Monday, June 18, 2018

சுமைகளும் சுவையாகும்

By இரா. கற்பகம் | Published on : 16th June 2018 01:27 AM |

dinamani


ஆண்கள் பலரும் அலுவலகப் பணியில் இருக்கும் காலத்தில் குடும்பத்துக்கென்று அதிக நேரம் ஒதுக்குவது இல்லை. அலுவலகம், வேலை, நண்பர்கள் என்றே இருப்பார்கள். அதை அனுசரித்து மனைவியும் குழந்தைகளும் தங்களுக்கென்று ஒரு வட்டத்தையும், தினசரி நடை முறையையும் உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். ஓய்வு பெற்ற பின் திடீரென்று குடும்பத்தார் கண்ணுக்குத் தெரிவார்கள். அப்போது குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் தனக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அலைவரிசை ஒத்துப்போகாது. பிரச்னைகள் தலை தூக்கும்.
இன்னும் சில ஆண்கள், மற்றவர்களின் வசதிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நினைக்காமல், தங்களை மட்டும் முன்னிறுத்திக் கொண்டு, தங்கள் வசதிக்கேற்ப ஒரு நடைமுறையை ஏற்படுத்திக் கொள்வார்கள். காலையில் நடைப்பயிற்சி, அது முடிந்து வீட்டுக்கு வந்ததும் ஒன்றுக்கும் மேற்பட்ட செய்தித்தாள்களை, ஏதோ பரீட்சைக்குப் படிப்பது போல விழுந்து விழுந்து ஒரு வரி விடாமல் படிப்பார்கள். பிறகு தொலைக்காட்சி. ஒரே செய்தியை எல்லாச் சேனல்களிலும் மாற்றி மாற்றிப் பார்ப்பார்கள். குழந்தைகள் கல்லூரிக்கும் அலுவலகத்துக்கும் அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருப்பார்கள். மனைவியும் வேலைக்குச் செல்பவராக இருந்தால் அவரும் பரபரப்பாக இருப்பார். இவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஓய்வாக' இருப்பார்கள்!

அலுவலகமே கதியாக இருந்தவர்களுக்கு வீட்டில் என்ன பொருள் எங்கு இருக்கிறது என்றுகூடத் தெரியாது. ஒவ்வொன்றுக்கும் மனைவியைக் கேட்பார்கள். அவர் சற்றே சலித்துக்கொண்டால் கூட இவர்களுக்குக் கோபம் வரும். தன்னை உதாசீனப் படுத்துகிறார் என்று எண்ணம் வரும். அதுவும், உடல்நிலை சரியில்லாமல் போனால் போச்சு! வீட்டையே இரண்டாக்கி விடுவார்கள்.

மருந்து, மாத்திரைகள் எங்கே என்று தெரியாது. அவர்கள் கையில் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். பல்வலியா, குடிப்பதற்கு வெந்நீர் வேண்டும். வெந்நீர் போடத் தெரியுமா? தெரியாது. கண்ணில் வலியா, மருந்துவரிடம் போவார், கூடவே மனைவியும் போவார், பரிசோதனைகள் எல்லாம் முடியும் வரை உடனிருந்து பின் வீட்டுக்கும் அழைத்து வருவார். கண்ணுக்கு மருந்து, தானே போட்டுக் கொள்ளத் தெரியுமா? தெரியாது. மனைவிதான் செய்ய வேண்டும்.

