Sunday, October 20, 2019

இனி கீழே வீச வேண்டாம்: டீ, காபி குடித்துவிட்டு 'கப்'பை அப்படியே சாப்பிடலாம்

ஹைதராபாத்,

டீ, காபி குடித்துவிட்டு 'கப்'பைக் கீழே வீசுவதற்குப் பதிலாக இனிமேல் அந்த 'கப்'பை அப்படியே சாப்பிடும் வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இதற்கு 'ஈட் கப்' என்று ஹைதராபாத்தை சேர்ந்த ஜினோம்லேப் எனும் தனியார் நிறுவனம் பெயரிட்டுள்ளது.

முற்றிலும் தானியங்களால் உருவாக்கப்பட்ட இந்த 'ஈட் கப்'பில் சூடான பானங்கள், குளிர்ந்த பானங்கள் இரண்டையும் ஊற்றிப் பருகலாம். 40 நிமிடங்கள் வரை 'ஈட் கப்' நமத்துப்போகாமல் கப் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த 'ஈட் கப்'பில் சூப், காபி, தேநீர், யோகர்ட், சுடுநீர் உள்ளிட்ட பானங்களைப் பருகமுடியும்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது தவிர்க்கப்பட வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 'ஈட் கப்' கொண்டுவரப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் குமார் கூறுகையில், " ஈட் கப் முற்றிலும் தானியங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. நாம் ஊற்றிக்குடிக்கும் சூடான, குளிர்ந்த பானங்கள் 40 நிமிடங்கள்வரை கப்பில் வைத்திருக்க முடியும். தற்போது பழக்கத்தில் இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்பிற்கு மாற்றாக இந்த ஈட் கப் இருக்கும்.

இந்த 'ஈட் கப்'பில் எந்தவிதமான செயற்கையான வண்ணங்களும், செயற்கையான பொருட்களும் சேர்க்கப்படாமல் முற்றிலும் தானியங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. 40 நிமிடங்கள் வரை 'கப்' மொருமொருப்பு தன்மையுடன் இருக்கும். சுற்றுச்சூழலுக்கு வரும் ஆபத்துக்கள், மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கவும் இந்த 'ஈட் கப்' உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்

தற்போது இந்த 'ஈட் கப்' ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த கப்புகளைத் தயாரிக்கும் நிறுவனத்தை ஹதராபாத்தில் உள்ள ஷாமிர்பேட்டையில் தொடங்க ஜினோம்லேப் திட்டமிட்டுள்ளது.

ஏஎன்ஐ
மது குடித்தால் நூதன தண்டனை: கிராமத்துக்கே பிரியாணி விருந்து

அகமதாபாத்

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் அமிர்கத் தாலுகாவில் உள்ளது கட்டிசித்தாரா என்ற கிராமம். இந்த கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் ஆண்கள் மது குடித்துவிட்டு அடிதடிகளில் ஈடுபடுவதும், கொலைகள் நடப்பதும் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மது குடிப்பவர்களை கட்டுப்படுத்த கிராம மக்கள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, கிராமத்தில் யாராவது மது குடித்தது தெரியவந்தால் அவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுகிறது. குடித்து விட்டு தகராறு செய்தால் அபராதம் ரூ.5,000 விதிக்கப்படுகிறது. மேலும், மது குடித்தவர் அந்த கிராமத்துக்கே மட்டன் பிரியாணி விருந்து அளிக்க வேண்டும்.

கட்டிசித்தாரா கிராமத்தில் 800 பேர் வரை உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து போட 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவாகும். இதற்கு பயந்து கொண்டே கிராமத்து ஆண்கள் மது குடிப்பதை நிறுத்திவிட்டனர். இந்த நூதன தண்டனை 2013-14-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமுதல் கிராமத்தில் மது குடிப்போர் குறைந்துவிட்டதாக கிராம பஞ்சாயத்து தலைவர் கிம்ஜி டங்கய்சா தெரிவித்தார்.
சிவகங்கை அருகே திருப்பாச்சேத்தியில் ரூ.20 லட்சம் செலவில் அரசு பள்ளியை சீரமைக்கும் முன்னாள் மாணவர்கள் 




என்.சன்னாசி

மதுரை

சிவகங்கை மாவட்டம், திருப்பாச் சேத்தி அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியை தத்தெடுத்து ரூ.20 லட்சத்தில் சீரமைத்து, வைர விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் நிலையைக் கண்டு அப்பள்ளியைத் தத்தெடுத்து முழுமையாக சீரமைக்க முன்வந்தனர். இதற்காக வாட்ஸ் அப் குரூப் (GHSS TPC 60 YEAR) ஒன்றை தொடங்கினர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு முதல் அண்மையில் அங்கு பயின்றவர் வரை குரூப்பில் 500-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைக்கப்பட்டனர். இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போது அங்கு ஆசிரியராகப் பணிபுரிபவருமான ராமநாதன் உள்ளிட்ட சில முன்னாள் மாணவர்கள் அடங்கிய குழுவை உருவாக்கினர்.

