Monday, October 7, 2019

கொசு கடிப்பது உள்ளாட்சித் துறையைச் சேர்ந்தது; கடித்த பிறகுதான் சுகாதாரத் துறைக்குள் வருகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்


நிகழ்ச்சியில் பேசும் அமைச்சர் விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை

கொசு கடிப்பது சுகாதாரத் துறையைச் சேர்ந்தது அல்ல என்று அத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று (அக்.5) நடைபெற்ற புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

"அரசும் நீதித்துறையும் ஒருங்கிணைந்து மக்களுக்கு சேவை செய்து வருகின்றன. குளிர்சாதன வசதிகளுடன் புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கக் கட்டிடம் மேம்படுத்தப்படும்.

பல வருடங்களாக வலியுறுத்தப்பட்டு வரும் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வாய்க்கால் அமைக்க ரூ.6 ஆயிரம் கோடி தேவை என திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான நிதியை ஒதுக்கி, திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார். புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் கொசுக்கடி தாங்க முடியவில்லை என இங்கு பேசியவர்கள் தெரிவித்தனர்.

பொதுவாக கொசு கடிப்பது உள்ளாட்சித் துறையைச் சேர்ந்தது. கொசு கடித்த பிறகுதான் அது சுகாதாரத் துறைக்கு வருகிறது. இருந்தாலும், உள்ளாட்சித் துறை மற்றும் சுகாதாரத் துறையும் இணைந்து கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

சிங்கப்பூரில் காய்ச்சலால் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் அதன் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில்தான் உள்ளன.

ஆறு, குளங்களைத் தூர்வாருதல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு என நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசு முறையாகச் செயல்படுத்தி வருவதால் மக்கள் பயனடைகின்றனர்".

இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.

சுரேஷ்
ஜெயங்கொண்டம் அருகே நாடுகள், தலைநகரங்களின் பெயர்களை ஒப்பித்து யுகேஜி மாணவர் சாதனை


சாய்கிருத்திக்

ஜெயங்கொண்டம் அருகே தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் மாணவர் உலக நாடுகளின் வரைபடத்தை பார்த்து, நாடுகளின் பெயர்களையும் அவற்றின் தலைநகரங்களையும் 5.19 நிமிடத்தில் ஒப்பித்து நேற்று சாதனை படைத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகன் சாய்கிருத்திக்(5). இவர், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். இவருக்கு உலக நாடுகள் குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகம் இருப்பதைக் கண்ட அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், தினமும் நாடுகளின் வரைபடங்களை காண்பித்து, நாட்டின் பெயர்களையும், அவற்றின் தலைநகரங்களையும் சொல்லிக் கொடுத்து, பயிற்சி அளித்து வந்தனர்.

இந்நிலையில், சாதனை முயற்சியாக குளோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற குழுவினர், மாணவர் சாய்கிருத்திக்கிடம் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெரிய திரையில் நாடுகளை தனித்தனியாக காண்பிக்க, அவற்றின் பெயர்களையும், தலைநகரங்களையும் சாய்கிருத்திக் சரியாக கூறினார். இவ்வாறு உலக நாடுகள் அனைத்தையும், அவற்றின் தலைநகரங்களுடன் 5.19 நிமிடங்களில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவர் சாய்கிருத்திக்கை பாராட்டி, சாதனைச் சான்றிதழை அந்தக் குழுவினர் வழங்கினர். மேலும், விரைவில் கின்னஸ் சாதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக பள்ளி நிர்வாகத்தினரும், பெற்றோரும் தெரிவித்துள்ளனர்.
ரயில் டிக்கெட் முன்பதிவு விவர குறுந்தகவல் வருவதில் தாமதம்: பயணிகள் புகார்

