Thursday, July 19, 2018


ஊதியம் கேட்ட பேராசிரியர்களிடம் ராஜினாமா கடிதம் கேட்ட தனியார் பொறியியல் கல்லூரி!


By DIN | Published on : 18th July 2018 03:06 PM |


கோவை: நிலுவையில் இருக்கும் 4 மாத ஊதியத்தைக் கேட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களிடம், ராஜினாமா கடிதம் கொடுக்குமாறு தனியார் பொறியியல் கல்லூரி நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

சென்னையில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.கே. சூரப்பாவை நேரில் சந்தித்து தங்களது புகார் கடிதத்தை அளித்தனர்.

அந்த கடிதத்தில், கல்லூரி நிர்வாகத்திடம் நிலுவையில் இருக்கும் 4 மாத ஊதியத்தைக் கேட்டபோது, நாங்கள் ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எங்களை வேலையில் இருந்து நிறுத்திய பிறகும், அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் போது எங்களது ஆதார் எண், கல்விச் சான்றிதழ்கள், தனிநபர் தகவல்களை கல்லூரி நிர்வாகம் பயன்படுத்தியதாகவும் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏஐசிடிஇ அனுமதி பெற எங்களது சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த கல்லூரியின் டேட்டா பேஸில் இருந்து எங்களது தகவல்கள் நீக்கப்படவில்லை என்றால், எங்களுக்கு பிற கல்லூரிகளில் வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படும் நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்துக் கருத்துக் கூறிய அண்ணா பல்கலைக்கழகம், புகார் குறித்து உரிய கல்லூரிக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரி அளிக்கும் பதிலைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகால சேவையை நிறுத்திக் கொண்டது யாஹூ மெசஞ்ஜர்! வரலாறான செல்லப் பிள்ளை!!


By DIN | Published on : 18th July 2018 03:56 PM |




20 ஆண்டுகளுக்கு முன்பு இணையம் என்ற ஒன்று அறிமுகமானபோது மௌஸை மெல்ல அசைத்து ஒவ்வொரு லிங்கையும் கிளிக் செய்து பரவசமடைந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?

அப்படிப்பட்டவர்களால் மட்டுமே யாஹூ மெசஞ்ஜர் எனும் வரப்பிரசாதத்தைப் பற்றி பேச முடியும்.

சாட் ரூம்ஸ் என்ற முதல் சேவையை யாஹூ அறிமுகப்படுத்தியதால் உருவான நட்புகளும், காதல்களும் ஏராளம். நேரில் பார்த்திராதவர்களை, நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருப்பவரை என பல நட்பு வட்டங்களை உருவாக்கித் தந்தது இந்த யாஹூ மெசஞ்ஜர்.

இந்த யாஹூ மெசஞ்ஜர் இணையதளத்தின் செல்லப் பிள்ளை என்று சொன்னால் அது மிகையில்லை. இது தனது 20 ஆண்டுகால சேவையை ஜூலை 17ம் தேதியோடு நிறுத்திக் கொண்டது.

பயனாளர்கள் இல்லாத யாஹூ மெசஞ்ஜரை பயன்பாட்டில் இருந்து நீக்கியுள்ளது யாஹூ நிறுவனம். ஒரு காலத்தில் 122 மில்லியன் பயனாளர்களைக்கொண்டு, இணையத்தில் அதகளம் செய்து கொண்டிருந்த யாஹூ மெசஞ்ஜர் இன்று இணையத்தில் இருந்தே முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.

1998ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி யாஹூ பேஜர் என்று அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு 1999ல் இது யாஹூ மெசஞ்ஜர் என பெயர் மாற்றம் பெற்றது. 2000ஆவது ஆண்டில் இணையதளம் என்பது பெரிய அளவில் மக்களைக் கவர்ந்த போது நாயகனாகத் திகழ்ந்தது இந்த செல்லப்பிள்ளை.

சுமார் 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக உச்சத்தில் இருந்த யாஹூ மெசஞ்ஜர், வாட்ஸ் அப், பேஸ்புக், ஸ்கைப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களால் மெல்ல மெல்ல அதன் முக்கியத்துவத்தை இழந்தது.

