Thursday, December 13, 2018


முதியோர் எனும் சொத்து
By கோதை ஜோதிலட்சுமி | Published on : 13th December 2018 01:26 AM |


அன்புதான் மனிதனை வாழ்வதற்குத் தூண்டுகிறது. அன்புதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. உறவு என்பது சமூக கட்டமைப்பின் அடித்தளமாக இருந்து சமூக வாழ்வை உயர்த்துகிறது. மனிதன் சமூக விலங்காக கருதப்பட்ட காலம் முதல் உறவுப் பிணைப்பு அவனை வாழ்வதற்கும் மேம்பட்ட வாழ்க்கைச்சூழலை உருவாக்கிக் கொள்வதற்கும் உந்து சக்தியாக இருந்து வழிநடத்துகிறது.இத்தகைய அன்பும், உறவும் காலப்போக்கில் எத்தகைய பரிமாணங்களை அடைந்துள்ளன? வியாபாரமயமாகி விட்ட இந்த நூற்றாண்டில் உறவின் நிலை என்ன?

காலந்தோறும் கூடி வாழ்ந்த குடும்பம் என்ற அமைப்பு மனிதனை உயர்த்தி இருக்கிறது. ஒருங்கிணைந்த உழைப்பால் பெரும் பலன் தந்திருக்கிறது. விவசாயப் பெருங்குடி மக்களாய் வாழ்ந்த காலத்தில் கூடிவாழ்ந்த குடும்பத்தில் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தங்கள் உழைப்பை நிலத்தில் சிந்தி வேளாண்மை பெருகி, சீரும்சிறப்புமாய் வாழ்ந்ததை வரலாறு சொல்கிறது. இப்படி வாழ்ந்த சமூகத்தில் பெரியோர் மதிக்கப்பட்டனர். அவர்களின் அனுபவமும் அறிவும் இளையோருக்கு வழிகாட்டக் கிடைத்த பெரும் வரமாக கருதப்பட்டது. 

உழைப்பைத் தந்த குடும்பத்தில் முதியவர்கள் உடல் தளர்ந்து, தங்களால் உழைப்பை நிலத்தில் செலுத்த இயலாத காலத்தில் குடும்பத்திற்குப் பாதுகாவலாக இருந்து குழந்தைகள் பராமரிப்பு மற்றும் அவர்களை நல்வழிப்படுத்தும் ஒழுங்காற்றுப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதனால் அடுத்த தலைமுறையும் சீரிய ஒழுக்கத்தோடும் நெறிமுறைகளோடும் வாழத் தலைப்பட்டது. ஆனால், தற்போது அறிவியல் வளர்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் நிலை என்னவாக இருக்கிறது?
நமக்கு அன்றாடம் ராமாயணத்தையும் பாரதத்தையும் கதையாகச் சொல்லி நம்முடைய பண்பாட்டு விழுமியங்களை இயல்பாக நமக்குள் பதிவுசெய்தவர்களாக நம்முடைய முன்னோர்கள் இருந்தார்கள். அவர்கள் சொல்லித் தந்த கதைகள் வெறும் பொழுது போக்கு அம்சங்களாக இருக்கவில்லை. பின்னாளில் வாழ்வை எதிர்கொள்வதற்கான மனஉறுதியைக் கொண்டிருந்தன. இத்தகைய தாத்தா-பாட்டிகளை நாம் தொலைத்துவிட்டு மன அழுத்தத்திற்கு மனநல மருத்துவர்களை நாடிச் செல்வதும், ஆலோசகர்களை அணுகி ஆலோசனை கேட்பதும் பேதைமை நிறைந்தது.

