Sunday, July 15, 2018


பெங்களூரு வான்பரப்பில் இரு விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 328 பயணிகளின் உயிரை காப்பாற்றிய எச்சரிக்கை அலாரம்

Published : 13 Jul 2018 07:51 IST

இரா.வினோத்   பெங்களூரு




பெங்களூரு வான்பரப்பில் 328 பயணிகளுடன் பறந்த இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதுவது கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை கோவையில் இருந்து 162 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஹைதராபாத் நோக்கி சென்றது. இதே போல பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு 166 பயணிகளுடன் மற்றொரு இண்டிகோ விமானமும் கிளம்பியது.

இரு விமானங்களும் பெங்களூரு வான்பரப்பில் நேருக்கு நேராக வந்துள்ளன. அப்போது சுமார் 200 அடி இடைவெளி உயரத்தில் அவை பறந்துள்ளன. இரண்டுக்கும் இடையிலான தொலைவு 8 கி.மீ. ஆக இருந்துள்ளது. அந்த நேரத்தில் இரு விமானங்களிலும் பொருத்தப்பட்டிருந்த விமான மோதல் தடுப்பு சாதனம் (டிசிஏஎஸ்) அபாய அலாரத்தை எழுப்பியது. விமானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், கோவை- ஹைதராபாத் பயணிகள் விமானத்தை 36,000 அடி உயரத்திலும் பெங்களூரு கொச்சி விமானத்தை 28,000 அடி உயரத்திலும் பறக்க உத்தரவிட்டனர். இரு விமானங்களும் நடுவானில் மேலும் கீழுமாக இடம் மாறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பொதுவாக இந்திய பயணிகள் விமானம் மணிக்கு 750 முதல் 850 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடியவை. சிறிது தாமதித்து இருந்தால் நடுவானில் விமானங்கள் மோதி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத், கொச்சி விமான நிலையங்களில் விமானங்கள் பத்திரமாக தரையிறங்கின. ஆனால் திடீரென ஒரு விமானம் மேலேயும் மற்றொரு விமானம் கீழேயும் இறங்கியதால் சில பயணிகளுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்பினர்.

விமான நிறுவனம் விளக்கம்

இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

இரு விமானங்கள் மோதல் தவிர்க்கப்பட்டது உண்மைதான். சற்று அலட்சியமாக இருந்திருந்தாலும் இரு விமானங்களும் மோதி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் எங்கள் தவறு ஏதும் இல்லை. விமான போக்குவரத்து விபத்துத் தவிர்ப்பு அமைப்பின் வழிகாட்டல்படியே கோவை - ஹைதராபாத் மற்றும் பெங்களூரு - கொச்சி ஆகிய தடங்களில் எங்கள் இரு விமானங்களும் சரியான நேரங்களில் இயக்கப்பட்டன.

வானில் இரு விமானங்களும் மோதும் வகையில் ஒரே உயரத்தில் நேருக்கு நேர் பறந்ததற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. டிசிஏஎஸ் எச்சரிக்கை அலாரத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குறிப்புகள் பலவிதம்: பூப்போன்ற இட்லிக்கு வெந்நீர்

Published : 15 Jul 2018 10:05 IST




# சமையல் பாத்திரம் தீய்ந்துவிட்டால் பயன்படுத்திய காபித் தூள், சீயக்காய்த் தூள் இரண்டையும் அந்தப் பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கவிட்டால் கறை நீங்கிப் பாத்திரம் பளிச்சிடும்.

# முல்தானிமிட்டியில் ரோஸ் வாட்டர் சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவி கால் மணி நேரம் ஊறவைத்துப் பிறகு முகம் கழுவினால் முகம் பொலிவுபெறும்.

# புதினா, மல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றில் துவையல் அரைக்கும்போது அவற்றுடன் மிளகு, சீரகம் இரண்டையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால் ருசியாக இருக்கும்.

# காபிக்கு டிகாக்ஷன் போடும்போது ஃபில்டரில் முதலில் சர்க்கரையைப் போட்டு பிறகு அதன் மேல் காபிப் பொடியைப் போட்டு வெந்நீர் ஊற்றுங்கள். டிகாக்ஷன் உடனே இறங்குவதுடன் ஸ்ட்ராங்காகவும் இருக்கும்.

