Monday, June 18, 2018

பார்வை: வகுப்பறை மட்டும்தான் பள்ளியா?

Published : 17 Jun 2018 11:13 IST
 
பிருந்தா சீனிவாசன்




புதிய பாடப்புத்தகங்களின் அச்சு மை வாசம் இந்நேரம் குழந்தைகளுக்குப் பழகியிருக்கும். புதிதாகப் பள்ளியில் சேர்ந்த குழந்தைகள், அழுகை மறந்து இயல்புக்குத் திரும்பியிருக்கக்கூடும். இந்த ஆண்டுக்கான கல்விப் பயணத்தைக் குழந்தைகளோடு சேர்ந்து பெற்றோரும் ஆசிரியர்களும் தொடங்கியிருப்பார்கள். கோடை விடுமுறையில் விரித்த சிறகுகளைப் பல குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருக்கிப் பள்ளி, படிப்பு, வீட்டுப்பாடம், டியூஷன், கோச்சிங் வகுப்பு என ஒடுங்கத் தொடங்கியிருப்பார்கள்.

வெறும் இயந்திரமல்ல

கல்வியை நேரடியாக வயிற்றுப்பாட்டுடன் இணைத்துப் பார்க்கத் தொடங்கி பல காலம் ஆகிவிட்டது. குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மட்டுமே வார்த்தெடுக்க முயல்கிறோம். தங்கள் குழந்தைகள் அனைத்திலும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, பந்தயக் குதிரைகளைப் போல அவர்களைத் தயார் செய்யும் பெற்றோர் இங்கு அதிகம்.

‘அவனைப் போல படி’, ‘இவளைப் போல முன்னேறு’ என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளின் தனித்தன்மையைச் சிதைத்துவிடுகிற பெற்றோர் பலர் உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை அறியாமல் தங்களின் கனவுகளை அவர்கள் மேல் திணிப்பார்கள். குழந்தை நடக்கத் தொடங்கியதுமே பள்ளியில் சேர்ப்பதும், எழுதத் தொடங்கியதுமே போட்டித் தேர்வுப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதும் கொடுஞ்செயல் என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.

உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்குக் குழந்தைகளைத் தயார்செய்யும் நோக்கில் எப்போதுமே அவர்களை புத்தகமும் கையுமாக இருக்கச் செய்வதும் நடக்கிறது. நாள் முழுக்க எப்படி ஒருவரால் படித்துக்கொண்டே இருக்க முடியும்? காலை இடைவேளை, உணவு இடைவேளை தவிர குழந்தைகளுக்குப் போதுமான ஓய்வுநேரம் இருப்பதில்லை. விளையாட்டுக்கு என வாரத்தில் ஒரு நாளோ இரண்டு நாட்களையோ ஒதுக்கினாலும், உயர் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விளையாட்டு வகுப்பை மற்ற ஆசிரியர்கள் கடன் பெற்றுப் பாடம் நடத்துவார்கள்.

வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் இளைப்பாற நேரம் கொடுக்காமல் வீட்டுப்பாடம் எழுதவோ மற்ற பயிற்சி வகுப்புகளுக்கோ அனுப்புகிற பெற்றோரும் உண்டு. நிற்கக்கூட நேரமில்லாமல் குழந்தைகளை இப்படி விரட்டிக்கொண்ட இருக்கிற நாம்தான், ‘உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே’ என்று அவர்களை மனப்பாடம் மட்டும் செய்யச் சொல்கிறோம்.

நெறியும் வேண்டும்

கல்வி என்பது சொற்களையும் எண்களையும் மனப்பாடம் செய்கிற எல்லையோடு பல நேரம் முற்றுப்பெற்றுவிடுகிறது. அந்த எல்லையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் செயல்வழிக் கற்றல் முறை, புதிய பாடத்திட்டம், தொடுதிரைவழிக் கல்வி எனப் பலவற்றை அரசு அறிமுகப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அதை மாணவர்களுக்குக் கொண்டுசேர்க்கும் அளவுக்கு ஆசிரியர்கள் செயல்படுகிறார்களா என்பதையும் பொறுத்துதான் மாணவர்களின் அறிவு வளர்ச்சி அமையும். பாடப் புத்தகங்களில் இருக்கிற தகவல்கள் தவிர பொது அறிவு, அரசியல், சமூகம் குறித்த எந்த அறிவும் குழந்தைகளுக்குத் தேவையில்லை என்பதைத்தான் பாடத் திட்டத்தை வடிவமைக்கிறவர்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள்போல.

அரசுப் பள்ளிகளில் மதிப்புக் கல்வி வகுப்பு இருக்கிறது. ஆனால், அதற்கெனத் தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா, பாடப் புத்தகம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. பல பள்ளிகளில் நன்னெறிக் கல்வி, நீதிபோதனை வகுப்புகளுக்கு இடமில்லை. உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்ட இந்நாளில் குழந்தைகள் தடம்மாற ஆயிரம் வாசல்கள் திறந்திருக்கின்றன. அவர்களை இதுபோன்ற பாடம் சாராத நன்னெறி வகுப்புகளின் வாயிலாக ஓரளவாவது நேர்படுத்தலாம் என்பதையும் ஆசிரியர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.

கழிவறைகள் கட்டாயம்

எனக்குத் தெரிந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட ஆறு லிட்டர் தண்ணீர் எடுத்துச் செல்வார். பள்ளியில் தண்ணீர் வருவதில்லை என்பதால் சாப்பிட்டுவிட்டுக் கை கழுவவும் குடிக்கவும் இவ்வளவு தண்ணீர் தேவைப்படுவதாகச் சொன்னார். மாணவர்களின் நிலை? “அதை ஏன் கேட்கறீங்க. குழந்தைங்க சத்துணவு சாப்பிட்டுவிட்டுத் தட்டை எடுத்துக்கிட்டுத் தெருக்குழாய்க்கோ பக்கத்துல இருக்கற வீடுகளுக்கோ போவாங்க. பார்க்கவே கஷ்டமா இருக்கும். என்ன செய்ய?” என்றார். கழிவறை குறித்துக் கேட்டபோது, “குடிக்கவே நல்ல தண்ணி இல்லை. இதுல பாத்ரூமுக்கு எங்க போக?” என நொந்துகொண்டார்.


