Sunday, August 11, 2019

மறக்க முடியாத திரையிசை: தொலைத்தவளின் மன வரிகள்




பி.ஜி.எஸ்.மணியன்

ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தியப் பண்பாடு. இருந்தாலும், கட்டிய மனைவியைக் கண்கலங்க வைத்துவிட்டு இன்னொருத்தியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காலப்போக்கில் மனம் மாறி மனைவியுடன் முன்னைவிட இறுக்கமாக இணைந்து வாழ்வதும் உண்டு.

ஆனால்.. இடையில் அவனை நம்பி வாழ்க்கையையே தொலைத்த அப்பாவிப் பெண்ணின் நிலை? கள்ளமே இல்லாமல் ஆணின் ஆசைக்குப் பலியானது ஒன்றுதானே அவள் செய்த தவறு?

களங்கத்தையும் பழிச்சொல்லையும் மட்டுமே சுமந்து வாழும் அந்தப் பெண்ணின் எண்ண ஓட்டங்களை இதுவரை யாருமே சிந்தித்ததில்லை; கவியரசர் கண்ணதாசனைத் தவிர.

1967-ம் ஆண்டு புதுமை இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய ‘நெஞ்சிருக்கும் வரை' படத்துக்காக கவியரசரின் கைவண்ணத்தில் பிறந்த இந்தப் பாடலுக்கு ஒரு தனித்தன்மை உண்டு.

கதைப்படி மது, மாது என்று கட்டிய மனைவியை ஒதுக்கிவைத்துவிட்டு வாழும் கணவன் வீட்டுக்கே இன்னொரு பெண்ணைக் கூட்டி வந்து நடனமாடச் சொல்கிறான்.

இந்த இடத்தில்தான் கவியரசர் அந்தப் பெண்ணை ஒரு போகப்பொருளாகப் பார்க்காமல், வாழ்வை அதன் போக்கில் எதிர்கொள்ளும் புதுமைப் பெண்ணாகப் பார்க்கிறார். பாடலின் ஒவ்வொரு சரணத்திலும் முத்தாய்ப்பாக வரும் கடைசி வரிகள் அதிர வைக்கின்றன. அனுதாபப்பட வைக்கின்றன. பிரமிக்க வைக்கின்றன. 

அந்தப் பாடல்தான் இசைக்குயில் எஸ். ஜானகி அவர்கள் பாடிய 'நினைத்தால் போதும் பாடுவேன்' என்று தொடங்கும் பாடல். இந்தப் பாடலை ஹம்சானந்தி ராகத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் செதுக்கி எடுத்திருக்கிறார் என்றால் அது மிகை அல்ல. இப்படிக்கூட மெல்லிசையில் ராகத்தின் ஜீவன் முழுவதையும் வெளிக்காட்ட முடியுமா என்று வியக்க வைக்கும் ஹம்சானந்தி!

ஜானகி அம்மா பாடலைப் பாடியிருக்கும் விதம், வெளிப்படுத்தி இருக்கும் பாவங்கள், குரலில் பிறக்கும் கமகங்கள், செய்திருக்கும் ராக சஞ்சாரங்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருக்கலாம். ஒரு துளிக்கூடப் பிசிறே இல்லாத.. இனிமையைத் தவிர எதுவுமே செவிகளில் பாயாத வகையில்.. பாட வைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர்.
‘நினைத்தால் போதும் பாடுவேன்.
அணைத்தால் கையில் ஆடுவேன்.
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்’

முதல் சரணத்தில், தன்னால் என்னென்ன செய்ய முடியும் என்று சொல்பவள், “இப்படி எல்லாம் நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடுவதால் என்னைக் கேவலமாக நினைத்துவிடாதே. பொதுவாகப் பெண்களின் மென்மையைக் குறிப்பிடும்போது இதமாக வருடிச் செல்லும் தென்றல் காற்றுடன் ஒப்பிட்டுச் சொல்வதுண்டு.

பாலின் நிறமும் பனியின் மென்மையும் கொண்ட நான், அந்தத் தென்றல் காற்றைவிட மேலானவள். எப்படித் தெரியுமா? தென்றல் காற்று, இடம், பொருள், ஏவல் பார்க்காமல் எல்லா இடத்திலும் பறந்து செல்லும். நானோ ஏக்கம், தவிப்பு எதுவானாலும் சரி உன்னைத் தவிர எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு அலைய மாட்டேன்.” என்கிறாள்.
'பாலின் நிறம்போல உருவான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
எங்கும் பறந்தோடும் இளம்தென்றல் அல்ல
ஏக்கம் வரும்போது எல்லோர்க்கும் சொல்ல..'