# இட்லி அரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் இட்லி பூப்போல் இருக்கும்.

# இட்லிக்கு மாவு அரைக்கும்போது உளுந்து குறைவாக இருந்தால் சில அப்பளங்களைத் தண்ணீரில் ஊறவைத்து அரிசியுடன் சேர்த்து அரைக்கலாம்.

# ரவையை நெய்யில் சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊற வையுங்கள். பிறகு சர்க்கரைப் பாகு செய்து அதில் இந்த ரவையைக் கொட்டி கேசரி செய்தால் நெய் குறைவாகச் செலவாகும்; சுவையும் கூடும்.

# சப்பாத்திக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதில் இளநீர் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

# உருளைக் கிழங்கைத் தோல் சீவி, உப்புத் தண்ணீரில் ஊறவைத்து உலர்த்தி எண்ணெய்யில் வறுத்தெடுத்தால் வறுவல் மொறுமொறுவென இருக்கும்.

# உளுந்து வடைக்கு அரைக்கும்போது மாவு நீர்த்துவிட்டால் சிறிது அவலை மாவாக அரைத்துக் கலந்துவிட்டால் போதும்.

# மழைக் காலத்தில் கதவு, ஜன்னல்களைத் திறக்க கஷ்டமாக இருந்தால் சிறிது கோலமாவுடன் உப்புத் தூளைக் கலந்து கதவு, ஜன்னல் விளிம்பில் தூவிவிட்டால் சிரமமின்றித் திறக்கலாம்.

# அரிசியைக் கழுவிய நீரில் துருப்பிடித்த கத்தி, அரிவாள், இடியாப்ப அச்சு ஆகியவற்றைப் போட்டு நான்கு மணி நேரம் ஊறவைத்த பிறகு எடுத்துத் துடைத்தால் துரு நீங்கிவிடும்.

- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.




தினம் ஒரு கீரை

# புதினாவையும் கறிவேப்பிலையையும் துவையலாக அரைத்துச் சாப்பிடுவது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு நல்லது.

# உடலில் கொழுப்பு சேராமல் தண்டுக்கீரை தடுக்கும். இந்தக் கீரையைப் பொரியலாகவோ சாம்பார் செய்தோ சாப்பிடலாம். பச்சடியிலும் சேர்த்துக்கொள்ளலாம்.

# நீண்ட நேரம் படிப்பவர்கள், எழுதுபவர்கள், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களின் கண்கள் விரைவில் களைத்துப் போய்விடும். இவர்கள் பீட்ரூட் கீரை, முள்ளங்கிக் கீரை, கேரட் கீரை ஆகியவற்றைச் சாப்பிட்டுவந்தால் கண்களுக்கு நல்லது.

# வயிற்றுப் புண், வாய்ப் புண், சொறி, சிரங்கு ஆகியவற்றால் அவதிப்படுபவர்கள் மணத்தக்காளி கீரையைச் சாப்பிட வேண்டும். இந்தக் கீரையைச் சாப்பிட்டுவர தூக்கமின்மையும் குணமாகும்.

# நினைவாற்றலைப் பெருக்கும் வல்லாரைக் கீரையைக் குழந்தைகளும் பெரியவர்களும் சாப்பிடுவது நல்லது.

# மன அழுத்தம், மூளைச் சூடு குறைய கொத்தமல்லியை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.

(கே.எஸ். சுப்ரமணி எழுதிய ‘இளமை காக்கும் உணவு முறைகள்’ நூலிலிருந்து)

- சரஸ்வதி பஞ்சு, திருச்சி.
சுவை தேடி: கம கமக்கும் வடகறி

Published : 14 Jul 2018 09:50 IST

மானா பாஸ்கரன்





அண்ணா சமாதி, எல்.ஐ.சி பில்டிங், லைட் ஹவுஸ், சென்ட்ரல் ஸ்டேஷன்… இந்த வரிசையில் சென்னைக்குப் பேர் வாங்கித் தரும் இன்னொரு பெருமை சைதாப்பேட்டை வடகறி.

பலரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல வடகறி மெயின் அயிட்டம் இல்லை. இதுவொரு தொடுகறி (சைடு டிஷ்). பக்க வாத்தியம், பக்கா வாத்தியமான கதைதான் வடகறியுடையது!

சென்னையின் அடையாளமான நடுத்தர, சிறிய உணவுக் கடைகளின் காலை நேரத்தை வடகறி மணக்க வைக்கிறது. பல இடங்களில் கிடைத்தாலும் இதற்குப் பாடல் பெற்ற தலம் என்னவோ சைதாப்பேட்டைதான்!

காலை நேரத்தில் சைதாப்பேட்டை வி.எஸ். முதலி தெரு வழியாகப் போக முடியாது என்கிற அளவுக்கு வாகனங்களும் மனிதர்களும் மாரி ஓட்டலின் முன்பாக நெருக்கியடித்து நிற்கிறார்கள். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வடகறி விற்பனையால் இவர்களுடைய கொடி உச்சத்தில் பறக்கிறது.

வடகறியின் கூட்டணி

மாரிமுத்து என்பவரால் சாதாரண ஓட்டு வீட்டில் இந்த ஓட்டல் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அவருடைய மகன்கள் கிருஷ்ணமூர்த்தி, குமரனின் கைங்கர்யத்தால் உயர்ந்த கட்டிடமாக நிமிர்ந்து நிற்கிறது ‘வடகறி புகழ்’ மாரி ஓட்டல்.

குமரனின் வார்த்தைகளிலும் வடகறி மணக்கிறது. “எங்கப்பா காலத்துல முதன்முதலா வடகறி செஞ்சு விற்க ஆரம்பிச்சப்போ, முதல்நாள் மீந்துபோன வடை, பஜ்ஜி, போண்டா எல்லாத்தையும் ஊற வெச்சு தயாரிக்கிறாங்கன்னு அரசல்புரசலா பேசிக்கிட்டாங்க. முதல் நாள் போட்ட போண்டாவோ, வடையோ ஊசிப் போயிடும், பூசனம் பூத்துடும். அதை வெச்சி வடகறி தயாரிச்சா, நிச்சயம் ஃபுட் பாய்ஸன் ஆகிடும். எழுபது வருஷமா சக்சஸ்ஃபுல்லா வடகறி விற்கிறதுக்குக் காரணமே, நாங்க தினமும் புதுசா வடகறி தயாரிக்கிறதுதான். இதுக்குன்னு மாஸ்டர்கள் வெச்சிருக்கோம். எங்களால ஒரு லெவலுக்கு மேலே தயாரிக்க முடியலை. அவ்வளவு தேவை இருக்கு. எங்க வடகறியோட ருசிக்கு அடிமையானவங்க பலரும் இருக்காங்க. நடிகர் - இயக்குநர் பாண்டியராஜன் சாரெல்லாம்கூட எங்களோட கஸ்டமர்தான்” என்கிறார் பெருமிதமாக.

தனித்து நின்று ஜெயிக்கும் அளவுக்கு வடகறி பெயர் பெற்றிருந்தாலும், தோசை, இட்லி, பரோட்டாவுடன் கூட்டணி சேரும்போதுதான் பெரும்பான்மை வாக்குகளை நிச்சயம் அள்ளும்.

எப்படிச் செய்வது?

பட்டாணி மாவுடன் கொஞ்சம் கடலை மாவைக் கலந்து வைத்துக்கொள்கிறார்கள். அதைச் சுத்தமான எண்ணெயில் பக்கோடா மாதிரி பொரித்து எடுத்து, ஆறவைக்கிறார்கள். நன்றாக ஆறிய பக்கோடா கொஞ்ச நேரம் தண்ணீரில் ஊற வைக்கப்படுகிறது. இதற்கிடையில் மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, லவங்கம் ஆகியவற்றை அரைத்துத் தாளித்துக்கொள்கிறார்கள். ஊறிய பக்கோடாவையும் அரைத்த தாளிகையையும் ஒன்றாகக் கலந்து கொதிக்கவிட்டால் வடகறி கமகமக்க ஆரம்பித்துவிடுகிறது. அதற்கு முன்பாகவே கூடிவிடுகிறது, வடகறி ருசிகர் கூட்டம்.
பைட்டு பைட்டாகக் குறையும் ஞாபகம்!

