Saturday, December 29, 2018

ரூ.399 ரீசார்ஜுக்கு 100% கேஷ்பேக்: புத்தாண்டை முன்னிட்டு ஜியோ அதிரடி

Published : 28 Dec 2018 17:50 IST




புத்தாண்டு சலுகையாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 ரீசார்ஜுக்கு 100 சதவீத கேஷ்பேக்கை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் ஏற்கெனவே இருப்பவர்களுக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும்.

இந்த புதிய ஆஃபர் டிசம்பர் 28, 2018-ல் இருந்து ஜனவரி 31, 2019 வரை அமலில் இருக்கும். இந்த கேஷ்பேக், ஜியோவின் ஃபேஷன் இணையதளமான 'ஏஜியோ' கூப்பனாகக் கிடைக்கும். இந்தக் கூப்பனை ஏஜியோ ஆஃபர்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தக் கூப்பன், 'மைஜியோ' செயலியின் 'மைகூப்பன்ஸ்' பகுதியில் இருக்கும். இதைக் கொண்டு 'ஏஜியோ' செயலி அல்லது இணையதளத்தில் குறைந்தபட்சம் ரூ.1000க்குப் பொருட்கள் வாங்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.



ஏஜியோ கூப்பனை மார்ச் 15-ம் தேதிக்கு முன்னாள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலமாகவோ ஜியோ விற்பனையாளர்கள் மூலமாகவோ இந்த புத்தாண்டு ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஜியோ நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 21.50 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஜியோ அறிவித்துள்ள ரூ.399 கேஷ்பேக், தொலைத்தொடர்பு நிறுவன வரலாற்றில் அதிகபட்சத் தொகையாகக் கருதப்படுகிறது.

கடும் குளிரின் தாக்கத்திலும் 5 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

Published : 29 Dec 2018 07:26 IST

சென்னை



ஊதிய முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் 5-வது நாளாக நேற்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள். படங்கள்: ம.பிரபு

கடும் குளிரின் தாக்கத்திலும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 5-வது நாளாக தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 200-க்கும் அதிகமான வர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தங்கள் குடும்பங் களுடன் இரவு, பகலாக தண்ணீர் மட்டும் குடித்து போராடி வருகின் றனர்.

இதுவரை உடல்நலக் குறை வால் 200-க்கும் அதிகமான ஆசிரியர் கள் ராயப்பேட்டை மருத்துவமனை யில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக் கான ஆசிரியர்கள் உடல் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.



சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குளிரைப் பொருட்படுத்தாமல் கைக்குழந்தையுடன் படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியை.

இரவு நேரங்களில் கொசுத் தொல்லையுடன், குளிரும் வாட்டும் நிலையில் வெறும் தரையில் படுத்து ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத் துக்கு திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், ஒரு நபர் குழு அறிக்கை தரும் வரை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என பள்ளிக்கல்வித் துறை உறுதியாக தெரிவித்துவிட்டது.

போராட்டம் தீவிரமானதால் சம்பவ இடத்தில் போலீஸாரும், மருத்துவக் குழுவினரும் தயாராக உள்ளனர். உடல் நலம் பாதிக்கப் பட்டு மயக்கமடைபவர்களுக்கு அங்குள்ள முகாமில் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. அதேநேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் களுக்கு தேவையான கழிவறை வசதிகள் செய்து தரப்பட வில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


மருத்துவமனை செல்ல மறுத்த ஆசிரியைக்கு ஏற்றப்படும் குளுக்கோஸ் பாட்டிலை பிடித்திருக்கும் கணவர். அருகில் மகள்.

இதற்கிடையே துப்புரவு பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தையே அரசு தங்களுக்கு வழங்குவதை சித்தரிக்கும் விதமாக இடைநிலை ஆசிரியர்கள் நேற்று டிபிஐ வளாகத்தில் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறும்போது, ‘‘ஒருநபர் குழு அறிக்கை தாக்கல் செய்த பின்னர் தான் முடிவெடுக்க முடியும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யதாவ் கூறியுள்ளார். ஒருநபர் குழு அறிக்கை பெறாமல் ஊராட்சி செயலர்களுக்கு மட்டும் 3 மடங்கு ஊதியத்தை அரசு உயர்த்தியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். பல அரசுத் துறைகளில் ஊதிய முரண்பாடுகள் இருப்பது உண்மைதான்.



