Tuesday, July 17, 2018

சாம்பாரில் கரப்பான் பூச்சி; இணையதளத்தில் வீடியோவை வெளியிடுவேன்: ரூ.5 லட்சம் கேட்டு பிரபல உணவகத்தை மிரட்டிய இளைஞர் கைது

Published : 16 Jul 2018 21:35 IST

சென்னை



சாம்பாரில் மிதக்கும் கரப்பான், கைதான மகேந்திரசிங்

இட்லி பார்சல் வாங்கியதில் சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடப்பதாகவும், அதை இணையதளத்தில் வீடியோவாக வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டிய இளைஞரை போலீஸார் சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்தனர்.

சென்னை வேளச்சேரியில் தமிழ்க்கடவுள் பெயரில் இயங்கும் பிரபலமான இட்லி கடை உள்ளது. சென்னை முழுவதும் பல கிளைகள் கொண்ட இந்த உணவகத்தில் எந்நேரமும் கூட்டம் அலைமோதும். இந்த ஓட்டலில் கடந்த 9-ம் தேதி காலை இளைஞர் ஒருவர் தோசை, இட்லி பார்சல் வாங்கிச் சென்றார். வாங்கிச்சென்ற அரைமணி நேரத்தில் வேக வேகமாக வந்த அவர், 'என்னய்யா ஹோட்டல் நடத்துகிறீர்கள், சாம்பாரில் என்ன கிடக்கிறது என்று பார்' என ஓட்டல் மேலாளரிடம் காட்ட, அதைப் பார்த்த மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

காரணம் சாம்பாரில் கரப்பான் பூச்சி ஒன்று மிதந்து கொண்டிருந்தது. வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சினை ஆகிவிடும் என்று பயந்த அவர் அந்த இளைஞரை, 'தனியாக உள்ளே வாருங்கள்' என்று அழைத்துச் சென்றார். 'உள்ளே வரமாட்டேன் இங்கேயே தான் நிற்பேன். எனக்கு நியாயம் வேண்டும்' என்று அந்த இளைஞர் சத்தம் போட்டுள்ளார்.

'சார் வியாபாரம் பாதிக்கப்படும், எதுவாக இருந்தாலும் உள்ளே போய் பேசிக்கொள்ளலாம்' என்று மேலாளர் கூற, 'நான் கரப்பான் பூச்சி கிடந்த பார்சலை வீடியோ எடுத்து வைத்துள்ளேன்' என்று மிரட்டியுள்ளார். பின்னர் அலுவலக அறையில் அமர்ந்த அவர், 'வீடியோவை இணையதளத்தில் போட்டால் உங்கள் அத்தனை கிளைகளும் அவ்வளவுதான்' என்று மிரட்டியுள்ளார்.

'சார். எதுவாக இருந்தாலும் தீர்வு உண்டு நாங்கள் என்ன செய்ய வேண்டும்' என்று ஓட்டல் மேலாளர் கேட்க, 'இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருக்க எனக்கு நீங்கள் ரூ.5 லட்சம் கொடுக்கவேண்டும்' என்று கூறியுள்ளார். 'என்ன சார் இதற்குப் போய் 5 லட்சமா?' என்று மேலாளர் கேட்க, 'உங்களின் ஒருநாள் வியாபாரம் எவ்வளவோ, அத்தனையும் வீடியோ போட்டால் போய்விடும்' என்று மிரட்டியுள்ளார்.

'சார். ஒருநாள் டைம் கொடுங்க, நான் எனக்கு மேல் உள்ளவர்களிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார். நாளை வருகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த இளைஞர் கிளம்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து பணத்துக்காகத்தான் தங்களை அந்த இளைஞர் மிரட்டுகிறார் என்பதை புரிந்துகொண்ட ஓட்டல் நிர்வாகத்தினர் இதுபற்றி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரைப் பெற்ற போலீஸார் பணம் கேட்டு மிரட்டிய இளைஞரைப் பிடிக்க திட்டம் வகுத்துள்ளனர். அதன்படி 'ஐந்து லட்ச ரூபாய் முடியாது கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் என்று பேசி ரூ.3 லட்சம் என்று பேசுங்கள். அதை நம்பி அந்த இளைஞர் வரும்போது பிடித்து விடலாம்' என்று கூறியுள்ளனர். இதையடுத்து போலீஸார் சொன்னபடி மேலாளர் அந்த இளைஞரிடம் பேசியுள்ளார்.

'ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ரூபாய்கூட குறைக்கமாட்டேன்' என்று அவர் கூறியுள்ளார். பின்னர் ஒருவாறாக ரூ.3 லட்சம் வாங்கிக்கொள்ள சம்மதித்து காலையில் வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 11-ம் தேதி காலை பணத்தை வாங்க ஆவலுடன் வந்த அவரை வேளச்சேரி போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் மகேந்திரசிங் (26) என்று தெரியவந்தது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரைச் சேர்ந்த மகேந்திரசிங் தாம்பரத்தில் ஒரு ஸ்வீட் கடையில் பணியாற்றி வந்துள்ளார். சில நேரம் இதுபோன்ற தான் வேலை செய்யும் ஸ்வீட் கடையில் ஊசிப்போன ஸ்வீட் போன்றவற்றால் கஸ்டமர்கள் சண்டை போடுவதையும், மிரட்டுவதையும் பார்த்து இதேபோன்று மிரட்டினால் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் சிறிது சிறிதாக தனது வேலையைக் காட்டியுள்ளார்.

கடையில் பார்சல் வாங்கியவுடன் தான் தயாராக வைத்திருக்கும் கரப்பான் பூச்சியை (அதை முன்பே சுடுநீரில் போட்டு லைட்டாக கொதிக்க வைத்து எடுத்து வைத்திருப்பாராம்) சாம்பாரிலோ, குழம்பிலோ கலந்து அப்படியே பார்சலைக் கொண்டு வந்து சத்தம் போடுவாராம். இதனால் பயந்துபோன பல உணவகங்களில் அவருக்குப் பணம் கிடைத்துள்ளது.

இதனால் மேலும் தைரியமடைந்த அவர் பெரிய உணவகத்தில் பெரிதாகப் பணம் பார்க்கலாம் என்று முயன்றுள்ளார். அவர் நேரம் போலீஸில் புகார் அளிக்க வகையாக சிக்கிக்கொண்டார். அவரைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விபத்தில் பெண் நிருபர் பலி; ரூ.3 லட்சம் நிவாரணம்

Added : ஜூலை 17, 2018 01:33




சென்னை : சாலை விபத்தில் இறந்த, பெண் நிருபரின் குடும்பத்திற்கு, மூன்று லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்க, முதல்வர், பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

மாலை முரசு, 'டிவி'யில் நிருபராக பணிபுரிந்தவர் ஷாலினி, 23. நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் இருந்து, சென்னைக்கு காரில் சென்றார். பொட்டி குளம் அருகே சென்றபோது, கார் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஷாலினி அதே இடத்தில் இறந்தார்.

இதையறிந்த முதல்வர் பழனிசாமி, அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், சிறப்பு நிகழ்வாக, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, மூன்று லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், இரங்கல் தெரிவித்ததுடன், ஒரு லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்கினார். துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர்.
'7 கேள்விக்கு பதில் தர 2.53 லட்சம் ரூபாய் தா'

Added : ஜூலை 17, 2018 00:41

சத்தியமங்கலம் : தகவல் உரிமை சட்டத்தில், ஏழு கேள்விகளுக்கு பதில் தர, 2.53 லட்சம் ரூபாய் கேட்டதால், கேள்வி கேட்டவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஈரோடு மாவட்டம், இருட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன், 30; விவசாயி, இவர், 2015ல் இருட்டிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், சில தகவல்களை கேட்டு விண்ணப்பித்தார். 30 நாட்களுக்குள் பதில் வராததால், மேல்முறையீடு செய்தார். இதையடுத்து, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அழகிரி, 'எட்டு கேள்விகளில், ஏழு கேள்விகளுக்கு தகவல் வேண்டும் என்றால், இரண்டு லட்சத்து, 53 ஆயிரத்து, 100 ரூபாய் செலவாகும். 'டிடி'யாக அனுப்பினால், மேற்குறித்த புள்ளி விபரங்கள் கொடுக்கப்படும்' என, பதில் அளித்துள்ளார்.