2017ம் ஆண்டு யாஹூவை வாங்கிய வெரிசோன் நிறுவனம், யாஹூ மெசஞ்ஜரை புதுப்பித்து இணையத்தில் அறிமுகப்படுத்தியும் அது பலனளிக்கவில்லை. ஆர்குட், எம்எஸ்என் மெசெஞ்ஜர் போன்ற பயனற்றுப் போன சமூக தளங்களுடன் இன்று யாஹூ மெசஞ்ஜரும் இணைந்துவிட்டது. ஒரு காலத்தில் யாஹூ மெசஞ்ஜரில் சாட் செய்ய வேண்டும் என்பதற்காக சைபர் கஃபேக்கள் உருவாக்கப்பட்டு தெருவுக்கு தெரு நெட் சென்டர்கள் காளான்கள் போல தொடங்கின. தற்போது செல்போனில் இன்டர்நெட் வந்ததால், இந்த நெட் சென்டர்களும் காணாமல் போய்விட்டன. யாஹூ மெசஞ்ஜரும் வரலாறாக மாறிவிட்டது.

மீன் பாதுகாப்பானதா என்று உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதிக்க முடியும்?: எரிந்து விழுந்த கோவா முதல்வர்


By IANS | Published on : 18th July 2018 06:59 PM |



பனாஜி: நீங்கள் உண்ட மீன் பாதுகாப்பானதா என்று உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதிக்க முடியும் என்று பத்திரிக்கையாளரிடம் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் எரிந்து விழுந்த சம்பவம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ஒடிஷா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கோவாவிற்கு விற்பனைக்கு வரும் மீன்கள், பிணங்களை பாதுகாக்கப் பயன்படும் 'பார்மலின்' என்னும் ரசாயன திரவத்தால் பாதுகாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கடந்த வெள்ளியன்று அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் உடனே மாநில உணவுத் துறை அமைச்சர் விஜய சர்தேசாய் மீன்கள் உண்ணத் தகுதியானவை என்று ட்வீட் செய்தார். பின்னர் மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறையில் இருந்து சோதிக்கப்பட்ட மீன்களில் பார்மலின் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளிருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆனால் இதனால் சர்ச்சை எழுந்த நிலையில் கோவா மாநில அரசு தற்பொழுது மாநிலம் முழுவதும் மீன் விற்பனைக்கு 15 நாட்கள் தடை விதித்து புதனன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்று புதன்கிழமை நடைபெற்றது.

அந்த சந்திப்பில் மீன் தடைக்கு முன்னர் விற்கப்பட்ட மீன்களின் நிலை குறித்து செய்தியாளர் ஒருவர் தொடர்ந்து பாரிக்கரிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். இதனால் எரிச்சலடைந்த முதல்வர் அவரிடம், "நீங்கள் உண்ட மீன் பாதுகாப்பானதா என்று உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதிக்க முடியும் என்று எரிந்து விழுந்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:

நாங்கள் அன்று மீன்கள் குறித்து சோதனை நடத்தினோம்.அதன் அறிக்கையினை உங்களுக்கு அளித்துள்ளோம். நீங்கள் யாராவது நிபுணரிடம் அது குறித்து கேட்கலாம். ஆனால் நீங்கள் உங்களுக்கு செய்திகளைத் தரக் கூடிய மக்களிடம் போகாதீர்கள்.

நீங்களும் சரி..நீங்கள் கருத்துக் கேட்கும் நிபுணரும் சரி குழப்பமான கருத்துக்களை மக்களை முன் வைக்கிறீர்கள்.

தற்பொழுது மீன் விற்பனையை தடை செய்து விட்டதால் முன்னர் நடந்த சோதனைகள் குறித்து பேச விரும்பவில்லை. யாருக்கும் தெளிவாகப் புரியாத இத்தகைய விஷ்யங்கள் குறித்து விவாதிப்பது சரியாக இருக்காது. எனவே அதைப் பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடத்துநர் இல்லா பேருந்தால் குறைந்தது நேரம் அல்ல; எங்கள் பாக்கெட்தான்: பயணிகள் அதிருப்தி

By DIN | Published on : 18th July 2018 01:04 PM

சென்னை: செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட நடத்துநர் இல்லா பேருந்துகளில், மற்ற பேருந்துகளோடு ஒப்பிடுகையில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

பாயிண்ட் டூ பாயிண்ட் வழித்தடங்களில் துவக்கப்பட்ட இந்த நடத்துநர் இல்லா பேருந்துகளால் பயண நேரம் எந்த வகையிலும் குறையவில்லை, ஆனால் கட்டணம் மட்டும் அதிகமாக உள்ளது என்கிறார்கள் பயணிகள்.

சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த வழித்தடங்களில் நடத்துநர் இல்லா பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியது.

ஆனால், இந்த பேருந்துகளில், இதே பாதையில் பயணிக்கும் மற்ற பேருந்துகளை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது, இதர பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 58 பைசா என்று கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டால், நடத்துநர் இல்லா பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 85 பைசா என்ற அளவுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால், நடத்துநர் இல்லா பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கூடுதலாக 27 பைசா செலவிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

சென்னை - வேலூர் இடையே இயக்கப்பட்டு வந்த 34 பேருந்து சேவைகள் நடத்துர் இல்லா பேருந்துகளாக மாற்றப்பட்டன. இதல் ஒரு நபருக்கு ரூ.128 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இதே வழித்தடத்தில் இதர பேருந்துகளில் ரூ.89 தான் கட்டணம். ஒரு 4 பேர் கொண்ட குடும்பம் நடத்துநர் இல்லா பேருந்தில் பயணித்தால் ரூ.156 ஐ கூடுதலாகக் கொடுக்க வேண்டியது இருக்கும் என்கிறார் சத்துவாச்சாரியைச் சேர்ந்த கே. முகிலன்.

இதேப் போல தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வந்த பேருந்துகளில் ரூ.31 கட்டணமாக இருந்த நிலையில், நடத்துநர் இல்லா பேருந்துகளில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சாதாரண பேருந்துகளின் பயண நேரமே இந்த பேருந்துகளுக்கும் ஆகிறது. தனியார் பேருந்துகள் இதே வழித்தடத்தில் ரூ.36 கட்டணமாக வசூலிக்கும் நிலையில், மிக விரைவாகவும் சென்றடைகிறது. ஆனால், அரசுப் பேருந்துகளில் ரூ.50 கட்டணம், அதே நேரம் என்பது மிக மோசமான முடிவு என்கிறார்கள் பயணிகள்.

நடத்துநர் இல்லா பேருந்துகளில் காணப்படும் குறைகளாக சுட்டிக்காட்டப்படுவது இதுதான்.

தமிழகம் முழுவதும் 231 நடத்துநர் இல்லா பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த புதிய பேருந்துகளுக்கு பழைய கட்டணமான கிலோ மீட்டருக்கு 58 பைசாவுக்கு பதிலாக 85 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 8000 தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஒரே வழித்தடத்தில் இயக்கப்படும் நடத்துநர் இல்லா பேருந்துகளை விட, தனியார் பேருந்துகளில் கட்டணமும் குறைவு, பயண நேரமும் குறைவு என்பதே.

சிறையில் வாடும் முதியோர்களுக்கு பொது மன்னிப்பு: மத்திய அரசு முடிவு

By DIN | Published on : 19th July 2018 04:28 AM |



நாடெங்கிலும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் கைதிகள் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட பெண் மற்றும் திருநங்கை கைதிகள், தங்களது தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேல் அனுபவித்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அக்டோபர் 2-இல் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளதால் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
தில்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்.

அதேசமயம் வரதட்சணை கொலை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்காகவும் தடா, பொடா, பயங்கரவாத தடுப்பு, அன்னிய செலாவணி மோசடி தடுப்பு உள்ளிட்ட சட்டங்களின் கீழும் தண்டனை பெற்ற சிறைக் கைதிகளுக்கு இந்த பொது மன்னிப்பு பொருந்தாது.

பொதுமன்னிப்பு பெறும் கைதிகள் மூன்று தவணைகளாக விடுதலை செய்யப்படுவர். இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 10, அடுத்த ஆண்டின் காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் கைதிகள் விடுவிக்கப்படுவர்.

உடலில் 70 சதவீதத்துக்கு மேல் ஊனமுள்ள கைதிகள் தங்களது தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேல் அனுபவத்திருப்பின் அவர்களுக்கும் பொது மன்னிப்பு கிடைக்கும். அதேபோன்று, கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களின் தண்டனைக் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கை அனுபவித்திருப்பின் பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்படுவார்கள்.

பொதுமன்னிப்பு திட்டத்தின் கீழ் விடுதலை பெற தகுதியுடைய கைதிகளின் பட்டியலை தேர்வு செய்வது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அந்தக் குழு அளிக்கும் பரிந்துரை பட்டியலுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பின் கைதிகள் விடுதலை செய்யப்படுவர்.

