Friday, July 13, 2018


கல்லூரி பேரிடர் ஒத்திகையில் மாணவி பலி ! 2ம் மாடியிலிருந்து கீழே தள்ளிய கொடூர பயிற்சியாளர் *வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலை

Updated : ஜூலை 13, 2018 06:18 | Added : ஜூலை 13, 2018 06:17




கோவை:கோவை தனியார் கல்லுாரியில் நேற்று நடந்த பேரிடர் மேலாண்மை ஒத்திகையின் போது, இரண்டாவது மாடியில் இருந்து பயிற்சியாளரால் வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடப்பட்ட மாணவி, பலத்த காயமடைந்து உயிரிழந்தார். மாணவியை தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, தொண்டாமுத்துார், நாதேகவுண்டன்புதுார், நியாய விலைக்கடை வீதியைச் சேர்ந்தவர் நல்லா கவுண்டர். இவரது மகள் லோகேஸ்வரி, 19. நரசீபுரம், விராலியூர் ரோட்டில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ., படித்து வந்தார். நேற்று மாலை கல்லுாரி வளாகத்தில் மாணவர்களுக்கு, பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் தலைமையிலான குழுவினர் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்தனர்.

இதன் ஒரு பகுதியாக, ஆபத்து காலங்களில் ஜன்னல் வழியாக மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது. மூன்று மாடி கொண்ட கல்லுாரி வளாகத்தின் கீழ் பகுதியில் பெரிய வலையை கட்டி, மாடியில் இருந்து மாணவர்களை கீழே குதிக்க அறிவுறுத்தினர்.

இரண்டாவது மாடியில் இருந்து மாணவி லோகேஸ்வரியை பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே குதிக்குமாறு கூறினார். கீழே, மாணவர்கள் சிலர் வலை விரித்து, அவரை தாங்கிப்பிடிக்க காத்திருந்தனர். பயந்து நடுங்கிய மாணவி, 'பயமாக இருக்கிறது; நான் குதிக்க மாட்டேன்' என, பீதியுடன் கூறி, கீழே குதிக்க மறுத்தார். அத்துடன், பக்கவாட்டுச் சுவரையும் நன்றாக இறுக்கிப்பிடித்துக்கொண்டார். அவ்வாறிருந்தும் அவரை விடவில்லை பயிற்சியாளர். 'கீழே குதித்தே ஆகவேண்டும்' எனக்கூறி, அவரது தோள்பட்டையைப் பிடித்து இரண்டு மூன்று முறை கீழே தள்ள முயன்றார். மாணவி மறுத்து இறுக்கமாக சுவரைப் பிடித்துக்கொண்டார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பயிற்சியாளர் ஆறுமுகம், மாணவியை திடீரென கீழே தள்ளிவிட்டார். நிலைகுலைந்த மாணவி பக்கவாட்டுச் சுவரை ஒரு கையால் பிடித்தவாறே கீழே சுழன்றபடி விழுந்தபோது, முதல் மாடியின் 'சன் ஷேடு' மீது தலைகீழாக விழுந்து பலத்த காயமடைந்தார்.

இச்சம்பவம், அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாணவ, மாணவியரை திடுக்கிடச் செய்தது. ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்து மாணவியின் உறவினர்கள், கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

கல்லுாரியில் இதுபோன்ற பயிற்சிகளை அளிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறையினர் உரிய முன் அனுமதி பெற வேண்டும். நேற்று நடந்த பயிற்சி தொடர்பாக, கல்லுாரி நிர்வாகம் யாரிடமும் அனுமதி வாங்கவில்லை. பேரிடர் மேலாண்மை மீட்பு தனியார் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளித்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட பேரிடர் மீட்பு பணிக்களுக்கான தாசில்தார் ஜெயபால் கூறுகையில், ''இதுபோன்று பயிற்சிகள் அளிக்க, மாவட்ட நிர்வாகம், பேரிடர் குழுவிடம் முன் அனுமதி பெற வேண்டும். தீயணைப்பு வீரர்கள் முன்னிலையில் தான் பயிற்சி அளிக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளை கடைபிடிக்காமல் பயிற்சி அளித்து உயிரிழப்பு ஏற்படுத்தி உள்ளனர்,'' என்றார்.