நம் முன்னோர்கள் விவசாயம் அறிந்திருந்தார்கள். பருவநிலையைப் புரிந்திருந்தார்கள். மனித மனங்களைப் பற்றிய தெளிவு அவர்களுக்கு இருந்தது. வாழ்வின் தேவை என்ன? நிம்மதியாய் வாழ்வதற்கானவழிவகை என்ன என்பதையும்அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.இவற்றையெல்லாம் நமக்குத் தேவையான பொழுது கற்றுத் தருவதற்கும் காத்திருந்தார்கள். இன்றைக்கு அந்தத் தாத்தாக்கள் தொலைந்து போனார்கள்.
ஒவ்வொரு முதியவரும், தமக்குள் கொண்டிருக்கும் ஆற்றல், அனுபவம், அன்பு இவற்றின் தொகுப்பாக விளங்குகிறார்கள். இந்த மதிப்புமிக்க பெரியோர்கள் நம் தேசத்தின் சொத்து. இதனை உதாசீனப்படுத்துவதும், ஒதுக்கி வைப்பதும் நம்முடைய வளர்ச்சியை பாதிக்கும் செயல். இதனை நாம் உணரத் தலைப்படும்பொழுது இன்னும் மிகுந்த வளர்ச்சியோடு வேகத்தோடு நவீன யுகத்தில் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டியது, முதியோர்களின் அறிவாற்றலும் திறமையும் உழைப்பும் கொண்டுதான் நாம் வாழும் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையே. இன்று நாம் அனுபவிப்பவை அனைத்தும் நேற்றைய தலைமுறையினரின் உழைப்பின் பலன்தான். நம்மைக் காட்டிலும் முதியவர்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்லர். சொல்லப் போனால், வாய்ப்புகள் இத்தனை உலகளாவிய அளவில் வாய்க்கப் பெறாத காலத்திலும் அவர்கள் சமூகத்தை மேம்பட்ட நிலையில் வைத்திருந்தார்கள்.
கலை இலக்கியம் அறிவியல் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், அந்தத் துறையில் முதியவர்கள் நமது முன்னோடிகள். அப்துல் கலாம் போன்ற அறிவியல் அறிஞர்கள், நம்மாழ்வார் போன்ற வேளாண் வல்லுநர்கள், ஐராவதம் மகாதேவன் போன்ற ஆய்வாளர்கள், 96 வயதிலும் யோகக் கலையில் சிறந்து விளங்கும் நானம்மாள் பாட்டி, அதே வயதில் கல்வி கற்கும் ஆர்வத்தோடு படித்துத் தேர்வுகளில் முன் நிற்கும் கார்த்தியாயினி அம்மாள், 82 வயதில் சற்றும் சளைக்காமல் வெறும் கால்களுடன் ஓடி ஆசிய போட்டிகளில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்று இன்னமும் முனைப்போடு சர்வதேச போட்டிகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும் ராஜேந்திரன், 96 வயதிலும் இன்னமும் புதினங்களை சளைக்காமல் புதிது புதிதாக எழுதிக் கொண்டே இருக்கும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன்- இப்படி எத்தனை எத்தனையோ சாதனைப் பெரியவர்கள் நம் தேசத்தில் உண்டு.

முதியவர்கள் நமக்கு வழிகாட்டிகள் எனும் எண்ணம் உருவாக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இன்றைய உளவியல் சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வாக முதியவர்கள் இருக்க முடியும். உடல் ஆரோக்கியம் காப்பதற்கு நம் பாட்டிமார்களை நாம் மீட்டெடுத்துத் தீர வேண்டும். எத்தகைய இக்கட்டான நிலையிலும் இவர்கள் நம்முடைய நலனைப் பேணுபவர்களாக இருந்தார்கள். நமக்குப் பொருள் ஈட்டித் தந்திருக்கிறார்கள். அவர்கள் ஈட்டித் தந்த பொருளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் சம்பாதித்த அனுபவங்களை ஏற்க மறுப்பது, நம் மூதாதையரின் சொத்துகளை நாம் வேண்டாம் என்று மறுப்பதற்கு ஒப்பானது.
ஒவ்வொரு குடும்பத்திலும் தத்தமது பெற்றோர்களைஅல்லது தாத்தா பாட்டிகளை பாதுகாக்க வேண்டிய அடிப்படை பொறுப்பு உள்ளவர்கள் இளைஞர்கள். இளம் சமூகம் தன் துடிப்போடும் வேகத்தோடும் முதியோரின் அனுபவத்தையும் ஏற்றுக்கொண்டு செயல்படும்பொழுது அனுபவம்-ஆற்றல் இந்தக் கூட்டுச் சேர்க்கை வெற்றி பெறுவதற்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை.

அடுத்த தலைமுறைக்காக உழைத்து நம்மை வாழவைத்த முதியவர்கள் தங்கள் முதுமையின் காரணமாக சற்றே தளர்ந்து போகும்பொழுது அவர்களுக்குக் கைகொடுக்க வேண்டியது தம்முடைய கடமை என்பதை இன்றைய தலைமுறை மறந்து கொண்டிருக்கிறது. அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியதும் நமது பொறுப்பே. உடல்நல தடைகள் காரணமாக இவர்கள் தவிப்புக்கு ஆளாகிறார்கள். இதனைப் புரிந்து கொண்டு அவர்களுக்குத் தேவையான ஆரோக்கியமான நல்ல சூழலை உருவாக்கித் தர வேண்டிய கடமை இன்றைய இளம் தலைமுறைக்கு உண்டு.
முதுமையில் உடல் தளர்வு காரணமாக தன்னைச் சுற்றி உள்ளவர்களை சார்ந்து வாழும் நிலை தோன்றும் பொழுது நாம் அதனை சுமையாகக் கருதும் மனப்பான்மையை தற்போது பெற்றிருக்கிறோம். இந்த மனப்பான்மை முதியோர்களுக்கு மட்டும் பிரச்னை அல்ல, வளரும் தலைமுறைக்கும் நஷ்டமேயாகும்.

