Monday, July 9, 2018

'நீட்' விண்ணப்ப, 'கவுன்ட் - டவுன்' துவக்கம் : இன்னும் 85 நாட்களில் பதிவு ஆரம்பம்

Added : ஜூலை 09, 2018 05:02

இந்த ஆண்டு, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, 'கவுன்ட் - டவுன்' துவங்கியுள்ளது. விண்ணப்ப பதிவு துவங்க இன்னும், 85 நாட்கள் மட்டுமே உள்ளன.'நீட் மற்றும், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகள், ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்; கணினி வழி தேர்வாக நடத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு, தமிழகத்தில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.அதே நேரம், அரசியல் கட்சியினரை கண்டு கொள்ளாமல், நீட் தேர்வுக்கு, மாணவர்கள் தயாராக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின் படி, முதல் கட்ட, நீட் தேர்வு, பிப்., 3 முதல், 17 வரை நடக்கிறது.இதில், ஏதாவது ஒரு நாளை மாணவர்கள் தேர்வு செய்து, அந்த நாளில் தேர்வில் பங்கேற்கலாம். முதல் கட்ட நீட் தேர்வுக்கு, அக்., 1ல் விண்ணப்ப பதிவு துவங்கி, 31ல் முடிகிறது. இதன் படி, விண்ணப்ப பதிவு துவங்க, இன்னும், 85 நாட்கள் தான் உள்ளன.'இதனால், மாணவர்கள், நீட் தேர்வுக்கு தற்போதே தயாராக வேண்டிஉள்ளது. 'இதற்கேற்ப, பள்ளிகளில் பொது தேர்வு பாடத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். பொது தேர்வு பாடத்திட்டத்தை முடித்தால் தான், நீட் தேர்வுக்கு ஓரளவாவது பயிற்சி பெற முடியும்' என, பெற்றோர் தெரிவிக்கின்றனர்.இதற்கேற்ப, பள்ளிகளில் வகுப்பு நேரம் நீட்டிக்கப்படுமா என, எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -
நெல்லைக்கு பாலருவி எக்ஸ்பிரஸ்

Added : ஜூலை 09, 2018 01:00

சென்னை: கேரள மாநிலம், பாலக்காடு - புனலுார் இடையே இயக்கப்படும், பாலருவி எக்ஸ்பிரஸ், இன்று முதல், செங்கோட்டை வழியாக திருநெல்வேலிக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில், கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து, தினமும் மாலை, 4:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 1:25 மணிக்கு புனலுார் சென்றடையும். அங்கிருந்து, தென்மலைக்கு, 2:10; செங்கோட்டைக்கு, 3:50; தென்காசிக்கு, 4:05; அம்பாசமுத்திரத்துக்கு, 4:55 மற்றும் திருநெல்வேலிக்கு, காலை, 6:30 மணிக்கும் சென்றடையும்.

 திருநெல்வேலியில் இருந்து, இரவு, 10:30க்கு புறப்பட்டு, புனலுாருக்கு மறுநாள் அதிகாலை, 3:20க்கும்; மதியம், 1:20 மணிக்கு பாலக்காட்டிற்கும் சென்றடையும்.
பள்ளி மாணவர்களுக்காக பஸ் வாங்கி ஓட்டும் ஆசிரியர்