தொடர் போராட்டத்தால் மயக்கம் அடைந்த ஆசிரியைக்கு மருத்துவர்கள் முதலுதவி செய்யும் சூழலில் பேப்பரை கொண்டு விசிறி விடும் பெண் காவலர்.

ஆனால், எந்த துறையிலும் ஒருநாள் இடைவெளியில் பணியில் சேர்ந்ததற்கு ரூ.15 ஆயிரம் அளவுக்கு சம்பள வேறுபாடு இல்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தாலும் போராட்டம் தொடரும்’’ என்றார்.

தேமுதிக ஆதரவு

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 2-வது மகன் விஜய பிரபாகரன் ஆசிரியர் களை நேற்று நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவளித் தார். தொடர்ந்து அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘முதல்வர் பழனிசாமி இந்த வி‌ஷயத் தில் தலையிட்டு, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை விஜயகாந்த் விரைவில் நலம் பெறுவார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அவரது உடல்நிலை சரியாகி விடும்’’என்றார்.
சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளித்தால் மரண தண்டனை: சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By DIN | Published on : 29th December 2018 03:28 AM |




சிறார்களை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
18 வயதுக்குக் குறைவான சிறுமிகள், சிறார்களுக்கு பாலியல் தொல்லைகள் அளிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

இந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக பல்வேறு பிரிவுகளில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
அந்தத் திருத்தங்களை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், சிறார்கள் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். போக்சோ சட்டத்தின் 4, 5, 6, 9, 14, 15, 42 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்றார்.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை உள்பட கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு போக்சோ சட்டத்தின் பிரிவு 4, 5, 6 ஆகியவற்றில் கொண்டுவரப்பட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
பாலின நடுநிலையுடன் 18 வயதுக்குக் கீழுள்ளவர்களை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது.

இயற்கைப் பேரிடர்களின்போது சிறார்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதிலிருந்து தடுப்பதற்கும், சிறுமிகள் விரைவில் பூப்பெய்துவதற்காக மருந்துகளை கொடுப்பதைத் தடுப்பதற்கும் போக்சோ சட்டத்தின் 9ஆவது பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
இச்சட்டத்தின் 14, 15 ஆகிய பிரிவுகள், சிறார்கள் ஆபாசப் படங்களைத் தடுப்பதற்கு வகை செய்கிறது.

சிறார்களின் ஆபாசப் படங்களை அழிக்காமல் இருந்தால் சிறை தண்டனையுடன், அதிக அபராதமும் அல்லது இரண்டில் ஒன்றோ விதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை: புதிய திட்டத்தில் ஹோட்டல் நிர்வாகங்கள்

By DIN | Published on : 28th December 2018 02:49 PM |



பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தமிழக அரசு பிறப்பித்திருக்கும் தடை உத்தரவு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

காற்று போல எங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட பிளாஸ்டிக் பொருட்களை நிச்சயம் மனிதர்களால் அவ்வளவு எளிதில் விட்டொழிக்க முடியாது. படிப்படியாகவே அதன் நாசவலையில் இருந்து விடுபட வேண்டும்.


ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப் பை, மண் குவளைகள் போன்றவற்றை கொண்டு வந்தாலும், அவை சில இடங்களில் அதிக செலவையும், கிடைப்பதில் சிரமத்தையும் கொண்டுள்ளது.

முதற்கட்டமாக, பிளாஸ்டிக் மெழுகு சேர்க்கப்பட்ட காகித டம்ளர்களுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு முன்வந்துள்ளது. அதே போல, தங்களது உணவுப் பொருட்களையும் கட்டிக் கொடுக்கும் பிளாஸ்டிக் கவர்களுக்கும் மாற்றுப் பொருட்களை ஹோட்டல் நிர்வாகங்கள் நிச்சயம் இதற்குள் கண்டுபிடித்திருப்பார்கள் என்றே நினைத்திருப்போம்.