Published : 14 Jul 2018 09:51 IST

டாக்டர் ஆ. காட்சன்



சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள் சிலரிடம், அவர்களது செல்போன் எண்ணைத் தவிர எத்தனை பேரின் எண்களை எதையும் பார்க்காமல் மனப்பாடமாகக் கூறமுடியும் என்று கேட்டேன். ஆச்சரியம் என்னவென்றால், நான்கில் மூன்று பகுதியினரால் சராசரியாக ஐந்து செல்போன் எண்களுக்கு மேல் சொல்ல முடியவில்லை, அவர்களது பெற்றோர்களின் எண்கள் உட்பட!

டிஜிட்டல் காலத்துக்கு முன்பு நாம் சிலரைப் பற்றி ‘விரல் நுனியில் தகவல்களை வைத்திருப்பார்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் இப்போது விரல் நுனியைக்கொண்டு தொடுதிரையைத் தொடாமல் பலரால் பல தகவல்களை நினைவுகூர முடிவதில்லை. வாங்க வேண்டிய மளிகைப் பொருட்கள், நெருக்கமானவர்களின் பிறந்த நாட்கள், இரண்டும் இரண்டும் நான்கு என்பது போன்ற சிறிய கணக்குகள், நம் வாழ்க்கையின் இனிய தருணங்கள் போன்ற பலவற்றை ‘வாட்ஸ் ஆப்’, மொபைல் கேமரா, செல்போன் கால்குலேட்டர் போன்ற டிஜிட்டல் சாதனங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் இன்று பெரும்பாலானவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது.




குறையும் நினைவாற்றல்

இப்படி நம் மூளை கொண்டிருந்த ஞாபகசக்தி, கவனம் கொள்ளல், உணர்வுபூர்வமான நினைவுகள் போன்ற பெரும்பாலான வேலைகளுக்கு இன்று நாம் ஸ்மார்ட்போன்களையே சார்ந்திருக்கிறோம். இதைத்தான் ஜெர்மானிய மனநல மருத்துவரான மான்பிரட் ஸ்பிட்சர், ‘வயதானவர்களுக்கு மூளைநரம்பு தேய்மானத்தால் ஏற்படும் டிமென்ஷியா (Dementia) என்ற ஞாபக மறதி நோய்க்கு ஒப்பாக, அதிக அளவில் ஸ்மார்ட்போன்கள், இணையதளங்களைப் பயன்படுத்தும் இளம் வயதினர் கவனக்குறைவு, எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஞாபகசக்திக் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது’ என தனது ஆய்வுக்கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கு அவர் ‘டிஜிட்டல் டிமென்ஷியா’ (Digital Dementia) என்று பெயரிட்டிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் குறிப்பிட்டிருக்கும் ஆபத்து ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.


இணையதளம், ஸ்மார்ட்போன்களைச் சார்ந்துள்ளதால், விவரங்களை மனப்பாடம் செய்வதைவிட, கூகுள் போன்றவற்றில் தேடித் தெரிந்துகொள்ளவே நாம் விரும்புகிறோம். எது எளிதானதோ அதையே நம் மனமும் விரும்புவதில், ஆச்சரியம் இல்லை. இதனால் மூளை நரம்புகளின் தேடிப் பார்க்க உதவும் திறன் மேம்படும். ஆனால் நினைவாற்றலில் வைத்துக்கொள்ளும் திறன் குறைய வாய்ப்புள்ளது. வகுப்பில் சொல்லிக்கொடுக்கப்படும் ஒரு பாடத்தை ஒரு மாணவனால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால், அவனுக்கு ஞாபக மறதி என்று சொல்லிவிட முடியாது. அவன் கவனம் இல்லாமல் இருந்தால் அந்தப் பாடம் நினைவாற்றலை அடையக்கூட முடியாது.

