Thursday, May 24, 2018

சுற்றுலா தல பட்டியல்: தாஜ்மஹால் சாதனை

Added : மே 24, 2018 04:24

மும்பை: உலகளவில். சுற்றுலா பயணியரை கவர்ந்த தலங்கள் பட்டியலில், தாஜ் மஹால், ஆறாம் இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவில், சுற்றுலா பயணியரை கவரக்கூடிய இடங்கள் பற்றி, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 68 நாடுகளில் உள்ள முக்கியமான, 759 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன இதில், முதல் இடத்தை, கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர் வாட் கோவில் பிடித்து உள்ளது. இரண்டாவது இடத்தை, ஸ்பெயினில் உள்ள, பிளாசா டி எஸ்பனாவும், மூன்றாவது இடத்தை, ஐக்கிய அரபு எமிரேட்சின், அபுதாபியில் உள்ள, ஷேக் சையத் மசூதியும் பிடித்துள்ளன.இந்தப் பட்டியலில், ஆறாவது இடத்தை, உ.பி., மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹால் பிடித்துள்ளது.ஆசிய அளவில், இரண்டாவது இடத்தை தாஜ் மஹாலும், ஒன்பதாவது இடத்தை, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையும், ௧௦வது இடத்தை, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ள, பொற்கோவிலும் பிடித்துள்ளன.

'நிபா' வைரஸ்: கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம்

Added : மே 24, 2018 06:38



திருவனந்தபுரம்: கேரளாவில், 'நிபா' வைரஸ் பாதிப்பு இருப்பதால், நான்கு மாவட்டங்களுக்கு செல்வதை, தற்காலிகமாக தவிர்க்கும்படி, கேரள சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த, 10 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரில் இருவருக்கும், கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மூவரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள், தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, பிறபகுதிகளைச் சேர்ந்தோர், கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம் மற்றும் கேரளா அருகே உள்ள, கர்நாடகாவின் மங்களூரு ஆகிய மாவட்டங்களுக்கு செல்வதை, தற்காலிகமாக தவிர்க்கும்படி, கேரள சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிபா வைரஸ், வீட்டு விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. குறிப்பாக, பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து, இந்த வைரஸ் கிருமி பரவுவதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement
லஞ்ச வேளாண் அதிகாரி சிறையில் அடைப்பு : விடிய, விடிய விசாரணை; ஆவணங்கள் சிக்கின

Added : மே 24, 2018 04:09

கோவை: கோவையில், லஞ்சம் வாங்கி சிக்கிய வேளாண் இணை இயக்குனர் மற்றும் உதவியாளர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தி, ரொக்கம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர்.கோவை, புலியகுளத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார், 45. இவருக்கு, சூலுார் பகுதியில், 10 ஏக்கர்விவசாய நிலம் உள்ளது. இதை குடியிருப்பு நிலமாக மாற்றி, ரியல் எஸ்டேட் தொழில் செய்ய திட்டமிட்டார்.இதற்காக, தடாகம் ரோட்டில் உள்ள வேளாண் இணை இயக்குனர் சுகுமார், 57, என்பவரை அணுகி, விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்ற, 'பயனற்ற நிலம்' என தடையில்லா சான்று வழங்க கோரினார்.அதற்கு, நான்கு லட்சம் ரூபாய் லஞ்சமாக சுகுமார் கேட்டுள்ளார். 'அவ்வளவு தர முடியாது' என, அசோக்குமார் தெரிவித்தார்.இதன்பின், இணை இயக்குனர் மற்றும் அவரது உதவியாளர் முருகன், 37, ஆகியோர் பேரம் பேசினர். இறுதியில், 1.50 லட்சம் ரூபாய், இணை இயக்குனருக்கும், 10 ஆயிரம் ரூபாய், உதவியாளருக்கும் கொடுப்பதாக, அசோக்குமார் தெரிவித்தார்.பின், கோவை லஞ்ச ஒழிப்பு, டி.எஸ்.பி., ராஜேஷிடம், அசோக்குமார் புகார் அளித்தார். போலீசார் அளித்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு அசோக்குமார், இணை இயக்குனர் அலுவலகம் சென்றார்.லஞ்ச பணத்தை, இணை இயக்குனர் வாங்கியதும், மறைந்திருந்த போலீசார், அவரையும், உதவியாளரையும் பிடித்தனர்.பின், அலுவலக வளாகத்தில் உள்ள சுகுமாரின் வீட்டிலும், பொள்ளாச்சியில் உள்ள முருகனின் வீட்டிலும், போலீசார் நேற்று, அதிகாலை வரை விடிய, விடிய சோதனை நடத்தினர்.இதில், சுகுமார் வீட்டில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பல்வேறு ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.நேற்று காலை, இருவரையும் கைது செய்த போலீசார், கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில்அடைத்தனர்.
திண்டிவனத்திலும் சோதனைஇணை இயக்குனர் சுகுமாரின் சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம். கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த தகவலின்படி, திண்டிவனத்தில் உள்ள சுகுமாரின் வீட்டிலும், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