சென்னை  07.10.2019

ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவுக்கு பிறகு வர வேண்டிய குறுந்தகவல் உடனுக் குடன் வருவதில்லை. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இந்திய ரயில்வே துறை சார்பில் இயக்கப்படும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இணையதள வசதி கொண்டுள்ள செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவ தால், ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவு செய்வது 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், சமீபகாலமாக ரயில் டிக்கெட் முன்பதிவின்போது வரவேண்டிய குறுந்தகவல்கள் தாமதமாக வருவ தால் பயணிகள் அவதிப்படுகின் றனர்.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “ரயில் பயண டிக்கெட் முன்பதிவுக்கு பிறகு செல்போனுக்கு உடனுக் குடன் வரவேண்டிய குறுந்தகவல் மணிக்கணக்கில் தாமதமாக வரு கிறது. சில நேரங்களில் ரயில்கள் புறப்படும் சிறிது நேரத்துக்கு முன்புதான் இந்த குறுந்தகவல் வருகிறது. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும், டிக்கெட்டை நகல் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்து, ரயில்வே உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
டெங்கு - விழிப்புணா்வே சிகிச்சை

By மருத்துவா் சோ.தில்லைவாணன்

மாறிவரும் தட்பவெப்ப நிலைகளினாலும், கிருமிகள் பெருக்கத்தாலும் பல்வேறு காய்ச்சல் தமிழகம் எங்கும் பரவிக் கொண்டிருக்கிறது . என்ன வகை காய்ச்சல்? எங்கே செல்வது? என்னென்ன மருத்துவ முறைறகளைக் கையாள்வது ? ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவாமல் தடுக்கும் முறைறகள் என்ன? --இவை தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனா். முக்கியமாக, டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என அஞ்சுகின்றனா்.

பொதுவாக டெங்கு வைரஸ் தாக்கத்தினால் டெங்கு காய்ச்சல் உண்டாகிறது. இது ‘ஏடிஎஸ்’ எனப்படும் பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்களினால் பரவுகிறது. இது தவிர சாதாரண சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல், கொசுக்கடியினால் வரும் மலேரியா, யானைக்கால் நோயில் ஏற்படும் காய்ச்சல், உணவு, நீா் தூய்மைக் கேட்டினால் பரவும் டைபாய்டு காய்ச்சல் பாக்டீரியா கிருமியாலும் இந்தக் காலநேரத்தில் பரவக்கூடும்.

ஒவ்வொரு காய்ச்சலின் தன்மையைப் பொருத்து குறிகுணங்கள் அமையும். விட்டு விட்டு வரும் காய்ச்சல், உடல் வலி, வாந்தி , வாய் குமட்டல், வயிற்று வலி ஆகியவை மலேரியா காய்ச்சலின் குறிகுணங்கள். யானைக்கால் சுரத்தில் நெறிக்கட்டி கால் வீக்கம் ஏற்படுவது தனிக் குணம். வயிற்று வலியுடன் விட்டு விட்டு வரும் ‘ஸ்டெப் லாடோ் சுரம்’ டைபாய்டு காய்ச்சலில் காணப்படும். ரத்தப் பரிசோதனைகள் மூலம் என்ன நோய் என்பதை வேறுபடுத்தி அறியலாம். ‘சிபிசி’ எனும் முழுமையான ரத்த செல்களின் என்ணிக்கை, ‘எம்பி’, ‘எஎஃப்’, ‘விடால்’ போன்ற பரிசோதனைகள் அவசியம்.

ரத்த வெள்ளையணுக்கள், ரத்த தட்டணுக்கள் ஆகியவை அனைத்து வகை வைரஸ் காய்ச்சலிலும் குறைறயக் கூடும். இவை இரண்டும் குறைறந்து குறிகுணங்கள் அதிகமாக இருந்தால் டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த எலைசா பரிசோதனை அவசியம்.

டெங்கு காய்ச்சலும் குறிகுணங்களும்... ஏடிஸ் கொசு கடித்து, 4 -10 நாள்களில் நோயரும்பும் காலமாகும். அதற்குப் பின் குறிகுணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அதிக அளவு காய்ச்சல், உடல் வலி, கண் பின்பக்க வலி, உடல் அசதி , வாந்தி, வாய்குமட்டல், சுரம் தணிந்து 4 ,5 நாள்கள் கழித்து தோலில் ரத்தக் கசிவு - அதனால் தடிப்பு , சில பேருக்கு பல் ஈறிலிருந்து அதிக ரத்தம் கசிதல் ஆகிய அறிகுறிகள் தோன்றும். இவை அனைத்தும் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்.