வகுப்பறைகள் மட்டுமல்ல, அந்தக் கட்டிடத்தோடு இணைந்த கழிவறைகளும் சேர்ந்த கட்டுமானமே பள்ளி. ஆனால், படிப்புக்குத் தருகிற முக்கியத்துவத்துவத்தில் கொஞ்சத்தைக்கூட கழிவறைகளுக்கு நம் சமூகத்தில் கொடுப்பதே இல்லை. இதில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்ற பாகுபாடெல்லாம் இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் போதுமான கழிவறைகள் இருப்பதில்லை. ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படிக்கிற பள்ளிகளில் பத்து, இருபது கழிவறைகள் மட்டுமே இருப்பது மாணவர்களின் உடல்நலக் கேட்டுக்கு வழிவகுக்கும்.

இப்படிச் சுகாதாரமற்ற, தண்ணீர் இல்லாத கழிவறைகளால் பல மாணவர்கள் சிறுநீரை அடக்கிவைக்கப் பழகிவிடுகின்றனர். மாலை வீடு திரும்புவதுவரை அவர்கள் முறையாகத் தண்ணீரும் குடிப்பதில்லை. போதுமான தண்ணீர் குடிக்காமல் எட்டு மணி நேரத்துக்கும் மேல் இயற்கை உபாதையை அடக்கிவைப்பதால் நோய்த்தொற்றில் தொடங்கி சிறுநீரகச் செயலிழப்புவரை ஏற்படக்கூடும் என்பதை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் யாரும் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. இருந்தாலும் கழிவறை விஷயத்தில் அதிகாரிகளும் பெற்றோரும் அசட்டையாகவே இருக்கின்றனர். தங்கள் குழந்தைகளின் மதிப்பெண் குறித்துக் கவலைப்படும் பல பெற்றோர், அவர்களின் ஆரோக்கியம் குறித்த அக்கறையின்றி இருக்கிறார்கள்.

அதற்கு சிறந்த உதாரணம் கழிவறை பிரச்சினையால் மாதவிடாய் நாட்களில் மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாவதுதான். குறிப்பிட்ட இடைவேளையில் மாதவிடாய் துணியையோ நாப்கினையோ அவர்களால் மாற்ற முடிவதில்லை. இதனாலேயே பல மாணவிகள் மாதவிடாய் நாட்களில் விடுப்பு எடுத்துக்கொள்கிறார்கள். கிராமங்களிலோ நிலைமை இன்னும் மோசம். பெண் குழந்தைகள் பருவம் அடைந்ததுமே பள்ளியை விட்டு நிறுத்திவிடுவது இன்னும் தொடர்கிறது. குழந்தைகள் பள்ளி இடைநிற்றலுக்கான காரணங்களில் ஒன்றாக மாதவிடாயும் சொல்லப்படுவதை எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது. குழந்தைகளின் கல்விக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் பள்ளிதானே பொறுப்பேற்க வேண்டும்?

குழந்தைகளுக்குக் கல்வியையும் நல்லொழுக்கத்தையும் கற்பிப்பதோடு ஆரோக்கியமான சூழலும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் பொறுப்பும் கடமையும். இவை குழந்தைகளுக்குக் கிடைக்கின்றனவா எனத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. இப்படி அனைத்தும் இணைந்தால்தான், ஆரோக்கியமான உடலும் அறிவுபூர்வமான அணுகுமுறையும் கொண்ட மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் நமக்கு வாய்ப்பார்கள்.
ரஜினி ரசிகர்களின் ஆதங்கமும்.. எதிர்பார்ப்பும்...எப்படி இருந்திருக்கலாம் காலா

Published : 17 Jun 2018 10:51 IST

ம.மோகன்

 



ராஜசேகர் இயக்கத்தில் 1986 நவம்பர் 1-ம் தேதி வெளியான படம் ரஜினியின் ‘மாவீரன்’. மானசீக ஹீரோவாக மனதுக்குள் வைத்து ஆராதித்து வந்த ரசிகர்களை முதல்முறையாக பாலாபிஷேகம், போஸ்டர், 110 அடி உயர பிரம்மாண்ட கட்-கவுட் என வீதியில் களமிறங்க வைத்த படம். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று, ரஜினியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஆர்.கே.புரொடெக்சன்’ சார்பில் வெளியான முதல் படம். மற்றொன்று, அதே நாளில் வெளியான கமல்ஹாசனின் ‘புன்னகை மன்னன்’ திரைப்படம். திருச்சி மாரீஸ் திரையரங்கில் யானை மீது படப்பெட்டியை வைத்து ஊர்வலம் நடத்தி அதிரவைத்தனர் ரஜினி வெறியர்கள்.

அதற்குப் பிறகு, ‘ரஜினி படம்’ என்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற, அந்த எதிர்பார்ப்புக்கு மேலாக பூர்த்திசெய்கிற அம்சமாகிவிட்டது. மாநில, தேச எல்லையைத் தாண்டியும் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது. வசூல் சற்று கூடக் குறைய இருந்தாலும், ‘ரஜினி பட ரிலீஸ்’ என்பது ஒரு திருவிழா போல நடப்பது இப்போதுவரை தொடர்கிறது.


இந்த சூழலில், வழக்கம் போல எதிர்பார்ப்புக்கு நடுவே ரிலீஸான ‘காலா’ திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் கடந்தாகிவிட்டது. பொதுவாக, ரஜினி படம் ரிலீஸானால், குறைந்தபட்சம் 3 வார இடைவெளிக்குப் பிறகுதான், அடுத்த படங்கள் வெளியாகும். ஆனால் ’காலா’ வெளியான அடுத்த வாரமே (8-வது நாளில்) ‘கோலிசோடா 2’ திரைப்படம் ரிலீஸாகியுள்ளது.