ஆனால், அவர்கள் சொல்வது என்னவென்றால், காகித கப்புக்கு விலக்கு அளிக்கப்பட்டது போல எங்கள் உணவுப் பொருட்களை குறிப்பாக திரவ உணவுப் பொருட்களைக் கட்டிக் கொடுக்கவும் விலக்கு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

மேலும், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் இது தொடர்பாக கோரிக்கை வைக்கவும், 6 மாத கால அவகாசம் அளித்தால் மாற்று வழியை கண்டுபிடித்து விடுவதாகவும் உறுதி அளிக்கிறார்கள்.

இதுவரை எங்களுக்கு குறைந்த விலையில் மாற்று வழி கிடைக்கப்பெறவில்லை. வெறும் 6 மாத காலத்தில் பல்வேறு பயன்பாடுகளில் இருக்கும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தடை செய்து விட முடியாது. சற்று கால அவகாசம் வேண்டும்என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

இனிமை தருமா தனிமை?

By கிருங்கை சேதுபதி | Published on : 29th December 2018 01:19 AM


முடியுமா முடியாதா என்பது ஒருபுறம் இருக்க, எது தனிமை? என்கிற கேள்வி எழுகிறது. இன்னொருவர் என்று எவருமிலா நிலையில் இருப்பது தனிமை. இது பெரும்பாலும் தனியறையில், ஓய்வறையில் கிடைப்பது. இது தனித்தனிமை. இன்னொன்று பொதுத்தனிமை.

ரயிலிலோ, பேருந்திலோ பயணித்துக் கொண்டிருக்கும்போது, யாருடனும் ஒட்டாமல் அந்நியப்பட்டிருக்கும் தனிமை. முன்னது இயற்கை, பின்னது செயற்கை. பணியிடங்களிலும் பொது இடங்களிலும் பலரது இல்லங்களிலும்கூட, இத்தகு தனிமை இப்போது அதிகரித்துக்கொண்டே போகிறது.

ஒரு காலத்தில் முதியோர்கள்தாம் பேச்சுத் துணைக்கு ஆட்கள் இன்றி இத்தகு அவஸ்தைக்கு உள்ளாவர். பொழுதுபோக்குக் கருவிகள் வந்த பிறகும்கூட, அவர்களை அந்தத் தனிமை விடாது வருத்தியது. ஆனால், தற்போது இத்தகு தனிமைக்குள் தாமே விரும்பி, இளைஞர்கள் பலரும் சிக்கியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் இளம் பெண்களின் எண்ணிக்கைக் கூடுதல்.

இது ஒருவகையில் நோய் என்கிறார்கள். யாருடனும் கலந்து பழகவோ, பேசவோ, விருப்பமில்லாமல் போகிற மனநிலை இதனால் வாய்த்துவிடுகிறது. தொடக்கத்துத் தயக்கம் பின்னர் சுபாவமாக மாறி, இதனை இயல்பாக்கிவிடுகிறது. இதில் ஒருவித சுதந்திரவுணர்வும் சுகமும் இருப்பதுபோல் தோன்றினாலும், இதுவும் ஒருவித அடிமை மனோபாவம்தான். தன்னையுமறியாமல் ஆட்பட்டுப்போன ஆணோ, பெண்ணோ இணைந்து வாழத்தொடங்குகிற இல்லறத்தில் தடுமாறி, தடம் மாறிப்போகிறார்கள். பணியிடத்தில் இப்போக்கு ஏற்படுத்தும் விளைவோ இன்னும் விபரீதம். இதில் உறவோடு நட்பும் பலி கொள்ளப்படுகிறது; அது பழிவாங்கலுக்கு வித்திடுகிறது. இயல்பான மனித குணம் சிதைவுற்றுத் தேய்கிறது; வன்மம் தலைதூக்குகிறது.