இந்த இடத்தில் தன்னையும் அறியாமல் கவியரசர் கையாண்டிருக்கும் ’வேற்றுமை அணி நயம்’ வியக்கவைக்கிறது. உவமை சொல்லும் பொருளைவிட - உவமைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பொருளை உயர்வாகச் சித்தரிப்பதுதான் வேற்றுமை அணி. தென்றலுக்கு உவமை சொல்லப்படும் பெண்ணை அந்தத் தென்றலைவிட உயர்வாகக் காட்டி இருக்கிறார் கவியரசர்.

சரணங்களுக்கு இடையில் வரும் இணைப்பிசையில் மெல்லிசை மன்னர் கூட்டி இருக்கும் வயலின்களின் விறுவிறுப்பு, இணைப்பிசை முடியும் இடத்தில் தபேலாவின் தாளக்கட்டு, ஒரு ராகத்தை மெல்லிசையில் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு பாடம்.

தொடரும் சரண வரிகள் லேசான அதிர்வை மனசுக்குள் ஏற்படுத்துகின்றன. ‘காலம் எப்போதும் சீரான ஒழுங்குக்குள் இருப்பதில்லை. நான் உன்மீது கொண்ட காதலும் தவறான ஒன்றல்ல. நாளையே நீ மாறி உன் மனைவியுடன் இணைந்து வாழ நேரிடலாம். ஆனால், நானோ இருவரும் இணைந்திருந்த இன்ப நினைவுகளை மட்டுமே சுமந்து வாழ்ந்தாக வேண்டும்' என்று வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்த பெண்ணின் குரலாகக் கவியரசர் ஒலிக்க வைத்திருக்கிறார்.
‘காலம் எந்நாளும் முறையானதல்ல
காதல் எந்நாளும் தவறானதல்ல
நாளை இந்நேரம் நீ மாறக்கூடும்
நடந்த நினைவோடு நான் வாழ நேரும்'

கடைசி சரணத்திலோ சாட்டையடி கொடுப்பது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள். “கேள்வி என்று ஒன்று வந்தால் பதில் என்று ஒன்று வந்துதான் தீர வேண்டும். அந்தப் பதில் மனதுக்கு இசைவானதாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மனத்தைக் காயப்படுத்தவும் செய்யும். ஆகவே, எதையும் கேட்க நினைக்காமல், வாழ்வைச் சுகமாக நீ வாழும்போது உன் மனைவிக்கும் மனம் என்று ஒன்று இருக்கும் என்பதை நினைவில்கொண்டு, அதை முடிந்தால் காயப்படுத்தாமல் வாழப் பார்." என்று நறுக்கென்று அறிவுரை கூறி முடிக்கிறாள் அவள்.

'கேள்வி வரும்போது பதில் ஒன்று வேண்டும்
கேட்க நினைக்காத மனம் ஒன்று வேண்டும்
வாழ்வை சுகமாக நீ வாழ வேண்டும்.
மனதை மனதாக நீ காண வேண்டும்’.

வாழ்க்கையைத் தொலைத்த பெண்ணின் மனக்குமுறல் பாடல் முடிந்த பிறகும் பலத்த அதிர்வைக் கூட்டுகிறதே. அதுவே பாடலின் வெற்றிக்கு ஒரு சாட்சி.

தொடர்புக்கு: pgs.melody@gmail.com
படம் உதவி ஞானம்
கோவை அரசு மருத்துவமனையில் அள்ளிக் கொடுக்கப்படும் மாத்திரைகள்: எந்த மாத்திரையை எப்போது உட்கொள்வது? புரியாமல் திணறும் நோயாளிகள் 



த.சத்தியசீலன்

கோவை 10.08.2019

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் அள்ளிக் கொடுக்கப் படுகின்றன. எந்த மாத்திரையை எப்போது உட்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் திணறுகின்றனர், நோயாளிகள்.

கோவை-திருச்சி சாலையில் செயல்பட்டு வருகிறது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. நாள்தோறும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை வெளி நோயாளிகளாகவும், 1,500 முதல் 1,700 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய் பாதிப்புக்கு ஏற்ப வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை, மொத்தமாக அள்ளிக் கொடுப்பதால், எந்த மாத்திரையை எப்போது சாப்பிடுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர், நோயாளிகள்.

“சிகிச்சை பெறுவதற்கு, நோயாளிகள் விவரம், நோயின் தன்மை குறித்து தெரிவித்து அனுமதிச் சீட்டு பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும். அதன்பின்னர் பரிசோதனை செய்து, நோயாளிகளுக்கு, மருத்துவர்கள் மருந்துச்சீட்டு எழுதிக் கொடுக்கின்றனர்.

