Thursday, September 13, 2018

கோடிகளை குவித்த ஆர்.டி.ஓ., அதிகாரிபுரோக்கர் வீட்டில் ஆவண புதையல் 

dinamalar 13.09.3018

கள்ளக்குறிச்சியில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு, கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்து உள்ளது, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் தெரியவந்துள்ளது. இவருக்கு, புரோக்கராக செயல்பட்ட செந்தில்குமாரின், சேலம் ஆத்துார் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின.

கடலுார், தவுலத் நகரைச் சேர்ந்தவர், பாபு, 52. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

கள்ளக்குறிச்சியில் கைது :

இவர் தகுதிச்சான்று வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, நேற்று முன்தினம் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால், கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடலுாரில் உள்ள அவரது வீட்டில், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், 33.50 லட்சம் ரூபாய், 15 கிலோ வெள்ளி, 140 சவரன் நகைகள், 45 வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான புத்தகங்கள் கைப்பற்றப் பட்டன.

மேலும், ஆறு வங்கி லாக்கருக்கான சாவி மற்றும் பல கோடி ரூபாய்க்கு வாங்கி குவிக்கப்பட்ட சொத்துகளுக்கான ஆவணங் களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்களில், 60 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

வங்கி லாக்கரில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு சொத்துகளுக்கான ஆவணங்கள் மற்றும் நகைகள் வைக்கப்பட்டு


இருப்பதும் தெரிய வந்துஉள்ளது. இருப்பினும், வங்கி களின் அனுமதியுடன் அவற்றை திறந்து பார்த்த பிறகே, உண்மை மதிப்பு தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.

கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், பாபு வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் உட்பட அனைத்து ஆவணங்களையும், நேற்று முன்தினம் இரவு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, 45 வங்கி கணக்குகளை முடக்கி வைக்க, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதம் அனுப்பும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஆவண புதையல் :

மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவுக்கு, 13 ஆண்டுகளாக புரோக்கராகவும், பினாமியாகவும் இருக்கும், சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த, ஜோதிடர் செந்தில்குமார், 44, என்பவரையும், போலீசார் கைது செய்தனர்.அவரது வீட்டில், நேற்று முன்தினம் மாலை, 4:30 முதல், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை மேற்கொண்டனர். இது, அதிகாலை, 2:30 மணி வரை நடந்தது.

ஜோதிட அறை உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதில், ஸ்ரீருத்ர கங்கா பைனான்ஸ் மற்றும் ஸ்ரீருத்ர கங்கா சிட்ஸ் பிரைவேட் லிமிடெட், தொழுதுார் கிரீன்பார்க் பள்ளியில், பங்குதாரராக உள்ள ஆவணங்கள் மற்றும் அறக்கட்டளை ஆவணங்கள் சிக்கின.

செந்தில்குமாரின் மனைவி கவிதா பெயர்களில், 2 கோடி ரூபாய்க்கு, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. அதற்கு, வரி செலுத்தியபோதும், முதலீடு செய்துள்ள வருவாய்க்கு ஆதாரம் இல்லை. வீட்டிலிருந்து, 15 வங்கி கணக்குகளின் சேமிப்பு கணக்கு புத்தகம், 150 சவரன் நகைகள் உட்பட,33 கோடி ரூபாய் மதிப்புக்கும் அதிகமான சொத்துகளின் ஆவணங்கள் சிக்கி உள்ளன.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: ஆத்துாரில், 2006ல் பாபு பணிபுரிந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த

புகாரில், செந்தில்குமார் வீட்டில், 62.62 லட்சம் ரூபாய்க்கு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பாபு மீது வழக்கு நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சசிகலா குடும்ப ஜோதிடர் :

செந்தில்குமார், கேரளாவின் பிரசன்ன ஜோதிடம் பார்ப்பது வழக்கம். 2008 முதல், சசிகலாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், தினகரன் ஆதரவு, முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பூங்குன்றன், எம்.பி.,க்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலருக்கு, குடும்ப ஜோதிடராக உள்ளார். இவர்கள், செந்தில்குமாரிடம் ஆலோசித்து, முக்கிய கோவில்களில் நடக்கும் பரிகார பூஜையில் பங்கேற்பர்.