அன்றாட வேலைகள், கல்வித் தேவைகளுக்காக ஸ்மார்ட்போன்களை அதிகம் சார்ந்திருப்பதால் கவனக்குறைவு ஏற்பட்டு, கருத்துகளை ஞாபகத்தில் பதியவைக்கும் திறன் பாதிக்கப்படும். யாரேனும் ஒருவர் ஒரு தகவலைக் கேட்டால், ‘இருங்கள் தேடிப் பார்த்துச் சொல்கிறேன்’ என்று நம் கைகள் தானாகவே கூகுளைப் புரட்டிப் பார்ப்பது நமது நினைவாற்றலில் இருந்து பதிவுகளை மீட்டெடுக்கும் திறனைப் பாதிக்கிறது.

இளையோருக்கான பிரச்சினை

இதில் அதிக ஆபத்தைச் சந்திப்பது குழந்தைகள்தான். கவனம், தகவல்களைப் பதிவேற்றம் செய்தல், மீட்டெடுத்தல் போன்றவற்றில் மூளைக்கு வேலை கொடுப்பதைப் பொறுத்தே குழந்தைகளின் மூளையின் உயர் அறிவாற்றல் (Cognition) வளர்ச்சி சீராக இருக்கும். அதிலும் சமூகப் பழக்கவழக்கங்கள், துரிதமாகச் செயல்பட உதவும் நினைவாற்றல் ஆகியவை வளரக் காரணமான ‘ஃபிராண்டல்’ பகுதி என்ற மூளையின் முன்பகுதியின் வளர்ச்சி மிக முக்கியமானது. ஸ்மார்ட்போன்களைச் சார்ந்திருப்பது குழந்தைகளின் இந்த வளர்ச்சியைப் பாதிக்கும்.

இந்தப் பருவத்தில் அடையவேண்டிய அறிவாற்றல் வளர்ச்சியை, காலம் கடந்தபின் எவ்வளவு முயற்சித்தாலும் மீட்டெடுப்பது கடினம். ஸ்மார்ட்போனைச் சார்ந்து வளர்வதால் ஏற்படும் ‘டிஜிட்டல் டிமென்ஷியா’ என்பது முழுக்க முழுக்க இளவயதினரின் பிரச்சினையாகவே மாறும் சூழல் வெகு தூரத்தில் இல்லை. வருங்காலத் தலைமுறையினர் எல்லா விஷயங்களையும் தெரிந்தவர்கள்போல் தோன்றினாலும், மின்னணுக் கருவிகள் இல்லாவிட்டால் எதுவும் தெரியாதவர்களாகவே தோன்றும் நிலை உருவாகும்.

தென் கொரியா, சீனா போன்ற நாடுகள் ஸ்மார்ட்போன்கள், இணையதளப் பயன்பாட்டால் வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் தாக்கங்களை ஆராய்ந்தது மட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தடுப்பு நடவடிக்கைகளை பள்ளிப் பருவத்திலிருந்தே எடுக்க ஆரம்பித்து விட்டன. ஆனால், இந்தியா இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.



பாரம்பரியம் பாதுகாக்கும்!

மேற்கத்திய உணவுப் பழக்கங்களால் ஏற்பட்ட உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள எப்படி பாரம்பரிய உணவு வகைகளுக்கு மாறி வருகிறோமோ, அதுபோல மின்னணுக் கருவிகளைச் சார்ந்து வாழ்வதால் மூளையில் ஏற்படும் மாற்றங்களில் இருந்து நம்மையும் நம் தலைமுறையினரையும் காப்பாற்றிக்கொள்வதற்குப் பாராம்பரியமாக நாம் கைகொண்ட வாசிப்பு, மனனம் செய்தல், நினைவுபடுத்திக்கொள்ளுதல் போன்ற மூளை சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பது அவசியம்.

ஸ்மார்ட்போன், இணையதளத்தை முற்றிலும் சார்ந்திருப்பதை மாற்றிக்கொள்ளாதபட்சத்தில், ‘ஒருநாள் ஸ்மார்ட்போன் இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழ முடியாது’ என்ற அளவுக்கு ‘ஸ்மார்ட்போன் அற்ற மாற்றுத் திறனாளி’களாக நாம் மாறிவிடக்கூடும்.

