Tuesday, October 8, 2019

செவிலியர் பணிக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களை நியமிக்க தடை: சென்னை உயர்நீதிமன்றம்

By DIN | Published on : 07th October 2019 11:31 PM

சென்னை: தமிழகத்தில் செவிலியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களை விட குறைவான மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த ஜூலை 23 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 64.50 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 64 மதிப்பெண்களும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு 54 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டதாகவும், 2 ஆயிரத்து 345 பதவிகளுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தற்காலிக தேர்வு என்ற பெயரில் பணியிடங்களின் எண்ணிக்கையை 2 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளதாகவும், தகுதி மதிப்பெண்ணை விட குறைந்த மதிப்பெண் பெற்ற 56 பேரை தற்காலிகமாக தேர்வு செய்ததுடன், அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுத்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாகவும், அந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்கவும் கோரி சென்னையைச் சேர்ந்த செவிலியர் பட்டதாரி திவ்யபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடந்த வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செவிலியர் தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால், சட்டவிதிகளை பின்பற்றி மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுத்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்கு தடைவித்ததுடன், தகுதி மதிப்பெண்களுக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவும் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இது தொடர்பாக அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் மருத்துவ பணிகள் வாரியம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
24 மணிநேரம் காத்திருந்துஏழுமலையான் தரிசனம்

Added : அக் 07, 2019 22:43

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க, சரஸ்வதி பூஜையான நேற்று, பக்தர்கள், 24 மணிநேரம் காத்திருந்தனர்.

திருமலையில் திங்கள்கிழமை முதல், வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதைக்காண, பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். மேலும், தொடர் விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.எனவே, தேவஸ்தானம் வரும், 14ம் தேதி வரை, இலவச முதன்மை தரிசனங்கள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது. பக்தர்கள், 300 ரூபாய் விரைவு தரிசனம் மற்றும் தர்ம தரிசனத்தில் மட்டுமே, ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

நேற்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், 24 மணி நேரம் காத்திருந்தனர். இன்றும், இந்த நிலை நீடிக்கும் என, கூறப்படுகிறது.இதற்கிடையில், திருமலையில் நடந்து வரும், ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின், 8ம் நாளான நேற்று காலை திருத்தேரோட்டம் நடந்தது. திருத்தேரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பவனி வந்து மாடவீதியில் கூடியிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று தீர்த்தவாரியுடன், வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற உள்ளது.
யோகா பட்ட மேற்படிப்பு சேருவதற்கு வாய்ப்பு

Added : அக் 07, 2019 21:06

சென்னை : யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு, வரும், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.சென்னையில் உள்ள, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரியில், மூன்றாண்டு பட்ட மேற்படிப்புக்கு, 15 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கு, வரும், 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற, சுகாதாரத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, அரும்பாக்கம், சென்னை - 106' என்ற முகவரியில் சமர்பிக்க வேண்டும்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில் படித்திருப்பதுடன், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, 20ம் தேதி நடைபெறும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு, www.tnhealth.org என்ற, இணையளத்தை பார்வையிடலாம்.

பயணியர் இல்லை விமானம் ரத்து

Added : அக் 07, 2019 20:56


சென்னை : பெங்களூரு செல்லும் விமானத்தில், போதிய பயணியர் இல்லாததால், அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து நேற்று காலை, 7:00 மணிக்கு, பெங்களூரு செல்லும், 'ஏர் இந்தியா' விமானத்தில் பயணிக்க, ஐந்து பயணியர் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். அதனால், அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டு, முன்பதிவு செய்தவர்கள் மாற்று ஏற்பாடாக, நேற்று காலை, 7:20க்கு, பெங்களூரு சென்ற தனியார் விமானத்தில், அனுப்பி வைக்கப்பட்டனர்.இதேபோல, பெங்களூரில் இருந்து சென்னைக்கு, நேற்று காலை, 9:20க்கு வர வேண்டிய ஏர் இந்தியா விமானமும், போதிய பயணியர் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.
தாறுமாறாக தந்த கடன்