வாரிசு வேலையில் வந்தவர் :

கடலுார், செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த, பாபுவின் தந்தை சுப்ரமணியன். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரிந்தார். அவர் இறந்ததால், 1991ல், பாபுவுக்கு, தமிழக அரசு, வாரிசு வேலை வழங்கியது. 1998 முதல், மோட்டார் வாகன ஆய்வாளராக, பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறார். 2006ல், சொத்து குவிப்பு புகாரில் வழக்கு பதிவானதால், பதவி உயர்வின்றி பணிபுரிகிறார். பாபுவின் இரு மகள்கள், மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கின்றனர். தம்பி செந்தில், ஆத்துார், விழுப்புரத்தில், இரு, நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை செய்கிறார். தங்கை ஜெயலலிதா, அவரது கணவர் ராஜேந்திரன், உளுந்துார்பேட்டையில், 'டிரைவிங் ஸ்கூல்' நடத்துகின்றனர். ஆய்வின்போது, ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளதால், குடும்ப உறவினர்களிடம், போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.


- நமது நிருபர் -

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு குரு பெயர்ச்சிக்கு பின் திருமணம்

Added : செப் 12, 2018 21:28 | 

  பவானிசாகர்: பவானிசாகர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., திருமணம் நேற்று நடக்கவில்லை. 'குருப்பெயர்ச்சி முடிந்து திருமணம் நடக்கும்' என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், ஈஸ்வரன், 42. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவருக்கு, பண்ணாரி அம்மன் கோவிலில், நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால், நிச்சயிக்கப்பட்ட பெண், 1ம் தேதி, மாயமானார். அதே தேதியில், எம்.எல்.ஏ., திருமணத்தை நடத்த, தீவிரமாக பெண் தேடினர். இதனால், திட்டமிட்டபடி நேற்று திருமணம் நடக்கும் என, ஒரு தரப்பினர் நம்பினர். ஆனால் நேற்று, அவரது திருமணம் நடக்கவில்லை.
பண்ணாரி அம்மன் கோவில் அலுவலக ஊழியர்கள் கூறியதாவது:ஏற்கனவே பதிவு செய்துள்ளபடி, பண்ணாரி அம்மன் கோவிலில், நேற்று காலை, மொத்தம், 28 திருமணங்கள் நடந்தன.அதில், எம்.எல்.ஏ., ஈஸ்வரன் திருமணம் நடந்ததாக, ஆவணங்களில் பதிவு இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.திருமணம் நிறுத்தப்பட்ட தகவல், 'வாட்ஸ் ஆப்' மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது. தீவிர பெண் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட, எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் சோகத்தில் உள்ளனர்.
அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:குறிப்பிட்ட தேதியில், திருமணத்தை முடிக்க, பெண் தேடும் பணியில் ஈடுபட்டோம். பல்வேறு இடங்களில், பேச்சு நடந்தது. ஆயினும், திட்டமிட்டபடி திருமணம் நடக்கவில்லை. ஜோதிடர் அறிவுரைப்படி, குருப்பெயர்ச்சி முடிந்து, திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
180 மருத்துவ மாணவர், 'அட்மிஷன்' அதிரடியாக ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

