Saturday, June 30, 2018

'சிங்கம், புலியை பார்த்தவன் நான் நண்டுக்கு பயப்பட மாட்டேன்!'

Added : ஜூன் 29, 2018 21:09






சென்னை:''சிங்கம், புலியை பார்த்துள்ள நான், நண்டுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்,'' என, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - கீதா ஜீவன்: துாத்துக்குடி, மீன்பிடித் துறைமுகத்தில், மீனவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டப்படுமா?அமைச்சர் ஜெயகுமார்: துாத்துக்குடி துறைமுகத்தில், துறைமுக சபை நிதியிலிருந்து, 60 லட்சம் ரூபாய் பெறப்பட்டு, மீனவர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்படுகிறது. இப்பணி, 2019 ஜூலைக்குள் முடிக்கப்படும்.

கீதா ஜீவன்: அங்கு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது, பல்வேறு ஊர்களிலிருந்து, மீனவர்கள் துாத்துக்குடி வருகின்றனர். அவர்கள் தங்குமிடத்தில், பொருட்கள் திருடு போகின்றன. அதை தடுத்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.அமைச்சர் ஜெயகுமார்: அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். துாத்துக்குடியில், பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

.தி.மு.க., - சீதாபதி: திண்டிவனம் தொகுதி, மரக்காணத்தில், மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும். அதேபோல், கடல் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, துாண்டில் வளைவு அமைக்க வேண்டும்.அமைச்சர் ஜெயகுமார்: மரக்காணம் பகுதியில் துறைமுகம் அமைக்க, அறிக்கை கோரப்பட்டு உள்ளது. அறிக்கை கிடைத்ததும், பணிகள் துவக்கப்படும். அதேபோல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, துாண்டில் வளைவு அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அ.தி.மு.க., - நடராஜ்: சென்னை, பட்டினப்பாக்கம் கடல் பகுதியிலும், சீனிவாசபுரம் பகுதியிலும், கடல் அரிப்பு ஏற்பட்டு, 50 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாற்று இடம் வழங்க வேண்டும்.அமைச்சர் ஜெயகுமார்: பட்டினப்பாக்கத்தில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இடம் ஒதுக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கி, இவ்வாறு பாதிக்கப்படும் மீனவர்களுக்கு வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பட்டினப்பாக்கத்தில், கடல் அரிப்பு ஏற்பட்டதும், நேரில் சென்று மக்களை சந்தித்து பேசி, உரிய நடவடிக்கை எடுத்தோம். இந்நிலையில், பெண் ஒருவர், மீனவர்களுக்காக, நண்டு விடும் போராட்டம் நடத்துவதாக கூறி, என் வீட்டிற்கு வந்தார். பத்திரிகையாளர்களும் உடனே குவிந்து விட்டனர்.அந்தப் பெண், அண்ணா நகரில் வசிக்கிறார். அவருக்கும், பட்டினப்பாக்கத்திற்கும், எந்த தொடர்பும் இல்லை. பட்டினப்பாக்கத்தில் இருந்து, ஒருவரும் வரவில்லை. விளம்பரத்திற்காக போராட்டம் நடத்துவது, தற்போது அதிகரித்துள்ளது.

 நண்டு, ஆமை, சிங்கம், புலி என, அனைத்தையும் பார்த்துவிட்டு தான் வந்துள்ளேன். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்.இவ்வாறு அமைச்சர் கூறியதும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'சிங்கம், புலியை, எங்கு பார்த்தீர்கள்' என, குரல் எழுப்பினர்.துணை முதல்வர் பன்னீர்செல்வம், ''2001ல், வனத் துறை அமைச்சராக இருந்தபோது பார்த்துஉள்ளார்,'' என்றார்.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...