இன்றைய உலகில், ஒருவரோடு பேசாமல், பழகாமல் வாழ்தல் இயலாத காரியம். தனிநிலையில் தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கென்று வாய்த்ததே இந்த மனிதப்பிறவி. அதற்குப் பெற்றோரும் உற்றாரும் உதவி செய்யக் கூடியவர்கள். பிறப்பாலும், சூழலாலும் வருகிற பிழைபாடுகளைக் கண்டறிந்து களைகிறவர் ஆசிரியராகக் கொள்ளத்தக்கவர். அவர்கள் பத்திரிகையாசிரியராகவும், படைப்பாசிரியராகவும் இருக்கலாம்; குருநாதராகவும் இருக்கலாம். ஏன், அவர் கணவராகவும், காதலராகவும், நண்பராகவும், பெற்ற பிள்ளைகளாகவும் கூட இருக்கலாம்; ஆண்களுக்குச் சகோதரியாகவும், மனைவியாகவும், தோழியாகவும், இன்னபிற உறவினர்களாகவும் இருக்கலாம்; திருநாவுக்கரசருக்கு ஒரு திலகவதியார் போல, மணிவாசகருக்குக் குருந்தமரத்தடியில் கிடைத்த ஒரு குருநாதர்போல, பட்டினத்தாருக்கு அவர் வளர்த்த பிள்ளையைப் போல, காரைக்காலம்மையாருக்கு இறைவனே போல, யாருக்கும் யாரும் வாய்க்கலாம். இந்நிலை அறிவுரையாலும் கிட்டலாம்; அனுபவத்தாலும் வாய்க்கலாம்.

அறிவிலிருந்து அனுபவத்திற்கும், அனுபவத்தில் இருந்து அறிவுக்கும் கொண்டுசெலுத்தித் தன்னைத் தகவுடையவராய் உயர்த்திக்கொள்ள உதவும் ஒரு சந்தர்ப்பமே தனிமை. அது ஒரு நோயல்ல, தவம்; தவங்களைத் தன் வசமாக்கிக் கொள்ள இயற்கை கொடுத்த இனிய வரம்.
தனிமை என்று ஒன்றுமே இல்லை. துணையாய் யாரும் இல்லாத நிலையில், ஒருவருக்கு மனமே துணை; அதனைச் சரிவர பயன்கொள்ள முடியாதவர்களுக்கு, அதுவே பகை. வாழ்க்கைத் துணையாகவும், வழித்துணையாகவும், அறிவுத்துணையாகவும் சிலர் அமைந்துவிடுகிறபோது வாழ்க்கை சிறக்கிறது. 

மனம் உடையவர்கள்தானே மனிதர்கள். அந்த மனதை தன் வசமாக்கிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு, தனிமை மாதிரி இனிமை தருகிற வேறொன்று இல்லவே இல்லை. அதனால்தான், தனிமை கண்டதுண்டு அதிலே சாரம் இருக்குதம்மா என்று மகாகவி பாரதியார் பாடினார்.
81 ஆண்டுகள் தனித்திருந்து வாழ்ந்த அப்பர் பெருமான், என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை என்கிறார். எத்தனையோ அல்லல்களைத் தன் வாழ்வில் அவரும் அனுபவித்தவர்தான். ஆனால், அவர் மனத்தொடு முறைப்பட வாழத்தொடங்கிய பிறகு, இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று உறுதிப்பாட்டு நிலையை எய்துகிறார். இது எல்லாச் சமயப் பெரியோர்களுக்கும், சமுதாய வழிகாட்டிகளுக்கும் வாய்த்தது என்றால், நமக்கு மட்டும் வசப்படாமலா போகும்? துன்பத்தை இன்பமாக்கும் நுட்பத்தை இவர்களது வாழ்க்கை கற்றுத் தருகிறது.
இந்த வாழ்வில், இன்பத்தைப் பெறுகிற நல்வாயிலாக, இல்லறம் இருக்கிறது; பின்னர் அது நல்லறமும் ஆகிறது. தனித்திருந்து தவம் செய்கிற ஒருவரின் வாழ்வு துறவறம் ஆகிறது. அவருக்கு உற்ற துணையாய்ப் பரம்பொருள் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இல்லறத்திற்கும் துறவறத்திற்கும் இனிய துணையாக இருக்கிற பொதுப்பொருள், இப்பரம்பொருள். இது அவரவர்க்குரிய இறையாக, இறை நம்பிக்கையற்றோருக்கு இயற்கையாக இருந்து ஆற்றல் தருகிறது.

