Tuesday, September 11, 2018

டாக்டர்கள் போராட்டம்: மாணவர்கள் பாதிப்பு

Added : செப் 11, 2018 01:50

கோவை: அரசு மருத்துவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் ஒத்துழையாமை போராட்டத்தால், மருத்துவ மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, ஆறு மாதங்களாக, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த, 27ம் தேதி முதல், மருத்துவர்கள், ஒத்துழையாமை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.மருத்துவர்களுக்கான, 'வாட்ஸ் ஆப்' குழுவில் இருந்து, அனைத்து மருத்துவர்களும் வெளியேறி உள்ளனர்.அரசு அளிக்கும் உத்தரவு களுக்கும், கோப்புகளில் கையெழுத்து இடுவதை தவிர்க்கவும், இவ்வித நடவடிக்கையை மேற்கொள்வதாக, மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகளை எடுக்காமல் புறக்கணிப்பதால், மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் நலன் கருதி, மருத்துவர்கள் வகுப்புகளை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில செயலர் ரவிசங்கர் கூறியதாவது:பொதுமக்களும், நோயாளிகளும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கிலும், கோரிக்கையை வலியுறுத்தியும், எங்கள் போராட்டம் நடந்து வருகிறது. ஒரு பகுதியாகவே, வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் உள்ளது. கோரிக்கையை நிறைவேற்ற அரசு பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
'வாட்ஸ் ஆப்'ல் மூழ்கிய மணமகள்; திருமணத்தை நிறுத்தினார் மணமகன்

Added : செப் 11, 2018 00:36



லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் 'வாட்ஸ் ஆப்'பே கதி என்று கிடந்த மணமகளை திருமணம் செய்ய மணமகன் மறுத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் நவுகாகான் சதத் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தன் குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினருடன் திருமணம் நடக்கும் இடத்தில் மணப்பெண் காத்திருந்தார். ஆனால் மணமகன் வீட்டார் வரவில்லை.

பெண்ணின் தந்தை மணமகன் வீட்டாரை அலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது மணமகன் வீட்டார் 'உங்கள் மகள் வாட்ஸ் அப்பில் அதிக நேரத்தை செலவிடுவது எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவரை திருமணம் செய்ய மணமகன் மறுத்துவிட்டார். அதனால் திருமணத்தை நிறுத்தி விட்டோம்,' என தெரிவித்தனர்.

அதிர்ந்து போன மணமகளின் தந்தை மணமகன் வீட்டார் மீது போலீசில் புகார் அளித்தார். அதில் மணப்பெண் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவளிக்கிறார் என்பதெல்லாம் சும்மா! மணமகன் வீட்டார் அதிகப்படியாகக் கேட்ட 65 லட்ச ரூபாய் வரதட்சணையை தரவில்லை என்பதே திருமணம் நிறுத்தப்பட்டதின் உண்மையான காரணம் என்று தெரிவித்திருந்தார்.

பகீபுராவைச் சேர்ந்த மணமகனின் தந்தை ஹுமார் ஹைதர், ''ஆம் நாங்கள் தான் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினோம். மணப்பெண் எந்நேரமும் வாட்ஸ் ஆப்பில் மூழ்கியிருக்கிறார். திருமணம் நெருங்கும் வேளையில் கூட அவர் மணமகனின் பெற்றோரான எங்களுக்கு வாட்ஸ் அப் செய்திகளை அனுப்பும் அளவுக்கு அதில் அடிமையாகிக் கிடக்கிறார். இந்தப் பழக்கம் எங்கள் குடும்பத்துக்கு ஒத்துவராது. எனவே அந்த மணப்பெண் வேண்டாம்,'' என போலீசாரிடம் தெரிவித்தார்.

திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதன் உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை மண்பாண்டம் சிங்கப்பூர் இயக்குனர் பெருமிதம்