மருந்து கொடுக்கும் இடத்தில் மருத்துவர் எழுதி கொடுக்கும் மாத்திரைகளை இந்தந்த மாத்திரைகளை, இந்தந்த வேளைகளில் உட்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கூறி, அள்ளி கொடுத்து விடுகின்றனர். வீட்டுக்குச் சென்றவுடன் எந்த மாத்திரையை எப்போது உட்கொள்ள வேண்டும் என்பது மறந்து விடுகிறது. படிப்பறிவற்றவர்கள், முதியவர்கள், இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். மருத்துவர்கள் எழுதிய மருந்துச்சீட்டை படிக்கத் தெரிந்தவர்கள் மாத்திரைகளைக் கண்டுபிடித்து உட்கொள்கின்றனர். ஆனால் படிக்காதவர்களுக்கு முடியாது.

எந்தெந்த மாத்திரைகளை, எப்போது உட்கொள்ள வேண்டும் என்று பேப்பர் கவரில் எழுதி, அதில் மருந்து மாத்திரைகளைப் போட்டு கொடுத்தால் காலை, மதியம், இரவு குறிப்பிட்டுள்ளதைப் பார்த்து மருந்துகளை உட்கொள்ள நோயாளிகளுக்கு எளிதாக இருக்கும்” என்றனர், நோயாளிகள்.

இது குறித்து கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேஷ் கூறும்போது, ‘நோயாளிகளுக்கு மாத்திரைகளை பேப்பர் கவரில் தெளிவாக எழுதி கொடுக்க வேண்டியது அவசியம். மருந்து, மாத்திரைகள் நோயாளிகளின் உயிருடன் சம்பந்தமுடையது. கோடிக்கணக்கில் முதலீடு செய்து சிகிச்சைக்காக கருவிகள், உபகரணங்கள் வாங்கப் படுகின்றன. மாத்திரைகளைப் போட்டு கொடுக்க பேப்பர் கவர்கள் வாங்கி வைக்கலாம். கோவை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இம்முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் அமைப்புகளுக்கு அனுமதி அளித்தால், பேப்பர் கவர்களை மருத்துவமனைகளுக்கு வழங்குவர். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்.
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் போலீஸாருக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை


கத்தரிப்பூ நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர்.

காஞ்சிபுரம்

பொதுமக்கள் எழுப்பிய புகாரின் அடிப்படையில் அத்திவரதர் தரிசனத்தின் மிக முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று முன்தினம் இரவு திடீர் ஆய்வு செய்தார்.

அத்திவரதர் வைபவம் ஆரம் பித்த நாள் முதலே காவல்துறை யினர் அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயிலில் போலீஸார் பலரை அழைத்துச் சென்றதாகவும், இத னால் உரிய அனுமதிச் சீட்டு வைத்துள்ளவர்கள் பாதிக்கப்பட்ட தாகவும் பலர் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெற்றது.

ஆய்வின்போது ஆட்சியர், ‘‘பொதுமக்கள் பலரும் மணிக் கணக்கில் காத்திருக்கிறார்கள். நீங்கள் உங்களுக்கு வேண்டிய வர்களை மட்டும் முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதி சீட்டு இல்லாமல் விஐபி தரிசனத்தில் அனுப்புகிறீர்கள். நீங்கள் உங்கள் இஷ்டப்படி செயல்பட்டால் பொது மக்கள் கூறும் புகார்களுக்கு யார் பதில் சொல்வது? உங்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் திருந்துவீர்கள்.

இதுபோன்று பொறுப்பில்லாமல் செயல்பட்டால் இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை செய்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக’’ கூறிச் சென் றார்.

முறைகேடுகள் தடுக்கப்படும்

ஆனால் ஆட்சியர் காரணம் இல்லாமல் காவல் துறையினரை ஒருமையில் திட்டியதாக சிலர், சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மிக முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படாவிட்டாலும், கூட்டம் கூட்டமாக பொதுமக்களை காவல் துறையினர் அழைத்து வருவது குறைந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் ஜூலை 1 முதல் நடை பெற்று வருகிறது. 41-ம் நாள் உற்சவமான நேற்று அத்திவரதர் கத்தரிப்பூ நிறப் பட்டாடை அணிந்து காட்சி அளித்தார். அத்திவரதரை தரிசிப்பதற்கான கடைசி சனிக் கிழமை இதுதான் என்பதால், சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் நீண்ட வரிசை யில் காத்து நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