Added : செப் 12, 2018 22:29

புதுடில்லி: கேரளாவில், விதிமுறைகளை மீறி, இரண்டு தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 180 மாணவர்களை சேர்த்ததற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு உள்ளது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த கருணா மருத்துவக் கல்லுாரி மற்றும் கண்ணூர் மருத்துவக் கல்லுாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டதால், அதில் மாணவர்களை சேர்ப்பதற்கு, கடந்த ஆண்டு, கேரள உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தன.இதற்கிடையே, அந்தத் தீர்ப்புக்கு எதிராக, மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கும் வகையில், கேரள அரசு, அவசர சட்டம் இயற்றியது. அதன்படி, கருணா மருத்துவக் கல்லுாரியில், 30 பேரும், கண்ணுார் மருத்துவக் கல்லுாரியில், 150 பேரும் சேர்க்கப்பட்டனர். இந்த அவசர சட்டம், பின், அமலாக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கும் கேரள அரசின் சட்டம் செல்லாது' என, நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.இதையடுத்து, இந்த, 180 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறியதாக, புதுச்சேரியைச் சேர்ந்த, ஏழு நிகர்நிலை பல்கலை மற்றும் தனியார் கல்லுாரிகளைச் சேர்ந்த, 700 மாணவர்கள் சேர்க்கைக்கு, கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தற்போது கேரளாவில், 180 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் இருந்து ஆந்திர கோயில்களுக்கு சுற்றுலா ரயில்

Added : செப் 13, 2018 00:53

சென்னை : இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், ஆந்திரா கோவில்களுக்கு, சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில் மதுரையில் இருந்து வரும் 27ம் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக, ஆந்திரா செல்லும். ஆந்திர மாநிலத்தில் உள்ள, பத்ராச்சலம், சிம்மாச்சலம், அன்னாவரம், ஸ்ரீகூர்மம், ஸ்ரீபீமேஸ்வரசுவாமி, மாணிக்யம்பா, கனக துர்கா, வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில்களுக்கு, பக்தி சுற்றுலா சென்று வரலாம்.ஆறு நாட்கள் சுற்றுலாவுக்கு நபருக்கு 7,050 ரூபாய் கட்டணம். ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, உள்ளூரில் சுற்றிப் பார்க்க வாகன செலவு, இதில் அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, கட்டண சலுகை உண்டு. மேலும் தகவலுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40681, 90031 40682 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ம.பி.,யில் தேர்தல் பரீட்சை 323 அதிகாரிகள், 'பெயில்'

Added : செப் 12, 2018 22:28


போபால்: விரைவில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில், தேர்தல் ஆணையம் நடத்திய தேர்வில், 323 அரசு அதிகாரிகள் தேர்ச்சி பெறவில்லை.மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், 230 சட்டசபை தொகுதிகளுக்கு, விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில், இந்த மாநிலத்தில், தேர்தல் பணிகள் தொடர்பான தேர்வை, தேர்தல் ஆணையம் நடத்தியது. இந்த தேர்வை, சட்டசபை தேர்தல் பணிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு உள்ள, 700 அதிகாரிகள் எழுதினர்.இதில், 323 அதிகாரிகள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களில் பெரும்பாலானோர், போபால், சிஹோர், குணா, இந்துார் உள்ளிட்ட முக்கிய இடங்களில், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.மேலும், துணை கலெக்டர், சப் - டிவிஷனல் மாஜிஸ்திரேட், தாசில்தார் ஆகிய நிலைகளில் உள்ள அதிகாரிகள் கூட, இந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஒருசில அதிகாரிகளுக்கு, அடிப்படை பற்றி கூட தெரியவில்லை.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இந்த விவகாரம், மிகப்பெரிய பிரச்னை. தேர்தல் ஆணையம் நடத்திய தேர்வில், 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களால், எப்படி நியாயமான தேர்தலை நடத்த முடியும்?இது குறித்து, தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கிடையே, மத்திய பிரதேச மாநிலத்தில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.
பான் கார்டில் தந்தை பெயர் தேவையில்லை

Added : செப் 12, 2018 21:38

புதுடில்லி: விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்கள், தங்கள் பிள்ளைகளுக்கு, 'பான் கார்டு' பெறும்போது, அவர்களது தந்தை பெயரை குறிப்பிட தேவைஇல்லை என்று, விதிகளில் திருத்தம் செய்யும் பணி துவங்கி உள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும், பான் கார்டு எனப்படும், நிரந்தர கணக்கு அட்டையை, மத்திய நிதி அமைச்சகம் வழங்கி வருகிறது.இந்த அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், தங்கள் தந்தையின் பெயரை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்கள், தங்கள் பிள்ளைகளுக்கு பான் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் போது, அதில், முன்னாள் கணவரின் பெயரை குறிப்பிடுவதில் சிக்கல்கள் உள்ளது. எனவே, அதில் திருத்தம் செய்யும்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, இந்த நடைமுறையில், திருத்தம் செய்யும் பணி துவங்கி உள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. இது, மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தை கள் நலத்துறை அமைச்சர் மேனகா தெரிவித்தார்.
மாநில செய்திகள்