இத்தனைக்கும், ‘மாவீரன்’, ‘மனிதன்’, ’குரு சிஷ்யன்’, ‘தளபதி’, ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ என்று கொண்டாடிய ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அதில் பலர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், தொண்டர்கள். ஆனாலும், ‘காலா’ பெரிதாக கொண்டாடப்படவில்லை. ரிலீஸ் நாளில் ரசிகர்கள் மத்தியில் காணப்பட்ட உற்சாகம் பிறகு இல்லை.‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’விடம் இருந்த ஏதோ ஒன்று ‘காலா’விடம் இல்லையே, அது என்ன? தமிழகம் முழுவதும் பரவலாக அவரது ரசிகர்களிடம் பேசியபோது, அவர்கள் பகிர்ந்தவற்றின் தொகுப்பு..

தலைவரை இதுக்கு முந்தைய படங்கள்ல பார்த்த மாஸ் ஓபனிங் ‘காலா’வுல மிஸ்ஸிங். படத்தோட முதல் பிரச்சினையே அதுதான். ஓபனிங் ஸீன்ல தலைவரு கிரிக்கெட் ஆடுறாரு. அவருக்கு பந்து போடறாங்க. பேட்டை சுத்துறாரு. கிளீன் போல்டு! இதை ஒரு ரசிகரா எங்களால எப்படி ஏத்துக்க முடியும். அதே நேரத்துல, பந்து வீசுறப்போ, அவரு ஒரு சுழற்று சுழற்றுறாரு. பந்து விர்ர்னு பாய்ந்து, எதிராளிகள் பூமி பூஜை போடும் இடத்தை நோக்கி பறக்குது. இப்படி இருந்தா, அந்த ஸீன் செம மாஸா இருந்திருக்கும்.


‘வேங்க மவேன் ஒத்தையில நிக்கேன்’ என்று டிரெய்லர்ல டயலாக் பேசுவாரு ரஜினி. அந்த டிரெய்லர் வந்ததுல இருந்து, அவரை எதிர்க்கும் எல்லா கட்சிக்காரங்களும் மாத்தி மாத்தி மீம்ஸ் போட்டு, அந்த டயலாக்கை கிண்டல் பண்ணாங்க. அப்படீன்னா, அந்த மீம்ஸ் மொத்தத்தையும் காலி பண்ற மாதிரி, படத்துல அந்த ஸீன் வந்திருக்கணும். ஆனா, மொக்கை ஆக்கிட்டாங்க. படத்துல அந்தக் காட்சியை பார்க்கும்போது ‘தலைவருக்கு என்ன ஆச்சு?’ என கேட்க வச்சுட்டாங்க.

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்னக் குழந்தையும் சொல்லும். இந்தப் படத்துலயும் வில்லன் வீட்டு சுட்டிக் குழந்தை வரை காலாவைத் தெரியுது. ஆனால, இந்த மாஸை அப்படியே டெவலப் பண்ணாம, தன் காலணிகளைக் காட்டி காலாவை துடைக்கச் சொல்கிறார் வில்லன். ரசிகன் கொந்தளிக்காம என்ன செய்வான்?

காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்ட ‘காலா’வை வில்லன் ஹரிதாதா அடிச்சிருந்தாகூட, ‘சரி, பெரிய வில்லன்’னு நெனச்சு விட்டுறலாம். போலீஸை விட்டு அடிக்கவிட்டது கொடுமை.

ஹரிதாதாவைப் பார்த்து ‘என்னை தொட்டுட்டல்ல’ன்னு காலா கேட்பார். அப்போ, தியேட்டர்ல விசில் பறந்தது. அடிச்சு துவம்சம் பண்ணப் போறார்னு பார்த்தா, கடைசிவரைக்கும் ஹரிதாதாவை காலா ஒரு அடிகூட அடிக்கவில்லை. தெரியாம விசில் அடிச்சிட்டமோன்னு எங்களுக்கே கூச்சமாகிடிச்சு.

இமயமலை பாபாஜி கோயில், மந்த்ராலயம் ராகவேந்திரர் கோயில் என அவ்வப்போது ஆன்மிகப் பயணம் செல்பவர் தலைவர் ரஜினிகாந்த். அதோடு, ரசிகர்களுக்கு ஆன்மிகக் கதைகள், கருத்துகள் சொல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அரசியலைக்கூட ஆன்மிகத்துடன் இணைத்துப் பேசுபவர். அப்படிப்பட்டவர் படத்தில் நாத்திகர் போலவே பேசி நடித்திருக்கிறார். அதோடு ராம காவியம், ராவண காவியம் என்று ஏதேதோ சொல்கிறார்கள். அதெல்லாம் புரியும்படி இல்லை. இதை இயக்குநர் பா.இரஞ்சித்தின் படமாக ஏற்றுக்கொள்ளலாமே தவிர, ஒரு ரஜினி படமாக சத்தியமாக எங்களால் ஏற்கவே முடியாது. எங்களை மனதில் வைத்து ரஜினி கதை கேட்கவில்லை என்றே நினைக்கிறோம்.

மனைவி, மகனைப் பறிகொடுத்துவிட்டு, எதிரியை சூறையாடுகிற வெறியோடு தனி ஆளாக அவரது வீட்டுக்குப் போகிறீர்கள். கத்தியை அலசி துடைத்தபடியே வந்து அமரும் ஹரிதாதாகிட்ட அவரது பேத்தி, ‘காலா நல்லவரு. அவரைக் கொன்னுடாதீங்க தாத்தா’ என்று சொல்லிவிட்டு அறைக்குள் ஓடுவாள். இதுதான் சூப்பர் ஸ்டாருக்கான காட்சியா? இதுவே அந்த சிறுமி ‘காலா’கிட்ட வந்து, ‘எங்க தாத்தா பாவம் அவரை ஒண்ணும் செய்துடாதீங்க காலா?’ன்னு கேட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்..

தாராவி தாதாவாக வரும் தலை வர் அவரது குடும்ப நபர்கள் தொடங்கி முன்னாள் காதலி வரை அனைவராலும் கிண்டலடிக்கப்படுகிறார். இதனால், ஒரு மாஸ் ஹீரோ என்பது ஆரம்பத்திலேயே அடிபட்டுப் போகிறது. ‘தர்மதுரை’, ‘பாட்ஷா’, ‘படையப்பா’வில் ரஜினி வந்து நின்னாலே அப்படி இருக்கும். இங்கே அந்த மாஸ் காட்சிகளை எல்லாம் வில்லன் நானா படேகர் அள்ளிக்கொண்டு போகிறார். நீங்கள் எளிமையானவர்தான். அதற்காக, அறிமுக கதாநாயகன் போல உட்கார்ந்து இரஞ்சித்திடம் கதை கேட்டீர்களா? ரஜினி ரசிகனுக்காகவே பல படங்கள் கொடுத்த உங்களுக்கு, படப்பிடிப்பில்கூட எங்கள் ஞாபகம் வராதது ஏன்?