அத்திவரதர் வைபவம் ஜூலை 17-ம் தேதியும், தரிசனம் ஜூலை 16-ம் தேதியும் முடிவடைய இருப்பதால் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிக ரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதைத் தொடர்ந்து தற் போதுள்ள வரிசையை தாண்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால் அவர்களை வரிசைப்படுத்த காஞ்சி புரம் - செங்கல்பட்டு சாலையில் டி.கே.நம்பி தெருவில் இருந்து செட்டித் தெரு வரை தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் நடந்து செல்வதற் கும், சில பகுதிகளில் மட்டும் மோட்டார் சைக்கிள்கள் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது. பொது தரிசனத்துக்கு வரும் பொதுமக்கள் டி.கே.நம்பி தெருவில் நின்று அண்ணா நினைவு இல்லம் வழி யாகச் சென்று அதற்கு எதிர்புறத்தில் உள்ள அண்ணா அவென்யூ பகுதியில் இருக்கும் தங்கும் இடம் வழியாக அனுப்பப்பட்டனர். பின்னர் அங்கிருந்து கோயில் மதில் சுவர் ஓரம் செல்லும் வரிசை கிழக்கு கோபுரத்தில் நுழைந்து அங்கு ஒரு தங்குமிடம் வழியாகச் சென்று அதைக் கடந்து 750 மீட்டர் வரிசையில் சென்றால் அத்திவரதர் இருக்கும் வசந்த மண்டபத்தை அடைய முடியும்.

இதேபோல் தெற்குமாட வீதி வழியாக வரும் வரிசை கிழக்கு கோபுரத்தில் நுழையும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் வரிசையில் செல்லும் வழியில் தங்குமிடங்களில் கழிப்பிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆங்காங்கே குடிநீர் வழங்கப்படு கிறது. சில நேரங்களில் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. வரிசை யில் வரும் பக்தர்கள் கழிப்பிடங் களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

உணவுத் துறை அமைச்சர் காமராஜ், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், பாஜக தேசிய செயலரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான முரளிதர ராவ், எழுத்தாளரும் இந்திய ஆட்சிப்பணித் துறை அதிகாரியுமான வெ.இறையன்பு, பிரபல டிரம்ஸ் இசைக் கலைஞர் சிவமணி, பாப்புவா நியூ கினியா நாட்டின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு அமைச்சகத்தின் அமைச்சரான சசீந்திரன் முத்துவேல் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நேற்று அத்திவரதரை தரிசனம் செய் தனர்.

ஆட்சியர் மீது போலீஸார் அதிருப்தி

போலீஸாரின் அத்துமீறல்கள் குறித்து பக்தர்கள் குற்றச்சாட்டுகளை கிளப்பியதை தொடர்ந்து, விவிஐபி, விஐபி தரிசன வரிசையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், போலீஸாரை கடுமையாக எச்சரித்தார். இதுதொடர்பான வீடியோ நேற்று சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது.

இதனால் கோபமடைந்த போலீஸார், பதிலுக்கு தங்களது குமுறல்களையும் பதிவு செய்து வருகின்றனர். அதில், ‘இரவு பகலாக குடும்பத்தை மறந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஒட்டுமொத்த போலீஸாரையும் அவமதிக்கும் விதமாக ஒருமையில் ஆட்சியர் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரபல ரவுடி ஒருவருக்கு விவிஐபி அந்தஸ்து கொடுத்து தரிசனத்துக்கு அனுமதித்தது யார்?’ என்று போலீஸார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மருத்துவர்கள் போராட்டத்தால் சலசலப்பு

அத்திவரதர் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு உதவ மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்காக ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விவிஐபி வரிசைஅருகே உள்ள முகாமில் பணியாற்றும் மருத்துவர்கள் நேற்று பணிக்கு வந்தபோது, போலீஸார் அவர்களை அனுமதிக்க மறுத்து ஒருமையில் பேசியதாகவும், சில மருத்துவர்களின் அடையாள அட்டைகளை போலீஸார் கிழித்து எறிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மருத்துவர்கள் நேற்று தங்களின் பணிகளை புறக்கணித்து விவிஐபி வரிசை அருகே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி கண்ணன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மருத்துவர்களிடம் தவறாக நடந்துகொண்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள்கோவில் 6 வழி சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக படுத்திருக்கும் மாடுகள்




ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள்கோவில் 6 வழி சாலையில் மாடுகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக படுத்திருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 11, 2019 03:25 AM

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 6 வழி சாலைகளில் முக்கிய சாலையாக சிங்கபெருமாள்கோவில்- ஸ்ரீபெரும்புதூர் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நாள் தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் முதல் இலகுரக வாகனங்கள் வரை செல்கிறது. இந்தநிலையில் ஒரகடம், வல்லக்கோட்டை போன்ற பகுதிகளில் மாடுகள் அதிகமாக சுற்றி திரிகின்றன மேலும் ஒரகடம் வல்லக்கோட்டை பகுதிகளில் 6 வழி சாலையை ஆக்கிரமித்து சாலையின் நடுவில் அதிகமாக மாடுகள் படுத்துக் கொள்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனும் செல்கின்றனர்.

அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் ஒரகடம் பகுதி உள்ளது. ஆகவே இந்த மாடுகளை பிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தி வரதர் எழுந்தருளும் நீராழி மண்டபம் புதுப்பிக்க முடிவு

Added : ஆக 11, 2019 02:50




காஞ்சிபுரம்:காஞ்சி அத்தி வரதர் எழுந்தருளும் நீராழி மண்டபத்தை, பழைமை மாறாமல், புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் வளாக அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில், அத்தி வரதர் எழுந்தருளியிருந்தார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எடுத்து, சிறப்பு வழிபாடு நடைபெறும் வைபவம், ஜூலை 1ம் தேதியில் இருந்து, வரதராஜ பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.கடந்த, 31 நாட்கள், சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்தி வரதர், ஆக. 1 முதல், நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.தினசரி பெருமாளை தரிசிக்க லட்கக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில், அத்தி வரதர் வீற்றியிருக்கும் மண்டபத்தை, நேற்று முன்தினம், சென்னை உயர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில், ஹிந்து அறநிலையத் துறை திருப்பணி கூடுதல் ஆணையர் வான்மதி தலைமையில், தொல்லியல் துறை வல்லுனர்கள், அறநிலையத் துறை ஸ்தபதி, பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.சில தினங்களில், அந்த நீராழி மண்டபத்தை பழைமை மாறாமல், புதுப்பிக்கும் பணி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, இணை ஆணையர் செந்தில்வேலவன், செயல் அலுவலர்கள், தியாகராஜன், குமரன், வெள்ளைச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
கலெக்டர், 'டோஸ்'

வி.வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட, 'பாஸ்' இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுவர்.அந்த வழியில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர், பாஸ் இல்லாமல் நேற்று முன்தினம் இரவு, பலரை உள்ளே செல்ல அனுப்பியுள்ளார்.அந்த நேரத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, அங்கு சென்று பார்த்து, கண்டு பிடித்தார். எவ்வளவு பேர் காத்திருக்கின்றனர் என, சத்தம் போட்டார்.பின், ஐ.ஜி.,யிடம் சொல்லி, அந்த ஆய்வாளரை, தாற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என, கூறினார். அதன் பின், பாஸ் இல்லாமல் செல்வது குறைந்தது.ஆனால், கலெக்டர் சென்ற சில மணி நேரத்தில், வழக்கம் போல் பழைய நிலையே ஏற்பட்டது.இதையெல்லாம், போலீசார் நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது

.வி.வி.ஐ.பி., பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருப்பு

காஞ்சி அத்தி வரதர் தரிசனத்தில், வி.வி.ஐ.பி., வழியில். நான்கு மணி நேரமும். பொது தரிசனத்தில், 10 மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதுவரை அத்தி வரதரை, 80 லட்சத்திற்கும் அதிகமானோர், தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து விடுமுறை வருவதால், இன்னும் கூட்டம் அதிகமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தை சமாளிக்க, அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.'பாஸ்' பெறுவதற்காக, கலெக்டர் அலுவலகத்தில், தினசரி ஏராளமானோர் காத்திருப்பதால், 'பாஸ்' வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கலெக்டர் வீட்டுக்கு சென்று, வெளியில் நிறைய பேர் காத்திருப்பதால், அங்கு, கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
108 அத்தி வரதரை தரிசிக்க 108 வேண்டுமே! அலைமோதும் பக்தர்களுக்கு அருள்புரிவாரா?

Added : ஆக 11, 2019 02:19

பட்டாச்சாரியார்களை சமாதானப்படுத்தி, அத்திவரதர் தரிசன வைபவத்தை, 108 நாட்கள் நீட்டிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்களின் கருத்தாக உள்ளது.

காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள, அனந்த சரஸ் குளத்தில் இருந்து, அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கடைசியாக, 1979ல், அத்தி வரதர் அனந்த சரஸ் குளத்திலிருந்து எழுந்தருளினார்.அடுத்து, 40 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு அனந்த சரஸ் குளத்தில் இருந்து எழுந்தருளி, ஜூலை, 1 முதல், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.தினமும், மூன்று லட்சம் பக்தர்கள் வரை, தரிசனத்திற்கு வருகின்றனர். நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் குவிவதால், அவர்களை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது.'அத்தி வரதர், அடுத்த முறை எழுந்தருளும் போது, நாம் இருப்போமா என்பது தெரியாது; எனவே, இம்முறை எப்படியும் பார்த்துவிட வேண்டும்' என்ற வேண்டுதலில், வயதை மறந்து, அனைவரும் குவிகின்றனர். தரிசனம், 48 நாட்கள் மட்டுமே என்பதால், கூட்டம் அதிகம் குவிவதற்கு காரணமாக உள்ளது.தற்போது, மாவட்ட நிர்வாகம், 'ஆக., 16 வரை மட்டுமே, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்' என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக, 'அனைத்து சாலைகளும், காஞ்சியை நோக்கி' என்ற வகையில், காஞ்சிபுரத்தில் வாகனங்கள் குவிகின்றன; வாகனங்களை நிறுத்தக்கூட இடம் கிடைக்கவில்லை.எப்படியும் அத்தி வரதரை தரிசித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில், பக்தர்கள் பல மணி நேரம், வரிசையில் காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து பக்தர்கள் குவிவதால், உள்ளூர்வாசிகளும் பெரும் சிரமப்படுகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து வந்து, அத்தி வரதரை தரிசிக்க முடியாமல், திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது.எனவே, 48 நாட்கள் தரிசனம் என்பதற்கு பதிலாக, அத்தி வரதர் தரிசனத்தை, 108 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது, பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கோவில் பட்டாச்சாரியார்கள், 'ஆகம விதிப்படி, 48 நாட்கள் தான் அனுமதிக்க முடியும்' என, கூறி உள்ளனர். ஆனால், ஏற்கனவே, 40 நாட்கள், 48 நாட்கள் என, அத்தி வரதர் தரிசன வைபவம் நடந்ததற்கு, ஆவணங்கள் உள்ளதாக, அதிகாரிகள் கூறுகின்றனர்.கோவில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு, ஆகம விதிமுறைகளின்படி, பூஜை நடப்பது வழக்கம். ஆனால், அத்திவரதருக்கு, ஆகம விதிகளின்படி பூஜை நடப்பதில்லை. முன்பு, மக்கள் தொகை குறைவு என்பதால், 48 நாட்கள் போதுமானதாக இருந்தது.இம்முறை, எப்போதும் இல்லாத அளவிற்கு, பக்தர்கள் குவிகின்றனர். அத்தி வரதரின் அருளால், ஹிந்துக்கள் மத்தியில் எழுச்சியும், விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. எனவே, 48 நாட்களை, 108 நாட்களுக்கு நீட்டிப்பது, ஆகம விதிகளுக்கு முரணாகாது என்பது, பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது.

எனவே, பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று, பட்டாச்சாரியார்களை சமாதானப்படுத்தி, அத்திவரதர் தரிசன வைபவத்தை, 108 நாட்கள் நீட்டிக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.கூட்டம் அதிகமாக இருப்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள், இன்னும் கோவிலுக்கு வராமல் உள்ளனர். அனைவரும் அத்தி வரதரை தரிசிக்க விரும்புகின்றனர். அதனால், கால நீட்டிப்பு செய்வதே நல்லது. கோவில் நிர்வாகமும், பட்டாச்சாரியார்களும், இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்..- வி.சுகுமார், ராணிப்பேட்டை.

ஒரு மண்டலத்துக்கு அத்தி வரதர் தரிசனம் என்றார்கள். பக்தர்கள் கூட்டத்தை பார்க்கும்போது, ஒரு மண்டலம் போதாது என, தோன்றுகிறது. 108 திவ்ய தேசங்களை குறிக்கும் வகையில், 108 நாட்கள் நீட்டிப்பு செய்ய வேண்டும்.- எஸ்.வள்ளி, சென்னை

நகருக்குள் எந்த பகுதிக்கு சென்றாலும், பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர். பல லட்சம் பக்தர்கள் வருவதால், அத்தி வரதரை அவ்வளவு எளிதாக பார்க்க முடியவில்லை. அத்தி வரதர் வைபவத்தை நீட்டித்தால், மிகவும் நன்றாக இருக்கும்.- என்.சுனிதா, கன்னியாகுமரி
பல மணி நேரம் பயணித்து வந்த நாங்கள், அத்தி வரதரை தரிசிக்க, எட்டு மணி நேரமாக காத்துக் கிடந்ததால், நடக்கக் கூட முடியாமல் சோர்வடைந்தோம். நெரிசலில் சிக்கி, சிலர் இறந்ததாகவும் கூறுகின்றனர். சிக்கலுக்கு தீர்வு காண, தரிசனத்தை மேலும் பல நாட்கள் நீட்டிக்கலாம்.எம்.ராமராஜ், மதுரைதரிசனத்திற்கு சில நாட்களே உள்ளதால், பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிகின்றனர். வரும் நாட்களில், பக்தர்கள் குவிவர் என்பதால், பெரும் நெருக்கடி ஏற்படும். கால நீட்டிப்பு செய்தால், ஓரளவு நிலைமையை சமாளிக்கலாம்.- கோ.அ.அருணேஸ்வரன், கோவை

அத்தி வரதரை, 40 ஆண்டுகளுக்கு பின் தான் பார்க்க முடியும் என்பதால், பக்தர்கள் சிரமமின்றி பார்க்க, 108 நாட்களாவது, தரிசன நாட்களை நீட்டிக்கலாம்.- கே.சேது, மேலுார்.