மொபைல் ‘மெமரி’யைப் பற்றி மட்டுமல்ல… நமது ‘மெமரி’ பற்றியும் கொஞ்சம் கவலைப்படுவோம்!

# ஸ்மார்ட்போன்களால் ஏற்படும் ஞாபக மறதிக்கு ‘டிஜிட்டல் டிமென்ஷியா’ என்று பெயரிட்டுள்ளார் ஜெர்மானிய மனநல மருத்துவர் மான்பிரட் ஸ்பிட்சர்

# ஸ்மார்ட்போன்களைச் சார்ந்திருக்கும் குழந்தைகளின் மூளையின் முன்பகுதி வளர்ச்சி பாதிக்கப்படும்

# வாசிப்பு, மனனம் செய்தல் போன்ற மூளை சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்

கட்டுரையாளர், மனநலமருத்துவர்

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com
அதிகரிக்கும் பழைய வீடு வாங்கும் போக்கு

Published : 14 Jul 2018 09:34 IST

விபின்


கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக நடந்துவருகிறது. 2000-ன் தொடக்க காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை வளரத் தொடங்கியது. அந்த நேரத்தில் முதலீடுசெய்த தொகை ஐந்தாறு வருடத்துக்குள் இரட்டிப்பானது. உதாரணமாக, சூளைமேடு பகுதியில் ரூ. 5 லட்சம் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் விலை இன்றைக்கு நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவுக்குப் பத்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

ஆனால், கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வீட்டு விலை அதன் உச்சத்தில் அப்படியே நின்றுவிட்டது. அதே நேரம் வீழ்ச்சியடையவில்லை. பத்து மடங்காக உயர்ந்த தொகை அதற்கு மேல் ஏறவில்லை. அதற்குக் கீழும் இறங்கவில்லை. ஐடி துறையைக் குறிவைத்து ஓ.எம்.ஆர். சாலைப் பகுதியில் விரைவாக வளர்ந்த தென் சென்னை ரியல் எஸ்டேட்டும் இப்போது வீழ்ச்சியடைந்திருக்கிறது. அந்தப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பல வீடுகள் இன்னும் விற்கப்படாமல் இருக்கின்றன. ஆனால், விலையைக் குறைக்கவும் கட்டுநர்கள் தயாராக இல்லை.

இந்தக் கட்டத்தில் புதிய ரியல் எஸ்டேட் மையங்களாகப் பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி போன்ற மேற்குச் சென்னைப் பகுதிகளும் ஊரப்பாக்கம், பொத்தேரி, கூடுவாஞ்சேரி போன்ற தென் சென்னைப் பகுதிகளும் உருவாகிவருகின்றன. இந்தப் பகுதிகளில் நடுத்தர மக்கள் வாங்குவதற்கு ஏற்ற விலையில் வீடுகள் கிடைக்கின்றன. ஆனால், இந்தப் பகுதி நகரத்திலிருந்து தொலைவில் இருப்பதால் நகரத்துக்குள் வேலை பார்க்கும் மக்களுக்கு இங்கு வந்துபோவது சிரமம். அதே நேரம் அந்தப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு இது சாதகமாகவும் இருக்கும்.

இந்த இடத்தில்தான் நகரத்துக்குள் இருக்கும் பழைய வீடுகளை வாங்கும் ஆர்வம் நடுத்தர மக்கள் மத்தியில் உருவாகிவருகிறது. மேலும் நகருக்கு வெளியே தொலைவில் வாங்கும் வீட்டின் விலையிலேயே பழைய வீடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, கூடுவாஞ்சேரிப் பகுதியில் ரூ. 25 லட்சம் முதல் இரு படுக்கையறை வீடுகள் கிடைக்கின்றன. அதைவிடக் கூடுதலாக இரண்டு மூன்று லட்சங்கள் செலவழித்தால் குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் இரு படுக்கையறை வசதி கொண்ட பழைய வீட்டை வாங்க முடியும்.

பழைய வீட்டை மதிப்பிடுவது எப்படி?