Added : அக் 07, 2019 20:55

சென்னை : தாறுமாறாக கடன் கொடுத்ததன் விளைவாக, அடகு வைத்த சொத்துக்களை எல்லாம் விற்க, ஏலம் விட வேண்டிய நெருக்கடி நிலைக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தள்ளப்பட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாக வைத்து, ஐ.ஓ.பி., என்ற, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. ஐந்து ஆண்டுகளாக, இந்த வங்கி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நான்கு ஆண்டுகளாக, இந்திய ரிசர்வ் வங்கியின், பி.சி.ஏ., என்ற, 'உடனடி திருத்த நடவடிக்கை' வரையறையில் இருந்து வருகிறது. வங்கி நஷ்டத்தில் இயங்க, 'கார்ப்பரேட்' என்ற, பெரு நிறுவனங்களுக்கு கொடுத்த, தாராள கடன்கள் தான் காரணம் என, புகார் கூறப்படுகிறது.

நஷ்டம்சொத்துக்களை அடமான மாக பெற்று, பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது. அந்த கடன்களை வசூலிக்க முடியாததால், வங்கி நஷ்டத்தில் மூழ்கியுள்ளது. அதிலிருந்து வங்கியை மீட்க வேண்டிய கட்டாயத்தில், அதன் நிர்வாகம் உள்ளது. அதனால், தற்போது விழித்துக் கொண்டு, கடனை திருப்பி செலுத்தாதவர்களின் சொத்துக்களை விற்று, கடன் தொகையை வரவு வைக்க முன்வந்து உள்ளது.இதற்காக, கடன் பெற்றவர்கள் மற்றும் அவர்களது சொத்து விபரங்களையும், செலுத்த வேண்டிய கடன் தொகையையும் வெளியிட்டு, மின்னணு ஏல அறிவிப்பை அறிவித்து உள்ளது.

அந்த அறிவிப்பில், மொத்தம், 133 சொத்துக்களின் விபரங்களும், அதன் நிலுவை தொகையாக, 2,000 கோடி ரூபாயும் குறிப்பிடப்பட்டுள்ளது.நெருக்கடிஇது குறித்து, வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக, சில நேரங்களில் கண்மூடித்தனமாகவும் கடன் வழங்கப்படுகிறது.இதனால், கொடுத்த கடன் கள் வாராக் கடனாக மாறி, வங்கிகள் நஷ்டத்திற்கு உள்ளாகின்றன.

இதை வசூலிக்க, சொத்துக்களை விற்க, இதுபோன்ற ஏல அறிவிப்பை வங்கிகள் வெளியிடும். இதன் வாயிலாக, சொத்துக்களை விற்று, வங்கிகள், தங்களுக்கு வர வேண்டிய நிலுவை தொகையை வசூலிக்கும். ஐ.ஓ.பி.,யை பொறுத்தவரையில், அதிகாரிகள் செய்த தவறுகள் தான், இதுபோன்ற வாராக் கடன்கள் அதிகரிப்புக்கு காரணம். தாறுமாறாக கடன் கொடுக்கப்பட்டதன் விளைவு தான், வங்கி, தற்போது நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Monday, October 7, 2019

`பிறந்த ஊருக்கு ஏதாவது செய்யணும் சார்..!''- மாதத்தில் ஒருநாள் இலவச சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்

இ.கார்த்திகேயன்
மு.செல்வம்

ஒரு ரூபாய்கூட வாங்காமல், மாதத்தில் ஒருநாள் தன் சொந்த ஊருக்கு வந்து இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த 75 வயதான ஓய்வுபெற்ற மருத்துவர் முருகேசன்.