Added : ஜூலை 09, 2018 05:26



பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக தனது சொந்த செலவில் பஸ் வாங்கி, மாணவர்களை ஏற்றிக்கொண்டு தானே ஓட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார் ஆசிரியர்.உடுப்பி மாவட்டம், பராலி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜாராம். இவர் கணிதம், அறிவியல் பாடங்களையும்நடத்துகிறார்.இந்த பள்ளிக்கு வரும் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் வருவதற்கு போதுமான பஸ் வசதி இல்லை என்பதால், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. ஏறக்குறைய ஒவ்வொரு கிராமத்திலும் இருந்து இந்த பள்ளிக்கு வந்து மாணவர்கள் படிக்க சராசரியாக 5 முதல் 10 கி.மீ., வரை பயணிக்க வேண்டும். ஆனால், சாலை வசதி இல்லாததால், பஸ் போக்குவரத்தும் முடக்கப்பட்டது.இதனால், பாதுகாப்பின்றி பள்ளிக்கு அனுப்ப முடியாது எனக்கூறிப் பெற்றோர் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தத் தொடங்கினர். இதனால் மாணவர்கள் எண்ணிக்கை 60 ஆக குறைந்தது. பஸ் வசதி செய்துகொடுத்தால் மாணவர்கள் வருவார்கள் என ராஜாராம் எண்ணினார்.இந்தப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இருவர் பெங்களூருவில் பெரிய நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். அவர்களிடமும், முன்னாள் மாணவர்கள் சங்கத்திடமும், தன்னிடம் இருக்கும் பணத்தையும் முதலீடாக வைத்து பள்ளிக்கு மினி பஸ் ஒன்றை ராஜாராம் வாங்கினார்.தானே ஓட்டுனர் உரிமத்தைப் பெற்று, மாணவர்களைக் கிராமங்களில் இருந்து அழைத்துவரும் ஓட்டுனர் பொறுப்பையும் ராஜாராம் ஏற்றார்.பள்ளிக்கு அருகே வசிக்கும் ராஜாராம் காலை 8:00 மணிக்குப் பஸ்சை எடுத்துக்கொண்டு மாணவர்களை அழைக்கச் செல்வார். 9:30 மணிக்குள்ளாக 4 முறை சென்று மாணவர்களைக் கிராமங்களில் இருந்து அழைத்து வந்து விடுகிறார்.பள்ளிக்குச் செல்ல இலவசமாகப் பஸ் வசதி கிடைத்தவுடன் பெற்றோர் குழந்தைகளை நம்பிக்கையாகப் பள்ளிக்கு அனுப்ப முன்வந்தனர். தற்போது மாணவர்கள் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.இது குறித்து ஆசிரியர் ராஜாராம் கூறியதாவது:முன்னாள் மாணவர்கள் சங்கத்தையும், குறிப்பாக விஜய் ஹெக்டே, கணேஷ் ஷெட்டி ஆகிய இரு மாணவர்களிடம் உதவிகேட்டேன். அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில் பள்ளிக்கு மாணவர்களை அழைத்துவர புதிய மினி பஸ் வாங்கினோம். பஸ்சை பராமரிப்பது, ஓட்டுவதற்கு ஆள் தேவைப்பட்டது.நான் வாங்கும் சம்பளத்தில் ஓட்டுனர் வைத்துக்கொள்ள முடியாது என்பதால், நானே ஓட்டுனராக மாறினேன். மாணவர்களைப் பாதுகாப்பாக வீட்டில் இருந்து அழைத்து வருவதும், திரும்பக் கொண்டுவந்து சேர்ப்பதையும் வழக்கமாக்கினேன்.பஸ் வசதி இல்லாததால், பள்ளியில் இருந்து ஆண்டுக்கு 10 மாணவர்கள் வரை நின்றனர். இதனால், 60 ஆக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், பஸ் வசதி கிடைத்தவுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கி 90-க்கு மேல் அதிகரித்தது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப்பள்ளிகள் போட்டிபோடுவது என்பது கடினமானதுதான். ஆனால், 60 மாணவர்களுக்கும் குறைவாகச் செல்லும் போது தலைமை ஆசிரியர் பதவி பறிக்கப்படும். ஆதலால், இந்த முடிவு எடுத்தோம்.ஏறக்குறையக் காலையில் 30 கி.மீ., மாலையில் 30.கி.மீ., பயணிக்கிறேன். பெரும்பாலான மாணவர்கள் சாலை வசதி இல்லாத கிராமத்தில்தான் வசிக்கிறார்கள்.பஸ்சுக்கான டீசல், பராமரிப்பு செலவு அனைத்தையும் என்னுடைய சம்பளத்தில் இருந்துதான் செலவு செய்கிறேன். முன்னாள் மாணவர்கள் சங்கமும் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.தலைமை ஆசிரியை குஷ்மா கூறுகையில், “இந்த பள்ளியில் மொத்தம் 4 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் ஆசிரியர் ராஜா ராம் அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடியவர். அறிவியல், கணிதம் பாடங்களையும் நடத்தி வருகிறார். இரண்டா-வது ஆண்டாக ஆசிரியராகவும், பஸ் ஓட்டுனராகவும்

ராஜாராம் செயல்பட்டு வருகிறார்,” என்றார்.
'ராமாயண சுற்றுலா' செல்ல ரயில்வே சிறப்பு ஏற்பாடு

