Monday, September 10, 2018

"தூங்காமல், தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார் அபிராமி" - சிறையில் சந்தித்தவர் பேட்டி
எஸ்.மகேஷ்  vikatan

சென்னை குன்றத்தூரில், குழந்தைகளைக் கொலைசெய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி, `தினம் தினம் தூங்காமல் செத்துக்கொண்டிருக்கிறேன்' என தன்னை சந்தித்த வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார்.



சென்னை குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளைப் பகுதியில், தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றிக் கொலை செய்த அபிராமி என்ற பெண்ணை குன்றத்தூர் போலீஸார் கைதுசெய்து புழல் பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அபிராமியைச் சந்தித்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேசினோம். “சம்பவத்தன்று என்ன நடந்தது என்ற முதல் கேள்வியை கேட்டவுடன், தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். அவருக்கு ஆறுதல் கூறப்பட்டது. சிறிது நேர அமைதிக்குப் பிறகு, அபிராமியிடம் அதே கேள்வியைக் கேட்டபோது,

``நான் தப்பு பண்ணிவிட்டேன்'' என்று கூறிய அவர் ,மீண்டும் அழத் தொடங்கினார். அப்போது, அங்கு வந்த சிறைத்துறை பெண் அதிகாரி ஒருவர், தன்னுடைய கண்களால் சக காவலர்களுக்கு சிக்னல் காட்டினார். உடனே அவர்கள் அபிராமி அருகில் வந்த காவலர்கள் ''உங்களுக்கு விருப்பம் இருந்தால் பேசுங்கள், இல்லையென்றால் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்'' என்றனர். அதைக் கேட்ட அபிராமி, ''நான் சொல்கிறேன்'' என்று பேசத் தொடங்கியிருக்கிறார்.

"நான் விஜய்யை காதலித்துதான் திருமணம் செய்தேன். எங்களின் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாகச் சென்றது. 3,500 ரூபாய் வாடகை வீட்டில் குடியிருந்தோம். அப்போது அஜய், மூன்று மாத குழந்தை. ஹவுஸ் ஓனர் அக்கா ரொம்ப நல்லவர். அவர்கள் வீட்டில்தான் அஜய் இருப்பான். எங்க அம்மா வீடும் பக்கத்தில்தான் உள்ளது. அவர்களும் ரொம்ப உதவியாக இருந்தார்கள். அடிக்கடி குடும்பத்தோடு ஜாலியாக வெளியில் செல்வோம். அப்போது ஒருநாள், குன்றத்தூரில் பிரபலமான அந்தப் பிரியாணி கடைக்கு விஜய் அழைத்துச்சென்றார். அங்குதான் சுந்தரத்தைப் பார்த்தேன். அவர், ஸ்பெஷலாகக் கவனித்தார்.

அடிக்கடி அந்த பிரியாணிக் கடைக்கு குடும்பத்தோடு சென்றுள்ளேன். இதனால், சுந்தரத்துக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆர்டர் செய்தால் பிரியாணியை வீட்டுக்கே சுந்தரம் வந்து கொடுப்பார். அப்போதுதான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. முதலில் விஜய் எதுவும் சொல்லவில்லை. ஆனால், எங்களின் சில செயல்கள் விஜய்க்குப் பிடிக்காமல், என்னைக் கண்டித்தார். நான் கேட்கவில்லை. சுந்தரத்தின் பழக்கத்தை என்னால் விடமுடியவில்லை. அவர் சொல்படி நடந்தேன். அவருடன் சேர்ந்து வாழ விருப்பப்பட்டுதான் அந்தத் தவறை செய்துவிட்டேன்". ''குழந்தைகள் கொலையில் சுந்தரத்துக்கு தொடர்புண்டா?'' என்ற கேள்விக்கு, சிறிது நேரம் யோசித்த அபிராமி, "இல்லை" என்றார். ''அந்த மனநிலை எப்படி வந்தது'' என்றபோது, "எல்லாம் முடிந்துவிட்டது. அந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியாமல் ஒவ்வொரு நாள் இரவும் தூங்க முடியாமல் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு மேல் என்னால் பேச முடிவில்லை" என்று கூறி, கண்ணீர் மல்க சிறை அறையை நோக்கிச் சென்றுவிட்டதாக வழக்கறிஞர் நம்மிடம் தெரிவித்தார்.

அபிராமி குறித்து வழக்கறிஞர் கூறிய இன்னொரு தகவல் அதிர்ச்சியாக இருந்தது. "மீடியாக்களில் வந்த செய்திகளுக்கு அபிராமி எந்த மறுப்பும் சொல்லவில்லை. அவரின் முகத்தில் பதற்றம் தெரிகிறது. தூங்காமல் அவரின் கண்கள் சிவப்பாக காணப்படுகின்றன. மனம் உடைந்து பேசுகிறார். 'குழந்தைகளைக் கொலைசெய்த எனக்கு மன்னிப்பே கிடையாது' என்பதை சந்திப்பின்போது அடிக்கடி கூறினார். அவருக்குத் தேவையான கவுன்சலிங் அளிக்கப்படுகிறது. 'ஒரு வாரம் கழித்து வாருங்கள் உண்மையைச் சொல்கிறேன்' என்று அபிராமி கூறியிருக்கிறார்" என்றார்.

No comments:

Post a Comment

CM opposes NEET for allied and health care courses

CM opposes NEET for allied and health care courses Chief Minister M.K. Stalin says NEET has forced students to rely on expensive coaching cl...