Tuesday, October 8, 2019

அபு தாபி விமான நிலையத்தைக் கலக்கிய இந்திய முதியவர்: வயது ஜஸ்ட் 124 தான்!

By DIN | Published on : 07th October 2019 01:07 PM |



அபு தாபி விமான நிலையதில் சுவாமி சிவானந்தா

துபை: ஒவ்வொரு பயணியின் பாஸ்போர்ட்டையும் பரிசோதித்து முத்திரைக் குத்தி அனுப்பும் பணியை செய்து வரும் அபுதாபி விமான நிலைய ஊழியர்கள் பலரும், இவரது பாஸ்போர்ட்டை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம், அந்த பாஸ்போர்ட்டைக் கொண்டு வந்த இந்திய முதியவரின் பிறந்த ஆண்டுதான். சுவாமி சிவானந்தா எனும் இந்திய முதியவர், ஆகஸ்ட் 8ம் தேதி 1896ம் ஆண்டு பிறந்தவர் என்று பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் அவருக்கு வயது 124.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 1896ம் ஆண்டு பிறந்துள்ளார் சுவாமி சிவானந்தா. அவரது பாஸ்போர்ட்டுடன், விமான நிலைய ஊழியர்களும் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
48,000 பஸ் ஊழியர்கள் தெலுங்கானாவில் நீக்கம்; முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவு

Updated : அக் 08, 2019 00:09 | Added : அக் 07, 2019 21:03

ஐதராபாத்: தெலுங்கானாவில் சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை முதல்வர் சந்திரசேகர ராவ் வேலையிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து வழித்தடங்களிலும் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களை தனியாருக்கு குத்தகைக்கு விடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.,4ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தெலுங்கானாவில் தினமும் ஒரு கோடி பேர் போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணித்து வந்த நிலையில் பண்டிகை காலத்தில் நடக்கும் இந்த போராட்டத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அக்.,5ம் தேதி மாலைக்குள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டுமென முதல்வர் சந்திரசேகர ராவ் கெடு விதித்தார்.

போக்குவரத்து ஊழியர்கள் இதை பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 48 ஆயிரம் ஊழியர்களையும் உடனடியாக வேலையிலிருந்து நீக்கி முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று உத்தரவிட்டார்.

அவர் கூறியதாவது: இது பண்டிகை காலம் என்பதால் மக்கள் பஸ் போக்குவரத்தை அதிகம் நம்பியுள்ளனர். இது போன்ற நேரத்தில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துவது மன்னிக்க முடியாத குற்றம்.

தெலுங்கானா போக்குவரத்துக் கழகம் ஏற்கனவே 1,200 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. தற்போது நடக்கும் போராட்டத்தால் இந்த நஷ்டம் 5000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. நிலைமையை சீராக்க மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டிரைவர், கண்டக்டர்களாக தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் டிரைவர்களும் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வழித்தடங்களிலும் தனியார் பஸ்களை இயக்கவும் அனுமதி அளிக்கப்படும். அரசு பஸ்களில் குறிப்பிட்ட பஸ்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடவும் நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் சில நாட்களில் இயல்புநிலை திரும்பி விடும். போக்குவரத்து ஊழியர்களின் மிரட்டலுக்கு அரசு அடிபணியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களால் போக்குவரத்தில் பெரும் குளறுபடி ஏற்படுவதாக புகார்கள் குவிந்து வருகின்றன. போதிய பயிற்சி இல்லாதவர்கள் டிரைவர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளதால் விபத்துகள் அதிகம் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. மேலும் கண்டக்டர்களாக பணியாற்றுவோர் பயணியரிடம் கூடுதல் கட்டணம் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கோர்ட்டில் முறையிட முடிவு:

போராட்டம் குறித்து தெலுங்கானா போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் அஸ்வத்தாமா கூறியதாவது: போராட்டம் நடத்திய ஊழியர்களுக்கு முறையான அறிவிப்போ 'நோட்டீசோ' தராமல் அவசரம் அவசரமாக அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். போராட்டம் குறித்தும் அதற்கான விதிமுறைகள் குறித்தும் எங்களுக்கும் தெரியும். நம் நாட்டில் சட்டம் உள்ளது. அதை மீறி எதுவும் செய்து விட முடியாது. இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டு நியாயம் பெறுவோம். தெலுங்கானா மாநில அரசு எங்களை புழு பூச்சிகளை போல நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் தொடர்பான வழக்கு அக்.,10ல் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அலசல்: வலைதளத்தில் சிக்கும் சிறுவர்கள்! 08.10.2019