அந்த வீடு அமைந்துள்ள பகுதி, கட்டிடத்தின் ஆயுள், பராமரிப்பு, கட்டிய நிறுவனத்தின் தரம் இவையெல்லாம் பழைய வீட்டை மதிப்பிடுவதில் முக்கியமான அம்சங்கள். இவை எல்லாம் சிறப்பாக இருக்கும்பட்சத்தில் வீட்டை வாங்கப் பரிசீலிக்கலாம். பொதுவாக, அந்தப் பகுதியின் சந்தை மதிப்பிலிருந்து 20 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை கட்டிடத்தின் ஆயுளைப் பொறுத்து வீட்டைக் குறைத்து வாங்க வாய்ப்புள்ளது. வீடு கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்தால் மதிப்பு இதைவிடவும் குறைவாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அப்படியான வீடுகளை வாங்கும்போது கவனித்து வாங்க வேண்டும். வீடு பழுதடைந்திருக்கலாம். வீட்டைச் சரிசெய்ய அதிகம் செலவிட வேண்டியிருக்கும். மேலும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வீடுகளுக்கு வங்கிகள் பெரும்பாலும் கடன் தர முன்வருவதில்லை.

வீட்டின் தாய்ப் பத்திரத்தை வாங்கிப் பார்க்க வேண்டும். இந்த வீட்டின் அடமானக் கடன் ஏதும் உள்ளதா என்பதை அசல் பத்திரம் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். தண்ணீர்க் கட்டணம், வீட்டு வரி ஒழுங்காகக் கட்டப்பட்டுள்ளதா, என்பதையும் சரிபார்க்க வேண்டும். இவையெல்லாம் பழைய வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பழைய வீட்டுக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

பழைய வீட்டுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. ஆனால், அதற்கு முன் வாங்கவிருக்கும் அந்தப் பழைய வீட்டை வங்கி சார்பில் மதிப்பீட்டாளர்கள், அதன் வயது, அதன் தாங்கு திறன் போன்றவற்றை ஆய்வுசெய்து அறிக்கைகள் அளிப்பார்கள். அதன் அடிப்படையில்தான் வீட்டுக்குக் கடன் வழங்கப்படும். அந்த வீடு 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாக இருந்தாலோ பலவீனமாக இருந்தாலோ கடன் கிடைப்பது சிரமம். கிடைக்கும் பட்சத்தில் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.
பிஹார் மாநிலத்தில் இரவில் காதலி வீட்டுக்கு சென்ற காதலனுக்கு திருமண யோகம்

Published : 15 Jul 2018 09:38 IST




பிஹார் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவில் ரகசியமாக நுழைந்த ஒருவரை திருடன் என நினைத்து பிடித்து வைத்தனர். ஆனால் அந்த வீட்டில் உள்ள தனது காதலியைப் பார்க்கவே அவர் அங்கு சென்றது தெரியவந்ததால் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

ரோடாஸ் மாவட்டம் மஹாராஜ் கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த விஷால் சிங் (எ) தேஜு ராணுவத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரும் பக்கத்து ஊரில் (பராதி) உள்ள அவரது உறவினர் பிகாரி யாதவின் மகள் லட்சுமி குமாரியும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்த விஷால், கடந்த 11-ம் தேதி இரவு தனது காதலியின் வீட்டில் ரகசியமாக நுழைந்துள்ளார். அப்போது தரை தளத்தில் உள்ள அறையில் குமாரி மட்டும் இருந்துள்ளார். மற்றவர்கள் முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். எனினும் விஷால் நுழைந்ததைப் பார்த்துவிட்ட ஒருவர், திருடன் நுழைந்துவிட்டதாக கூச்சலிட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி விஷாலை பிடித்து அடிக்க முற்பட்டனர். அப்போது வேறு வழியின்றி விஷாலும் குமாரியும் காதலை ஒப்புக் கொண்டனர். எனினும், விஷாலை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு அவரது குடும்பத்தினருக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். விஷாலின் தாத்தாவும் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான பஞ்சு யாதவ் மற்றும் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.

இதனிடையே, இரண்டு ஊர்களைச் சேர்ந்தவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. விஷாலும், குமாரியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க இரு வீட்டாரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, 12-ம் தேதி இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் செய்துவைக்கப்பட்டது.