கரும்புக்கு குறைந்தபட்ச விலை உயர்வு

கரும்புக்கான குறைந்தபட்ச விலையை (எஃப்ஆர்பி) குவிண்டாலுக்கு ரூ.20 உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கும் குறைந்தபட்ச தொகை குவிண்டாலுக்கு ரூ.275-ஆக உயரும்.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில், 2018 அக்டோபர் முதல் 2019 செப்டம்பர் வரையிலான சந்தை ஆண்டில் கரும்புக்கான குறைந்தபட்ச விலையை குவிண்டாலுக்கு ரூ.20 உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

விவசாய செலவினம் மற்றும் விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கும் தொகை குவிண்டாலுக்கு ரூ.255-ஆக இதுவரை இருந்தது. இனி, இந்த தொகை ரூ.275-ஆக உயரும்.


நாளை முதல் லாரி ஸ்டிரைக் உணவு பொருள் தட்டுப்பாடு அபாயம்

Added : ஜூலை 18, 2018 23:06






மதுரை, ''டீசல் விலை நிர்ணயத்தை மாற்றக்கோரி நாளை (ஜூலை 20) முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும்,'' என, லாரி உரிமையாளர்கள் சங்க மதுரை மாவட்ட தலைவர் சி.சாத்தையா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:டீசல் விலையை 3 மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயிக்க வேண்டும். மூன்றாம் நபர் காப்பீடு கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். வாட் வரியை ஜி.எஸ்.டி.,யுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து ஜூலை 20 முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும். மதுரையில் 4,500 லாரிகள் பங்கேற்கின்றன. 230க்கும் மேற்பட்ட தினசரி லாரி புக்கிங் ஆபீஸ்களும் மூடப்படும். நேஷனல் பெர்மிட் பெற்ற 400 லாரிகள் ஓடாது.ஸ்டிரைக்கால் நாள் ஒன்றுக்கு மதுரையில் மட்டுமே 500 கோடி ரூபாய்க்கான வர்த்தகம் பாதிக்கும். லாரி தொழிலை நம்பியுள்ள ஒருலட்சம் ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும். பிற மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறி,பழங்கள், உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். மத்திய, மாநில அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும், என்றார்.
எந்த புத்தகம் எந்த நூலகத்தில்?'மொபைல் ஆப்'பில் அறியலாம்

Added : ஜூலை 18, 2018 22:19

எந்த புத்தகம், எந்த நுாலகத்தில் உள்ளது என்ற விபரங்களை, இனி, 'மொபைல் ஆப்' வழியே தெரிந்து கொள்ளலாம்.அனைத்து பொது நுாலகங்களிலும், டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகளை, பொது நுாலகத்துறையின் இயக்குனர், ராமேஸ்வர முருகன் மேற்பார்வையில், இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.இதன்படி, அனைத்து நுாலகங்களின் விபரங்களும், மின்னணு பதிவு தொகுப்பாக மாற்றப்படுகிறது. மாவட்ட மைய நுாலகங்களில், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்க உள்ளதால், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வாங்கும் பணிகள், மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள, தேவநேய பாவாணர் நுாலகம் மற்றும் அண்ணா நுாற்றாண்டு நுாலகம் முதல், கிளை நுாலகங்கள் வரையிலும், நுாலகங்களின் பணிகளை நவீனப்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.நுாலகங்களை இணைக்கும், 'மொபைல் ஆப்' தயார் செய்யப்படுகிறது. புத்தக வாசிப்பாளர்கள், ஏதாவது முக்கியமான புத்தகங்களை படிக்க வேண்டும் என்றால், அந்த புத்தகம் எந்த நுாலகத்தில் உள்ளது என்பதை, மொபைல் ஆப் வழியாக தெரிந்து கொள்ளலாம்.அனைத்து நுாலகங்களிலும் உள்ள புத்தகங்களின் தலைப்புகள், எழுதியவர், பதிப்பு, பதிப்பாளர் போன்ற விபரங்கள், இந்த, 'ஆப்'பில் இடம் பெறும். இதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இந்த பணிகளை, எம்.எஸ்.சுவாமிநாதன், ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, பொது நுாலகத்துறை மேற்கொண்டுள்ளது.- நமது நிருபர் -

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...