Saturday, July 21, 2018

5 நாள் மண வாழ்க்கையில் ஏமாற்றம்; கணவனை அடித்து உதைத்த மனைவி: ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்ததால் ஆத்திரம்

Published : 19 Jul 2018 18:12 IST

கோவை

 

சரமாரியாக தாக்கும் புதுமணப்பெண்

மற்ற பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்துத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் கோயில் வளாகத்தில் வைத்துத் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோவை சாய்பாபா கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய புதுமணத் தம்பதிகள் வந்தனர். அப்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவனை அந்த இளம்பெண் சரமாரியாகத் தாக்கினார். கையை முறுக்கி முகத்தில் குத்தியபடி திட்டிக் கொண்டிருந்தார்.

அடிவாங்கியபடி எதிர்க்க முடியாமல் அந்த இளைஞர் அழுதுகொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சிரித்தபடி சென்றனர். சிலர் செல்போனில் படம் எடுத்தனர். சிலர் தடுக்க முயன்றபோது இளம்பெண் கூறிய காரணத்தைக் கேட்டு “போடு இன்னும் ரெண்டு போடு” என்று இளம்பெண்ணுக்கு ஆதரவாகப் பேசிவிட்டுச் சென்றனர்.

கணவரைத் தாக்கிய இளம்பெண் ஐந்து நாட்களுக்கு முன்னர் தனது வீட்டார் எதிர்ப்பையும் மீறி தனது காதலரைக் கரம் பிடித்துள்ளார். அந்த மகிழ்ச்சியில் 5 நாள் மண வாழ்க்கை வாழ்ந்த தம்பதியர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கணவரின் கையில் வேறொரு பெண்ணின் பெயர் பச்சை குத்தியிருப்பதை புது மணப் பெண் கவனித்திருக்கிறார்.

அது பற்றிக் கேட்டபோது கணவர் மறைத்துள்ளார். தனக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி பிரிந்துசென்று விட்டார் என்கிற தகவலைக் கூறியுள்ளார்.

முதல் திருமணத்தை மறைத்து தன்னிடம் பழகி ஏமாற்றியதை அந்த இளம்பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் கோபமான அப்பெண் இடத்தில் பொது இடம் என்றும் பாராமல் கணவனை சரமாரியாக அடித்து வெளுத்துவிட்டார்.

மனைவியிடம் அடிவாங்கி அழுத இளைஞர் மூன்று பெண்களைக் காதலித்ததும், அவர்களில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ததும் பின்னர் தெரியவந்துள்ளது.

இதனிடையே பொது இடத்தில் இளம்பெண் ஒருவர் இளைஞரை அடிப்பதாக போலீஸாருக்கு சிலர் போன் செய்து தகவல் சொல்ல சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இளம்பெண் தாக்குதலிலிருந்து அழுதுகொண்டிருந்த இளைஞரை மீட்டனர்.

“என்ன செய்ததால் அந்தப் பெண் உன்னை இந்த அடி அடிக்குது” என்று போலீஸார் கேட்க “நான் என்ன சார் செய்தேன், அவள் என் மனைவி அவள்தான் என்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறார்” என்று கூறிய கணவன் “நல்லவேளை சார் வந்து காப்பாற்றினீர்கள்” என்று கூறியுள்ளார்.

“ஏம்மா புருஷனைப் போட்டு அடிப்பதை எல்லாம் வீட்டுக்குள் வைத்துக்கொள். பொது இடத்தில் இவ்வாறு செய்யக்கூடாது. அவன் என்ன தவறு செய்தான்” என்று போலீஸார் கேட்டுள்ளனர்.

“ என்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரண்டு பெண்களுடன் பழக்கம் உள்ளது, ஏற்கெனவே திருமணமாகி மனைவியும் இருக்கிறார்” என்று இளம்பெண் கூற, ஏதாவது புகார் இருந்தால் ஸ்டேஷனில் சொல்ல வேண்டும், சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்று போலீஸார் எச்சரித்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.