போலீஸ் வாழ்த்து புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் அதிகாரி பிரமோத் குமார் சிங் கூறும்போது, “விஷாலுக்கும் குமாரிக்கும் திருமணம் செய்து

வைக்க இரு வீட்டாரும் ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களை வாழ்த்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றார்.
அபுதாபியில் இருந்து சவப்பெட்டி அனுப்பியதில் குளறுபடி தமிழகத்தைச் சேர்ந்தவரின் சடலம்: கேரள குடும்பத்திடம் ஒப்படைப்பு

Published : 15 Jul 2018 09:43 IST  the hindu tamil

வயநாடு

அபுதாபியில் இறந்த கேரளாவைச் சேர்ந்தவரின் உடலுக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலை மாற்றி அனுப்பிய சம்பவம் ஐக்கிய அரபு அமீரக யுஏஇ நாட்டில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிதின் ஒத்தோயோத் கொட்டாரன் (29). இவர் யுஏஇ நாட்டின் தலைநகர் அபுதாபியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 5-ம் தேதி இறந்தார். இதேபோல அபுதாபியில் பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த காமாட்சி கிருஷ்ணன் (39) என்பவர் ஜூலை 7-ம் தேதி இறந்தார். இருவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை.

இந்த நிலையில் நிதின் இறந்த விவரம், அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டு, அவரது உடலும் அனுப்பி வைக்கப்படும் என்றுஅபுதாபியில் அவர் பணி செய்து வந்த நிறுவனம் உறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் அவரது உடல் அடங்கிய சவப்பெட்டி அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தது. சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது அது நிதினின் உடல் இல்லை என்பதும் தமிழகத்தைச் சேர்ந்த காமாட்சி கிருஷ்ணனின் உடல் என்பதும் நிதின் குடும்பத்தாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து நிதின் குடும்பத்தார், அபுதாபியிலுள்ள நிதின் பணியாற்றிய நிறுவனத்தாரைத் தொடர்புகொண்டனர். அப்போதுதான் நிதின் உடலுக்குப் பதிலாக காமாட்சி கிருஷ்ணன் உடல் கேரளாவுக்கு சென்ற விஷயம் அபுதாபி நிறுவனத்துக்கு தெரியவந்தது.

இதுகுறித்து நிதின் உறவினர் ஒருவர் கூறியதாவது: நிதின் இறந்து ஒரு வாரமான நிலையில் அவரது உடலுக்காகக் காத்திருந்தோம். ஆனால் வேறு ஒருவரின் உடலை அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். தற்போது காமாட்சி கிருஷ்ணனின் உடல் அருகிலுள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. நிதின் உடல் வருவதற்காகக் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த தவறு எப்படி நடந்தது என்று தெரியவில்லை. உடல் மாறிய விவகாரம் துரதிருஷ்டவசமானது. நிதின் உடலைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

இதேபோல காமாட்சி கிருஷ்ணன் குடும்பத்தாருடனும் பேசி வருகிறோம். தூதரக நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், கேரளாவில் வைக்கப்பட்டுள்ள காமாட்சி கிருஷ்ணன் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். நிதின் உடலும் அபுதாபியிலிருந்து கொண்டு வரப்படும்” என்றார்.

இதுகுறித்து அபுதாபியிலுள்ள ஏர் இந்தியா நிறுவன மேலாளர் ரஞ்சன் தத்தா கூறும்போது, “நிதின் உடல், ஏர் இந்தியாவின் கோழிக்கோடு செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டிருக்கவேண்டும். அதே நேரத்தில் காமாட்சி கிருஷ்ணன் உடல் சென்னை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். உடல்களுடன் அவர்களது உறவினர் ஒருவரும் வந்திருந்தனர். ஆனால் மனிதத் தவறால் இதுபோன்ற தவறு நிகழ்ந்து விட்டது. கோழிக்கோடு விமானத்தில் நிதின் உடலுக்குப் பதிலாக காமாட்சி கிருஷ்ணனின் உடல் ஏற்றப்பட்டுவிட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.

NEWS TODAY 29.01.2026