இதே உடல் உபாதைகள் பெண்களுக்கும்தான் வருகிறது. அவர்கள் முடிந்தவரை எல்லாவற்றையும் தாங்களாகவே சமாளித்துக் கொள்வார்கள். முடியாத பட்சத்தில்தான் அடுத்தவர் உதவியை நாடுவார்கள்.
ஆக, இன்று பல குடும்பங்களில், கணவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டால், மனைவிக்குக் கூடுதல் சுமை ஏற்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை! சுமை'யாக இல்லாமல் சுவை'யாக மாற்றலாம், ஆண்கள் தங்கள் வாழ்க்கை முறையைச் சற்றே மாற்றியமைத்துக் கொண்டால்!
காலையில் மனைவியோடு சேர்ந்து நடைப்பயிற்சி செய்யலாம். காலைநேரப் பரபரப்பில் எத்தனையோ வேலைகள். மோட்டார் போடுவது, தண்ணீர் பிடிப்பது, பால் வாங்கி வருவது, வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டு எடுத்துக் காயப் போடுவது போன்ற சிலவற்றைச் செய்யலாம். மனைவிக்கு வேலைப் பளு குறையும்.

கூட்டுக்குடும்பமாக இருந்தால், இவர்கள் செய்வதைப் பார்த்து இளையவர்களும் சிறுசிறு வேலைகளைச் செய்வார்கள். தான் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவி வைப்பது கூட ஒரு ஒத்தாசைதான். பேரக் குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்ப உதவலாம். அவர்களுக்குத் தண்ணீர் பாட்டில், சிற்றுணவு, புத்தகங்கள் எடுத்துவைக்கலாம். முடிந்தால் பள்ளியில் கொண்டு விடலாம், இல்லை பள்ளி வாகனத்தில் ஏற்றி விடவாவது செய்யலாம்.

வயது முதிர்வு காரணமாக ஆண், பெண் இரு பாலருக்குமே மறதி உண்டாக வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் புலன்களைக் கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குறுக்கெழுத்துப் புதிர்கள், விடுகதைகள் போன்றவை நம் புத்தியைத் தீட்ட வல்லவை. கணவரும் மனைவியும் சேர்ந்து குறுக்கெழுத்துப் புதிர்களின் விடைகளைக் கண்டுபிடிக்கலாம். செய்தித்தாள்களிலிருந்து ஒரு பெரிய வார்த்தை அல்லது ஒரு சிறிய வாக்கியத்தை எடுத்துக் கொண்டு அதிலிருந்து சிறிய வார்த்தைகளைக் கண்டுபிடித்து எழுதலாம். இவையெல்லாம் மறதியைச் சரிசெய்யும் வழிகள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மின்கட்டணம், வரி கட்டுவது, வங்கிக்குச் செல்வது, காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்குவது போன்ற வெளிவேலைகளை, ஒவ்வொரு நாளுக்கு ஒரு வேலை என்று பிரித்துக் கொண்டு, அப்படியே ஒருநாள், உணவகத்தில் உணவருந்திவிட்டு வரலாம். மனைவியோடு கூடுதல் நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைக்குமல்லவா? அருகிலுள்ள கோயில்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் இருவரும் சேர்ந்து சென்று வந்தால் சுவாரசியம் கூடுமே!
மாலை நேரங்களிலும் தொலைக்காட்சியில் தொடர்களையும், விளையாட்டு நிகழ்ச்சிகளையும் பார்ப்பதைத் தவிர்த்து, பேரப் பிள்ளைகளின் படிப்புக்கு உதவி செய்யலாம். பள்ளிகளில் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் வண்டி வண்டியாகக் கொடுக்கிறார்களே அவற்றைச் செய்வதற்கு ஒத்தாசை செய்யலாம். ஆண்கள் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டால் பெண்களுக்கு நேரம் மிச்சமாகும். அந்த நேரத்தை இருவருமாகச் சேர்ந்து செலவிடலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு சுற்றுலா சென்றுவரலாம். பேரப்பிள்ளைகளுக்கு விடுமுறையென்றால் அவர்களைப் பூங்கா, அருங்காட்சியகம், மிருகக்காட்சி சாலை, நூலகம் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லலாம். கணவரும் மனைவியும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருந்து ஒன்றாக நேரத்தைச் செலவிட்டால் ஓய்வுக் காலம் சுமையாகாமல் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...