அங்கு கைப்பற்றப்பட்ட ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுப்பியுள்ளனர். சுகுமார், ஆறு மாதங்களாக கோவையில் பணியாற்றி வருகிறார். உதவியாளர் முருகன், ஓராண்டாக பணியாற்றி வருகிறார்.
சென்ட்ரல், டி.எம்.எஸ்.,சுக்கு மெட்ரோ நாளை முதல் சேவை துவக்கம்

Added : மே 24, 2018 00:27

சென்னை: நேரு பூங்கா - சென்ட்ரல், சின்னமலை - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., இடையே, நாளை மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கப்படுகிறது.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், ஷெனாய் நகர் - நேரு பூங்கா இரண்டாவது பாதை, நேரு பூங்கா - சென்ட்ரல் இடையே, இருவழிப்பாதை, சின்னமலை - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., இடையே, இருவழிப்பாதை பணிகள் முடிந்துள்ளது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், பயணியர் ரயில் இயக்கலாம் என, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.நேரு பூங்கா - சென்ட்ரல், சின்னமலை - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., இடையே, நாளை மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கப்படுகிறது.எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில், நாளை பிற்பகல், 12:30 மணிக்கு நடக்கிறது. முதல்வர் பழனிசாமி, ரயில் போக்குவரத்தை துவங்கி வைக்கிறார். மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சர், மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர், அதிகாரிகள் விழாவில் பங்கேற்கின்றனர்.

இப்பாதைகள் திறக்கப்படுவதால், விமான நிலையத்தில் இருந்து, கோயம்பேடு, நேரு பூங்கா வழியாக சென்ட்ரல் வரையும், கிண்டி, சின்னமலை வழியாக தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வரையும், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம்.
மொபைல் போன் எண் பெறுதல்: பொறியாளர்களுக்கு எச்சரிக்கை

Added : மே 24, 2018 00:22

மின் நுகர்வோரிடம் இருந்து, மொபைல் போன் எண்கள் வாங்கும் பணியை துரிதப்படுத்துமாறு, பிரிவு அலுவலக பொறியாளர்களை, மின் வாரியம் எச்சரித்துள்ளது.மின் கட்டணம் எவ்வளவு, செலுத்த வேண்டிய கடைசி தேதி என்ன, மின் தடை தேதி ஆகிய விபரங்களை, மின் நுகர்வோரின், மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக, மின் வாரியம் தெரிவிக்கிறது.மின் கட்டணம் செலுத்த தகுதி உடைய, 2.50 கோடி பேரில், ஒரு கோடி பேர், மொபைல் எண்களை, பிரிவு அலுவலகங்களில் வழங்கவில்லை.இதுகுறித்து, நமது நாளிதழிலும், சமீபத்தில், விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, மொபைல் எண் தராதவர்களில், அவற்றை வாங்கும் பணியை, மின் வாரியம் துரிதப்படுத்தி உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, 3,000 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும், சராசரியாக, 2,000க்கும் மேற்பட்ட நுகர்வோர், மொபைல் போன் எண்களை தராமல் உள்ளனர்.இதனால் அவர்கள், மின் வாரியத்தின், எம்.எம்.எஸ்., சேவையை பெற முடியவில்லை.மொபைல் எண் தராதவர்களிடம், அதை வாங்கி, அந்த விபரத்தை, இம்மாத இறுதிக்குள் தெரிவிக்கும்படி, பிரிவு அலுவலக பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த பணியில், அலட்சியம் காட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
துணை வேந்தருக்கு சாதனையாளர் விருது

Added : மே 23, 2018 23:07

தேவகோட்டை, காரைக்குடி அழகப்பா பல்கலை துணை வேந்தருக்கு சாதனையாளர் விருது வழங்கும் விழா நடந்தது.அழகப்பா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறையின் வகுப்பறைக்கட்டிடம், மழை நீர் சேகரிப்புக்குளம், இந்தியன் வங்கி கிளையின் கூடுதல் கட்டடம்,பல்பொருள் வைப்பறைக்கூடத்தை, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்துவைத்தார்.பின்,துணைவேந்தர் சுப்பையாவிற்கு சாதனையாளர் விருது வழங்கி,அவர் பேசுகையில், தமிழ்நாடு பல்கலைகழகங்களிலேயே அழகப்பா பல்கலை கழகம் தான் ஏ பிளஸ் தகுதி பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்குான விளையாட்டு மையத்தின் மூலம்மாணவர்கள் உலக அளவில் பரிசுகளை பெற்றுள்ளார்கள். அடுத்த 15 வருடங்களில்இந்த பல்கலைக்கழகம் வளர வேண்டும்.பல்வேறு திட்டங்களை துணைவேந்தர்ஏற்படுத்தியுள்ளார்,என்றார்.ஆட்சிக்குழு உறுப்பினர் ராமசாமிவரவேற்றார். அமைச்சர் பாஸ்கரன், குன்றக்குடி பொன்னம்பல அடிகள், எம்.பி. செந்தில்நாதன், பாஜக தேசிய செயலாளர்ெஹச்.ராஜா,காரைக்குடி எம்.எல்.ஏ., கே.ஆர்.ராமசாமி பேசினர். அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகளுக்கிடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தலையங்கம்