சென்னை முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு பாகிஸ்தானின் மிக உயர்ந்த ‘மனிதநேய விருது’




சென்னை முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு பாகிஸ்தானின் மிக உயர்ந்த மனிதநேய விருது பிலிப்பைன்சில் நடந்த மாநாட்டில் வழங்கப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 13, 2018 03:45 AM

சென்னை,

பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய பல் டாக்டர்களை கொண்ட ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பு பல்வேறு கூட்டங்களை நடத்தி, பல் மருத்துவ கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான செயல்களை ஒருங்கிணைத்தும், சமூகத்துக்கு சேவை செய்யும் பல் டாக்டர்களை கவுரவித்தும் வருகிறது.

ஆசிய-பசிபிக் பல் மருத்துவ நிபுணர்கள் சம்மேளனம் நடத்திய மாநாட்டில் சென்னையை சேர்ந்த பிரபல முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி பங்கேற்றார். அப்போது டாக்டர் எஸ்.எம்.பாலாஜியின் திறமையை அறிந்த பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் தங்கள் நாட்டுக்கும் வந்து விரிவுரையாற்றுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தது.

பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கத்தின் அழைப்பை ஏற்று அந்த நாட்டு பல் மற்றும் முகச்சீரமைப்பு துறைகளில் பல் டாக்டர்களுக்கும், பல் மருத்துவ மாணவர்களுக்கும் எஸ்.எம்.பாலாஜி விரிவுரையாற்றியுள்ளார். மேலும் சிக்கலான முகக்குறைபாடுகளை உடைய சிறுவர்களை கடந்த 2010-ம் ஆண்டு முதல் எஸ்.எம்.பாலாஜியிடம் அறுவை சிகிச்சைக்காகவும் பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் அனுப்பி வருகிறது.

பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் அனுப்பும் சிறுவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள். இதனால் எஸ்.எம்.பாலாஜி இலவசமாக அந்த சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து சேவை செய்து வருகிறார். அந்தவகையில் எஸ்.எம்.பாலாஜியின் சேவை மனப்பான்மையினால் ஏராளமான ஏழை பாகிஸ்தான் நாட்டு சிறுவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

எஸ்.எம்.பாலாஜியின் தன்னிகரற்ற மனிதநேய சேவையை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் கருதியது. இந்தநிலையில் ஆசிய-பசிபிக் பல் மருத்துவ நிபுணர்கள் சம்மேளனம் சார்பில் 40-வது சர்வதேச மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் சமீபத்தில் நடந்தது.

இந்த மாநாட்டில் எஸ்.எம்.பாலாஜி பங்கேற்றார். அப்போது பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் சார்பில் பாகிஸ்தானில் மிக உயர்ந்த விருதான மனிதநேய விருது எஸ்.எம்.பாலாஜிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் மகமூத் ஷா, துணைத்தலைவர் டாக்டர் ஆசிப் அரெய்ன் மற்றும் பொதுச்செயலாளர் டாக்டர் நாசிர் அலி கான் ஆகியோர் எஸ்.எம்.பாலாஜிக்கு வழங்கி கவுரவித்தனர்.

பாகிஸ்தானின் மிக உயர்ந்த மனிதநேய விருதினை பெற்றுள்ள முதலாவது இந்திய டாக்டர் என்ற பெருமையையும் எஸ்.எம்.பாலாஜி தட்டிச்சென்றுள்ளார். மாநாட்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பல் டாக்டர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS TODAY 01.07.2026