மருத்துவர் முருகேசன்


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது, நாதன்கிணறு கிராமம். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியிலிருந்து 4 மணி வரை இந்த இலவச மருத்துவ சேவை நடைபெறுகிறது. காலை 9 மணியில் இருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்ள அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வரத் தொடங்கிவிடுகின்றனர். இதில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அடக்கம். சிகிச்சைக்காக வரும் ஒவ்வொருவரையும் வாசலில் நின்று வரவேற்கிறார் டாக்டர் முருகேசனின் தம்பி சந்திரசேகரன். வருகின்ற ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்படுகிறது.


இலவச மருத்துவ முகாம்

பின்னர் டோக்கன் வரிசைப்படி, ஒவ்வொருவராக சிகிச்சை பெறுகின்றனர். ஒவ்வொரு நோயாளியிடமும் நலம் விசாரித்த பிறகே சிகிச்சையைத் தொடங்குகிறார் டாக்டர். பரிசோதனைக்குப் பிறகு அவர் சொல்லும் மருந்து, மாத்திரைகளை சீட்டில் குறிப்பெழுதிக்கொள்கிறார் அவரது தம்பி. காலை, மதியம், மாலை, இரவு, உணவுக்கு முன், பின் என ஒவ்வொரு வேளைக்கும் தனித்தனியாகக் குறிப்பிட்டு அவற்றை நோயாளிகளிடம் கொடுத்து விளக்குகிறார்.

மதியம் 12 மணி வாக்கில் டோக்கன் நம்பர் 50-ஐ நெருங்கும்போது டாக்டர் முருகேசனிடம் பேச்சுக்கொடுத்தோம். "என்னோட சொந்த ஊரு இதே நாதன்கிணறுதான். பள்ளிப் படிப்புக்குப் பிறகு மதுரை மெடிக்கல் காலேஜ்ல M.B.B.S படிச்சேன். மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல M.D, D.C.H முடிச்சேன். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 25 வருடம், மதுரை அரசு மருத்துவமனையில் 8 வருடம் என மொத்தம் 33 வருடம் சர்வீஸை முடிச்சேன். கடந்த 2001-ல் ஓய்வுபெற்றேன். தற்போது வரை குடும்பத்துடன் சென்னையில்தான் வசித்துவருகிறேன்.


டாக்டர் முருகேசன்

மாதந்தோறும் இந்த ஊருக்கு வருவேன். அப்போது, எங்க கிராமத்து மக்கள் என்னிடம் சிகிச்சைகள், மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுச் செல்வார்கள். அந்தச் சமயத்தில் ஒருநாள், இலவச மருத்துவ முகாம் நடத்தினோம். அதில், 150-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, ஒவ்வொரு மாதமும் ஒருநாளில் இலவச மருத்துவ முகாமை நடத்தலாம் என குடும்பத்தினரும் சொன்னார்கள்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், சிகிச்சைக்காக மக்கள் வந்து செல்லவும் வாய்ப்பாக அமையும் என்பதாலும், மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடத்திட திட்டமிட்டு, கடந்த 2015-ல் இருந்து இலவச மருத்துவ முகாமை நடத்திக் கொண்டுவருகிறேன். இதுவரை 48 கேம்ப் நடந்து முடிந்துவிட்டது. ஒவ்வொரு முகாமுக்கும் 200 பேர் வரை வருகிறார்கள். இரத்தசோகை, வைட்டமின் சத்துக்குறைபாடு, கால்சியம் குறைபாடு காரணமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்தாலே ஓரளவு நோய்கள் வருவதைத் தடுக்க முடியும்.


சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்கள்

பரிசோதனையில் அறுவைசிகிச்சை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டால், மற்ற அரசு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்கிறேன். இதுபோக கண்சிகிச்சை, தைராய்டு சிகிச்சை, கேன்சர் விழிப்புணர்வு போன்ற முகாம்களையும் இடையிடையே நடத்திக்கொண்டுவருகிறோம். அரவிந்த் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்ட 360 பேரில் 154 பேருக்கு இலவச கண்ணாடியும், 33 பேருக்கு கண்புரை நீக்க அறுவைசிகிச்சையும் நடந்தது.