'அத்தி வரதரை தரிசிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. கூட்டத்தில், அவ்வளவு சிரமப்பட்டோம். லட்சம் பக்தர்கள், இன்னமும் தரிசிக்காமல் உள்ளனர். அவர்களும் தரிசிக்க ஏதுவாக, அத்தி வரதர் வைபவத்தை, கால நீட்டிப்பு செய்ய வேண்டும்.- கே.ஜெயந்தி, புதுச்சேரி
அத்தி வரதரை நாங்கள் தரிசித்தது, மகிழ்ச்சி அளிக்கிறது; மிகுந்த சிரமப்பட்டு தரிசனம் செய்தோம். அடுத்து வரும் நாட்களில், பக்தர்கள் மிகுந்த சிரமப்படுவர். நிலைமையை சமாளிக்க, கால நீட்டிப்பு செய்வது தான் தீர்வாக அமையும்.- பி.சுதாராணி, ராமநாதபுரம்.
இங்கு இருக்கிற சூழலை பார்க்கும்போது, தரிசன நாட்களை, 108 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்தால் தவறில்லை என, தோன்றுகிறது.-ஏ.முத்து, மதுரை.

முதல்வரிடம் குவியட்டும்பக்தர்களின் கோரிக்கைகள்!
இதுவரை, 80 லட்சத்திற்கும் அதிகமானோர், அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். மேலும், பல லட்சம் பேர் வந்த வண்ணம் உள்ளதால், அத்திவரதர் தரிசனத்தை 108 நாட்களுக்கு நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, பக்தர்கள், முதல்வரின் தனிப்பிரிவுக்கு, 'முதல்வர் தனிப்பிரிவு, தலைமை செயலகம், சென்னை -- 600009' என்ற முகவரிக்கு, கடிதம் அனுப்பலாம்; தொலைபேசியிலும் பேசலாம்.அலுவலக தொலைப்பேசி எண்: 044- - 25671764; பேக்ஸ்: 044 -- 25676929; இமெயில்: cmcell@tn.gov.in. முதல்வர் அலுவலக தொலைபேசி எண்: 044 - 25671525; பேக்ஸ் எண்: 044 - 25671441 மற்றும் இ - மெயில் முகவரி: tncmoffice@gmail.com
- நமது நிருபர் -
அனாதை உடல்கள் அடக்கம் தனி மனிதனின் தன்னலமற்ற சேவை

Added : ஆக 10, 2019 22:48





நாகப்பட்டினம் : ''நான் செய்யும் உதவி, சம்பந்தப்பட்டவருக்கு தெரியப் போவதில்லை; அவர்களும், நமக்கு உதவப் போவதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, இந்த சேவையில், ஆத்ம திருப்தி கிடைக்கிறது,'' என்கிறார், தன்னலமற்ற சேவையின் மறுஉருவமாய் இருக்கும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, ராஜேந்திரன். நாகை, பெருமாள் வடக்கு வீதியைச் சேர்ந்தவர், ராஜேந்திரன், 67; கட்டட ஒப்பந்தக்காரர்.

விருது வேண்டாம்

இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட, அனாதை உடல்களை, தன் சொந்த செலவில் எடுத்துச் சென்று, ஈம காரியங்கள் செய்து, இடுகாட்டில் புதைத்து வருகிறார். இந்த சேவைக்காக, இதுவரை, யாரிடமும், 1 ரூபாய் பெற்றதில்லை என்பது, இவரின் தன்னலமற்ற சேவைக்கான எடுத்துக்காட்டு. கடந்த, 2012ல், தன் நண்பரின் உறவினர் இறந்ததால், உடலை அடக்கம் செய்ய, நாகை இடுகாட்டிற்கு சென்றார். அங்கு மனித சடலம் ஒன்றை, நாய்கள் குதறிக் கொண்டு இருந்தன. அதிர்ச்சிஅடைந்த ராஜேந்திரன், அங்கிருந்த ஊழியர்களிடம், இது குறித்து கேட்டபோது, அவர்கள், 'அது, அனாதை பிணம். நகராட்சி ஊழியர்கள், இடுகாட்டின் ஒதுக்குப்புறமாக வீசிட்டு போயிடுறாங்க...' என, வேதனையுடன் தெரிவித்தனர்.