இதனால், காளியப்பன் அதிர்ச்சி அடைந்தார். அவர் கூறியதாவது: தகவல் சட்டத்தில் தகவல் தர, ஒரு பக்கத்துக்கு, இரண்டு ரூபாய் கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. நான் கேட்ட தகவல், ஒரு லட்சத்து, 26 ஆயிரம் பக்கங்கள் வராது. அப்படியே வருவதென்றால், எத்தனை பக்கம் என தெளிவாக கூற வேண்டும். அதை விடுத்து, பணம் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தை கேலிக்குரியதாக்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மூணாறில் கனமழை: வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

Added : ஜூலை 17, 2018 05:17




மூணாறு : மூணாறில் பெய்து வரும் கனமழையால் வீடு, கடைகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மூணாறில் ஜூலை 8ம் தேதி முதல் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கொட்டித் தீர்த்தது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி, 24 செ.மீ., மழை பதிவானது. இது இந்தாண்டு பெய்த மழையில் அதிகமாகும். கனமழையால் இக்கா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதனால் பழைய மூணாறில் உள்ள ெஹட் ஒர்க்ஸ் அணையில் ஒரு மதகு 4 அடி உயர்த்தப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆனாலும் அதே பகுதியில் கொச்சி- -தனுஷ்கோடி ரோட்டில் தேங்கிய நீர் வெளியேறாததால் வாகனங்கள் தத்தளித்தன.

இதே ரோட்டில் மூணாறு -சிக்னல் பாய்ன்ட் இடையே நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை நான்கு இடங்களிலும், ெஹட் ஒர்க்ஸ் அணை அருகிலும் மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மகாத்மாகாந்தி காலனியில் கருப்பையா என்பவரின் வீட்டின் பின்புறம் மண் சரிவு ஏற்பட்டு ஆபத்தாக உள்ளது. இக்கா நகர், பழைய மூணாறில் தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் கடைகளை வெள்ளம் சூழ்ந்தது. கொச்சி- -தனுஷ்கோடி ரோட்டில் புறவழிச்சாலையில், போலீசார் குடியிருப்பு அருகே மிகப் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஸ்தம்பித்தது :

மழையால் முக்கிய சுற்றுலா பகுதிகளான மாட்டுபட்டி அணையில் கடந்த 9 நாட்களாக சுற்றுலா படகுகள் நிறுத்தப்பட்டன. இரவிகுளம் தேசிய பூங்கா கடந்த மூன்று நாட்களாக பூட்டப்பட்டு,ராஜமலைக்கு பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

சித்தா படிக்க, 'நீட்' தேவையில்லை; பிளஸ் 2 மதிப்பெண்படி சேர்க்கை

Added : ஜூலை 17, 2018 01:21




சென்னை : இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்துவது என, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடைபெற வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி தலைமையில், நேற்று சென்னை, தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அதில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர் கலந்து கொண்டனர்.

இந்திய மருத்துவ முறை, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை, தமிழகத்தில் இதுவரை, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில், நடந்து வந்தது. இரண்டு கல்வியாண்டுகளாக, மத்திய அரசு, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, நீட் தேர்வை பின்பற்ற அறிவுறுத்தியது. அதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி, சட்டத்துக்கு முரணாக, நீட் தேர்வை, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு அறிமுகப்படுத்த முடியாது என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு தெரியப்படுத்தியது. தற்போதுள்ள இந்திய மருத்துவ முறை, மத்தியக் குழு சட்டத்தில், மாணவர் சேர்க்கைக்கான எந்தவொரு திருத்தத்தையும், மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இது குறித்து, முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி கல்லுாரிகளில், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

சட்டம் சொல்வது என்ன?

'இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த முடியும்' என, சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற அலோபதி மருத்துவ மாணவர் சேர்க்கை, நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. அதேபோல், சித்தா, யோகா, ஆயுர்வேதா, ஓமியோபதி போன்ற, இந்திய மருத்துவ முறை படிப்புகளும், நடப்பாண்டு முதல், நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, மத்திய அரசு அறிவித்தது.