கடந்த வாரம் இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம் வெளியிட்ட ஒரு தகவல் மிகவும் அதிர்ச்சியளித்தது. இந்தியாவில் இணையதளம் உபயோகிப்போரில் 6 கோடியே 60 லட்சம் பேர் 5 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட பிரிவினர் என்பதுதான் அது. இந்த நவீன டிஜிட்டல் உலகம் குழந்தைகளின் திறன்களை வளர்த்தால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஆனால், பெரும்பாலும் இணையதள உபயோகம் இந்திய குழந்தைகளிடம் ஆபத்தான பல விஷயங்களை உருவாக்குகிறது என்பதுதான் பிரச்சினை.

சிறுவர்களின் ஆன்லைன் உலகம் பெரும்பாலும் அவர்களை ஆபத்தில் சிக்க வைப்பதாக இருப்பதுதான் நிதர்சனமான உண்மை. தேவையில்லாத பல விஷயங்களை பார்ப்பது, தவறான நபர்களிடம் சிக்குவது போன்ற பல விஷயங்கள் இணையதளம் மூலமாகவே நடந்தேறி வருகின்றன. ஆன்லைன் மூலமான பல விஷயங்கள் குழந்தைகளின் உயிருக்கே உலை வைப்பதாக அமைந்துள்ளன என்பதுதான் கடந்த கால சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் பாடம். புளூவேல் சேலஞ்ச் எனப்படும் ஆன்லைன் சவால் சிறுவர்களின் உயிரைக் குடித்தது.

மேலும் இளம் பிராயத்தினர் பலரையும் தற்கொலைக்கு தூண்டுவதும் ஆன்லைன் சமாச்சாரங்கள்தான். அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்த பிறகு அங்கு விழித்துக் கொண்டு குழந்தைகளைக் கெடுக்கும் ஆன்லைன் விஷயங்களுக்கு கடுமையான சட்டம் கொண்டு வந்து தடை விதித்தது. சிறுவர்கள் இதுபோன்று ஆன்லைன் வலையில் சிக்குவதற்கு பெற்றோரும், கல்வி நிறுவனங்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை ஒரு போதும் மறுக்க முடியாது.

குழந்தைகள் எத்தகைய இணையதளங்களை பார்க்கலாம் என்பதை வடிகட்டி அனுப்புவதற்கு ஏகப்பட்ட சாஃப்ட்வேர்கள் உள்ளன. வீட்டில் குழந்தைகள் கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது அதை கட்டுப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. தேவையற்ற விஷயங்களை தவிர்க்கும் சாஃப்ட்வேரை பயன்படுத்தி அத்தகைய இணையதளங்கள் தங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் நுழையாதவாறு பார்த்துக் கொள்ள முடியும். இணைய  தளங்களை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது. குறிப்பிட்ட இணையதள நடவடிக்கைகள் வரம்பை மீறும் வகையில் இருப்பின் அதற்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும். இதற்குரிய கொள்கைகளை வகுக்க வேண்டியதும் அவசியமாகும்.

அமெரிக்காவில் சுதந்திரம் அதிகம், ஆனால் அது எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை அந்நாட்டு அரசு வரையறுத்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்திலும் தீவிரமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் இதுபோன்று தகவல்களை திரட்டுவது தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் அதைத் தடுக்க வலுவான சட்டங்கள்தான் இங்கில்லை. இந்தியாவில் சமூக வலைதளங்கள் மீது கட்டுப்பாடு ஏதும் கிடையாது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மோசமான கருத்துகள், தகவல் பரிமாற்றங்கள் வரையறை, கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் பகிரப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர், சிறுவர்களைக் காப்பதற்கான சட்ட திட்டங்கள் எதுவும் இங்கில்லை. இங்குள்ள சிறுவர்களில் பலரும் முதல் முறையாக இணையதளம் மூலமாக கருத்துகளையும் தகவல்களையும் பெறுகின்றனர். அந்த வகையில் தொழில்நுட்ப நிறுவனங்களான ஃபேஸ்புக், ஆப்பிள், கூகுள் ஆகியவற்றுக்கும் இளம் தலைமுறையினரைக் காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இன்றைய தொழில்நுட்ப உலகில் இளம் பிராயத்தினர் அனைவருமே எதிர்கால சமூகத்தினர்தான். அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்குமே உள்ளது.