அரசு இவர்களின் தேவைகளை, பிரச்னைகளை உணர்ந்து சட்டங்களை இயற்றி இருக்கிறது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டம் 2007-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் வாயிலாக கைவிடப்பட்ட, உறவினர்களால் ஒதுக்கப்பட்ட முதியோருக்கு அவர்களது சொத்துகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்தல், கைவிடப்பட்ட முதியோருக்கு சட்டப்படியானபாதுகாப்பினை வழங்குதல், மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்கள் அமைத்தல் என்று பல சட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன. 

உதவித்தொகை வழங்குவதில் அரசு பல சட்டங்களை இயற்றி இருக்கிறது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர், ஆதரவற்ற முதியோர், கைம்பெண்களுக்கான உதவித்தொகை, திருமணம் செய்து கொள்ளாது தனித்து வாழும் பெண்களுக்கான உதவித் தொகை என்று பல விதங்களில் அரசு இவர்களை கவனத்தில் கொண்டு இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனஅறிவித்தது. வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள் மற்றும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு 2002- ஆம்ஆண்டிலிருந்து முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. 

ரயில்வே முன்பதிவு தொடங்கி, வருமான வரிச்சலுகைவரை, முதியவர்களுக்கு என்று பல சலுகைகளும் மதிப்பும் அரசால் வழங்கப்படுகிறது. முதியோருக்கான சுதந்திரம், உலகில், அவர்களுடைய பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் உலக முதியோர் தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஏனெனில் அவர்களும் இந்த உலகின் பங்குதாரர்களே.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்பது சமூகம் ஆரோக்கியமின்மை நோக்கி நகர்வதற்கான அறிகுறி. சமூக மாற்றத்திற்கு, இயந்திரத்தனமான வாழ்க்கை, மேலை நாட்டுக் கலாசாரத்தை பின்பற்றுதல், ஒருவருக்காக மற்றவர் நேரம் செலவிட முடியாமல் ஓடுவது என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

தேசத்தின் புராண வரலாறு, கலாசாரப் பெருமை இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது, இத்தகைய மாறுதல் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. 

குடும்பம்-உறவு எனும் இரு பெரும் கோட்பாடுகளை உலகிற்கு வழங்கிய தேசத்தில், முதியோர் உரிய மரியாதையோடு நடத்தப்பட வேண்டும். இளையோர் அதனை உறுதி செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
அண்ணாமலை பல்கலை பதிவாளர் விடுவிப்பு

Added : டிச 12, 2018 23:11




சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் விடுவிக்கப்பட்டு, புதிய பதிவாளர் நேற்று மாலை பொறுப்பேற்றார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக பொறுப்பு பதிவாளராக ஆறுமுகம் பதவி வகித்து வந்தார். உயர்கல்வித் துறை உத்தரவின் படி, பதிவாளர் ஆறுமுகம் நேற்று அதிரடியாக விடுவிக்கப்பட்டார்.புதிய பொறுப்பு பதிவாளராக முன்னாள் வேளாண் புல முதல்வர் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டு நேற்று மாலை, 6:30 மணிக்கு பொறுப்பேற்றார். இவர் ஒரு ஆண்டிற்கு, பொறுப்பு பதிவாளராக பதவி வகிப்பார்.பல்கலைக்கழகத்தில், நிதி நெருக்கடி காரணமாக, 5,000க்கும் மேற்பட்டோர் இடமாறுதல் செய்யபட வேண்டும். இதில், 3,000 ஆசிரியர்கள், ஊழியர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இடமாறுதல் மற்றும் ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால், உயர்கல்வித் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வந்தனர்.இதனால், துணைவேந்தர் முருகேசனுக்கும், பதிவாளர் ஆறுமுகத்திற்கும் சில மாதங்களாக பனிப்போர் நிலவி வந்தது. இந்நிலையில் பதவியில் இருந்த பதிவாளர் ஆறுமுகம் திடீரென அதிரடியாக மாற்றப்பட்டார்.
வரும் 15, 16ல் கனமழை

Added : டிச 12, 2018 23:01

சென்னை: 'வரும், 15ம் தேதி முதல், இரண்டு நாட்கள், கனமழை கொட்டும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.இது, படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. அடுத்த, 24 மணி நேரத்தில், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.இது குறித்து, சென்னை மண்டல வானிலை மைய துணை பொது இயக்குனர், பாலசந்திரன் அளித்த பேட்டி:தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த மண்டலம், தமிழக, வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் தெற்கு மாவட்டங்கள் இடையே கரையை கடக்கும்.இதனால், 15, 16ம் தேதிகளில், தமிழக, வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில், கனமழை அல்லது மிக கனமழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், நாளை இரவு முதல், வங்க கடலை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும். மணிக்கு, 75 கி.மீ., வேகம் வரை, சூறாவளி காற்று வீசவும் வாய்ப்புள்ளது.எனவே, வங்க கடலின் தெற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு பகுதிகளுக்குள், 16ம் தேதி வரை செல்ல வேண்டாம் என, மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் டாக்டர் வேலை