Added : ஜூலை 09, 2018 04:35

புதுடில்லி: ராமாயணத்துடன் தொடர்புள்ள இடங்களுக்கு சுற்றுலா செல்லும் வகையில், ரயில்வே துறை, நவ., 14 முதல், 16 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்க திட்டமிட்டுள்ளது.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ராமாயணத்துடன் தொடர்புடைய, அயோத்தி முதல், இலங்கையின் கொழும்பு வரையிலான இடங்களுக்கு, ராமேஸ்வரம் வழியாக, நவ., 14ல், சிறப்பு ரயில் இயக்கப்படும். டில்லியில் இருந்து புறப்படும் இந்த ரயில், 16 நாட்கள், பயணியரை சுற்றுலா அழைத்து செல்லும்.இந்த ரயிலில், 800 பேர் பயணிக்கலாம். சுற்றுலாவின் கடைசி கட்டமாக இலங்கை செல்ல விரும்புவோர், சென்னையில் இருந்து விமானம் மூலம் செல்லலாம்.சிறப்பு ரயிலுக்கு, 'ஸ்ரீராமாயணா எக்ஸ்பிரஸ்' என, பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள், இதற்கான பயண கட்டணம், ஒரு நபருக்கு, 15 ஆயிரத்து, 120 ரூபாய். ரயிலில் பயணியருக்கு உணவு வழங்கப்படும். சுற்றுலா தலங்களில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக அதிகாரிகள், பயணியரின் தேவைகளை கவனிப்பர்.டில்லி, சப்தர்ஜங் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், முதல் பயணமாக, ராமரின் பிறந்த தலமான, அயோத்தியில் நிறுத்தப்படும். பின், நந்திகிராம், சீதாமர்கி, ஜனக்பூர், வாரணாசி, பிரயாக், சிறிங்கவேர்புர், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும். ரயில் நிலையத்தில் இருந்து, சாலை வழியாக சுற்றுலா தலம் செல்வதற்கான ஏற்பாடுகளை, ரயில்வே கவனித்துக் கொள்ளும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
ஏழைகள் பசியை போக்க மும்பையில், 'ரொட்டி பேங்க்'

Added : ஜூலை 09, 2018 01:56



மும்பை : ஏழைகளின் பசியை போக்கும் நோக்கில், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., சிவானந்தன், 'ரொட்டி பேங்க்' எனப்படும், உணவு வங்கியை, மும்பையில் துவங்கி உள்ளார்.

நாட்டில், ஒருவேளை கூட உணவு கிடைக்காமல் பலர் கஷ்டப்படுகின்றனர். மேலும், சிலர் உணவின் அருமை தெரியாமல் வீணடிக்கின்றனர். இந்நிலையில், உணவில்லாமல் தவிப்போரின் பசியை போக்கும் நோக்கில், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., சிவானந்தன், ரொட்டி பேங்க் எனப்படும், உணவு வங்கியை துவங்கி உள்ளார்.

இவர், பிரபல உணவகத்துடன் இணைந்து, 2017ல் துவங்கிய இந்த உணவு வங்கி, தற்போது பலரது பசியை போக்கி வருகிறது. மும்பையில் உள்ள உணவகங்கள், உணவு விடுதிகளில், தினந்தோறும் மீதமாகும் உணவுப் பொருட்களை சேகரித்து, பசியால் வாடுபவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் சேவையை, குழுவாக செய்து வருகின்றனர்.

ரொட்டி, அரிசி, சாம்பார் மற்றும் காய்கறி வகைகள் கெட்டுப் போவதை தடுக்கும் விதமாக, அவை சேகரிக்கப்பட்ட, 60 - 90 நிமிடங்களுக்குள், நடைபாதை வாசிகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், ஜி.பி.ஆர்.எஸ்., கருவி பொருத்தப்பட்ட இரு வேன்கள் மூலமும், உணவு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து, ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., சிவானந்தன் கூறியதாவது: நாட்டில், 20 கோடி ஏழைகள் பட்டினியாக உறங்குகின்றனர். பல கோடி டன் உணவு வீணாகிறது. உணவை வீணடிப்பவர்களுக்கும், உணவு தேவைப்படுபவர்களுக்கும் இடையே இணைப்பை உருவாக்கிய, சென்னையைச் சேர்ந்த, 'நோ புட் வேஸ்ட்' திட்டத்தை பார்த்த பின், உணவு வங்கி துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதையடுத்து, ரொட்டி பேங்க் எனப்படும் உணவு வங்கி துவங்கப்பட்டது, தற்போது, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்களாகவே முன்வந்து, உணவை வழங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
50 வயது ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்ப திட்டம்