கோவை மாவட்ட எஸ்.பி., மூர்த்தியிடம் கேட்டபோது, 'சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி., நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளார். மாணவி கீழே விழுந்தது தொடர்பான வீடியோ பதிவு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த 'வீடியோ'வை ஆய்வு செய்து, மாணவி உயிரிழப்புக்கு காரணமான நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மாணவி உயிரிழப்பு தொடர்பாக கலைமகள் கல்லுாரி நிர்வாகத்திடம் கேட்டபோது, இந்த சம்பவம் வளாகத்தின் வெளியே நடந்ததாக முதலில் மழுப்பலாக பதிலளித்தனர். இதன்பின், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

'கொலைக்கு ஈடான குற்றம்'

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பேரிடர் மீட்பு பயிற்சி என்பது, நன்கு திட்டமிட்டு பயிற்சி பெற்ற தகுதியான நபர்களைக் கொண்டு நடத்தப்பட வேண்டும். கல்லுாரி வளாக ஒத்திகையின் போது, மாணவி பலியான வீடியோவை பார்த்தேன். கீழே குதிக்குமாறு மாணவியை நிர்பந்தித்து, பயிற்சியாளர் கீழே பல முறை வலுக்கட்டாயமாகத் தள்ள முயற்சிக்கிறார். அந்த மாணவி மறுக்கிறார். இது கொலைக்குற்றத்துக்கு ஈடான செயல்தான்.

ஒருவரின் விருப்பத்துக்கு மாறாக அவ்வாறு செய்தால் உயிரிழப்பு நேரிடும் என்பது பயிற்சியாளருக்கு நன்கு தெரிந்திருக்கும். அவ்வாறு அறிந்திருந்தும் தள்ளிவிட்டது, கொலைகுற்றத்துக்கு ஈடான குற்றச் செயலே. அதனால், தகுந்த சட்டப்பிரிவின் கீழ் அந்நபர் மீதும், போதுமான முன்னெச்சரிக்கையின்றி முன் ஏற்பாடுகளின்றி ஒத்திகை நடந்ததை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்த கல்லுாரி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிசியோதெரபிஸ்ட் கொடூர கொலை கூலிப்படை அமர்த்தி, 'போட்டு தள்ளிய' இளம்பெண்

Added : ஜூலை 13, 2018 04:12

திருச்சி:திருச்சி, காவிரி ஆற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர், சென்னையில், பிசியோதெரபிஸ்டாக பணியாற்றியவர் என்பதும், கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டதும் அம்பலம் ஆகியுள்ளது.
திருச்சி, திருவானைக்காவல் திருவளர்ச்சோலை அருகே, காவிரி ஆற்றில், நேற்று முன்தினம் காலை, வெட்டு காயங்களுடன், அழுகிய நிலையில், ஆண் சடலம் மிதந்தது.ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தினர். 35 வயது மதிக்கத்தக்க அவர், கொலை செய்யப்பட்டு, நான்கைந்து நாட்கள் இருக்கும் என தெரிந்தது.

தொடர் விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், அரியலுார், பொன்பரப்பியைச் சேர்ந்த விஜயகுமார், 36, என்பதும், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, பி.ஆர்.எஸ்., மருத்துவமனையில், பிசியோதெரபிஸ்டாக பணியாற்றியவர் என்பதும் தெரிந்தது.
இது குறித்து, ஸ்ரீரங்கம் போலீசார் கூறியதாவது:விஜயகுமாருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். சென்னையில், பிசியோதெரபிஸ்டாக பணியாற்றினார்.இவர், அரியலுாரில் இருந்து, சென்னைக்கு ரயிலில் செல்லும் போது, திருச்சி, உறையூரிலிருந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஐ.பி.ஏ.ஐ., மையத்தில், சி.ஏ., படிக்க சென்ற ஈஸ்வரி, 21, என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும், அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதை, விஜயகுமார் வீடியோ எடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, ஈஸ்வரியை அடிக்கடி மிரட்டியுள்ளார். விஜயகுமார் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி, அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதன்படி, விஜயகுமாரை திருச்சிக்கு வரவழைத்தார். தனக்கு தெரிந்த, திருச்சி கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர் மூலம், காவிரி ஆற்றுக்கு விஜயகுமாரை அழைத்து சென்று, கொலை செய்துள்ளார்.சம்பவத்தின் போது, ஈஸ்வரியும் உடன் இருந்துள்ளார். நால்வரையும் பிடித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.