‘நிலம் எங்கள் உரிமை’ திட்டத்தின்படி மும்பையில ஹரிதாதாவை வீழ்த்துறீங்க.. உங்கள் கனவுத் திட்டமான மாடர்ன் தாராவியை உருவாக்கி, மக்களை சந்தோஷப்படுத்துறீங்க. ‘‘இங்கே என் வேல முடிஞ்சுபோச்சு. தமிழ்நாட்டுலதான் இனிமே நெறயா வேல இருக்கு’’ன்னு ஸ்டைலா ஒரு டயலாக் பேசிட்டு, ஆனந்தக் கண்ணீரோட நிக்கிற மக்கள்ட்ட இருந்து விடைபெற்று, தமிழ்நாட்டுக்குப் புறப்படுற மாதிரி கிளைமாக்ஸ் இருந்திருந்தா, இப்போதைய அரசியல் சூழ்நிலையில, பட்டையக் கிளப்பியிருக்கும் தலைவா.. மிஸ் பண்ட்டீங்களே..!

இவ்வாறு ஸீனுக்கு ஸீன் ஆதங்கப்படும் ரசிகர்களுக்கு ‘காலா’ சேட்டுதான் (அடுத்த படத்தில்) பதில் சொல்ல வேண்டும்?
சந்தேகம் சரியா 34: பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா?

Published : 06 May 2017 10:27 IST


டாக்டர் கு. கணேசன்




பன்றிக் கறியைச் சாப்பிட்டால் மூல நோய் (Piles) குணமாகிறது என்று பிரபல எழுத்தாளர் ஒருவர் பத்திரிகையில் எழுதியதைப் படித்தேன். இது உண்மையா?

உண்மையில்லை. பன்றிக் கறியைச் சாப்பிடுவதால் மூல நோய் குணமாகிறது என்று சொல்வதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. அடிக்கடி பன்றிக் கறியைச் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு வேண்டுமானால் அதிகரிக்கலாம்; மூல நோய் குணமாக வழியில்லை.

பன்றிக் கறியில் என்ன உள்ளது?

100 கிராம் பன்றிக் கறியில் 26 கிராம் புரதமும் 18 கிராம் கொழுப்பும் உள்ளன. வைட்டமின் பி12, பி6, இரும்பு, துத்தநாகம், செலினியம், நியாசின் போன்ற வைட்டமின்களும் தாதுச் சத்துகளும் நிறைந்துள்ளன. இது 217 கலோரி சக்தியைத் தருகிறது. மூல நோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து அவசியம். ஆனால், இதில் நார்ச் சத்தும் கார்போஹைட்ரேட்டும் துளியும் இல்லை. இதில் உள்ள புரதமும் கொழுப்பும் உடல் மெலிந்துள்ளவர்களுக்கும் முதியவர்களுக்கும் தசை வளர்ச்சியை ஊக்கப்படுத்த உதவும்; ரத்தச் சோகை உள்ளவர்களுக்கு ரத்த உற்பத்திக்கு உதவும். மற்றபடி மூல நோயைக் குணப்படுத்துவதற்கான சாத்தியம் இல்லவே இல்லை.

எது மூல நோய்?

சாதாரணமாக, உடலில் அசுத்த ரத்தம் கொண்டு செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் (Veins) குறிப்பிட்ட இடைவெளிகளில் வால்வுகள் உள்ளன. சிரைக் குழாய்களில் ரத்தம் தேவையில்லாமல் தேங்கி நிற்பதை இந்த வால்வுகள் தடுக்கின்றன. ஆனால், நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயிலிருந்து மலக்குடலுக்குச் செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்த வால்வுகள் இயற்கையிலேயே இல்லை. இதனால் புவியீர்ப்பு விசை காரணமாகச் சாதாரணமாகவே அங்கே அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் இந்த அழுத்தம் கொஞ்சம் அதிகமானால்கூட, அவற்றில் ரத்தம் தேங்கிச் சிறிய பலூன் மாதிரி வீங்கிவிடும். இப்படியான ரத்தக் குழாய் வீக்கத்தைத்தான் ‘மூலநோய்’ என்கிறோம்.

என்ன காரணம்?

இந்த வீக்கம் ஏற்படுவ தற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில், நாட்பட்ட மலச்சிக்கல் முக்கியமான காரணம். மலச்சிக்கலின்போது கழிவை வெளியேற்றுவதற்கு முக்க வேண்டி இருப்பதால், ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயை உண்டாக்கும். ஆண்களிடம் காணப்படும் சிறுநீர்க் குழாய் அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் ஆகியவற்றாலும் மூலநோய் உண்டாகிறது. வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடல் புற்றுநோய் போன்றவையும் மூலநோயை ஏற்படுத்தும்.

கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், ஆசனவாய் சிரைக் குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாகச் சில பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது. சிலருக்குப் பரம்பரையாகவே இந்த ரத்தக் குழாய்கள் மிகவும் மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். உடல் பருமனாக இருப்பவர்கள், சுமை தூக்குபவர்கள், காலில் சிரை வீக்கம் (Varicose veins) உள்ளவர்கள், டிரைவர் போன்று உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், கண்டக்டர் போன்று அதிக நேரம் நின்றுகொண்டே இருப்பவர்கள் மூலத்தை எதிர்கொள்வோர் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்கள்.

மூல நோய் வகைகள்

மூலநோயில் வெளி மூலம், உள் மூலம் என இரண்டு வகை உண்டு. ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்திருப்பது 'உள் மூலம்'; வெளிப்புறத்தில் தோன்றுவது 'வெளி மூலம்'. இரண்டாவதாகச் சொன்னதைக் கையால் தொட்டுப் பார்த்தே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் உள் மூலம் அப்படியில்லை. இது ஏற்பட்டால் என்ன நடக்கும்?

