Thursday, June 28, 2018

மாவட்ட செய்திகள்

புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் சேகர் ரெட்டி மீது கூடுதலாக பதிவான 2 வழக்குகள் ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு



புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருந்ததாக சேகர் ரெட்டி மீது பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளில், 2 வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 28, 2018, 04:09 AM
சென்னை,

புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருந்ததாக சேகர் ரெட்டி மீது பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளில், 2 வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, தியாகராயநகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

வருமான வரித்துறை கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி வேலூரில், சரக்கு ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.24 கோடி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பறிமுதல் செய்தன.

மறுநாள் 9-ந் தேதி சென்னை தியாகராயநகர், விஜயராகவா சாலையில் உள்ள எஸ்.ஆர்.எஸ். மணல் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து ரூ.8 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும், தியாகராயநகர் யோகாம்மாள் சாலையில் உள்ள எஸ்.ஆர்.எஸ். மணல் நிறுவனத்தின் மற்றொரு அலுவலகத்தில் இருந்து ரூ.1 கோடியே 63 லட்சத்துக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளையும் பறிமுதல் செய்தன.

பின்னர் வருமான வரித்துறை அளித்த தகவலின்படி, சி.பி.ஐ. வேலூரில் ரூ.24 கோடி பறிமுதல் செய்தது குறித்து முதல் வழக்குப்பதிவு செய்தது. பின்னர் சென்னையில் 2 இடங்களில் பணம் பறிமுதல் செய்தது குறித்து தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்தது. இந்த 3 வழக்குகளிலும், நான் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டோம். இந்த 3 வழக்குகளும் ஒரே குற்றச்சாட்டுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ள 2 வழக்குகளை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது

இந்த வழக்கை நீதிபதி எஸ்.பாஸ்கரன் விசாரித்தார். பின்னர், நேற்று அவர் தீர்ப்பு அளித்தார். அதில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

மனுதாரர் சொல்வது போல, ஒரே குற்றச்சாட்டுக்கு 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு வேறு சில வழக்குகளில் அளித்த தீர்ப்பின்படி, சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த செயலை ஏற்க முடியாது.

மேலும், 3 வழக்குகளையும், வருமான வரித்துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். எனவே, வெவ்வேறு பண பரிவர்த்தனை என்று கூறி 3 வழக்குகளை பதிவு செய்ய முடியாது.

மேலும், இந்த வழக்கில் சேகர் ரெட்டி, அரசு உயர் அதிகாரிகளுடன் கூட்டுச் சதிசெய்து, புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருந்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இதுவரை ஒரு அரசு உயர் அதிகாரியை கூட, அதாவது வங்கி அதிகாரியை கூட சி.பி.ஐ. கைது செய்யவில்லை. ஏன், எந்த வங்கியில் இருந்து இந்த பணம் பெறப்பட்டது? என்பதை கூட சி.பி.ஐ. அதிகாரிகள் அடையாளம் காணவில்லை.

மேலும், கூடுதலாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், முதல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் வெவ்வேறனாது என்பதற்கு சி.பி.ஐ.யிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லை.

எனவே, கூடுதலாக 2 வழக்குகள் முறையாக பதிவு செய்யப்படவில்லை. அந்த இரு வழக்குகளையும் ரத்து செய்கிறேன். இந்த 2 வழக்குகளில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை, முதல் வழக்குடன் சேர்த்து சி.பி.ஐ. விசாரிக்கலாம்.

இவ்வாறு நீதிபதி எஸ்.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...