காய்ச்சல் விட்ட பின் ஏற்படும் அதிகப்படியான தசை வலி, உடல் வலி மிக முக்கிய அறிகுறியாகும். நான்காம் நாள் தொடங்கி ரத்த தட்டணுக்கள் குறைறயத் தொடங்கும். இவை குறைறவதனால் நம் உடலில் ரத்தம் கசியத் தொடங்கும். இதுவே ரத்தப் போக்கினை ஏற்படுத்தும். அந்த நிலையில் 24 மணி நேரத்துக்கு ஒரு முறைறயாவது ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கையைப் பரிசோதனை செய்வது அவசியம் .மேலும் மிக முக்கியமாக ரத்தப் பரிசோதனையில் ‘பிசிவி’/‘ஹீமாடாக்ரிட்’ அதிகரித்தால் ‘டிஎஸ்எஸ்’ எனும் ‘டெங்கு ஷாக்’ குறிகுணங்கள் தோன்றக்கூடும், அத்துடன் ரத்த தட்டணுக்கள் சோ்ந்து குறைறந்தால் ‘டிஎச்எஸ்எஸ்’ எனும் ‘டெங்கு ஹெமரேஜிக் ஷாக்’ ஏற்படக்கூடும். சிகிச்சை அளிக்கத் தவறினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

மருத்துவ முறைறகள்: டெங்கு காய்ச்சலால் ஒருவா் பாதிக்கப்படும் நிலையில், தாமதிக்கமால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் பெற்று, நோயின் தீவிர நிலையிலிருந்து காத்துக் கொள்ளலாம் . வைரஸ் காய்ச்சலில் நீா்ச் சத்து அதிகம் இழக்கப்படுவதால் திரவ மேலாண்மை மிக அவசியம். நீா்ச் சத்து மிகுந்த கஞ்சி, பழச் சாறுகளை அதிகம் தரலாம் . ரத்த தட்டணுக்களை அதிகரிக்க வைட்டமின் சி நிறைறந்த பழங்களை அதிகம் சாப்பிடலாம்.

சித்த மருத்துவத்தில் இதன் குறிகுணங்கள் பித்த சுரத்துடன் ஒத்துப் போவதால், பித்தத்தைக் குறைறக்கும்படியான நிலவேம்பு .ஆடாதோடை, பப்பாளி இலை,சீந்தில் ஆகியவற்றாலான மருந்துகளைத் தரலாம் . பொதுவாக, ஆடாதோடை மணப்பாகினை அல்லது பப்பாளி இலைச் சாறினை 10 -15 மி.லி. நீருடன் ஒரு நாளைக்கு மூன்று முறைகொடுக்கலாம். சீந்தில் மாத்திரை 2 -3 ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுக்கலாம்.

நோய்த் தடுப்புக்காக வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீரினை நோய் நிலையிலும் பயன்படுத்தலாம். நோயிலிருந்து மீண்ட பின்னரும் வழங்கி வரலாம். நிலவேம்பு குடிநீரின் அளவினைப் பற்றியும், பயன்பாடு குறித்தும் சித்த மருத்துவா்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இத்துடன் ஆடாதோடை குடிநீரும் சோ்த்துச் சாப்பிடலாம்.

தடுப்பு முறைறகள்: டெங்கு காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் கிருமி ஏடிஸ் எனப்படும் பகல் நேர கொசு கடிப்பதால் பரவுகிறது. இந்தக் கொசுக்கள் தேங்கிய சுத்தமான நீரிலேயே உற்பத்தியாகின்றன. முக்கியமாக மழை நீா் தேங்கி இருக்கும் இடங்களைச் சோதனை செய்து அதனை நீக்க வேண்டும். வீட்டிலும் நல்ல நீரினைச் சேமித்து வைக்கும்போது மூடி வைக்க வேண்டும். கொசு விரட்டிகளை பகல் நேரங்களில் பயன்படுத்தலாம். கொசு கடிக்காமல் இருக்க முழுக் கை சட்டைகளைப் பயன்படுத்தலாம்.