Added : டிச 12, 2018 22:33

சென்னை: சவுதி அரேபியா அமைச்சகத்தின், அரசு மருத்துவமனைகளில் பணி புரிய, டாக்டர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தீவிர சிகிச்சைப் பிரிவு, இன்டர்னல் மெடிசன், பொது அறுவை சிகிச்சை, குடும்ப மருத்துவம், மகப்பேறு போன்ற பிரிவுகளில், அனுபவமிக்க அலோபதி மருத்துவர்கள் தேவை.இதற்கான நேர்முகத் தேர்வு, 17 முதல், 19ம் தேதி வரை கொச்சி; 21, 22ம் தேதிகளில், கோல்கட்டா; 24 முதல், 26ம் தேதி வரை டில்லியில் நடக்க உள்ளது.விருப்பம் உள்ளவர்கள், ovemcldr@gmail.com என்ற, இ - மெயில் முகவரிக்கு, அனுப்பி வைக்கவும்.மேலும் விபரங்களை அறிய, 044 - 22502267, 95662 39685 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தைப்பூசம் விழாவுக்கு மலேஷிய சுற்றுலா

Added : டிச 12, 2018 22:29

சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யானது, மலேஷியா, கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு, விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஜனவரி மாதம் வரும் தைப்பூசத்தை முன்னிட்டு, மலேஷியாவில் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் உட்பட, முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று வர, சென்னையில் இருந்து, ஜன., 20ம் தேதி, விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நான்கு நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 33 ஆயிரம் ரூபாய் கட்டணம்.கம்போடியா, வியட்நாம் மற்றும் லாவோஸ் செல்லவும், விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து, பிப்., 13ல் புறப்படும், எட்டு நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 1.30 லட்சம் ரூபாய் கட்டணம்.இதில், விமான கட்டணம், மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கும் செலவு, முக்கிய இடங்களில் நுழைவு கட்டணம், உணவு மற்றும் சுற்றுலா வழிகாட்டி கட்டணங்கள் அடங்கும்.மேலும் தகவலுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவகத்தை, 90031 40718, 90031 40682, 90030 24169 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.irctctourism.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தில் பங்கேற்க அழைப்பு

Added : டிச 13, 2018 02:04

புதுச்சேரி:உன்னத் பாரத் அபியான்' திட்டத்தை செயல்படுத்த ஜிப்மர் மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஜிப்மர் இயக்குனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சுற்றியுள்ள கிராமங்களை உயர்கல்வி நிறுவனங்களோடு இணைக்கும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 'உன்னத் பாரத் அபியான்' (யு.பி.ஏ.) திட்டத்தின் கீழ் ஜிப்மர் தெரிவு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது. இதற்காக, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையுடனான ஒரு ஒப்பந்தம், ஜிப்மர் இயக்குனரால் கையெழுத்திடப் பட்டது.கிராம சமுதாயங்களின் நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்த முன்னேற்றத்திற்கான சவால்களை அடையாளம் கண்டு, அதற்குப் பொருத்தமான தீர்வுகாண உயர்கல்வி நிறுவனங்கள், கிராமப்புற மக்களோடு சேர்ந்து உழைக்க வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.ஜிப்மரின் நோய்த்தடுப்பு - சமூக மருத்துவ துறைத் தலைவர் சோனாலி சர்க்கார், டாக்டர் பழனிவேல், ஜிப்மரில் உன்னத் பாரத் அபியான் திட்டத்தை செயல்படுத்துவற்கான ஏற்பாடுகளை செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்காக பல்வேறு கிராமப் பகுதிகள், நோய்த்தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் கல்வியாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் முன்வந்து முனைப்புடன் பங்குபெற வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மனைவியை கைவிட்ட என்.ஆர்.ஐ.,க்களின் பாஸ்போர்ட்கள் ரத்து

Added : டிச 12, 2018 22:39 |






புதுடில்லி: மனைவியரை கைவிட்ட, என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், 33 பேரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்திய பெண்களை திருமணம் செய்யும், என்.ஆர்.ஐ., கணவர்கள், அவர்களை பாதியிலேயே கைவிட்டு விடுவதாக, வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.இதன்படி, கணவர்களால் கைவிடப்பட்ட இந்திய பெண்கள் அளித்த புகார்களில், இதுவரை, 33 என்.ஆர்.ஐ.,க்களின் பாஸ்போர்ட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும், என்.ஆர்.ஐ., திருமணங்களை ஒரு வாரத்தில் பதிவு செய்தல் மற்றும் பதிவு செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...