ரயில் டிக்கெட் முன்பதிவு பகுதி நேரம் நிறுத்தம்

Added : ஜூலை 13, 2018

தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில், நாளை பிற்பகல், 2:15 மணி முதல் மாலை, 3:15 மணி வரை, முன்பதிவு நிறுத்தப்படுகிறது. அதேபோல், நாளை இரவு, 11:45 மணி முதல், 15ம் தேதி அதிகாலை, 1:20 மணி வரை, முன்பதிவு நிறுத்தப்படுகிறது.'இந்த நேரங்களில், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களிலும், ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்திலும், டிக்கெட் முன்பதிவை ரத்து செய்ய முடியாது.

'மேலும், '139' என்ற, விசாரணை மையத்தையும் தொடர்பு கொள்ள முடியாது' என, அறிவிக்கப் பட்டுள்ளது.இதன்படி, தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே மற்றும் தென்மத்திய ரயில்வேயில் இருந்து புறப்படும் ரயில்களுக்கும் முன்பதிவு செய்யவோ, ரத்து செய்யவோ முடியாது. முன்பதிவு மையங்கள் பராமரிப்பு பணி காரணமாக, முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது.

அதே நேரம், வேறு ரயில்வே மண்டலங்களில் இருந்து, இந்த ரயில்வே மண்டலத்திற்கு வரும் ரயில்களுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மீன்வள பல்கலையில் முறைகேடு விசாரணை நடத்த கமிட்டி அமைப்பு

Added : ஜூலை 13, 2018 03:17

மீன் வள பல்கலையில், 'நபார்ட்' நிதியில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை விசாரிக்க, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஜெயலலிதா மீன் வள பல்கலையில், 2017ல், துணைவேந்தர் பதவி காலியாக இருந்தபோது, பல்கலையின் பேராசிரியர், ரத்னகுமார், பதிவாளராகவும், பொறுப்பு துணைவேந்தராகவும் செயல்பட்டார். அப்போது, மத்திய அரசின் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி, 'நபார்டு' வழியாக பெறப்பட்ட நிதியை, நிபந்தனைகளை மீறி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து, பல்கலை நிர்வாகம் நடத்திய விசாரணையில், பல்கலை நிதிக்குழுவின் ஒப்புதல் பெறாமல், நபார்டு நிதி, வேறு பயன்பாட்டுக்கு திருப்பி விடப்பட்டது தெரிய வந்தது.இதையடுத்து, பதிவாளர் ரத்னகுமார், 2018, மே மாதம், 'சஸ்பெண்ட்'செய்யப்பட்டார்.இந்நிலையில், ரத்னகுமார் மீதான குற்றச்சாட்டில், அவரது விதிமீறல்கள் என்ன; நபார்டு நிதி பயன்படுத்தப்பட்டதில் உண்மை என்ன என்பதை விசாரிக்க, ஐந்து பேர் அடங்கிய கமிட்டியை, மீன்வள பல்கலை அமைத்துள்ளது.இந்த கமிட்டி, இரண்டு வாரங்களில் விசாரணையை முடிக்க திட்டமிட்டுள்ளது.
- நமது நிருபர் -

வீடு தேடி வரும் கங்கா தீர்த்தம் 'மொபைல் ஆப்' துவக்கம்

Added : ஜூலை 13, 2018 04:05

புதுடில்லி:காசிக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே, கங்கா தீர்த்தம் பெறுவதற்கான, 'மொபைல் ஆப்'பை, மத்திய கலாசார துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா, நேற்று துவங்கி வைத்தார்.

தலைநகர் டில்லியில் உள்ள, தன்னார்வ தொண்டு நிறுவனமான, 'இந்திரபிரஸ்த சஞ்சீவனி' அறக்கட்டளை சார்பில், கங்கா தீர்த்தம் பெறுவதற்கான, 'மொபைல் அப்ளிகேஷன்' வடிவமைக்கப்பட்டது.
இது குறித்து, அந்த அறக்கட்டளை தலைவர், சஞ்சீவ் அரோரா கூறியதாவது:மூன்று ஆண்டுகளாக, டில்லியில் ஆறு லட்சம் பேருக்கு, கங்கா தீர்த்தம் இலவசமாக வழங்கியுள்ளோம்.தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள, மொபைல் ஆப்பில், 'கிளிக்' செய்தால், கங்கா தீர்த்தம், வீடு தேடி வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