வீட்டுக்குள் கொசு வராமல் ,கடிக்காமல் தடுக்க வேப்பிலை, நொச்சி இலை புகை போடலாம். நிலவேம்புக் குடிநீரை வயதுக்கு ஏற்ப மருத்துவா் ஆலோசனையின்படி சாப்பிடலாம். மற்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க வடிகட்டி காய்ச்சிய நீரையே பயன்படுத்த வேண்டும். தினமும் குளிப்பது கொசுக்கள் நம்மை அண்டாமல் தடுக்கும். சுத்தமான உடைகளை உடுத்துவது நல்லது. கொசு கடிக்காமல் இருக்க கற்பூராதி தைலத்தை உடலின் மீது பூசிக் கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியான ஆன்ட்டிபயாட்டிக் மருத்துவமும், தடுப்பூசி முறைறகளும் இல்லாததால் அது குறித்துப் பயம் நீடிக்கிறது. முறைறயான தடுப்பு நடவடிக்கைகளும், நோய் குறித்த விழிப்புணா்வும், சரியான நேரத்தில் மருத்துவ முறைறகளை அணுகி சிகிச்சைகளும் மேற்கொண்டால் டெங்கு குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

சொன்னதை செய்துகாட்டிய ஜெகன் மோகன் ரெட்டி..! 80% வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை..!

By Muthumari | Published on : 03rd October 2019 06:03 PM



ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கு அரசுப்பணி ஆணை வழங்கி அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

முதல்வரின் இந்த நடவடிக்கையைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் பல வலம் வருகின்றன. பாகுபாடின்றி இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாநில மக்களும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர மாநில முதல்வராக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த மே மாதம் 30ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற உடனேயே சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஆஷா ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி ஆணை பிறப்பித்தார்.

தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவித்தொகை, விவசாயிகளுக்கு உதவித்தொகை, விவசாயத்திற்கு 9 மணி நேரம் இலவச மின்சாரம், காவல்துறையினருக்கு வார விடுமுறை, சட்டவிரோத மதுபானக் கடைகள் அகற்றுதல், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துதல், முதியோர்களுக்கான ஓய்வூதியத் தொகை அதிகரிப்பு, மக்களுக்கு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் என பல அதிரடித் திட்டங்களை அறிவித்ததுடன் செயல்படுத்தியும் வருகிறார்.



கல்வித்துறையில் ஒரு பெரும் மாற்றமாக, சனிக்கிழமைகளில் மாணவர்கள் புத்தகப் பையுடன் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை, அந்நாளில் படிப்பு அல்லாத பிற திறன்களை வளர்த்துக்கொள்ள மாணவர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு அளித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஆந்திராவில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் 75% ஆந்திரா மக்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று கூறினார். மேலும், கிராமச் செயலகங்கள் மற்றும் வார்டு செயலகங்கள் மூலமாக 1.98 லட்சம் பேருக்கு அரசுப்பணியை வழங்குகிறார்.

கிராமச் செயலகங்கள் மற்றும் வார்டு செயலகங்களில் தலா 10 பேர் வீதம் பணியாற்ற எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் 21 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் பேர் மட்டும் எழுத்துத் தேர்வில் தேர்வாகினர். இதில், முதற்கட்டமாக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 72,000 பேருக்கு விரைவில் பணி வழங்கப்படவுள்ளது.



இதுவரை எந்த ஒரு மாநிலத்திலும் ஒரே நாளில் இவ்வளவு அரசுப்பணிகள் வழங்கப்பட்டதில்லை. அதிலும், அரசுப்பணி வழங்கப்பட்ட 1.26 லட்சம் பேரில் 90% அதிகமானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட பல்வேறு திட்டங்களின் மூலமாக ஜெகன் மோகன் ரெட்டி, தேர்தல் வாக்குறுதிகளில் 80% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாகவே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, 3,648 கி.மீ தூரத்திற்கு நடத்திய பிரஜா சங்கல்ப் பாதயாத்திரையை நடத்திய போது 'நவரத்னலு' என்ற ஒன்பது முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றது முதலே இந்த ஒன்பது வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு மும்முரமாக இருந்தது.