Added : ஜூலை 09, 2018 01:46

லக்னோ பணியை சரியாகச் செய்யாத, 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு, கட்டாய பணி ஓய்வு வழங்க, உ.பி., அரசு முடிவு செய்துள்ளது; இதற்கு, அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 16 லட்சம் பேர், மாநில அரசு ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்; இவர்களில், 50 வயதை கடந்தவர்களுக்கு, தகுதி அடிப்படையில் கட்டாய பணி ஓய்வு வழங்கும் திட்டத்தை, மாநில அரசுஅறிவித்துள்ளது. இதன்படி, 50 வயதை கடந்த அரசு ஊழியர்களுக்கு, துறை வாரியாக, கட்டாய தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன; இந்த தேர்வுகளை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடத்துகின்றனர்; இதில், ஊழியரின் திறன், நேர்மை, பணி செய்வதில் காட்டும் ஆர்வம் ஆகியவை கணக்கில் எடுக்கப்படும்.பணியை தொடர, தகுதியற்றவராக கருதப்படுபவர்களுக்கு, ஜூலை, 31ல், கட்டாய பணி ஓய்வு வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு, அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இது தொடர்பாக, உ.பி., தலைமை செயலக ஊழியர்கள் சங்க கூட்டம், இன்று நடக்கிறது; இதில், ஊழியர்களின் அடுத்தகட்ட முடிவு குறித்து அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர்கள் 3 ஆண்டுகள் கிராமங்களில் பணிபுரிய வேண்டும்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தல்


dinamalar 09.07.2018 

சென்னை : ''டாக்டர்கள், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது, கிராமங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.



தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 30வது பட்டமளிப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது.

தங்கப் பதக்கம் :

மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மருத்துவம் மற்றும் இதர மருத்துவம் சார்ந்த படிப்புகளில் தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரத்து, 372 பேர் பட்டங்கள் பெற்றனர். அவர்களில், சிறந்த மாணவ - மாணவியர், 76 பேருக்கு தங்கப் பதக்கம், 25 பேருக்கு வெள்ளிப் பதக்கம், 63 பேருக்கு, பல்கலையின் வெற்றிப் பதக்கங்களை வழங்கி, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசியதாவது:

மக்கள் நலன் காப்பதில், தமிழகம் முன்னோடியான மாநிலமாக உள்ளது. மாணவர்கள் ஆழமாக சிந்திக்க, ஆசிரியர்கள் துாண்டுகோலாக இருக்க வேண்டும். நல்லவை அனைத்தையும் கவனிப்பவர்களாகவும், வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்பவர்களாகவும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

அரசின் திட்டம்:

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மருத்துவப் படிப்புகளில், மாணவர் சேர்க்கையை இரட்டிப்பாக்க வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லுாரி துவங்க வேண்டும் என்பதே, அரசின் திட்டம். மருத்துவப் பணி புனிதமானது. நவீன மருத்துவ வசதிகள் மட்டுமின்றி, தரமான மருத்துவ சேவைகள், கிராமங்களுக்கு கிடைக்க வேண்டும்.

எனவே, டாக்டர்களுக்கு முதலாவது பதவி உயர்வை வழங்கும் முன், கிராமங்களில், மூன்று ஆண்டுகள் பணியாற்றுவதை கட்டாயமாக்க வேண்டும். எல்லாருக்கும் தரமான, செலவு குறைந்த மருத்துவ வசதிகள் வழங்க, மத்திய அரசு, 'ஆயுஷ்மான் பாரத்' என்ற திட்டத்தைஅறிவித்துள்ளது.

உடற்பயிற்சி :

இத்திட்டத்தால், 50 கோடி பேர் பயன் பெறுவர். ஒருவர் ஐந்து லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற முடியும் என்பதால், நலிந்த பிரிவினர் அதிகம் பயன் பெறுவர். 'ரோபோ' பயன்படுத்தி, அறுவை சிகிச்சை செய்வது உட்பட, பல வகையிலும், மருத்துவத் துறையில் உலகம் முன்னேறி வருகிறது. டாக்டர்களாக உருவாகியிருக்கும் நீங்கள் தொடர்ந்து படித்து, உங்கள் அறிவை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

நவீன மருத்துவ வசதிகளை தெரிந்து கொள்ள வேண்டும். கடவுளுக்கு அடுத்தபடியாக டாக்டரையே மக்கள் நம்புகின்றனர். ஏழைகளுக்கு செய்யும் சேவை, கடவுளுக்கு செய்யும் சேவை. எனவே, இவற்றை நன்றாக

உணர்ந்து, டாக்டர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். சாதாரண டாக்டர்களாக இல்லாமல், மிகச் சிறந்த டாக்டராக ஒவ்வொருவரும் உருவாக வேண்டும்.

நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு, வாழ்க்கை முறையே முக்கிய காரணம். நோயாளிகள் பாரம்பரிய உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பூப்பந்து :

இது தொடர்பாக, டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நான் தினமும், ஒரு மணி நேரம் பூப்பந்து விளையாடுகிறேன். அதனால் தான், மாநிலம் மாநிலமாக சென்று, சுறுசுறுப்பாக, திடகாத்திரமாக பணியாற்றி வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவப் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

NEWS TODAY 27.01.2026