி அடிப்படையில் பரிசீலித்து, சட்டத்திற்குட்பட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
லாலுவுக்கு 6 வாரம் ஜாமின் : ஜார்க்கண்ட் ஐகோர்ட் உத்தரவு

Added : மே 12, 2018 00:52

ராஞ்சி: ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் யாதவுக்கு, மருத்துவ காரணங்களுக்காக, ஆறு வாரத்துக்கு மட்டும், தற்காலிக ஜாமின் வழங்கி, ஐார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு தாக்கல் : ஜார்க்கண்டில், முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கால்நடை தீவன ஊழல் வழக்குகளில், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத், ஜார்க்கண்ட் தலைநகர், ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.லாலுவின் மூத்த மகன், தேஜ் பிரதாபுக்கு, பீஹார் தலைநகர் பாட்னாவில், இன்று திருமணம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, 10 நாள், 'பரோல்' வழங்கும்படி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில், லாலு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று நாட்கள் மட்டும் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதைஅடுத்து, சிறையிலிருந்து வெளியே வந்த லாலு, பாட்னாவில் உள்ள தன் வீட்டுக்குச் சென்றார்.இந்நிலையில், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில், லாலு சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், அபிஷேக் சிங்வி, பிரபாத் குமார் ஆகியோர், நேற்று காலை தாக்கல் செய்த மனுவில், 'லாலு பிரசாத், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். 'அவர் மருத்துவ சிகிச்சை பெற, 12 வாரம் ஜாமின் வழங்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

ஆறு வாரம் : இதை விசாரித்த உயர் நீதிமன்றம், லாலுவுக்கு ஆறு வாரம், தற்காலிக ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும், 'மூன்று நாள் பரோல் முடிந்த பின், சிறைக்கு லாலு திரும்ப வேண்டும். அதன்பின், இந்த ஆறு வார ஜாமின் உத்தரவை காட்டி, சிறையிலிருந்து வெளியே வர வேண்டும். 'ஜாமின் காலத்தில், எந்த அரசியல் நிகழ்ச்சிகளிலும், லாலு பங்கேற்க கூடாது' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Added : மே 12, 2018 00:50

புதுடில்லி: நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரபல நடிகை, ஸ்ரீதேவி, 54; தமிழில், மூன்றாம் பிறை, வறுமையின் நிறம் சிகப்பு உட்பட பல படங்களில் நடித்தவர்.

சந்தேகம் : பிப்ரவரியில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு சென்றிருந்தார். அங்கு ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவர், குளியல் அறையில் இறந்து கிடந்தார். 'மாரடைப்பால் அவர் இறந்தார்' என, முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், 'மது அருந்தியதால், ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் விழுந்து, ஸ்ரீதேவி இறந்துள்ளார்' என, கூறப்பட்டிருந்தது.நீண்ட விசாரணைக்கு பின், ஸ்ரீதேவியின் இறப்பில் சந்தேகம் இல்லை எனக் கூறி, அவரது உடலை, குடும்பத்தினரிடம்,, துபாய் போலீசார் ஒப்படைத்தனர். இந்நிலையில், ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, இயக்குனர் சுனில் சிங் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்தார்.

இன்சூரன்ஸ் : இந்த மனு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறுகையில், ''ஸ்ரீதேவி பெயரில், 240 கோடி ரூபாய்க்கு, ஓமனில் இன்சூரன்ஸ் பாலிசி உள்ளது. ''ஐக்கிய அரபு எமிரேட்சில், அவர் இறந்தால் மட்டுமே, அந்த பாலிசி தொகை கிடைக்கும்; இந்த நிலையில், துபாயில் அவர் திடீரென இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்,'' என்றார். ஆனால், 'துபாய் போலீசார் நடத்திய விசாரணையில், சந்தேகப்படுவதற்கு ஏதும் இல்லை' என கூறி, மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