இதுவரை இரண்டு பேருக்கு இதயநோய் அறுவைசிகிச்சையும் நடந்துள்ளது. அடுத்த மாதம் 3-ம் தேதி, இதயநோய் சிகிச்சை முகாம் நடைபெற இருக்கு. ஒவ்வொரு முகாமின்போதும் அடுத்த மருத்துவ முகாமுக்கான தேதியும் அறிவிப்புப் பலகையில் ஒட்டி விடுகிறோம். இதுபோன்ற சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு அந்தந்த துறையிலுள்ள சிறப்பு மருத்துவர்களையே அழைக்கிறேன்.


பி.பி பரிசோதனை

பிறந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால்தான், துரைசாமி நாடார் – பால்கனி அம்மாள் என ஒரு அறக்கட்டளையைத் துவக்கி, இந்த இலவச சிகிச்சையை நடத்திக் கொண்டுவருகிறோம். செய்கிற பணியைச் சிறப்பாகச் செய்கிறோம். அவ்வளவுதான். இதேபோல், ஒவ்வொரு கிராமத்திலும் இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கு ஒவ்வொரு மருத்துவரும் முன்வர வேண்டும்" என்றபடியே நோயாளிகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார் மருத்துவர் முருகேசன்.

சிகிச்சை பெறுவதற்காக வந்த சிலரிடம் பேசினோம். ''முருகேசன் டாக்டர், மாசத்துல ஒருநாள் நடத்துற இந்த மருத்துவ முகாமில், எங்க பகுதி மக்கள் மட்டுமில்லாம திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல், காயாமொழி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் மக்கள் சிகிச்சைக்காக வர்றாங்க.


அடுத்த முகாம் அறிவிப்பு

நோயைப் பொறுத்து தேவையான மருந்துகளும், தொடர் சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு ஒரு மாசத்துக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், டானிக்குகள் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாசமும் கூட்டம் கூடிக்கொண்டேபோகிறது” என்கின்றனர்.

சேவை என்பதை வெறும் வாய் வார்த்தையாக மட்டுமில்லாமல், நடைமுறையில் செயல்படுத்திவரும் டாக்டர் முருகேசனுக்கு வாழ்த்துச் சொல்லி விடைபெற்றோம்.
மறக்க முடியாத திரை இசை: இன்று போய் நாளை வா!




பி.ஜி.எஸ். மணியன்

இன்று திரைப்பாடல் என்பது கதையை நகர்த்தும் கருவியாக மாறிக்கொண்டு வருகிறது. இது வரவேற்கத் தக்க மாற்றம். ஏனென்றால், திரைப்படம் என்பது பல கலைகளை ஒருங்கிணைக்கும் அற்புத ஊடகம் என்றாலும் அதன் தனித்துவம் என்பது காட்சி வழியாக மனிதர்களின் மனத்தை மயக்கும் மாயத்தைச் செய்வதில்தான் அடங்கியிருக்கிறது.

அப்படியிருக்கையில் ஒரு கதாபாத்திரத்தின் குணத்தையும் பராக்கிரமங்களையும் காட்சிகளின் வழியாக நிறுவுதலே அந்தக் கலையின் இயல்புக்கு ஒத்துப்போகக் கூடியதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் ஆகும். ஆனால், இந்த அம்சத்தை நமது படைப்பாளிகள் புரிந்துகொள்ள 100 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இன்றும் சில கதாநாயகர்களுக்கு அறிமுகப்பாடல் படத்தில் இடம்பெறுவது திரைப்படக் கலையை ‘மிஸ்யூஸ்’ செய்வதற்கு ஓர் உதாரணம். ஆனால் கறுப்பு வெள்ளை காவிய சினிமாக்களின் கால கட்டத்தில் கதாநாயகனை அறிமுகப்படுத்தும்போது அவனைப் புகழ்ந்து பாடல் காட்சி அமைப்பது ஒரு பெரும் வழக்கமாக நிலைபெற்றிருந்தது. அல்லது கதாநாயகனே ஒரு பாடலைப் பாடிக்கொண்டுதான் அறிமுகமாவார்.