இளம்பெண் கணவரை நையப்புடைத்த காட்சியும், கதறி அழும் கணவரை பொதுமக்கள் வேடிக்கை பார்க்கும் காட்சியும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. தப்பு செய்யும் கணவர்களுக்கு சரியான தண்டனை என சிலர் இளம்பெண்ணைப் பாராட்டியும் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.
கட்டி அணைத்த ராகுல்: கைகுலுக்கி வாழ்த்து சொன்ன மோடி

Published : 20 Jul 2018 14:48 IST

சென்னை




கட்டி அணைத்த ராகுல், கைகுலுக்கிய மோடி

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது காரசாரமாகப் பேசிய ராகுல் காந்தி பேச்சை முடித்த பின்னர் பிரதமர் இருக்கும் இடம் சென்று அவரைக் கட்டி அணைத்தார். மோடி சிரித்தபடியே அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆந்திராவுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டிய தெலுங்கு தேசம் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. 15 ஆண்டுகளுக்குப் பின் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் இது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்து முதலில் பேசிய தெலுங்கு தேசம் எம்.பி. ஜெயதேவ் கல்லா, ''ஆந்திரா பிரிக்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை, 5 கோடி ஆந்திர மக்களின் எதிர்பார்ப்பை மத்திய அரசு பூர்த்திசெய்யவில்லை'' என்று குற்றம் சாட்டினார்.

பாஜகவினரால் குழந்தை என்ற அர்த்தத்தில் பப்பு என்று அழைக்கப்படும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சில் அனல் பறந்தது. அவர் பேச்சில் நேரடியாக பிரதமரை குற்றம் சாட்டினார். அப்போது மோடி அவையில் அமர்ந்திருந்தார். அவர் சிரித்தபடியே ராகுல் பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்தார்.

ராகுல் காந்தி பேச்சில் பிரதமர் என் கண்ணைப்பார்த்து பேசவேண்டும், ஆனால் அதை தவிர்க்கிறார், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்று பேசினார்.

பழங்குடி இன மக்கள், இஸ்லாமியர்கள் இந்தியர்கள் இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர் இந்தியாவில் பிரதமர் மோடியின் ஆட்சியில் விவசாயிகள் , பெண்கள், தலித்துகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

பாதுகாப்புத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார். அனல் பறந்த அவரது பேச்சை எதிர்கொள்ள முடியாமல் அமளி ஏற்பட்டது. இதனால் சபையை சிறிது நேரம் சபாநாயகர் ஒத்திவைத்தார். பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்துசென்று மோடியின் அருகே சென்று அவரைத் திடீரென கட்டி அணைத்தார்.

இதை எதிர்பார்க்காத பிரதமர் திரும்பிச்சென்ற ராகுலையின் கையைப் பிடித்து தன் அருகே இழுத்து அவர் பேசியதற்கு வாழ்த்து சொல்லி கைகுலுக்கினார். இருவரின் நாகரிகமிக்க இச்செயலை சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் புன்னகையுடன் பார்த்து ரசித்தனர்.
சீரழிக்கும் 'டிவி' சீரியல்கள் தீமைகளை விளக்கும் கல்லூரி மாணவிகள்

Added : ஜூலை 20, 2018 23:31

அருப்புக்கோட்டை, முன்பெல்லாம் உறவினர்கள் வீட்டிற்கு செல்வது, குழந்தைகளுடன் கோயிலுக்கு செல்வது, குடும்பத்துடன் சந்தோஷமாக வீட்டில் பேசிக் கொண்டிருப்பது என எவ்வளவோ பொழுது போக்கு அம்சங்கள் இருந்தன.இவ்வாறான பொழுதுபோக்குகள் நாம் வாழ்வில் எந்தவித எதிர்மறை தாக்கத்தையும், துன்பத்தையும் ஏற்படுத்தவில்லை.மேலும் நமது வாழ்க்கையில் அன்பு, பாசம், குணம், கலாசாரம், அணுகுமுறை, பாரம்பரியம் மாறாமல் இருந்து வந்தது.முந்தைய கால கட்டத்தில் மேடை நாடகங்கள் மூலம் சமுதாய விழிப்புணர்வு ஏற்பட்டது. நவீன தொழில் நுட்பங்கள் வந்தபின் அனைத்துமே இயந்திரதனமாக மாறி விட்டது.நவீன வளர்ச்சியால் மனிதன் தன் வாழ்க்கையை இழந்து விட்டான்.எதுவுமே எளிதாக கிடைத்து விடுகிறபடியால் சுவாரஸ்யம் இல்லாத வாழ்க்கையாக மாறி விட்டது. எந்நேரமும் டென்ஷன் ஏற்படுகிறது. இதை குறைத்து கொள்ள 'டிவி' சீரியல்களில் கவனம் செலுத்தி காலம் கழிக்கின்றனர் சிலர். 24 மணி நேரமும் 'டிவி'யே கதியாக இருப்பவர்களும் உண்டு.சேனல்களில் வரும் தொடர்களும் கூடுதல் டென்ஷனை ஏற்றுவதாகவே உள்ளது. உறவு முறைகளை கெடுப்பது, குடும்பத்திற்குள் பகையை வளர்ப்பது, சதி செய்வது போன்ற தொடர்களாகத்தான் அதிகம் வருகின்றன. இவற்றால் சமுதாயத்திற்கு பயன் இல்லை.வீட்டில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற தொடர்களை பார்த்து அதற்கு அடிமையாகி விட்டனர். குடும்பங்களில் 'டிவி 'தொடர்களால் குழப்பம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப பிரச்னைகளுக்கு 'டிவி' தொடர்களும் காரணமாக உள்ளன.சிக்கல்களை ஏற்படுத்தும்' டிவி' தொடர்கள் குறித்து அருப்புக் கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லுாரி மாணவிகள் என்ன ெசால்கிறார்கள் என்பதையும் கேளுங்களேன்...