மொபைல் ஆப்பை, துவக்கி வைத்த, மத்திய கலாசார துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, மகேஷ் சர்மா கூறுகையில், ''கங்கையை துாய்மையாக வைத்திருக்க வேண்டிய கடமை, நம் அனைவருக்கும் உள்ளது. ''நாட்டு மக்களில், 40 கோடி பேரின் தாகத்தை, கங்கை தணிக்கிறது என்பதை, நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.
சிறு வயது கனவை நனவாக்கிய மதுரை பெண்; விடாமுயற்சியால், 'பைலட்'டாகி சாதனை

Added : ஜூலை 13, 2018 00:29 |




பெங்களூரு : விடா முயற்சியும், துடிப்பும் இருந்தால், எதையும் சாதிக்க முடியும் என்பதை, மதுரையைச் சேர்ந்த இளம் பெண், நிரூபித்துள்ளார். பைலட் ஆக வேண்டும் என்ற, இவரது சிறு வயது கனவு, தற்போது நனவாகியுள்ளது.

தமிழகத்தின், மதுரை, களங்கத்துபட்டியைச் சேர்ந்தவர், ரவிகுமார்; பஸ் டிரைவர். இவரது மனைவி கல்பனா. இந்த தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள். மூத்த மகள், காவ்யா, 22, மதுரை, டி.வி.எஸ்., பள்ளியில், பிளஸ் 2 வரை படித்தார். ஆறாம் வகுப்பு படிக்கும் போது, வானத்தில் விமானம் பறப்பதை ஆச்சரியமாக, இவர் பார்த்தார். அப்போதே, பைலட் ஆக வேண்டும் என, கனவு காணத் துவங்கினார்.

அந்த பள்ளியில் படித்த சக மாணவ - மாணவியர், காவ்யாவை, 'பைலட்' என்றே அழைத்தனர். பள்ளி படிப்பு முடித்ததும், பைலட் கனவை, நனவாக்குவது எப்படி என்பது தெரியாமல் இருந்தார். கர்நாடக மாநிலம், பெங்களூரில் வசித்து வந்த அவரது நண்பர் ஒருவர் மூலம், அங்குள்ள ஜக்கூரில், அரசு விமான பயிற்சி மையம் செயல்படுவது, அவருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, பெங்களூருக்கு வந்த காவ்யா, விடுதியில் தங்கினார். விமான பயிற்சிக்கான கட்டணம், 23 லட்சம் ரூபாய் என தெரியவந்ததும், அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே, காவ்யா, தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவி என்பதால், பயிற்சியாளர் அமர்ஜித் சிங், ஆலோசனையின்படி, மத்திய அரசின் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பித்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், விமான பயிற்சிக்கான முழு கட்டணமும், மத்திய அரசிடமிருந்து கிடைத்தது.

இதையடுத்து, 2013ல், ஜக்கூர் விமான பயிற்சி மையத்தில், காவ்யா உட்பட, 17 பேர் சேர்ந்தனர். கல்வி கட்டணம் செலுத்தி விட்டு, தங்குவதற்கும், உணவுக்கும் பணமின்றி சிரமப்பட்டார். அப்போது, இவருக்கு பின், விமான பயிற்சியில் இணைந்த ஜூனியர்களுக்கு வகுப்புகள் எடுத்து, பகுதி நேரமாக பணி புரிந்து, பணம் சம்பாதித்தார். இரண்டரை ஆண்டுகளில், 200 மணி நேரம் விமானத்தில் பறந்து, பயிற்சியை முடித்தார். துவக்கத்தில், பயிற்சியாளர் உதவியுடன், விமானம் ஓட்டிய அவர், சிறிது காலத்துக்கு பின், தனியாகவே விமானத்தை செலுத்தும் திறமையை பெற்றார்.

இதையடுத்து, காவ்யாவுக்கு, 'பைலட் லைசென்ஸ்' வழங்கப்பட்டது. இதன் மூலம், விமான பைலட் ஆக வேண்டும் என, 10 வயதில், அவர் கண்ட கனவு, தற்போது, 22 வயதில் நனவாகியுள்ளது. இதன்மூலம், மற்ற பெண்களுக்கு முன் உதாரணமாக, காவ்யா திகழ்கிறார். பயிற்சி பெற்ற, அதே ஜக்கூர் விமான பயிற்சி மையத்தில், விமான கட்டுப்பாட்டு அதிகாரியாக, தற்போது காவ்யாவுக்கு வேலை கிடைத்துள்ளது.