ஆனால், வில்லன் கதாபாத்திரத்தைப் புகழ்ந்து, அவனது பெருமைகளைப் பேசும் வகையில் பாடல் காட்சி அமைந்த படம் ‘சம்பூர்ண ராமாயணம்’. வில்லனின் அறிமுகமே ஒரு பாடல் காட்சியின் வாயிலாகத்தான்.

ராமாயணக் கதையில் வில்லன் யார்? ராவணன் தானே? அந்த ராவணன் அறிமுகமாகும் முதல் காட்சியே ஒரு பாடல் காட்சிதான். அவ்வளவு ஏன்? இந்தப் படத்தில் ராமனாக நடிக்கும் என்.டி. ராமா ராவுக்கே பாடல் காட்சி கிடையாது. ராவணனுக்கு மட்டும் தான் பாடல். அதுவும் ஒன்றல்ல மூன்று பாடல்கள்! இதில் இன்னொரு சுவாரசியமான முரண் இருக்கிறது. அந்தப் பாடல்கள் அனைத்தையும் ராவணனுக்காகப் பின்னணியில் பாடியிருப்பவர் ராமன்.

சாதாரண ராமன் இல்லை. ஜெயராமன்!

ஆம்..சி.எஸ். ஜெயராமன் தான் ராவணனாக நடித்திருக்கும் டி.கே. பகவதிக்குப் பின்னணி பாடி இருக்கிறார். ராவணன் பாடுவதாக அமைந்த மூன்று பாடல்களையுமே இவர் தான் பாடியிருக்கிறார். ராம - ராவண யுத்தம். முதல் நாள் போரில் அனைத்தையும் இழந்து ‘இன்று போய் நாளை வா’ என்று மனிதனான ராமனால் அனுப்பி வைக்கப்பட்ட ராவணன், வெறுங்கையோடு இலங்கை திரும்புகிறான்.

எப்படித் திரும்புகிறான்?

அதுவரை கம்பீரமாக நிமிர்ந்தே நின்று பழக்கப்பட்ட அவன், முதல் முதலாக பூதலம் (பூமி) என்னும் நங்கை தன்னையே நோக்கிடப் போர்க்களத்திலிருந்து திரும்புகிறான். அவனது மனநிலையைக் கம்பனின் அடியொற்றி எளிய வார்த்தைகளில் மருதகாசி அற்புதமாக வடிவமைக்க, ‘திலங்’ ராகத்தில் இந்தப் பாடலை கே.வி.மகாதேவன் அமைத்திருக்கும் விதமும் அதை சி.எஸ். ஜெயராமன் பாடி இருக்கும் அழகும் அலாதியானவை.

‘இன்று போய் நாளை வாராய் என
எனை ஒரு மனிதனும் புகலுவதோ
மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும்
நிலை இன்றே ஏன் கொடுத்தாய்..’

சிவபெருமான் முன்னால் கசிந்துருகி தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்க்கிறான் ராவணன். ஒரே வார்த்தையில் இருபொருள் தொனிக்கும் சிலேடை வகையில் மருதகாசி வார்த்தைகளால் விளையாடி இருக்கிறார்.

சாதாரணமாக ‘மண்மகள்’ என்ற வார்த்தை பூமாதேவியைக் குறிக்கும். ‘நிலம் நோக்கி தலை குனிந்து வரும் நிலையை எனக்கு ஏன் கொடுத்தாய்?’ என்று ராவணன் குமுறுவதாகப் பொதுப்படையாகப் பார்த்தால் அர்த்தம் தொனிக்கும்.