மனநிலையை மாற்றுது'டிவி' சீரியல்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும் அமைய வேண்டுமே தவிர பார்ப்பவர்களின் மனநிலையை மாற்ற கூடாது. சீரியல்களில் வரும் கதாபாத்திரம் போல் ஒருசில பெண்கள் தங்களை சித்தரித்து கொள்கின்றனர். இதனால் பல குடும்பங்களில் பிரச்னையே ஏற்படுகிறது. சீரியல்களில் வருவதை போல் நமது வாழ்க்கையிலும் எடுத்து கொள்ள கூடாது.-தீபிகா, 2 ம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ.,தீயவைகளை கற்கின்றனர்இந்தி, தெலுங்கு, கொரியா போன்ற வேறு மொழி சீரியல்களை தமிழில் மொழி பெயர்ந்து காண்பிக்கப்படுகிறது. இதுபோன்ற சீரியல்களில் வரும் தீய சம்பவங்கள் பார்ப்பவர்களை ஈர்க்கிறது. குடி பழக்கம், போதை பொருள் உபயோகித்தலையும் சீரியல்களை பார்த்து கற்று கொள்கின்றனர். பிற மொழி சீரியல்களை பார்ப்பதில் தவறில்லை. அதில் வரும் தீயவைகளை ஒதுக்கி வைத்து விட வேண்டும்.-கோகிலவாணி, 2 ம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ.,குழந்தைகளை கவனிப்பதில்லை'டிவி' சீரியல்களை விடாமல் பார்ப்பதால் பெண்கள் தங்கள் குழந்தைகளை கவனிப்பதில்லை. இதனால் அவர்களின் படிப்பு மட்டும் அல்லாமல், வேறு சில தவறுதல்களை செய்ய வைக்கிறது. தற்போது வரும் சீரியல்களில் அதிகப்படியான உறவு முறைகளை தவறாக காட்சி படுத்துகின்றனர். இதனால் சமுதாய பாதிப்பு ஏற்படுகிறது. குடும்ப மற்றும் சமுதாய ஒற்றுமைகளை வலியுறுத்தும் வகையில் யாரும் சீரியல்கள் எடுப்பதில்லை.--அனிதா, 2 ம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ.,எதிர்மறை எண்ணங்கள்சீரியல்களை பார்ப்பதால் நம்மை அறியாமலே மனதில் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி விடும். இதனால் குடும்பங்களில் பிரச்னைகளை புதியது புதியாக முளைக்கிறது. சீரியல்கள் நமது நேரத்தை வீணாக்குகிறது. சீரியல்கள் பார்க்கும் மாணவர்களுக்கு படிப்பின் மீது நாட்டம் குறைகிறது. தேவையற்ற சந்தேகங்கள் உருவாகி குடும்பங்களை பிரிக்கிறது.-ஜனனி, 2 ம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ.,உறவுமுறைகளுக்கு வேட்டுசினிமா மற்றும் 'டிவி' சீரியல்கள் மக்களை அதிக அளவில் ஈர்க்கின்றன. குறிப்பாக பெண்கள் சீரியல்களுக்கு அடிமைகளாக உள்ளனர். சீரியல்களில் தீமைகளே அதிகம் உள்ளது. உறவு முறைகளுக்கு வேட்டு வைக்கும் சீரியல்களை பார்ப்பதை தவிர்ப்போம்.-- லாவண்யா, 2 ம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ., -
மருத்துவ கல்வி கட்டணம் ஒழுங்குபடுத்த கமிட்டி