மலம் கழிக்கும்போது லேசாக ரத்தம் சொட்டுவது அல்லது மலத்தோடு வரிவரியாக ரத்தம் வெளிப்படுவது இதன் ஆரம்ப அறிகுறி. சில வாரங்களில் அல்லது மாதங்களில், அந்த நபருக்கு மலம் கழித்த பிறகு, ஆசனவாயில் லேசான வீக்கம் தெரியும். ஆசனவாயில் வீக்கமுற்ற ரத்தக் குழாய்கள் சதையோடு வெளியே தள்ளப்படுவதால் இந்த வீக்கம் தோன்றுகிறது. மலம் கழித்த பிறகு, இதை உள்ளே தள்ளிவிட்டால், மறைந்துவிடும். சிலருக்கு இந்த வீக்கம் பெரிதாகி நிலைத்துவிடும். அப்போது வீக்கத்தில் புண் உண்டாகி, அரிப்பும் வலியும் தினமும் தொல்லை தரும். இதனால் மலம் கழிக்கக் கஷ்டப்பட வேண்டியிருக்கும். முள்ளின் மீது உட்கார்ந்திருப்பதைப் போன்ற அவதி என்று சொல்வது இதற்குப் பொருந்தும்.

சிகிச்சை என்ன?

மூலத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சைக்கு வந்துவிட்டால் மருந்து, மாத்திரை, களிம்பு மூலமே சரி செய்துவிடலாம். முக்கியமாக, மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொண்டால், மூலநோயும் டாட்டா சொல்லிவிடும். அடுத்த கட்டப் பாதிப்பு இருந்தால் மட்டுமே பேண்டிங் (Banding), அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, லேசர் சிகிச்சை, ஸ்டேப்ளர் சிகிச்சை போன்ற சிகிச்சைகளை யோசிக்க வேண்டும். ஆனால், எந்தக் கட்டத்திலும் பன்றிக் கறி சாப்பிடுவதால் மூல நோய் குணமாகாது.

(அடுத்த வாரம்: வயிற்றில் வலி என்றாலே அல்சர்தானா?)
கட் டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
‘தலைநகருக்கே இந்த கதி; மற்ற மாநிலங்கள் என்னாகும்?’- கேஜ்ரிவாலைப் பார்க்கச் சென்ற 4 முதல்வர்கள் ஆவேசம்

Published : 17 Jun 2018 15:35 IST

பிடிஐ புதுடெல்லி,
 


அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்திக்க காத்திருந்த முதல்வர்கள் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், எச்.டி.குமாரசாமி - படம் உதவி: ட்விட்டர்

டெல்லியில் துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் கடந்த 7-நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முதல் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்தித்கச் சென்ற 4 மாநில முதல்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தலைநகருக்கே இந்த கதி என்றால், மற்ற மாநிலங்கள் நிலைமை பாஜக ஆட்சியில் என்னாகும் என்று முதல்வர்கள் வேதனைத் தெரிவித்தனர்.

  கடந்த 3 மாதங்களுக்கு முன் டெல்லி அரசின் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், அரசும் குற்றம்சாட்டுகின்றன.

மேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், அவர்களைத் தூண்டிவிடுகிறார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டுகிறது.


7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள்

இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, கடந்த 6 நாட்களாக துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும், உண்ணாவிரதத்திலும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர்கள் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் தலையிட வேண்டும் எனக் கோரி மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதற்கும் மத்திய அரசு சார்பில் எந்தவிதமான பதிலும் இல்லை.

ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம், தாங்கள் எந்த வேலை நிறுத்தத்தையும் செய்யவில்லை, முதல்வர் கேஜ்ரிவால் கூறுவது தவறு என்று அவரின் குற்றச்சாட்டை மறுக்கிறார்கள்.

இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கேஜ்ரிவாலைச் சந்திக்க நேற்று மாலை சென்றனர். ஆனால், 4 மாநிலங்களுக்கும் கேஜ்ரிவாலைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், தெலங்குதேசம் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை இணைந்து மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் நோக்கில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்திக்க முடிவெடுத்தனர்.

ஆனால்,இந்த 4 கட்சிகளோடு இணைந்து கூட்டணிக்கு தயாராகும் காங்கிரஸ் கட்சி அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக செயல்படுகிறது. டெல்லியில் ஆம்ஆத்மி கட்சிக்கு எதிராகச் செயல்படும் காங்கிரஸ் கட்சி, கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் 4 கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் துடிக்கிறது.

அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்திக்க முடியாது என அறிந்தபின் 4 மாநில முதல்வர்களும் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது கர்நாடக முதல்வர் எச்டி குமாரசாமி கூறுகையில், நான் கேஜ்ரிவாலைச் சந்திக்க விரும்பினேன். ஆனால், துணை நிலை ஆளுநரிடம் அனுமதி பெற்றால்தான் சந்திக்க முடியும் இல்லாவிட்டால் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர் என்று தெரிவித்தார்.


4 மாநில முதல்வர்களும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவிக்கவே நாங்கள் வந்தோம். ஒரு வாரமாக நீடிக்கும் இந்த போராட்டத்தில் பிரதமர் மோடி தலையிட்டு முடிவுக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கேஜ்ரிவாலைச் சந்திக்க வேண்டுமானால், துணை நிலை ஆளுநரிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்றார்கள். நாங்களும் கடிதம் அனுப்பினோம், ஆனால் துணை நிலை ஆளுநர் இல்லை என்கிறார்கள்.

தலைநகரிலேயே இப்படிப்பட்ட சம்பவம், இந்த கதி என்றால், பாஜக ஆளும் போது, மற்ற மாநிலங்களுக்கு என்ன நேரும். பிரதமர் மோடியிடம் பேசி இதற்கு நாங்கள் தீர்வு காண்போம் என்று தெரிவித்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், முதல்வர் கேஜ்ரிவால் போராட்டத்தில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று விரும்புகிறோம். இதுபோன்ற சூழல், மத்திய அரசின் அணுகுமுறை போன்றவை, கூட்டாட்சி முறையைச் சிதைத்துவிடும். இந்த மிரட்டல் என்பது டெல்லி அரசுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கானது என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் வேண்டாமே...