பெரம்பலூர் அருகே விபத்து : காஞ்சியை சேர்ந்த 9 பேர் பலி

Updated : மே 12, 2018 00:19 | Added : மே 12, 2018 00:18



காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்திலிருந்து, கேரளாவுக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினர் பயணித்த கார், பெரம்பலுார் அருகே விபத்துக்குள்ளாகி, ஒன்பது பேர் இறந்த சம்பவம், இப்பகுதியில் பயங்கர சோகத்தை ஏற்படுத்திஉள்ளது. காஞ்சிபுரத்தின் திருமால் நகர், அஸ்தகிரி தெரு, அமுதபடி தெரு, அம்மங்கார தெரு போன்ற பகுதியில் வசிப்போர், இந்த சம்பவத்தால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சின்ன காஞ்சிபுரம், திருமலை நகரைச் சேர்ந்தவர், எஸ்.ஆர்.மோகன்; பட்டு சேலை உற்பத்தியாளர். இவர் மனைவி லஷ்மி, 28. இந்த தம்பதிக்கு, பவித்ரா, 14; நவிதா, 8, மற்றும் வரதராஜன், 5, என, மூன்று பிள்ளைகள். குடும்பத்துடன் நிம்மதியாக வசித்து வந்த மோகன், கேரளாவிற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். தன் குடும்பத்துடன், அக்கா கணவர் முரளி, மற்றொரு அக்காவின் மகள் சோபனா, 19, ஆகியோரை அழைத்துக்கொண்டு, நேற்று முன்தினம் மாலை புறப்பட்டனர். காஞ்சிபுரத்திலிருந்து, 'டவேரா'காரில் புறப்பட்ட இந்த ஏழு பேருடன், அம்மங்கார தெருவைச் சேர்ந்த பூபதி மற்றும் நாராயணன் என்ற பிரபாகரன் ஆகிய இரு ஓட்டுனர்களும் சென்றனர். நேற்று முன்தினம் இரவு, திருச்சி நோக்கி இவர்களின் கார் சென்று கொண்டிருந்தது. பெரம்பலுார் நான்கு வழிச்சாலையில், எதிரே வந்த காரின் டயர் வெடித்து, அந்த கார் பறந்து வந்து, மோகன் சென்ற கார் மீது விழுந்துள்ளது.இதில், படுகாயம் அடைந்த மோகன் உள்ளிட்ட ஒன்பது பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்து குறித்து, தகவல் தெரிந்தவுடன், காஞ்சிபுரத்தில் உள்ள மோகனின் உறவினர்கள் பெரம்பலுார் புறப்பட்டு சென்று, பிரேத பரிசோதனைக்கு பின், அவர்களின் உடலைபெற்றுள்ளனர். தகவலறிந்தவர்கள் மோகனின் வீட்டில் குழுமியுள்ளனர். மோகன் குடும்பத்தினர் வசித்த, திருமலை நகர் பகுதிவாசிகள், இந்த தகவலை கேட்டு, சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுபோல், சோபனா, முரளியின் அஸ்தகிரி தெருஎன சின்ன காஞ்சிபுரம் பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும், பூபதி மற்றும் நாராயணன் ஆகிய கார் ஓட்டுனர்களின் வீடுகளும் களையிழந்து காணப்பட்டன.

ஒன்பது பேரின் உடல்களுக்கும், இன்று இறுதி சடங்கு நடைபெறும் என, உறவினர்கள் தெரிவித்து உள்ளனர். \பத்தாண்டுகளாக சிரமப்பட்டு, கைத்தறி தொழிலில் உயர்ந்து வந்தார். இப்படி ஒரு விபத்து நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. என் மாமா அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர். இறந்தவர்களின் உடல்களை கைப்பற்ற, உறவினர்கள் பெரம்பலுார் சென்றுள்ளனர். சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளோம்.
பி.பாலாஜி, மோகனின் மைத்துனர்

உறவினர் சுற்றுலா செல்வதால், சோபனாவும் புறப்பட்டு சென்றாள். ஆனால், அவள் இப்படி திரும்பி வருவாள் என, எதிர்பார்க்கவில்லை. கல்லுாரியில் நன்றாக படிப்பார். பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார். எங்கள் குடும்பமே இதனால், சோகத்தில் ஆழ்ந்துள்ளோம். இதுபோன்ற துயரம் யாருக்கும் ஏற்படக் கூடாது.