அதனால்தான், தனிமையில் இனிமை காண்போர், இயற்கை எழில் நிறைந்த இடத்திற்குப் போகிறார்கள். பலர் இறைவன் இருக்கும் திருக்கோயில்களுக்குச் செல்கிறார்கள். சிலர் ஏதுமற்ற அமைதி நிலையில் தியானம் புரிகிறார்கள். பலர் பொதுச்சேவையில் ஈடுபடுகிறார்கள். எதையோ, எப்படியோ அறப்பணியாய்ச் செய்கிறார்கள். தன்னிலை மறந்து தனிநிலை எய்தும் இத்தனிமைத் தவத்தின்வழி, சும்மா இருக்கக் கற்றவர்கள்தான் சுகமாய் இருக்கும் வழி அறிகிறார்கள். அப்போது அவர்களுக்குப் புரிகிறது, தனிமை என்பது தனிமை இல்லை என்பதும், அது வெளியில் இல்லை, உள்ளேதான் என்பதும்.

இப்போது தனிமை இனிமையாகி விடுகிறது. இந்தத் தனிமை, எல்லாருக்கும் மேலே இருக்கிற வானத்தை, அவரவர்க்குமான வானமாக்கிக் கொள்வதைப்போல, எங்கும் உலவி வருகிற காற்றில் இருந்து தனக்கான சுவாசத்திற்கு ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதுபோல, பொதுவெளியில் தனக்கான தனிவெளியை உருவாக்கிக்கொள்ள வழிவகுக்கிறது. பல நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கவும், தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. இதுதான் ஒவ்வொருவரது தனித்தன்மையையும் சிதையாமல் காப்பாற்றிக் கொள்ளவும் துணைபுரிகிறது.

அதனால்தான், ஒளவையார், இனிமையில் இனிமை தனிமை என்றும், இனிது இனிது ஏகாந்தம் இனிது என்றும், அதனினும் இனிது, ஆதியைத் தொழுதல் என்றும், அதனினும் இனிது, அறிவினரைச் சேர்வது என்றும் கூறிய அவர், அதனினும் இனிது, அறிவுள்ளாரைக் கனவிலும் நனவிலும் காண்பது என்று அவர் முடிக்கிற இடம்தான் மிகவும் இன்றியமையாதது.
அத்தகு அறிவுள்ளாரைக் கனவிலும் நனவிலும் காண்பதை விட்டுவிட்டு, கருதுவதை விட்டுவிட்டு, அறிவியல் கருவிகளுக்கு அடிமையாகிப் போனதுதான் தற்காலத் தலைமுறைக்கு நேர்ந்திருக்கிற நெருக்கடி.
இன்றைக்கு அந்த இடத்தைச் செல்லிடப்பேசி பிடித்திருக்கிறது. தனிமைக்குப் பயந்த காலம்போய் தனிமைக்குத் துணைதேடியவர்கள், தத்தம் கைப்பேசிகளுக்குள் முகம் புதைப்பதும் செவி சாய்ப்பதும் இப்போது பெரிதும் அதிகரித்து வருகிறது. கத்தி பிடித்தவன் கை சும்மா இருக்காது என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. அப்போது கத்தி; இப்போது கைப்பேசி. பல இடங்களில் பலரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள், அருகில் இருக்கும் சகமனிதர்களுடன் அல்ல, எங்கோ இருப்பவர்களுடன். நேருக்குநேர் முகம் பார்த்துப் பேசுகிற சந்தர்ப்பம் வருகிறபோதும், செல்லிடப்பேசியில், முகநூலில் முகம் புதைத்துக்கொண்டு வார்த்தையாடுகிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