By எஸ். ஸ்ரீதுரை | Published on : 15th June 2018 01:15 AM |  DINAMANI

சமீபத்தில், எங்கள் வீட்டருகில் வசித்த தொண்ணூறு வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அமரரானார். விவரம் கேட்டவுடன் சற்றே பதற்றமானேன்.
இறந்தவர் குறித்த மரியாதையும் அனுதாபமும் ஒருபுறம் இருக்க, இறுதிச்சடங்குக்காக அவரது உடலை எடுத்துச் செல்லும் வரை அக்கம்பக்கத்தில் யாரும் நிம்மதியாகத் தூங்க முடியாது என்ற கவலைதான் பதற்றத்துக்குக் காரணம். மேளச்சத்தமும், வெடியோசையுமாக சுமார் ஒன்றரை நாள் நமது காது கிழியப் போகிறது என்று நினைத்துக் கொண்டேன்.
எனக்குக் கிடைத்ததோ இன்ப அதிர்ச்சி.

வேறு யார் வீட்டு வாசலையும் அடைக்காமல் தங்கள் வீட்டு வாசலின் அகலத்திற்கு மட்டும் ஒரு துணிப்பந்தல் போட்டு, தெருவில் போவோர், வருவோர்க்கு வழிவிட்டு சில நாற்காலிகளை மட்டும் போட்டு வைத்திருந்தார்கள்.

இறுதி ஊர்வலத்துக்குப் பல மணி நேரம் முன்பாகவே இறந்தவரின் உடலை வீட்டிலிருந்து வெளியில் எடுத்து வந்து, நடுத்தெருவில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இடைஞ்சல் செய்யவில்லை. மாறாக, இறுதிச்சடங்குகள் தொடங்குவதற்கு சற்று முன்புதான் வெளியில் கொண்டு வந்தார்கள்.
இறந்த பெண்மணியின் உறவினர்கள் ஒலி மாசு ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி மிகவும் அறிந்திருக்க வேண்டும்.
இறுதிச்சடங்கு தொடங்கிய நேரத்தில் காதைக் கிழிக்கின்ற மேளச்சத்தம் எதுவுமில்லை.

மேலும், இறுதி ஊர்வலத்திற்கென பகட்டான மலர் அலங்காரங்கள் செய்த வண்டிக்கு ஏற்பாடு செய்யாமல், குளிர்சாதனப் பெட்டியுடன் ஆம்புலன்ஸ் வண்டியிலேயே இறந்தவர் சடலத்தை மயானத்துக்கு ஆரவாரம் ஏதுமின்றி எடுத்துச் சென்றார்கள்.

இதற்குப் பெயர்தான் உண்மையான இறுதி மரியாதை என்று எனக்குத் தோன்றியது. இறந்தவர் மீது அனுதாபமும், இறந்தவரின் உறவினர்கள் மேல் ஒரு மரியாதையும் இயல்பாகவே என் நெஞ்சில் உருக்கொண்டுவிட்டது.
சில வருடங்களுக்கு முன்பு, என்னுடைய நண்பர் ஒருவரின் தாயார் இறந்தபோதும் ஏறக்குறைய இதேபோன்று நடந்தது நினைவுக்கு வந்தது. தன் தாயாருக்கு ஒரே மகனான அவர், எவ்வித ஆரவாரமும் இன்றி அனைத்துச் சடங்குகளையும் செய்து முடித்துவிட்டு, தம்முடைய தாயாரின் உடலை மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சிப் பயன்பாட்டிற்கென தானமாக அளித்து விட்டார். நண்பரின் இச்செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இறப்புகளை முன்னிட்டு பொதுவாக நடப்பது என்ன என்பதை யாவரும் அறிவோம்.

ஒரு வீட்டில் இறப்பு ஒன்று நேர்ந்து விட்டால், தங்களது துயரத்தில் ஊரே பங்குகொள்ள வேண்டும் என்பது போல் பலர் நடந்து கொள்கிறார்கள்.
நேரம் செல்லச் செல்ல, இறந்து போனவரின் உடல் பல்வேறு மாறுபாடுகளை அடையும் என்பது தெரிந்தும்கூட சுமார் இரண்டு நாட்கள் வரையிலும் இறுதிச்சடங்குகளைத் தாமதப்படுத்துவது கண்கூடு. முக்கியமான நெருங்கிய உறவினர்கள் வந்தாலும்கூட திருப்திப்படாமல், தூரத்து உறவினர்களும் வந்து சேரும் வரை இறந்தோர் உடலை வைத்திருக்கிறார்கள். குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது என்பதற்காக நாள் கணக்கில் உயிரற்ற உடலை வீட்டிலேயே பலர் நடுவில் அடைகாக்கின்றார்கள்.

இறப்பு ஒன்று ஏற்பட்டவுடன் உறவினர்களுக்குச் சொல்கிறார்களோ இல்லையோ, தாரை, தப்பட்டை வாத்திய கோஷ்டிக்கு முதலில் தகவல் சென்று விடுகின்றது. அவர்கள் வந்து சேர்ந்தது முதல், இறுதி ஊர்வலம் கிளம்பி அடுத்த தெருவைத் தாண்டும் வரை வாத்தியச் சத்தம் அக்கம்பக்கத்தினரை ஒரு வழி பண்ணிவிடும். அக்கம்பக்கத்து வீடுகளிலுள்ள குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள், மாணவர்கள் ஆகியோர் ஒலி மாசு காரணமாக அடையும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த மேளச்சத்தத்திற்கேற்ப ஆட்டம் போடும் இளவட்டங்களின் அட்டகாசத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும்.