இதுகுறித்து காவ்யா கூறியதாவது: தனியாக விமானம் ஓட்டும் போது பயமாக இருந்தது. அப்போது, பயிற்சியாளரிடம் பல முறை திட்டு வாங்கினேன். ஓரளவு பயிற்சி பெற்றதும், பயமின்றி ஓட்டினேன். சாதனை படைப்பதற்கு பல பெண்கள் துடிக்கின்றனர்.

ஆனால், சரியான வழிகாட்டி இல்லாமல் தவிக்கின்றனர். தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால், யார் வேண்டுமானாலும், எதையும் சாதிக்க முடியும். பெண்கள், பைலட்டாவதற்கு முன்வர வேண்டும்; அவர்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்
இலவசம்,இன்ஜி., கல்லூரிகள்,ஸ்கூட்டர்,லேப்டாப்,அறிவிப்பு

 dinamalar 13.07.2018

புதுடில்லி : குஜராத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. மாணவர்களை கவர 'ஸ்கூட்டர், லேப்டாப்' என சலுகைகளை அள்ளித் தரும் முயற்சியில் அந்த கல்லுாரிகள் இறங்கியுள்ளன.

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாடு முழுவதும் நடந்து வருகிறது. நுாற்றுக்கணக்கான புதுப்புது பாடப்பிரிவுகள் வந்துகொண்டுள்ளன. தொழில்நுட்ப படிப்பு எப்பொழுதும் கைகொடுக்கும் என்பதால் எதைப்படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மாணவர்கள் முடிவு செய்து அதற்கேற்ற பாடப்பிரிவுகளை சிறந்த கல்லுாரிகளில் தேர்வு செய்கின்றனர்.

நாட்டில் மொத்தமுள்ள 3,291 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் 15.5 லட்சம் இடங்கள் உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை சில ஆண்டுகளாக குறைவாக உள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையிலும் இதே நிலை தொடருவதாக குஜராத் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவர்களை கவர



குஜராத் மாநில தனியார் கல்லுாரிகள் பல வித்தியாசமான முயற்சிகளில் இறங்கியுள்ளன.

இது குறித்து குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இருந்து வெளியாகும் 'மிரர்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: குஜராத் மாநிலத்தில் இன்ஜினியரிங் பாடத்துக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கை முடிவடைந்து உள்ளது. இதில் மொத்தமுள்ள 55 ஆயிரத்து 422 இடங்களில் 34 ஆயிரத்து 642 இடங்கள் காலியாகவே உள்ளன. இதனால் தனியார் கல்லுாரி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலைமையை சமாளிக்க பல்வேறு புதுப் புது திட்டங்களை அறிவித்து மாணவர்களை கவர முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக கல்வி உதவித்தொகை என்ற பெயரில் கல்வி கட்டணத்தில் பெரும் அளவில் தள்ளுபடி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் 'செமஸ்டருக்கான' கட்டணம் தள்ளுபடி, கல்லுாரி பேருந்து மற்றும் விடுதிக்கு பாதி கட்டணம், இலவச 'லேப்டாப்' போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை குஜராத் மாநில தனியார் கல்லுாரி நிர்வாகத்தினர் அள்ளி வீசியுள்ளனர்.

இதன் உச்சகட்டமாக 'நான்கு ஆண்டு கல்வி கட்டணத்தையும் ஒரே தவணையில் செலுத்தும் மாணவர்களுக்கு நான்காம் ஆண்டு படிப்பு முடிந்ததும் இரு சக்கர வாகனம் இலவசமாக வழங்கப்படும்' என பல கல்லுாரிகள் அறிவித்துள்ளன.

சில கல்லுாரிகள் 'ஆண்டுக்கு 2,500 ரூபாய் கல்வி கட்டணம் செலுத்தினால் போதும்' என ஆடித் தள்ளுபடி போன்ற சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

மேலும் சில கல்லுாரிகள் மாணவர்களை சேர்த்து விட 'கமிஷன் ஏஜன்ட்'களை நியமித்துள்ளன. 'ஒரு மாணவனை சேர்த்துவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் கமிஷன் தரப்படும்' என அறிவித்துள்ளன. இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதிய மாணவர் இல்லாமல் கல்லுாரியை நடத்தி நஷ்டமடைவதை விட இது போன்ற சலுகை மற்றும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நிலைக்கு குஜராத் கல்லுாரிகள் தள்ளப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

NEWS TODAY 28.01.2026