ஆனால் கம்பன், ராவணன் நாணத்தால் வருந்தக் காரணம் என்று சொல்வது எதைத் தெரியுமா? ‘வானவர் சிரிப்பார்கள். மண்ணில் உள்ள அனைவரும் நகைப்பார்கள். தனது கட்டுப்பாட்டில் உள்ள பகைவர்கள் எல்லாரும் தனது தோல்வியைக் கண்டு கைகொட்டிச் சிரிப்பார்களே’ என்று அதற்கெல்லாம் ராவணன் வருந்தவில்லையாம்.

‘வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் - நெடு வயிரத் தோளான்
நான் நகு பகைவர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான்
வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்’
- ‘தான் கவர்ந்து வந்த சீதை ராமனிடம் தான் தோற்றதை அறிந்தால் சிரிப்பாளே’ என்றுதான் அவமானத்தால் புழுங்கினான் ராவணன் என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பன். இப்போது மருதகாசியின் பாடல் வரியை மறுபடி பார்த்தால், மண்மகள் என்ற வார்த்தைக்கு ‘மண்ணின் மகள்’ அதாவது பூமாதேவியின் மகளான சீதா தேவி என்ற அர்த்தம் கிடைக்கிறதல்லவா? அதாவது ‘மண்ணின் மகளான சீதாதேவியின் இளக்காரமான நகைக்கும் முகத்தைக் கண்டு மனம் அவமானத்தால் கலங்குகிறதே.

இந்த நிலையை ஏன் கொடுத்தாய்?’ என்று கலங்குகிறான் ராவணன்
பொதுவாக, உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவனுக்கு அவமானம் ஏற்பட்டால் அவன் தனக்குள் எப்படி மறுகிப்போவான், தனது சாதனைகளைப் பட்டியல் போடுவதில் தொடங்குவான் அல்லவா? இதில் சரணத்தில் முதல் இரண்டு அடிகளில் அப்படி ராவணன் பட்டியல் போடுவதாகத் தொடங்குகிறார் மருதகாசி.

‘எண்திசை வென்றேனே - அன்று
இன்னிசை பொழிந்துன்னைக் கண்டேனே’

அதற்கு மேல் பேச முடியாமல் அவனது தற்போதைய நிலை மனத்தில் உறுத்த மீண்டும் ‘மண்மகள் முகம் கண்டே’ என்று குமுறத் தொடங்கி விடுகிறான் அவன். அந்தக் குமுறலைப் படத்தைப் பார்க்காமலே துல்லியமாகக் கேட்பவரை உணரவைக்கும் வண்ணம் இசை அமைத்திருக்கிறார் என்றால் அதுதான் கே.வி. மகாதேவன்.

‘எண்திசை வென்றேனே...’ என்ற வார்த்தைகளை அவனது உயர்வைக் காட்டும் விதமாக உச்சத்துக்குக் கொண்டு சென்றவர், மெல்ல மெல்லக் கீழிறங்கி கடைசியில் ‘மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்’ என்ற வரிகளுக்கு மீண்டும் வந்து முடிக்கும் போது, அவனது மனக்குமுறலைப் பிரதிபலிக்கும் வண்ணம் மறுபடி உச்சத்துக்கே கொண்டுபோய் நிறுத்திப் பாடலை அப்படியே முடித்திருக்கிறார் மகாதேவன். ‘திலங்’ ராகத்தையே உச்சத்துக்கு ஏற்ற, அவருக்கு இசைச் சித்தர் சி.எஸ். ஜெயராமனின் குரல்வளம் பேருதவி புரிந்திருக்கிறது.

இன்றளவும் படத்தின் பெயர் சொன்னால் உடனே நினைவுக்கு வரும் பாடலாக ‘இன்று போய் நாளை வாராய்’ பாடல் நிலைத்திருப்பது ஒன்றே பாடலின் பெருவெற்றிக்குச் சாட்சி. நானும் கூட.. இந்த அத்தியாயத்துடன் சென்று. வெகு விரைவில் மீண்டும் இந்து டாக்கீஸ் வாசகர்களைச் சந்திக்க வருவேன்.

தொடர்புக்கு: pgs.melody@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

NEWS TODAY 26.01.2026