Saturday, June 30, 2018

‘அடுத்த மீட்டிங்குக்கு சேலை கட்டிட்டு வாங்க!’ - அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட கலெக்டர்!



நவீன் இளங்கோவன்


ரமேஷ் கந்தசாமி




ஈரோட்டில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், அதிகாரிகளை எச்சரித்து கலெக்டர் கடுமையாகப் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாகவே மணல் திருட்டு, தண்ணீர் திருட்டு மற்றும் அதிகாரிகள் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றனர். அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையே வார்த்தைப் போரும் ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், ஒவ்வொரு மாதமும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது.



நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தின் போதும் ஒரு பரபரப்பான நிகழ்வு அரங்கேறியது. கூட்டத்தின் போது கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் ராமசாமி பேசுகையில், “ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா பெரியபுலியூர் கிராமத்தில் ஓடும் வைரமங்கலம் கிளைவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென 2 வருடங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதனடிப்படையில், அந்த வாய்க்காய் செல்லும் கிராமங்களான பெரியபுலியூர் மற்றும் வைரமங்கலம் ஆகிய பகுதிகளில் சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், அதிகாரிகள் வைரமங்கலம் பகுதியில் மட்டுமே சர்வே செய்தனர். தற்போது வரை பெரியபுலியூர் பகுதியில் சர்வே பணிகள் ஆரம்பிக்கப்படவே இல்லை. நானும் அதிகாரிகளைப் பலமுறை சந்தித்து அலுத்துப் போய்விட்டேன்” என வெறுப்புடன் கூறினார்.


  இதனைக்கேட்டுக் கடுப்பான கலெக்டர் எஸ்.பிரபாகர் அதிகாரிகளை நோக்கி, ‘ஒரு விவசாய சங்கப் பிரதிநிதி அரசு அதிகாரிகளைப் பலமுறை சந்தித்து வலியுறுத்தியும், வேலை நடக்கலைன்னு விரக்தியா சொல்லுறாரு. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க நீங்க!... உங்களால் வேலை செய்ய முடியலைன்னா, 'என்னால வேலை செய்ய முடியலைன்னு எழுதி கொடுத்துட்டு வீட்டுக்கு போயிடுங்க.' ஒரு சர்வேயை முடிச்சு ஆக்கிரமிப்பை அகற்றுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை. அடுத்த முறை இந்தப் பிரச்னையை முடிக்கலைன்னா, மீட்டிங்குக்கு நீங்கச் சேலை கட்டிக்கிட்டு வாங்க’ என கடுப்பாக பேசினார்

அதிகாரிகளை எச்சரித்து கலெக்டர் கடுமையாகப் பேசியது, கூட்ட அரங்கில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...