முன்பெல்லாம் ரயிலிலோ, பேருந்திலோ, ஜன்னலோர இருக்கை கிடைத்துவிட்டால் ஏற்படுகிற ஆனந்தத்தைச் சொல்லி மாளாது. அது இல்லாவிட்டால் இதழ்களும், நூல்களும் இனிய துணையாகும். அதையும் கடந்து, அகநக நட்புக்குத் துணைசெய்யும் ரயில் சிநேகிதம், இப்போது சொந்த உறவுகளுடன் கூடப் பேசிப்பழக வாய்ப்பில்லாதபடிக்கு அத்தனையையும் வாரிச்சுருட்டி எடுத்துத் தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது செல்லிடப்பேசி. பெயருக்குத்தான் அவரவர்களின் கைகளில் அவை; உண்மையில் அவற்றின் கைகளில்தான் நாம் அனைவரும் இருக்கிறோம்; பல சமயங்களில் இருக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல்.
அறிவியல் யுகத்தில் இது தவிர்க்கவியலாத வளர்ச்சி என்று கருதுவதில் பிழையில்லை.

ஆனால், அது அறிவையும் பொதுவுணர்வையும் அபகரித்துக் கொள்வதோடு, இனிமையாய்க் கழிக்க வேண்டிய தனிமைப் பொழுதைப் பல்வேறு வக்கிரமான எண்ணங்களுக்குள் ஆழ்த்தி, அக்கிரமச் செயல்கள் புரியத் தூண்டும் கிரியா ஊக்கியாகி விடுகிறதே? பழக்கத்தில் தொடங்கி, வழக்கத்திற்கு வந்து, இப்போது புதிய புதிய சிக்கல்களை உண்டுபண்ணி, வழக்குக்குக் கொண்டுபோய் நிறுத்தி வருகிறதே?

இதற்கெல்லாம் கவலைப்படாமல், இந்த வாழ்வை இன்பமாக்கிக்கொள்ள ஏது வழியென்று, தனிமையில் இருந்து சிந்திக்கலாம் என்று நினைத்தபோது, செல்லிடப்பேசி ஒலிக்கிறது...
 ஜெ., மரண விசாரணை,விஜயபாஸ்கருக்கு,சிக்கல்

dinamalar 29.12.2018

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்த விசாரணையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே, 'சம்மன்' அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாத அவருக்கு, நீதிபதி ஆறுமுக சாமி கமிஷன், மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
இதற்கிடையில், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான, மருத்துவ வார்த்தைகள், தவறாக பதிவு செய்யப்படுவதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், புதிய குற்றச்சாட்டை கிளப்பி உள்ளது.ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. ஏழு மனுதாரர்கள் உட்பட, 140க்கும் மேற்பட்டோரிடம், விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

இதுவரை நடந்த விசாரணையில், ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் தரப்பட்ட சிகிச்சை மற்றும் அவர் சாப்பிட்ட உணவு தொடர்பாக, சிகிச்சை அளித்த டாக்டர்கள், முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர்.இன்னும் ஒரு சிலரிடம் மட்டுமே, விசாரணை நடத்த வேண்டி உள்ளது.

ஜனவரி முதல் வாரத்தில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஜெ., பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி மற்றும் ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலரிடமும், விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை, கண்காணிக்க



வேண்டிய பொறுப்பில் இருந்தவர், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். எனவே, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக, டிச., 18ல், விசாரணைக்கு ஆஜராகும்படி, சம்மன் அனுப்பப்பட்டது; ஆனால், அவர் ஆஜராகவில்லை.

எனவே, ஜன., 7ல் ஆஜராகும்படி, அவருக்கு மீண்டும், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவ மனையில், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை கண்காணிப்பதற்காக, அரசு தரப்பில், தனி மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் இடம் பெற்றிருந்த பலர், 'ஜெயலலிதாவை பார்த்ததில்லை' என, கூறி உள்ளனர். அவர்களை, ஏன் பார்க்க அனுமதிக்க வில்லை என்பதற்கும், அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் கூற வேண்டிய கட்டாயம் உள்ளது.