துரதிர்ஷ்டமான துப்பாக்கிச்சூடு




  தமிழக காவல்துறையில் துப்பாக்கி சூடு என்பது அடிக்கடி நடந்தது இல்லை. அதிகபட்சமாக போலீஸ் தடியடிதான் நடக்குமேதவிர, துப்பாக்கிச்சூடு என்பது எப்போதாவது ஒருமுறை நடப்பதாகத்தான் இருந்தது.

மே 24 2018, 03:00

தமிழக காவல்துறையில் துப்பாக்கி சூடு என்பது அடிக்கடி நடந்தது இல்லை. அதிகபட்சமாக போலீஸ் தடியடிதான் நடக்குமேதவிர, துப்பாக்கிச்சூடு என்பது எப்போதாவது ஒருமுறை நடப்பதாகத்தான் இருந்தது. இதற்கு முன்பு 2011–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரமக்குடியில் நடந்த கலவரத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிர் இழந்தனர். அதன்பிறகு, இப்போது 7 ஆண்டுகள் கழித்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியானதும், ஏராளமான பொதுமக்களும், போலீசாரும் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வருவதை அறிந்து தமிழகமே கண்ணீர் வடிக்கிறது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை என்பது வேதாந்தா குழுமத்தின் ஒரு அங்கமாகும். தாமிரத்தாதுவில் இருந்து தாமிரத்தை தனியாக பிரித்தெடுக்கும் தொழிற்சாலைதான் இது. இதற்கு மூலப்பொருளான தாமிரத்தாது ஆஸ்திரேலியா நாட்டில் இருந்துதான் தூத்துக்குடிக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த தொழிற்சாலையை தொடங்க குஜராத், கோவா, கேரளா ஆகிய மாநிலங்கள் அனுமதி கொடுக்கவில்லை. மராட்டிய மாநிலத்தில் அனுமதிக்கொடுத்து நிர்மாண வேலைகள் தொடங்கியபிறகு வெளியேற்றப்பட்டது. தூத்துக்குடியில் தொடங்க 1994–ல் அனுமதி வழங்கப்பட்டது. இந்த தொழிற்சாலையின் விரிவாக்கத்துக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது. இந்த ஆலையால் தூத்துக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் புற்றுநோய் உள்பட பல நோய்களுக்கு ஆளாகின்றனர் என்பது மக்களின் குற்றச்சாட்டு. இப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் உள்ள குமரெட்டியபுரம் கிராம மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும், சுற்றுச்சூழல் எல்லாம் மாசுபட்டுவிட்டது என்றும், கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்திவருகிறார்கள்.

நேற்று முன்தினம் 100–வது நாள் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டு, அந்த ஊர் கிராம மக்கள் மட்டுமல்லாமல், அருகிலுள்ள நகர, கிராம மக்கள் எல்லோருமே பெருந்திரளாக கூடிநின்றனர். ஊர்வலம் கட்டுக்கடங்காமல் தூத்துக்குடி நகரமே போர்க்களமாகிவிட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் ஏராளமான சேதங்களும், காயமும் ஏற்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்றும் தொடர்ந்து தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு, போலீஸ் வாகனத்துக்கு தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார். இருநாட்களிலும் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு அந்தக்கூட்டத்தை சட்டவிரோத கூட்டம் என்று தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அதிகாரி அறிவிக்கவேண்டும். கூட்டத்தை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுக்கவேண்டும். கலைந்து செல்லாவிட்டால் முதலில் தடியடி, தொடர்ந்து கண்ணீர்புகை, அதன்பிறகு ஆகாயத்தை நோக்கி சுட்டுவிட்டு, பின்பு இடுப்புக்கு கீழ்தான் சுடவேண்டும் என்று இருக்கிறது. இந்த நடைமுறைகளெல்லாம் பின்பற்றப்படவில்லை என்று ஒருகுறை இருக்கிறது. இந்த நடைமுறைகளெல்லாம் பின்பற்றப்பட்டதா?, உளவுப்பிரிவு போலீசார் முதலிலேயே இவ்வளவு கூட்டம் ஆக்ரோ‌ஷத்தோடு வரும் என்று சொன்னார்களா? என்பதெல்லாம் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான நீதி விசாரணையின்போதுதான் தெரியும். எது எப்படியோ, துரதிர்ஷ்டமான துப்பாக்கிச்சூடு நடந்துவிட்டது. இதுபோன்று துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு போகாத சூழ்நிலையை உருவாக்க இருதரப்பும் நடவடிக்கை எடுக்கவேண்டும். உடனடியாக தூத்துக்குடியில் அமைதி திரும்பவேண்டும்.

NEWS TODAY 27.07.2026