Added : ஜூலை 20, 2018 21:58

சென்னை, : நிகர்நிலை பல்கலைகளில் மருத்துவ படிப்புக்கு, கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்த, ஆய்வு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வு கட்டாயமானது. இதனால், அனைத்து நிகர்நிலை பல்கலைகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கும், நீட் கட்டாயமானது. நீட் தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியலின்படி, மருத்துவ படிப்புகளில் சேர்க்க, நிகர்நிலை பல்கலைகளுக்கும் அரசின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.ஆனால், கவுன்சிலிங் நடத்தி மாணவர்களை சேர்த்தாலும், தனியார் நிகர்நிலை பல்கலைகள், மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. பல பல்கலைகள், கோடிக்கணக்கில் வசூலிப்பதால், நீட் தேர்வு இருந்தாலும், பணம் இருந்தால் தான் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது.இதை மாற்றும் வகையில், நிகர்நிலை பல்கலைகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனியாக கட்டண ஒழுங்குமுறை கமிட்டி, பல்கலை மானிய குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக, 'எய்ம்ஸ்' மருத்துவ கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர், ஆர்.சி.ரேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
'நீட்' தேர்வுதாரர்களின் தகவல் விற்பனை

Added : ஜூலை 21, 2018 04:05 | 

dinamalar



புதுடில்லி : 'நீட்' எனப்படும், மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் அலைபேசி எண், புகைப்படங்கள், இணையதளத்தில் விற்பனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'நீட்' தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்துகிறது. இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய, மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் தகவல்கள் விற்பனைக்கு உள்ளதாக இணையதளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதியோரின் முழு முகவரி, அலைபேசி எண், புகைப்படம், பிறந்த நாள், இ - மெயில் முகவரி, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் உள்ளிட்ட தகவல்களை அளிப்பதாக அந்த இணையதளம் கூறியுள்ளது. இதற்கு, இரண்டு லட்சம் ரூபாய், பணம் செலுத்த வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதியோரின் அலைபேசி எண்களின் முதல் மூன்று எண்கள் மட்டுமே இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளோர், பணம் செலுத்தி, மொத்த தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வு எழுதியோரின் தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட செய்திகள்

களை கட்டத்தொடங்கியது ஆடி தள்ளுபடி விற்பனை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்




ஆடி தள்ளுபடி விற்பனை களை கட்டத்தொடங்கி விட்டது. தள்ளுபடி விற்பனையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பதிவு: ஜூலை 21, 2018 05:00 AM

சென்னை,

ஆடி மாதம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அம்மன் கோவில் திருவிழாக்கள் தான். இதற்கு அடுத்தபடியாக இருப்பது தள்ளுபடி விற்பனை.

சென்னையில் அங்காடி தெரு என்று அழைக்கப்படும் தியாகராயநகர் மற்றும் புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் ஜவுளி கடைகளில் ஆடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒரு சேலை வாங்கினால் 2 சேலைகள் இலவசம், ஒரு சட்டை வாங்கினால் 2 சட்டை இலவசம் என்பன உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

அலைமோதுகிறது

இதையடுத்து தள்ளுபடியில் பொருட்களை வாங்க மக்கள் கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் பிரதான கடைகள், வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜவுளிகள் மட்டுமின்றி எலக்ட்ரானிக் பொருட்கள், பர்னிச்சர்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட் களும் ஆடித்தள்ளுபடி பட்டியலில் இணைந்துவிட்டன.

நகைக்கடைகளும் ஒரு பவுன் தங்கத்துக்கு ரூ.500 முதல் ரூ.700 வரை தள்ளுபடி அறிவித்துள்ளன. இதேபோல மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள், கார் நிறுவனங்களும் வாகனங்களின் விலைகளுக்கு ஏற்ப தள்ளுபடி மற்றும் ஆயுட்கால காப்பீடு இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்து இருக்கின்றன. வியாபாரிகளின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் ஆடி மாதம், தள்ளுபடி விற்பனை மாதமாக ஆகி களை கட்டத்தொடங்கி விட்டது.