சொந்த வீடு ஆர்வம் இல்லாத இளம் தலைமுறையினர்


சொந்த வீடு பலருக்கு கனவு. வங்கியில் கடன் வாங்கி சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் லட்சியமாகவே பலருக்கு இருந்தது. வாய்ப்பிருந்தும் வீடு வாங்கத் தவறிவிட்டோமே என வருத்தப்
படுவோரும் உண்டு.

ஆனால், இப்போதைய இளம் தலைமுறையினரின் மனோநிலையே வேறு மாதிரியாகத்தான் உள்ளது. குறிப்பாக இப்போது வேலைக்குச் செல்லும் இளம் தலைமுறையினர் எவருமே சொந்த வீடு வாங்கு வதில் ஆர்வம் காட்டவில்லை. வீட்டை வாங்கி அதற்காக மிகப் பெரிய தவணைத் தொகையை செலுத்தி, தங்களை வருத்திக் கொள்ள விரும்பவில்லை.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 2006-ம் ஆண்டுக்கு முன்புவரை ரியல் எஸ்டேட் சந்தையில் அப்படி ஒன்றும் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படவில்லை. 2008-ம் ஆண்டில் சர்வதேச பெருமந்த பொருளாதார நிலை ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி ஏறுமுகத்தில்தான் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் சந்தை தொடர் இறங்குமுகத்தில்தான் உள்ளது.

கட்டப்பட்ட பல வீடுகளை வாங்க ஆளின்றி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மிகப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. ஒரு வீட்டை வாங்கி பிறகு இரண்டு வீடு வாங்குவது என்ற மனோ நிலை இருந்த தலைமுறை மாறி இளம் தலைமுறையினர் ஒரு வீட்டை வாங்கி தங்களை குறுகிய வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மையாக உள்ளது. வருமான வரிச் சலுகை கிடைக்கிறது என்பதற்காக ஒரு வீட்டிற்கு மாதாந்திர தவணை செலுத்தும் சிரமத்தை விட வேறு பல முதலீடுகளில் இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதாகக் கூறுகிறார் இன்டர்நேஷனல் மணி மேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லோவாய் நௌலஹி.

நிதி மேலாண்மையில் தற்போதைய இளம் தலைமுறையினர் மிகச் சிறப்பாகவே திட்டமிடுகின்றனர். இதுவும் அவர்களது சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற இலக்கு ஏற்படாமல் போனதற்கு முக்கியக் காரணமாகும். மேலும் வீடு வாங்கினால் வேறு நகரங்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும்போது செல்ல முடியாமல் போகும் சூழ்நிலை உருவாவதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு செல்லும்போது கட்டும் மாதாந்திர தவணை அளவுக்குக் கூட வாடகை கிடைக்காததும் இதற்குக் காரணமாக உள்ளது.

அனராக் பிராப்பர்டி கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் கடந்த 20 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் சந்தையின் போக்கு எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது. இந்நிறுவனம் நடத்திய ஆன்லைன் சர்வே-யில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

1990-களில் அதிக அளவில் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டியவர்கள் 45 வயது முதல் 55 வயதுப் பிரிவினர்கள். 2000-வது
ஆண்டுகளில் இந்த வயதுப் பிரிவு 35 முதல் 45 வயதுப் பிரிவினராகக் குறைந்தது. 2009 முதல் 2010 வரையான காலத்தில் வங்கிக் கடன் எளிதாகக் கிடைத்ததால் வீடு வாங்குவோரின் வயதுப் பிரிவு 25 முதல் 35 ஆகக் குறைந்தது.

