Wednesday, June 27, 2018

8 வழி சாலைக்கு ஒரு சிலர் மட்டுமே எதிர்ப்புபெரிதுபடுத்த வேண்டாம் என்கிறார் முதல்வர்
dinamalar 27.06.2018

சென்னை: ''சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைக்கு, பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் மட்டுமே, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.





சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - உதயசூரியன்: எட்டு வழி பசுமை சாலை வேண்டாம் என கூறவில்லை. மக்களை அழைத்து, அவர்களின் கருத்துக்களை கேட்டு, அதற்கேற்ப வழித்தடம் அமைக்க வேண்டும். இல்லையெனில், போராட்டம் நடைபெறும். போலீசாருக்கு தேவையில்லாத பிரச்னை ஏற்படும்.

முதல்வர் பழனிசாமி: உங்கள் ஆட்சியில், 2006 - 2009 வரை, 7,467 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினீர்கள். அதற்கு இழப்பீட்டு தொகை, குறைந்த அளவில் தான் வழங்கப்பட்டது. தற்போது, புதிய நில எடுப்பு சட்டத்தின்படி, அதிகமான இழப்பீட்டு தொகை கொடுக்கப்படும்.

சாலை அமைக்க வேண்டிய நிலத்தின் அளவீட்டிற்காக, எல்லைக் கல் நடப்பட்டு விட்டது. தர்மபுரியில், சாலை அமைக்க வேண்டிய, 56 கிலோ மீட்டரில், 53 கி.மீ.,க்கு, எல்லைக் கல்நடப்பட்டு விட்டது. சேலத்தில், 36.9 கிலோ மீட்டரில், 26.9க்கு, எல்லைக் கல் நடப்பட்டு விட்டது. மற்ற மாவட்டங்களில், விரைவில் பணிகள் துவங்க உள்ளன.

இதில், ஒரு சிலர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அவர்கள் போராட்டம் செய்கின்றனர்; அதை, பெரிதுபடுத்த வேண்டாம்.ஒரு சிலர் சொல்வதை வைத்து, இந்த சாலை அமைக்கக் கூடாது என, கூறுவது சரியல்ல. இந்த சாலைக்காக எடுக்கப்படுகிற, 4,693 ஏக்கர் நிலத்தில், 988 ஏக்கர், அரசு நிலம். 2,717 ஏக்கர் நிலம், வறண்ட பகுதி.மீதமுள்ள நிலம் மட்டுமே, விவசாய பகுதியிலிருந்து எடுக்கப்பட உள்ளது.

எந்த ஆட்சி இருந்தாலும், வளர்ச்சி திட்டங்களுக்காக, சாலை அமைப்பது வழக்கம். உங்கள்ஆட்சியில், 2008ல், நிலம் கையகப்படுத்தப்பட்ட போது, தமிழகத்தில், 1.07 கோடி வாகனங்கள் இருந்தன. 2018 மார்ச், 31 அன்று, வாகனங்களின் எண்ணிக்கை, 2.57 கோடி என, கணக்கிடப்பட்டுள்ளது.

வாகனங்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், சாலைகள் அவசியம். தற்போது, அமைக்கப்பட

உள்ள சாலையால், 60 கி.மீ., குறைகிறது.இதனால், எரிபொருள் சிக்கனமாகும்; செலவு குறையும். பயண நேரம் குறைவதுடன், வாகனங்களின் தேய்மானமும் குறையும். பசுமை வழிச்சாலை, நவீன தொழில்நுட்பத்தில் அமைகிறது.

எந்த விபத்தும் ஏற்படாத வகையில், சாலை வடிவமைக்கப்படுகிறது. இதனால், தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாகும். இந்த சாலைக்கு, பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒருசிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இது, மிகப்பெரிய திட்டம். மத்திய அரசு நிதியுதவி பெற்று, பல்வேறு சாலைகளை அகலப்படுத்தும் திட்டங்களையும், அரசு தயாரித்துள்ளது. அந்தப் பணியும், விரைவில் துவங்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency TIMES NEWS NETWORK 16.04.2025 Indore : To steer clea...