தேசிய செய்திகள்

தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு





தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர் களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் அளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டு, 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வை நடத்த அனுமதி வழங்கியது.

பதிவு: ஜூலை 21, 2018 05:45 AM

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுதேர்வை தமிழில் எழுதிய மாணவர் களுக்கு, கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடியால் மதிப்பெண்கள் குறைந்தது.

196 கருணை மதிப்பெண்கள்

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறியதோடு, மறு தரவரிசை பட்டியலை வெளியிடவும் சி.பி.எஸ்.இ.க்கு (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) அறிவுறுத்தியது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி சி.பி.எஸ்.இ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 20 மாணவர்கள் தரப்பிலும், ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.எஸ்.இ, தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணிந்தர் சிங், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கேள்வித்தாளை கோர்ட்டில் தாக்கல் செய்து வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்களை வழங்கினால் சில மாணவர்களின் மதிப்பெண் கள் மொத்த மதிப்பெண்களை விட அதிகமாகும். உதாரணத்துக்கு மொத்த மதிப்பெண் 720 ஆகும். இப்போது கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்கினால் சில மாணவர்களின் மதிப்பெண் 750 ஆகிவிடும். இது தேர்வு முறையை கேள்விக்குரியதாக்கி விடும்.

கேள்வித்தாளில் தமிழ் மொழிபெயர்ப்போடு ஆங்கில மூலத்தாளும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வழிகாட்டுதல் கையேட்டில், தமிழ் கேள்வித்தாளில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகள் இருப்பதாக தோன்றினால், ஆங்கில கேள்வித்தாளில் உள்ளதே இறுதியாக கொள்ளப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் வருங்காலத்தில் இது போன்ற குளறுபடிகள் எதுவும் நடைபெறாமல் அனைத்து வகையிலும் கவனமாக பார்த்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரை தொடர்ந்து டி.கே.ரங்கராஜன் எம்.பி. தரப்பில் ஆஜரான வக்கீல் சித்தார்த் லுத்ரா வாதாடுகையில், “தமிழில் வெளியிடப்பட்ட கேள்வித்தாளில் ஏதேனும் எழுத்துப்பிழைகள் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மொழிபெயர்ப்பில் வினாக்களே தவறாக கேட்கப்பட்டு உள்ளன. இது மாணவர்களுக்கு மிகவும் பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்தியது. எனவே, ஐகோர்ட்டு தீர்ப்பு மிகவும் சரியானது. அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி கருணை மதிப்பெண்கள் வழங்குவதுதான் நியாயமாக இருக்கும்” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் கூறியதாவது:-

49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. தவறாக மொழிபெயர்க் கப்பட்ட ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தம் 196 மதிப்பெண்கள் கருணை அடிப்படையில் வழங்குமாறு ஐகோர்ட்டு கூறி உள்ளது. இது நாடு தழுவிய அளவில் உள்ள தகுதி பட்டியலை பாதிக்கும்.

இது தேசிய அளவில் நடைபெறும் தேர்வு. மொழி பெயர்ப்பு சரியாக இருந்தாலும் மாணவர்கள் விடைகளில் தவறு நேர்ந்திருக்கலாம் என்ற விஷயத்தை கருத்தில் கொள்ளாமல் இந்த கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியதாவது:-

ஒரு கேள்வியில் ‘சீட்டா’ (சிறுத்தை) என்ற வார்த்தை ‘சீதா’ என்று தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. மொழிபெயர்ப்பின் கூர்மைத்தன்மை தவறுவதை எங்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதுபோன்ற பிழைகள் மாணவர்களின் விடையை தவறாக வழிநடத்திச் செல்லும் ஆபத்து உள்ளது. இதுபோன்ற தவறுகளால் அடுத்த முறை மாணவர்கள் தமிழில் தேர்வை எழுத எப்படி முன்வருவார்கள்? ஆனால் அதற்காக இப்படி கருணை மதிப்பெண்கள் அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பிறகு, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் அளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்களை அளிக்குமாறு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது.

ஐகோர்ட்டு தீர்ப்பினால் தடைபட்ட 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வை சுகாதாரத்துறை இயக்குனரகம் நடத்திக்கொள்ளலாம்.

வருங்காலத்தில் நீட் தேர்வில் கேள்வித்தாளை இறுதி செய்வதற்கும், பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பை சரிபார்க்கவும் சி.பி.எஸ்.இ. நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...