தீபாவளி பண்டிகைக்கு ஒரு ஊரே கொளுத்திப்போடும் வெடிகளையெல்லாம் இறப்பு நிகழ்ந்த வீட்டினர் வாங்கி வெடிப்பது இன்னொரு பெரும் சங்கடம் ஆகும். இதனால் கிளம்பும் கந்தகப் புகை மூச்சுத்திணறலுக்கே வழிவகுக்கும்.
அடுத்தபடியாக, இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக பலரால் வைக்கப்படும் மாலைகளும் மலர் வளையங்களும் இறுதி ஊர்வலத்தின்போது பிய்த்து வீதியில் இறைக்கப்படுகின்றன. சிலர் ஆர்வமிகுதியில் மாலைகளை மின் தடக்கம்பிகள் மீது வீசுவதும் உண்டு. இதனால் எதிர்பாராமல் மின்பொறிகள் கிளம்பி தீ விபத்து நேர்வதற்கும் வாய்ப்புண்டு.

உதிர்க்கப்படும் மலர்களும், வெடிக்கப்படும் வெடிகளின் சிதறல்களும் குப்பைக் குவியல்களாய் சாலையில் கிடைப்பது எத்தனை மோசமான விஷயம். உள்ளாட்சித் துப்புறவுப் பணியாளர்கள் மறுநாள் அந்தக் குப்பை மலைகளை அகற்றும் வரை அனைவருக்கும் சங்கடம்தான்.
இன்னும் சொல்வதென்றால், இறப்பு நிகழ்ந்த வீட்டைச் சேர்ந்த சிலர் சோகத்தை மறப்பதற்காக என்று சொல்லிக்கொண்டு மது அருந்துவதும், அவர்களால் தகராறுகள் கிளம்புவதும் அரங்கேறுகின்றன.
இது தவிர, இறந்து போனவர் உள்ளூரில் முக்கியப் புள்ளியாகவோ, பிரபல தாதாவாகவோ இருந்து விட்டால் சில மணி நேரத்துக்குப் போக்குவரத்துமுடக்கம், கடையடைப்பு எல்லாமும் நிகழ்கின்றன. இவற்றின் காரணமாக இறந்தவர் மீது மரியாதையும், இறப்பு நிகழ்ந்த வீட்டினர் மீது அனுதாபமும் ஏற்படுவதற்கு பதில், பலருக்கும் வெறுப்பும் கோபமும்தான் ஏற்படுகின்றன.

இறந்தவர்களை அமரர் என்று அழைத்து, அவர்களை தெய்வத்துக்குச் சமமாக மதிப்பது நமது பண்பாடு. இறுதிச்சடங்குகளும் இறுதி ஊர்வலங்களும் இறந்தவர்களின் பெயருக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். அந்தப் பெருமை ஆர்ப்பாட்டங்களால் ஒருபோதும் கிடைப்பதில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
சுமைகளும் சுவையாகும்

By இரா. கற்பகம் | Published on : 16th June 2018 01:27 AM |

dinamani


ஆண்கள் பலரும் அலுவலகப் பணியில் இருக்கும் காலத்தில் குடும்பத்துக்கென்று அதிக நேரம் ஒதுக்குவது இல்லை. அலுவலகம், வேலை, நண்பர்கள் என்றே இருப்பார்கள். அதை அனுசரித்து மனைவியும் குழந்தைகளும் தங்களுக்கென்று ஒரு வட்டத்தையும், தினசரி நடை முறையையும் உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். ஓய்வு பெற்ற பின் திடீரென்று குடும்பத்தார் கண்ணுக்குத் தெரிவார்கள். அப்போது குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் தனக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அலைவரிசை ஒத்துப்போகாது. பிரச்னைகள் தலை தூக்கும்.
இன்னும் சில ஆண்கள், மற்றவர்களின் வசதிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நினைக்காமல், தங்களை மட்டும் முன்னிறுத்திக் கொண்டு, தங்கள் வசதிக்கேற்ப ஒரு நடைமுறையை ஏற்படுத்திக் கொள்வார்கள். காலையில் நடைப்பயிற்சி, அது முடிந்து வீட்டுக்கு வந்ததும் ஒன்றுக்கும் மேற்பட்ட செய்தித்தாள்களை, ஏதோ பரீட்சைக்குப் படிப்பது போல விழுந்து விழுந்து ஒரு வரி விடாமல் படிப்பார்கள். பிறகு தொலைக்காட்சி. ஒரே செய்தியை எல்லாச் சேனல்களிலும் மாற்றி மாற்றிப் பார்ப்பார்கள். குழந்தைகள் கல்லூரிக்கும் அலுவலகத்துக்கும் அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருப்பார்கள். மனைவியும் வேலைக்குச் செல்பவராக இருந்தால் அவரும் பரபரப்பாக இருப்பார். இவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஓய்வாக' இருப்பார்கள்!

அலுவலகமே கதியாக இருந்தவர்களுக்கு வீட்டில் என்ன பொருள் எங்கு இருக்கிறது என்றுகூடத் தெரியாது. ஒவ்வொன்றுக்கும் மனைவியைக் கேட்பார்கள். அவர் சற்றே சலித்துக்கொண்டால் கூட இவர்களுக்குக் கோபம் வரும். தன்னை உதாசீனப் படுத்துகிறார் என்று எண்ணம் வரும். அதுவும், உடல்நிலை சரியில்லாமல் போனால் போச்சு! வீட்டையே இரண்டாக்கி விடுவார்கள்.

மருந்து, மாத்திரைகள் எங்கே என்று தெரியாது. அவர்கள் கையில் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். பல்வலியா, குடிப்பதற்கு வெந்நீர் வேண்டும். வெந்நீர் போடத் தெரியுமா? தெரியாது. கண்ணில் வலியா, மருந்துவரிடம் போவார், கூடவே மனைவியும் போவார், பரிசோதனைகள் எல்லாம் முடியும் வரை உடனிருந்து பின் வீட்டுக்கும் அழைத்து வருவார். கண்ணுக்கு மருந்து, தானே போட்டுக் கொள்ளத் தெரியுமா? தெரியாது. மனைவிதான் செய்ய வேண்டும்.