அதன்படி தாங்கள் அளித்த வாக்குறுதிகளில் வேலைவாய்ப்பு, சுகாதாரக் காப்பீடு உள்ளிட்ட 80% வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற முன்மொழிந்து அதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
பள்ளி மாணவியை கடத்தி தாயாக்கி குழந்தையுடன் வந்த வாலிபர் கைது

Added : அக் 06, 2019 21:47

தஞ்சாவூர் : கல்லுாரியில் சேர்ப்பதாகக் கூறி, மாணவியை அழைத்துச் சென்றவர், ஓராண்டுக்கு பின், கையில் குழந்தையுடன் மாணவியை அழைத்து வந்ததால், கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர், கும்பகோணம் அடுத்த பந்தநல்லுாரைச் சேர்ந்தவர் கமலேஷ், 23. ஓராண்டுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயதான பிளஸ் 2 மாணவி ஒருவரை, கல்லுாரியில் சேர்த்து விடுவதாக கூறி, மதிப்பெண் சான்றிதழ், டி.சி., ஆகியவற்றை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.மாணவியும், கமலேஷ் சொன்னது போல் எடுத்து வந்துள்ளார். இதையடுத்து, மாணவியை கமலேஷ் கடத்திச் சென்றுள்ளார். மாணவியின் பெற்றோர், பந்தநல்லுார் போலீசில் புகார் அளித்தனர். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

ஓராண்டு கழித்து, கடந்த வாரம், கமலேஷ், மாணவி மற்றும் பெண் குழந்தையுடன், ஊருக்கு வந்துள்ளார். மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பந்தநல்லுார் போலீசார், கமலேஷை பிடித்து விசாரித்தனர். மாணவியை ஆசை வார்த்தை கூறி, கோபிசெட்டிப் பாளையத்துக்கு கமலேஷ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, சாலையோரத்தில் வசிப்பவர்களுடன் தங்க வைத்து, மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.இதில் கர்ப்பமான மாணவி, மூன்று மாதங்களுக்கு முன், குழந்தை பெற்றுள்ளார். மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரை சொந்த ஊருக்கு கமலேஷ் அழைத்து வந்துள்ளார்.இதையடுத்து, கமலேஷை போலீசார் நேற்று கைது செய்தனர். மாணவியையும், குழந்தையையும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

காற்று மீது வழக்கு போடுங்க: பொன்னையன் குசும்பு

Added : அக் 06, 2019 23:44

சென்னை : 'பேனர்' சரிந்து விழுந்து, இளம்பெண் சுபஸ்ரீ இறந்த நிலையில், 'காற்றால் தான் விபத்து நடந்தது; காற்று மீது தான் வழக்கு போட வேண்டும்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளது, சர்ச்சையை எழுப்பியுள்ளது.

சென்னையில், அ.தி.மு.க., பிரமுகர் இல்ல விழாவிற்காக, சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்து, இளம்பெண் சுபஸ்ரீ இறந்தார். இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும், 'இனி பேனர் வைப்பதில்லை' என்ற, முடிவிற்கு வந்துள்ளன.

இடையூறு

இந்நிலையில், பேனர் விபத்து குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்னையன், தனியார் தொலைக்காட்சிக்கு, அளித்த பேட்டி: நிகழ்ச்சிகள் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக, சாலைகளில் பேனர்கள் வைக்கப்படுகின்றன. தி.மு.க., ஆட்சியில் இருந்தே, இந்த பேனர் கலாசாரம் தொடர்கிறது. பொதுமக்களுக்கு இடையூறாக, பேனர்கள் வைக்கக்கூடாது என்பதில், அரசும், அ.தி.மு.க., தலைமையும் உறுதியாக உள்ளன.

பேனர் விபத்தில் இறந்த சுபஸ்ரீக்கும், அ.தி.மு.க., நிர்வாகி ஜெயபாலுக்கும், தனிப்பட்ட வகையில், எந்த பிரச்னையும் இல்லை. அந்த பெண் வாகனத்தில் செல்கிறார். அப்போது, காற்றடித்து பேனர் விழுகிறது; விபத்து நடக்கிறது. எனவே, வழக்கு போடுவது என்றால், காற்றின் மீது தான் போட வேண்டும். இவ்வாறு, பொன்னையன் கூறினார்.

'காற்று மீது வழக்கு போட வேண்டும்' என்ற, பொன்னையனின் பேட்டி தொடர்பான வீடியோ பதிவுகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. கண்டனம்பொன்னையனுக்கு, பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே, 'விதியால் சுபஸ்ரீ இறந்து விட்டார்' என்று கூறிய, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, கடும் விமர்சனத்திற்கு ஆளானார். இப்போது, பொன்னையனும், அதேபோன்ற கருத்தை கூறி, நெட்டிசன்களிடம் வசமாக சிக்கியுள்ளார்.

NEWS TODAY 26.01.2026