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்காக, தனி அறை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அவர், அங்கேயே தங்கி இருந்துள்ளார். எனவே, ஜெயலலிதாவை யாரெல்லாம் பார்த்தனர்; எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற

விபரங்கள் அனைத்தும், அவருக்கு மட்டுமே தெரியும் என, விசாரணை கமிஷன் நம்புகிறது. மேலும், மருத்துவ மனையில் பொருத்தப்பட்டிருந்த, கண்காணிப்பு கேமராக்களை, ஜெ., சிகிச்சை பெற்ற காலத்தில், அகற்ற உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு, இதுவரை, நீதிபதி ஆறுமுகசாமிக்கு பதில் கிடைக்கவில்லை.

அப்பல்லோ மருத்துவர்கள், நிர்வாகத்தினர் தரப்பில் நடத்திய விசாரணையிலும், இக்கேள்விக்கு சரியான விடை கிடைக்க வில்லை.எனவே, ஜெ., மரணத்தில் புதைந்துள்ள மர்மங்கள் பற்றிய பல கேள்விகளுக்கு, பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில், விஜயபாஸ்கர் இருக்கிறார். அந்த சிக்கலில் இருந்து தப்பிக்கவே, விசாரணை கமிஷன் தொடர்ந்து சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் அவர் தவிர்த்து வருகிறார் என, கமிஷன் வட்டாரம் புகார் தெரிவிக்கிறது.  இருந்தாலும், விஜயபாஸ்கரை விடக் கூடாது; விசாரணைக்கு இழுத்தே தீருவது   என்பதில், கமிஷன் வட்டாரம் உறுதியாக உள்ளது.இதற்கிடையில், சென்னை, அப்பல்லோ மருத்துவ மனை நிர்வாகம் சார்பில், விசாரணை கமிஷனில், புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப் பட்டு உள்ளது.

அதில், 'மருத்துவமனை சார்பில் முன்வைக்கப்படும், மருத்துவம் சார்ந்த சொற்கள், தவறாக பதிவு செய்யப்படுகின்றன; அவை, பொது வெளியில், தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன. 'எனவே, இவற்றை ஆராய்ந்து வெளியிட, தனி மருத்துவர்கள் குழுவை அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மே, 1ல், மருத்துவக் குழு அமைக்க, விசாரணை கமிஷனுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், இதுவரை, மருத்துவக் குழு அமைக்கப்படவில்லை. இதையும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், கமிஷன் விசாரணையில் சுட்டிக் காட்டியுள்ளது.

பன்னீருக்கு, 'சம்மன்'

துணை முதல்வர் பன்னீர்செல்வம், டிசம்பர், 20ல் ஆஜராக, ஏற்கனவே, 'சம்மன்' அனுப்பப் பட்டிருந்தது. ஆனால், 18ம் தேதி ஆஜராக வேண்டிய, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராக வில்லை. எனவே, துணை முதல்வரின் தேதியை, கமிஷன் மாற்றம் செய்து, ஜன., 8ல் ஆஜராகும் படி, சம்மன் அனுப்பியுள்ளது. லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜன., 11ல் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம், ஜன., 9ல், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, விசாரணை நடத்தப்பட உள்ளது.

- நமது நிருபர் -

விடுதிகளில் சோதனை யு.ஜி.சி., உத்தரவு

Added : டிச 28, 2018 22:38

சென்னை, மாணவர் விடுதிகளில், திடீர் சோதனை நடத்த, கல்லுாரிகள் மற்றும்பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், யு.ஜி.சி., என்ற, பல்கலை மானிய குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:உயர் கல்வி நிறுவனங்களில், 'ராகிங்'கை தடுக்க, உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.'வளாகங்களில், கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்; ராகிங் தடுப்பு குழு ஏற்படுத்த வேண்டும்' என, பல உத்தரவுகள்பிறப்பிக்கப்பட்டு உள்ளன.இவற்றை செயல்படுத்தாத கல்லுாரிகள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அதேபோல், அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளும், வகுப்பறை, வளாகம், மாணவ - மாணவியர் விடுதிகள், கேன்டீன், பஸ் நிறுத்தம் போன்ற இடங்களில், திடீர் சோதனை நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NEWS TODAY 25.01.2026