Added : செப் 11, 2018 05:39

மானாமதுரை: ''சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தயாராகும் மண்பாண்ட பொருட்கள் தமிழர்களின் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது,'' என ஆவணப்பட இயக்குனர் லட்சுமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.மானாமதுரையில் ஆண்டு்தோறும் சீசனிற்கு தகுந்தாற்போல் 200க்கும் தொழிலாளர்கள்மண்பாண்ட பொருட்களை செய்து வருகின்றனர். இவற்றில் பொங்கல் பானைகள்,மண்கூஜாக்கள்,கடம்,உள்ளிட்ட பொருட்கள் சிங்கப்பூர்,மலேசியா,ஆஸ்திரேலியா,கனடா,ஜப்பான்,அமெரிக்காவிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.சிங்கப்பூர்தமிழரும்,ஆவணப்பட இயக்குனருமான லட்சுமி55, மானாமதுரைக்கு வந்து பொங்கல் பானைகளை தொழிலாளர்கள் எவ்வாறு தயார் செய்கிறார்கள் என்று ஆவணப்படம் எடுத்தார். இதனை சிங்கப்பூரில் உள்ள தொலைக்காட்சியில் பொங்கலன்று ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், ''பனையை தயாரிப்பது மட்டுமல்லாமல், மதுரை மல்லிகை பூ,தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி,சேலை போன்றவற்றை பற்றியும் படம் எடுக்க உள்ளோம்,'' என்றார்.
துணை மருத்துவம் : மாணவர்கள் ஆர்வம்

Added : செப் 11, 2018 01:57

சென்னை: பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, துணை மருத்துவ படிப்புகளில் சேர, மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். ஒரே நாளில், 5,191 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., - பி.பி.டி., உள்ளிட்ட, 15 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டில், 8,000; நிர்வாக ஒதுக்கீட்டில், 4,000த்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.மாணவர் சேர்க்கைக்கான, விண்ணப்ப வினியோகம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளில் நேற்று துவங்கியது. முதல் நாளில், 5,191 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். மேலும், www.tnhealth.org; www.tnmedicalselection.org என்ற இணையதளங்களிலும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பங்களை, வரும், 19ம் தேதி வரை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 20ம் தேதிக்குள், கீழ்ப்பாக்கம், மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மாநில செய்திகள்

தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டும் பெட்ரோல், டீசல் விலை ! வாகன ஓட்டிகள் திண்டாட்டம்



சென்னையில் இன்றும் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.84.05 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.13 ஆக விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice

பதிவு: செப்டம்பர் 11, 2018 06:42 AM
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.

ஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முன்வரவில்லை.

இப்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.

இதனிடையே எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.84.05 ஆகவும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.13 ஆகவும் விற்பனையாகிறது.
தேசிய செய்திகள்

7 பேரை விடுதலை செய்வது தொடர்பான தீர்ப்பின் நகல் நீதிமன்ற இணையதளத்தில் வெளியானது



ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பின் நகல் நீதிமன்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

பதிவு: செப்டம்பர் 08, 2018 14:25 PM
புதுடெல்லி

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிரான மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மத்திய அரசின் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், எனவே அந்த மனுவின் மீதான விசாரணையை முடித்து வைப்பதாகவும் கூறினார்கள்.

அத்துடன், அரசியல் சாசனப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து, அதை மாநில கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் கூறினார்கள்.

பேரறிவாளன் அளித்த மனுவின் அடிப்படையில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் நகல் இன்று உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதில், பிரிவு 161ஐ பயன்படுத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அரசியல் சாசனம் 161ன் கீழ் விடுதலை செய்யும்படி மனு அளித்திருந்தார் பேரறிவாளன். அதன்படி, விடுதலை செய்யக் கோரி ஆளுநருக்கு பேரறிவாளன் அளித்த மனு செல்லும் என்றும், மனுவை ஏற்று, தமிழக ஆளுநர் சுதந்திரமாக சட்டத்துக்கு உட்பட்டு முடிவெடுக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

Monday, September 10, 2018

"தூங்காமல், தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார் அபிராமி" - சிறையில் சந்தித்தவர் பேட்டி
எஸ்.மகேஷ்  vikatan

சென்னை குன்றத்தூரில், குழந்தைகளைக் கொலைசெய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி, `தினம் தினம் தூங்காமல் செத்துக்கொண்டிருக்கிறேன்' என தன்னை சந்தித்த வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார்.