இதே உடல் உபாதைகள் பெண்களுக்கும்தான் வருகிறது. அவர்கள் முடிந்தவரை எல்லாவற்றையும் தாங்களாகவே சமாளித்துக் கொள்வார்கள். முடியாத பட்சத்தில்தான் அடுத்தவர் உதவியை நாடுவார்கள்.
ஆக, இன்று பல குடும்பங்களில், கணவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டால், மனைவிக்குக் கூடுதல் சுமை ஏற்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை! சுமை'யாக இல்லாமல் சுவை'யாக மாற்றலாம், ஆண்கள் தங்கள் வாழ்க்கை முறையைச் சற்றே மாற்றியமைத்துக் கொண்டால்!
காலையில் மனைவியோடு சேர்ந்து நடைப்பயிற்சி செய்யலாம். காலைநேரப் பரபரப்பில் எத்தனையோ வேலைகள். மோட்டார் போடுவது, தண்ணீர் பிடிப்பது, பால் வாங்கி வருவது, வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டு எடுத்துக் காயப் போடுவது போன்ற சிலவற்றைச் செய்யலாம். மனைவிக்கு வேலைப் பளு குறையும்.

கூட்டுக்குடும்பமாக இருந்தால், இவர்கள் செய்வதைப் பார்த்து இளையவர்களும் சிறுசிறு வேலைகளைச் செய்வார்கள். தான் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவி வைப்பது கூட ஒரு ஒத்தாசைதான். பேரக் குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்ப உதவலாம். அவர்களுக்குத் தண்ணீர் பாட்டில், சிற்றுணவு, புத்தகங்கள் எடுத்துவைக்கலாம். முடிந்தால் பள்ளியில் கொண்டு விடலாம், இல்லை பள்ளி வாகனத்தில் ஏற்றி விடவாவது செய்யலாம்.

வயது முதிர்வு காரணமாக ஆண், பெண் இரு பாலருக்குமே மறதி உண்டாக வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் புலன்களைக் கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குறுக்கெழுத்துப் புதிர்கள், விடுகதைகள் போன்றவை நம் புத்தியைத் தீட்ட வல்லவை. கணவரும் மனைவியும் சேர்ந்து குறுக்கெழுத்துப் புதிர்களின் விடைகளைக் கண்டுபிடிக்கலாம். செய்தித்தாள்களிலிருந்து ஒரு பெரிய வார்த்தை அல்லது ஒரு சிறிய வாக்கியத்தை எடுத்துக் கொண்டு அதிலிருந்து சிறிய வார்த்தைகளைக் கண்டுபிடித்து எழுதலாம். இவையெல்லாம் மறதியைச் சரிசெய்யும் வழிகள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மின்கட்டணம், வரி கட்டுவது, வங்கிக்குச் செல்வது, காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்குவது போன்ற வெளிவேலைகளை, ஒவ்வொரு நாளுக்கு ஒரு வேலை என்று பிரித்துக் கொண்டு, அப்படியே ஒருநாள், உணவகத்தில் உணவருந்திவிட்டு வரலாம். மனைவியோடு கூடுதல் நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைக்குமல்லவா? அருகிலுள்ள கோயில்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் இருவரும் சேர்ந்து சென்று வந்தால் சுவாரசியம் கூடுமே!
மாலை நேரங்களிலும் தொலைக்காட்சியில் தொடர்களையும், விளையாட்டு நிகழ்ச்சிகளையும் பார்ப்பதைத் தவிர்த்து, பேரப் பிள்ளைகளின் படிப்புக்கு உதவி செய்யலாம். பள்ளிகளில் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் வண்டி வண்டியாகக் கொடுக்கிறார்களே அவற்றைச் செய்வதற்கு ஒத்தாசை செய்யலாம். ஆண்கள் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டால் பெண்களுக்கு நேரம் மிச்சமாகும். அந்த நேரத்தை இருவருமாகச் சேர்ந்து செலவிடலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு சுற்றுலா சென்றுவரலாம். பேரப்பிள்ளைகளுக்கு விடுமுறையென்றால் அவர்களைப் பூங்கா, அருங்காட்சியகம், மிருகக்காட்சி சாலை, நூலகம் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லலாம். கணவரும் மனைவியும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருந்து ஒன்றாக நேரத்தைச் செலவிட்டால் ஓய்வுக் காலம் சுமையாகாமல் சுவையாக இருக்கும்.
சமூக விரோதிகளின் கூடாரமான ரயில்வே குடியிருப்புகளால்... அச்சம்: *கட்டி முடித்து 2 ஆண்டு ஆகியும் திறக்கப்படவில்லை

Added : ஜூன் 17, 2018 21:55

சிவகங்கை: சிவகங்கை ரயில்வே குடியிருப்பில் கட்டி முடித்து 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத வீடுகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் அப்பகுதியாக செல்லவே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலில் கோயிலுக்கு அருகிலும், தண்டாளத்தின் மறுபக்கத்திலும் ரயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு 18 வீடுகள் உள்ளன. இவற்றில் 7 வீடுகளில் மட்டும் ரயில்வே ஊழியர்கள் வசிக்கின்றனர். மற்ற 11 வீடுகள் பூட்டிக்கிடக்கின்றன.
இதுதவிர, ரயில்வே அலுவலர்களுக்காக புதிதாக 4 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதன் கட்டுமான பணிகள் முடிந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவற்றில் மின்வசதியும், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய் வசதியும் இல்லை. யாரும் வசிக்காமல் அந்த வீடுகளும் பூட்டியே கிடக்கிறது. கழிவுநீர் செல்வதற்கு வசதியாக பெரிய பிளாஸ்டிக் குழாய்கள் கொண்டு வரப்பட்டு, வீடுகளுக்கு அருகில் போடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் இரவு நேரங்களில் பூட்டிக்கிடக்கும் குடியிருப்பு பகுதிக்கு யாரும் செல்வதில்லை. இதனால், அருகில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது வாங்குவோர், கும்பலாக வந்து யாரும் வசிக்காத ரயில்வே குடியிருப்புகளில் அமர்ந்து மது அருந்துவதுடன், ஒழுக்கக்கேடான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு பயந்து அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மாலை நேரமாகி விட்டால் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் தினமும் மாலை நேரங்களில் சமூகவிரோதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது. இதை தடுக்க, பூட்டிக்கிடக்கும் குடியிருப்புகளில் ரயில்வே பணியாளர்களை குடியமர்த்தவும், ரயில்வே போலீசார் தினமும் இரவு நேரங்களில் ரோந்து சுற்றி வரவும் வேண்டும், இதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் குமுறுகின்றனர்.---

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...