அன்றிலிருந்து, அனாதை உடல்களுக்கு, இறுதி சடங்கு செய்வதை, அவர் தொடர்ந்து செய்து வருகிறார். ஜாதி, மதம் பாராமல், குழந்தை, முதியவர் என, இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட உடல்களை புதைத்திருக்கிறார். எய்ட்ஸ் உட்பட, கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டோர், மரணத்தை தழுவியோரை, உறவினர்கள் கூட, நெருங்கி வர தயங்குவர். அப்போதும் ராஜேந்திரன், தனி மனிதனாக, உடலை, பிணவறைக்கு சுமந்து எடுத்துச் சென்று, பாதுகாத்து, பின் அடக்கம் செய்து வருகிறார். அனாதை உடல்களை புதைப்பதற்காகவே, தனி அலுவலகம் திறந்து வைத்திருக்கிறார்.

அங்கு, இறுதி சடங்கு செய்தவற்கு தேவையான, சந்தனம், விபூதி, நவதானி யங்கள், சாம்பிராணி, ஊதுபத்தி, அரிசி, பன்னீர் பாட்டில்கள், துணிகள், சில்லரை நாணயங்களை சேமித்து வைத்துள்ளார். சுற்றுலா பகுதிகளான வேளாங்கண்ணி, நாகூருக்கு வந்து, தற்கொலை செய்தோர், கடலில் மூழ்கி, அடையாளம் தெரியாத உடல்கள், வீதியில், மருத்துவமனையில் ஆதர வற்ற நிலையில் இறந்து கிடப்போரின் உடல்களை, போலீசார் அனுமதியோடு, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்.

அங்கு, பிணவறையில், மூன்று நாட்கள் பாதுகாத்து வைக்கிறார். உறவுகள் யாரும் தேடி வராத நிலையில், போலீசாரிடம் அனுமதி பெற்று, இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று, ஹிந்து முறைப்படி, அனைத்து சடங்குகளையும் செய்கிறார். ஒரு சடலத்தை அடக்கம் செய்வதற்கு, குறைந்தது, 3,000 ரூபாய் செலவாகும் நிலையில், மற்றவர்களிடம் இருந்து, 1 ரூபாயோ அல்லது பொருட்களோ பெற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். மாதத்தில், 10க்கும் மேற்பட்ட உடல்கள் வரை அடக்கம் செய்பவர், தேவையான பணத்திற்காக, தன் நிலத்தை விற்பனை செய்து, அதிலிருந்து செலவு செய்து வருகிறார்.

இறந்தவரின் நெற்றியில் வைக்கப்படும், 1 ரூபாய், வாய்க்கரிசியில் போடும் நாணயங்களைக் கூட மற்ற வர்கள் தருவதற்கு, இவர் அனுமதிப்பதில்லை. சில அமைப்புகள், இவருக்கு விருது தர முன்வந்த போது, 'யாருக்கு உதவி செய்யுறேன்னு, எனக்கும் தெரியாது; யாரு உதவி செய்யுறதுன்னு, அவங்களுக்கும் தெரியாது. அப்புறம் எதுக்குங்க விருது?' என, அதையும் வேண்டாம் என, உதறியுள்ளார்.

இது குறித்து, ராஜேந்திரன் கூறியதாவது: இறந்தவர், எந்த உதவியும் கேட்பது இல்லை. நாம் செய்யும் உதவியும், அவருக்கு தெரியப் போவதில்லை; அவர்களும், நமக்கு உதவப் போவதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, இந்த சேவையில், ஆத்ம திருப்தி கிடைக்கிறது. யாருக்கும் தெரியாது பலர், 'பண உதவி செய்கிறேன்' என, சொல்கின்றனர். 'அது வேண்டாம்' என, மறுத்து விடுவேன். அதேநேரம், உடல்ரீதியான உதவிகள் செய்ய, எவரும் முன்வருவதில்லை. எந்த உடலையும் எரிப்பதில்லை. சில நேரங்களில், உடல் அடக்கம் செய்து, பல நாட்களுக்கு பின், உறவினர்கள் தேடி வருகின்றனர்.

வாழும்போது, எப்படி இருக்கிறோம் என்பது, அவரவர் கையில் இருக்கிறது; இறந்த பின், என்ன நடக்கும் என்பது, யாருக்கும் தெரியாது. அதனால் தான், இந்த சேவை செய்து வருகிறேன். இவ்வாறு, அவர் கூறினார். இவரை பாராட்ட, 9443526585 என்ற, மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


NEWS TODAY 24.4 2026