1990-களில் வீடு வாங்க ஆர்வம் காட்டிய 45 வயது முதல் 55 வயதுப் பிரிவினர் தாங்கள் ஓய்வுக் காலத்தை முன்னிட்டு வீடு வாங்குவதற்குத் திட்டமிட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் தங்களது சேமிப்பில் பெரும்பகுதி மூலம் வீடு வாங்கினர். வெகு சிலரே வங்கிகளை நாடினர். ஆனால் இந்த காலகட்டத்தில் வங்கிகள் கடன் வழங்குவதில் தயக்கம் காட்டின. 2000-வது ஆண்டுகளின் பிற்பாதியில் வீட்டுக்கடன் கிடைப்பது மிகவும் எளிதானதாக இருந்தது.

இந்த காலகட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு அதாவது 35 வயது முதல் 45 வயது பிரிவினர்களுக்கு கடன் கிடைப்பது எளிதாக இருந்தது. அத்துடன் வீட்டுக் கடன் சுலப தவணைக்கு வரி விலக்கு கிடைத்ததும் ஒரு காரணமாக அமைந்தது. 2019-ம் ஆண்டில் வீடு வாங்கும் பிரிவினர் இன்னமும் 35 வயது முதல் 45 வயது பிரிவினராகத்தான் உள்ளனர்.

ஆனால் இதற்கும் குறைவான வயதுப் பிரிவினர் 25 முதல் 35 வயதுப் பிரிவினர் வீடு வாங்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். மிகச் சிறிய வயதில் வீட்டுக் கடன்சுமையில் சிக்க வேண்டாம் என்ற மனோபாவம் இவர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டதாக அனராக் நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு இயக்குநர் பிரசாந்த் தாகுர் தெரிவிக்கிறார். வீடு வாங்குவதை விட தங்களது சேமிப்புகளை பிற இனங்களில் முதலீடு செய்யலாம் என்ற யோசனையும் இப்பிரிவினரிடையே உருவாகியுள்ளதே பிரதான காரணமாகும்.

ஒரு காலத்தில் பரஸ்பர நிதித் திட்டங்கள் மிகவும் ஆபத்தானவை என்ற மனோநிலை முந்தைய தலைமுறையினர் மத்தியில் ஏற்பட்டிருந்தது. ஆனால் இப்போதேய இளம் தலைமுறையினர் பரஸ்பர நிதித் திட்டங்கள் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதில் முதலீடு செய்கின்றனர். மேலும் பரஸ்பர நிதி சேமிப்பின் வளர்ச்சியானது வீடு வாங்குவதை விட சிறந்தது என்ற மனோபாவம் உருவாகியுள்ளதே இதற்குக் காரணமாகும். பரஸ்பர முதலீடுகள் ரூ. 25.47 டிரில்லியன் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதில் புதிய முதலீடுகள் ரூ. 1.02 டிரில்லியன் ஆக உள்ளது. ரியல் எஸ்டேட் முதலீடுகளைத் தவிர்த்து பரஸ்பர நிதி முதலீடுகளில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது. வீடு வாங்கும் போக்கு நகருக்கு நகர் வித்தியாசப்படுகிறது. மும்பையில் வீடு வாங்குவோரில் 37 சதவீதம் பேர் 35 வயது முதல் 45 வயது பிரிவினராக உள்ளனர். 45 முதல் 55 வயது பிரிவினரின் விகிதம் 28 சதவீதமாக உள்ளது. டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், புணே ஆகிய நகரங்களில் இது சற்று வித்தியாசப்படுகிறது.

ஹைதராபாத்தில் வீடு வாங்குவோர் விகிதத்தில் 39 சதவீதம் 25 வயது முதல் 35 வயதுப் பிரிவினராக உள்ளனர். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அதிக அளவில் (36%) வீடு வாங்க ஆர்வமாக உள்ளவர்கள் 35 வயது முதல் 45 வயது பிரிவினர்தான். அதாவது முந்தைய தலைமுறையினர்தான் வீடு வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இளம் தலைமுறையினர் வீடு வாங்குவதில் ஆர்வமாக இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் கட்டணம் 50 சதவீதம் குறைக்க ஆலோசனை




சென்னை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 2 வழித் தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளை ஈர்க்கும் வகையில் ஷேர் ஆட்டோ, டாக்சிகள் இயக்கப்படுவதோடு, கலை மற்றும் கண்காட்சிகள், உணவு திருவிழாக்கள், மருத்துவ முகாம்களும் அவ்வப்போது நடத் தப்பட்டு வருகின்றன. இதனால் அலுவலக நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இருப்பினும், விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது. எனவே, ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில்களில் தினமும் 1 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். ஆனால், ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் கூட்டம் குறைவாக உள்ளது.