இது குறித்து, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. இதனால், நடப்பாண்டு, இந்திய மருத்துவ முறை படிப்புகள், நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, ஏற்கனவே தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். தற்போது, இந்திய மருத்துவ முறை படிப்புகள், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார். இதை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, நீட் தேர்வு அடிப்படையில் நடத்த, ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1970ல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இந்திய மருத்துவ முறை மாணவர் சேர்க்கை நடத்தலாம் என, கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நீதிமன்றம் சென்றாலும், தமிழக அரசு வெற்றி பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஷீரடிக்கு வாங்க! ஐ.ஆர்.சி.டி.சி., அழைப்பு

Added : ஜூலை 17, 2018 00:40



கோவை : ஷீரடிக்கு வரும், 27ல் இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு துவங்கியுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., என்ற இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், 27ல் ஷீரடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து செல்வோர், ஈரோட்டில் இருந்து புறப்படலாம். ஏழு நாட்களுக்கான யாத்திரைக்கு நபர் ஒருவருக்கு, 6,615 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், படுக்கை வசதிக்கான டிக்கெட் கட்டணம், உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவை அடங்கும்.

விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 90031 40655 என்ற மொபைல்போன் எண்ணிலும், www.irctctourism.com எனும் இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
வந்தது ஆடி! செல்வோம் அம்மனை நாடி!

Added : ஜூலை 16, 2018 22:43



தட்சிணாயன புண்ணிய காலமான ஆடிமாதம் இன்று தொடங்குகிறது. இந்நாளில் கோயில், முன்னோர் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும். ஆடி அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் (ஜூலை 17,24,31, ஆக.7,14) வெள்ளிக் கிழமைகளில் (ஜூலை 20,27, ஆக.3,10) அம்மன் கோயில்களில் வளைகாப்பு வைபவம் நடைபெறும். பக்தர்கள் வழங்கும் கண்ணாடி வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்வர். இதை அணியும் கன்னியருக்கு திருமணம் கைகூடும். பிள்ளை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் உண்டாகும். மழை காலத்தின் தொடக்கமான ஆடியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க கிருமி நாசினியான வேம்பு, எலுமிச்சை, எளிதில் ஜீரணமாகும் கூழ் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். ஆடியில் அம்மனை வழிபடுவோம்.

தவமிருக்கும் கோமதி


திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடக்கும் பெரிய திருவிழா ஆடித்தபசு. அம்பிகை சிவபெருமானிடம், தன் சகோதரனான விஷ்ணுவுடன் சேர்ந்து காட்சி தருமாறு வேண்டினாள். அதற்கு சிவன் பொதிகை மலை புன்னை வனத்தில் தவம் புரியக் கட்டளையிட்டார். அம்பிகை ஊசி முனையில் நின்று தவமியற்ற, ஆடி பவுர்ணமியும் உத்திராட நட்சத்திரத்திரமும் கூடிய நன்னாளில் (ஜூலை 27) சிவபெருமான் 'மாலொரு பாகன்' கோலத்தில் காட்சிஅளித்தார். இந்நாளில் கோமதிஅம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கும். தங்க சப்பரத்தில் வீதிஉலா வரும் அம்மனுக்கு சுவாமி சங்கர நாராயணராக ரிஷப வாகனத்தில் காட்சியளிப்பார். அதன்பின் ஊஞ்சல் உற்ஸவம் நடைபெறும்.

நவசக்தி அர்ச்சனை

ஆடி வெள்ளியன்று (ஜூலை 20,27, ஆக.3,10) வாசலில் கோலமிட்டு, பூஜைஅறையில் குத்து விளக்கேற்றி, நைவேத்யமாக அம்மனுக்கு பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நினைத்தது நிறைவேறும். அன்று சிறுமிகளுக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, குங்குமச் சிமிழ், கண்ணாடி வளையல் அளித்து அவர்களை அம்மனாகப் பாவித்து உணவளிக்க வேண்டும். ஆடி வெள்ளிகளில் மாலை கோயில்களில் விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வர். அப்போது அம்மனுக்கு நவசக்தி அர்ச்சனை செய்வது சிறப்பு. ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை பூக்களால் ஒன்பது சக்திகளை ஒரே நேரத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை.

கல்வி வளம் தரும் அம்மன்

சக்தி பீடங்களில் ஒன்றான திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் அகிலாண்டேஸ்வரி அருள் பாலிக்கிறாள். இந்த அம்மனின் காதுகளில் உள்ள தோடுகளில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி இங்கு நடத்துகின்றனர். இந்த அம்மன் மாணவியாக இருக்க, சிவபெருமானே குருவாக இருந்து உபதேசம் செய்வதால் மாணவர்கள் வழிபட்டால் கல்வி வளர்ச்சி உண்டாகும்

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...