சென்னை குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளைப் பகுதியில், தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றிக் கொலை செய்த அபிராமி என்ற பெண்ணை குன்றத்தூர் போலீஸார் கைதுசெய்து புழல் பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அபிராமியைச் சந்தித்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேசினோம். “சம்பவத்தன்று என்ன நடந்தது என்ற முதல் கேள்வியை கேட்டவுடன், தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். அவருக்கு ஆறுதல் கூறப்பட்டது. சிறிது நேர அமைதிக்குப் பிறகு, அபிராமியிடம் அதே கேள்வியைக் கேட்டபோது,

``நான் தப்பு பண்ணிவிட்டேன்'' என்று கூறிய அவர் ,மீண்டும் அழத் தொடங்கினார். அப்போது, அங்கு வந்த சிறைத்துறை பெண் அதிகாரி ஒருவர், தன்னுடைய கண்களால் சக காவலர்களுக்கு சிக்னல் காட்டினார். உடனே அவர்கள் அபிராமி அருகில் வந்த காவலர்கள் ''உங்களுக்கு விருப்பம் இருந்தால் பேசுங்கள், இல்லையென்றால் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்'' என்றனர். அதைக் கேட்ட அபிராமி, ''நான் சொல்கிறேன்'' என்று பேசத் தொடங்கியிருக்கிறார்.

"நான் விஜய்யை காதலித்துதான் திருமணம் செய்தேன். எங்களின் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாகச் சென்றது. 3,500 ரூபாய் வாடகை வீட்டில் குடியிருந்தோம். அப்போது அஜய், மூன்று மாத குழந்தை. ஹவுஸ் ஓனர் அக்கா ரொம்ப நல்லவர். அவர்கள் வீட்டில்தான் அஜய் இருப்பான். எங்க அம்மா வீடும் பக்கத்தில்தான் உள்ளது. அவர்களும் ரொம்ப உதவியாக இருந்தார்கள். அடிக்கடி குடும்பத்தோடு ஜாலியாக வெளியில் செல்வோம். அப்போது ஒருநாள், குன்றத்தூரில் பிரபலமான அந்தப் பிரியாணி கடைக்கு விஜய் அழைத்துச்சென்றார். அங்குதான் சுந்தரத்தைப் பார்த்தேன். அவர், ஸ்பெஷலாகக் கவனித்தார்.

அடிக்கடி அந்த பிரியாணிக் கடைக்கு குடும்பத்தோடு சென்றுள்ளேன். இதனால், சுந்தரத்துக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆர்டர் செய்தால் பிரியாணியை வீட்டுக்கே சுந்தரம் வந்து கொடுப்பார். அப்போதுதான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. முதலில் விஜய் எதுவும் சொல்லவில்லை. ஆனால், எங்களின் சில செயல்கள் விஜய்க்குப் பிடிக்காமல், என்னைக் கண்டித்தார். நான் கேட்கவில்லை. சுந்தரத்தின் பழக்கத்தை என்னால் விடமுடியவில்லை. அவர் சொல்படி நடந்தேன். அவருடன் சேர்ந்து வாழ விருப்பப்பட்டுதான் அந்தத் தவறை செய்துவிட்டேன்". ''குழந்தைகள் கொலையில் சுந்தரத்துக்கு தொடர்புண்டா?'' என்ற கேள்விக்கு, சிறிது நேரம் யோசித்த அபிராமி, "இல்லை" என்றார். ''அந்த மனநிலை எப்படி வந்தது'' என்றபோது, "எல்லாம் முடிந்துவிட்டது. அந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியாமல் ஒவ்வொரு நாள் இரவும் தூங்க முடியாமல் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு மேல் என்னால் பேச முடிவில்லை" என்று கூறி, கண்ணீர் மல்க சிறை அறையை நோக்கிச் சென்றுவிட்டதாக வழக்கறிஞர் நம்மிடம் தெரிவித்தார்.

அபிராமி குறித்து வழக்கறிஞர் கூறிய இன்னொரு தகவல் அதிர்ச்சியாக இருந்தது. "மீடியாக்களில் வந்த செய்திகளுக்கு அபிராமி எந்த மறுப்பும் சொல்லவில்லை. அவரின் முகத்தில் பதற்றம் தெரிகிறது. தூங்காமல் அவரின் கண்கள் சிவப்பாக காணப்படுகின்றன. மனம் உடைந்து பேசுகிறார். 'குழந்தைகளைக் கொலைசெய்த எனக்கு மன்னிப்பே கிடையாது' என்பதை சந்திப்பின்போது அடிக்கடி கூறினார். அவருக்குத் தேவையான கவுன்சலிங் அளிக்கப்படுகிறது. 'ஒரு வாரம் கழித்து வாருங்கள் உண்மையைச் சொல்கிறேன்' என்று அபிராமி கூறியிருக்கிறார்" என்றார்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...