எனவே, பயணிகளை ஈர்க்கவும், கட்டணச் சலுகை அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை கூட்டத்தை நிர்வாகம் சமீபத்தில் நடத்தியது. அதில், ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் 50 சதவீதம் கட்டணத்தை குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கட்டணம் குறைப்பது குறித்து ரயில்வே வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளதால் வாரியத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்’’ என்றனர்.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில் சேவை தொடங்கியவுடன் சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையில் போக்கு வரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்ட ணம் அதிகமாக இருப்பதால், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய மக்கள் தயக்கம் காட்டுகின் றனர். கட்டண குறைப்பு தொடர் பாக நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது வரவேற்கத் தக்கது. இதனால், அண்ணாசாலை யில் 40 சதவீதம் வரையில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது’’ என்றனர்.
இந்தியர்களின் ஸ்விஸ் வங்கிக் கணக்கு விவரங்கள்: முதல் பட்டியல் கிடைத்தது

By DIN | Published on : 07th October 2019 04:52 PM 



புது தில்லி: இந்தியா - ஸ்விஸ் வங்கிக்கு இடையே நடைபெற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு பற்றிய முதல் பட்டியல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு எடுத்திருக்கும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருக்கும் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப் பணத்தை நாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியாக ஸ்விஸ் வங்கி - இந்திய அரசுக்கு இடையே இந்தியர்களின் வங்கிக் கணக்கு தன்னிச்சையாக பரிமாற்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஸ்விட்சர்லாந்தின் ஃபெடரல் வரி நிர்வாகத்துக்கும், 75 நாடுகளுக்கும் இடையே நடந்த இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்தந்த நாட்டு குடிமக்கள், ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு குறித்த விவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.

அந்த வகையில் அடுத்த பட்டியல் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வழங்கப்படும்.

இந்த பட்டியல் மிக மிக ரகசியமாக வைக்கப்படும். இந்த பட்டியலில் எத்தனை இந்தியர்களின் வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன என்ற விவரம் கூட வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுதபூஜை கொண்டாட ஏ.டி.எம் இயந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய காவலாளி!

By DIN | Published on : 07th October 2019 05:07 PM |



ஆயுதபூஜை கொண்டாட ஏ.டி.எம் இயந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய நகைச்சுவையான சம்பவம் திருப்பூரில் நடைபெற்றுள்ளது.

ஆண்டுக்கொரு முறை குழந்தைகளின் குட்டி சைக்கிள் முதல் பெரியவர்கள் பயன்படுத்தும் கார், பைக் வரை மனிதனின் வாழ்வில் உயர்வுக்கு உதவும் பொருட்களுக்கு மஞ்சள், குங்குமமிட்டு, மாலை அணிவித்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.

தொழிற்கூடங்களிலும், அலுவலகங்களிலும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய நகைச்சுவையான சம்பவம் நடந்துள்ளது

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் - பெருந்துறை சாலையில் அமைந்துள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்தில் பணியாற்றி வந்த காவலாளி ஆயுதபூஜையை முன்னிட்டு ஏடிஎம் மையத்தை தண்ணீர் ஊற்றி கழுவி துடைத்துள்ளார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரத்தையும் சுத்தமாக தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளார். அதனால் அந்த இயந்திரம் முற்றிலும் பழுதடைந்துள்ளது.

இச்சம்பவம் மண்ண தொட்டு கும்பிடணும் படத்தில் நடிகர் செந்தில் லாரிக்கு ஆயுதபூஜை கொண்டாடிய நகைச்சுவைக் காட்சியை நமக்கு நினைவுபடுத்துகிறது. அந்தக் காட்சியில் நடிகர் செந்தில் எரியும் கற்பூரத்தை டீசல் டேங்கில் காண்பித்ததால் லாரி முற்றிலுமாக எரிந்துவிடும்.

NEWS TODAY 26.01.2026