ஜி.ஆர்.கீதா, சோபனாவின் சகோதரி
இரு போக்குவரத்து கழகங்கள் இணைப்பு

Added : மே 12, 2018 02:09

சென்னை: நிதி நெருக்கடியை சமாளிக்க, அரசு போக்குவரத்து கழகங்களான, நெல்லை போக்குவரத்துக் கழகம், மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான, அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.திண்டுக்கல், விருதுநகர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு, மதுரை போக்குவரத்துக் கழகமும், கன்னியாகுமரி, துாத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு, நெல்லை போக்கு வரத்துக் கழகமும் அரசு பஸ்களை இயக்கி வந்தன.இந்நிலையில், நெல்லை போக்குவரத்துக் கழகம், கடனை திருப்பி செலுத்த முடியாமல், நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக, 2016, மார்ச்சில் நடந்த, இயக்குனர்கள் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தீர்வு காண, நெல்லை போக்குவரத்துக் கழகத்தை, மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்கலாம் என, ஆலோசனை முன் வைக்கப்பட்டது.இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, போக்குவரத்து துறை தலைவர் உள்ளிட்ட, ஆறு பேர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, 'நெல்லை போக்குவரத்துக் கழகத்தை, மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்க வேண்டும்; இல்லாவிட்டால், நெல்லை போக்குரவரத்துக் கழகத்தை நடத்த முடியாது' என, அறிக்கை அளித்தது.இதைத்தொடர்ந்து, இரண்டு போக்குவரத்துக் கழகங்களையும் இணைக்க, அவற்றின் இயக்குனர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
ஜி.டி., எக்ஸ்பிரஸ் புதுடில்லி வரை இயக்கம்

Added : மே 12, 2018 01:12

சென்னை: சென்னை, சென்ட்ரலில் இருந்து, டில்லி, சராய் ரோகில்லா நிலையம் வரை, கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து, தினமும் இரவு, 7:15 மணிக்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் காலை, 7:10 மணிக்கு, டில்லி சராய் ரோகில்லா நிலையம் அடையும். அங்கிருந்து, தினமும், மாலை, 5:50 மணிக்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் காலை, 6:20 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வரும். இந்த ரயில், வரும், 21ம் தேதியில் இருந்து, புதுடில்லி நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் ரயில், புதுடில்லி நிலையத்திற்கு, காலை, 6:30 மணிக்கு சென்று அடையும். புதுடில்லியில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு மாலை, 6:40 மணிக்கு புறப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து, இந்த ரயில் புறப்படும் மற்றும் வரும் நேரத்தில் மாற்றமில்லை என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நர்ஸ்களுக்கு விரைவில் புதிய சீருடை: அமைச்சர்

Added : மே 12, 2018 00:28

சென்னை: ''நர்ஸ்களுக்கு பாரம்பரியம் மாறாமல், புதிய சீருடை வழங்கப்படும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உலக நர்ஸ்கள் தினத்தையொட்டி, அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக பணிபுரிந்த, 251 நர்ஸ்களுக்கு, விருதுகள் வழங்கும் விழா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர்., மருத்துவ பல்கலையில், நேற்று நடந்தது. நர்ஸ்களுக்கு விருதுகளை வழங்கிய பின், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: புதிய சீருடை வழங்க வேண்டும் என, நர்ஸ்கள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். இதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமா மகேஸ்வரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.விரைவில், பாரம்பரியம்மாறாமல், புதியசீருடைகள் வழங்கப்படும். நர்ஸ்களுக்கு விரைவில், பதவி உயர்வு வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள, 10 ஆயிரம் நர்ஸ்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவர். மகப்பேறு மருத்துவம் படித்த, 134 ஆண் நர்ஸ்கள், மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தேர்வுகளை எழுதும் வகையில், விதிகள் தளர்த்தப்படும். தற்போது உள்ள, டிப்ளமா நர்சிங் படிப்பை, பட்ட படிப்பாக மாற்ற, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முயற்சி மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன், தமிழக சுகாதார திட்ட இயக்குனர், உமா மகேஸ்வரி, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ உட்பட, பலர் பங்கேற்றனர்.

NEWS TODAY 24.4 2026