இப்பள்ளியை நேரில் ஆய்வு செய்து ரூ.20 லட்சம் செலவில் பள்ளியை சீரமைக்க திட்டம் தயாரித்தனர். ஆசிரியர் ராமநாதன், முன்னாள் மாணவர்சங்கத் தலைவர் பாண்டி ஆகியோர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கினர். இதன் மூலம் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களிடம் நிதி திரட்டுகின்றனர். கடந்த 4 மாதத்தில் ரூ. 13 லட்சம் செலவில் பல்வேறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆசிரியர் ராமநாதன் கூறும்போது, "முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்களின் பங்களிப்புடன் ரூ.7.50 லட்சத்தில் கழிப்பறை புதுப்பித்தல், தற்காலிக அறிவியல் ஆய்வகம், சுற்றுச்சுவர் புதுப்பித்தல், விளையாட்டு மைதானம் சீரமைத்தல், நினைவு அரங்கம் பணிகள் முடிவடைந்துள்ளன. வர்ணம் பூசுதல் உட்பட மேலும் ஓரிரு பணிகள் பாக்கியுள்ளன. இவற்றை துரிதமாக முடித்து வரும் டிசம்பரில் வைர விழா (60-ம் ஆண்டு) நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்" என்றார்.

முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பாண்டி கூறும்போது, "முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி, மாஜிஸ்திரேட் பாண்டி மகாராஜன், வங்கி அதிகாரி லோகநாதன், சிங்கப்பூர் ஆசிரியர் சசி குமார் என சிலர் இப்பள்ளிக்கு அதிகமாக நன்கொடை
அளித்துள்ளனர். மேலும் காவல் துறை, ராணுவம், கல்வி, பத்திரிகை உட்பட பல்வேறு துறைகளில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பணியில் உள்ளனர். அனைவரும் வைர விழாவில் பங்கேற்க வேண்டும்" என்றார்.
கல்லூரி தாளாளரால் பாலியல் வன்முறைக்குள்ளான இளம் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி: டிஎன்ஏ மாதிரியை சேமிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு 




மதுரை

கல்லூரித் தாளாளரால் பாலியல் வன்முறைக்குள்ளான இளம் பெண் ணின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க அனுமதி வழங்கிய உயர் நீதிமன்றம், குற்றவாளியை உறுதி செய்ய டிஎன்ஏ மாதிரியை சேமிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

சிவகங்கையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் 2018-ல் சேர்ந்தேன். கல்லூரி தாளாளர் நடத்தை சரியாக இல்லாததால் படிப்பைப் பாதியில் நிறுத்தினேன். மாற்றுச் சான்றிதழ் பெற கல் லூரிக்குச் சென்ற என்னை தாளாளர் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டார்.

செப்.11-ல் எனக்குத் திருமணம் நடைபெற்றது. சில நாட் களுக்குப் பிறகு எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனைக்குச் சென்றபோது நான் மூன்றரை மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். இதனால் கணவர் வீட்டி னர் என்னைப் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். கல்லூரித் தாளா ளர் மீது சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாளாளரை கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமையால் நான் கருவுற்றிருப்பதால், அந்தக் கருவைக் கலைக்க அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். எனது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எனது கருவைக் கலைக்க அனுமதி வழங்க வேண்டும். இவ் வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், மனுதாரரின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க அனுமதி வழங்கியும், குற்றவாளியை உறுதிசெய்ய கருவின் டிஎன்ஏ மாதிரியை சேமிக்க வும் சிவகங்கை அரசு மருத்துவ மனைக்கு உத்தரவிட்டார்.
மக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும் இல்லையேல் நான் மாவட்டத்தை விட்டுப் போக வேண்டும்: அதிகாரிகளை எச்சரித்த மாவட்ட ஆட்சியர் 




திருவண்ணாமலை

மக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்கு போகணும் அல்லது நான் இந்த மாவட்டத்தைவிட்டு போகணும்... என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வாட்ஸ் அப்பில் எச்சரித்துள்ளார்.


திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி பரபரப்பில்லாமல் இயங்கக்கூடிய நேர்மையான ஆட்சியர்களில் ஒருவர். தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகக் கந்தசாமி பொறுப்பேற்றது முதல் பல்வேறு துரித நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். குறிப்பாக பெண் குழந்தைகளின் நலனில், கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறார்.ஏழை மக்களுக்கான சேவை செய்யும் பணியாக அரசு அதிகாரத்தை பயன்படுத்துகிறார்.




முக்கியமாக காட்சிக்கு எளியவராக, சாமானிய மக்கள் எளிதில் அணுகி குறையைச் சொல்லும் வகையில் நடந்துக்கொள்கிறார். கடந்த ஆண்டு ஆரணி அருகேயுள்ள கணிக்கிழுப்பை கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற இளம் பெண்ணின் தாயார் இறந்து போக கல்லூரியில் முதலாண்டு படிப்புக்காக உதவி கேட்கும் நிலையில் உள்ள சகோதரி, 9-ம் வகுப்பு படிக்கும் சகோதரனுடன் பாட்டியின் தயவில் வாழ அவரும் இறந்துப்போனார்.

தனது நிலை குறித்து ஆட்சியரிடம் மனு அளித்த ஆனந்தி தனது பணிபுரிந்த சத்துணவு மையத்தில் வேலை கிடைக்க ஆவன செய்யக் கேட்க அவருக்கு 19 வயதே ஆன நிலையில் அரசு வேலைக்கு வாய்ப்பில்லாத நிலையிலும் அவருக்காக தலைமைச் செயலரிடம் பேசி அனுமதி வாங்கி அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்தார்.



அரசு ஆணையுடன் அவரது வீட்டுக்குச் சென்ற அவர் தனது செலவில் அவர்களுக்கு மதிய உணவு அளித்து அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். அவர்களுக்கு வீடு இல்லாததை அறிந்து தேசிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கிடைக்க உத்தரவிட்டார். தங்கையை கல்லூரியில் சேர்க்கவும், தம்பியின் படிப்பு இரண்டுக்கும் உதவுவதாக சொன்னவர் சிறுவனுக்கு சைக்கிள் ஒன்றை அளித்தார்.




பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும், சாதாரண மக்களுக்கு அரசாங்கத்தின் திட்டங்கள் சென்று சேரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். இதனால் தேசியப் பெண் குழந்தைகள் தினத்தன்று, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாவட்டத்துக்கான விருதை கடந்த ஆண்டு திருவண்ணாமலை பெற்றது.

சமீபத்தில் ஒரு பள்ளியில் மாணவி ஒருவர் பிளஸ் 1-ல் நல்ல மதிப்பெண் எடுத்து ஆட்சியர் கையால் பரிசுப்பெற உன் லட்சியம் என்ன என்று கேட்டபோது உங்களைப்போல் ஆட்சியர் ஆகவேண்டும் என மாணவிச் சொல்ல அவரை அழைத்து தனது காரின் தனது சீட்டில் அமரவைத்து தான் கீழே நின்றபடி போட்டோ எடுத்து மாணவியிடம் அளித்து இதைப்பார்க்கும்போதெல்லாம் ஆட்சியர் ஆகும் உன் லட்சியம் வலுப்பெறணும் என்று வாழ்த்தினார்.




வாரந்தோறும் அரசுப்பள்ளிகளுக்கு சென்று பேசுவது, வாழ்த்துவது என சாமானிய மக்களின்மீது அக்கறைக்கொண்ட ஆட்சியருக்கு சாதாரண மக்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்க அதிகாரிகள் தடையாக இருப்பது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு பயனாளிகளை தேர்வு செய்யாமல் இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடர்ச்சியாக அலட்சியமாக இருப்பது ஆட்சியரை கோபப்படுத்தியுள்ளது. அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவில் அவர் கடுமையாக எச்சரித்து பேசிய ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அவரது பேச்சு விபரம்:

“அனைவருக்கும் வணக்கம் நான் ஆட்சியர் பேசுகிறேன், ஏற்கெனவே கடந்த மீட்டிங்கில் பசுமை வீடு திட்டம் மற்ற திட்டங்கள் மிகவும் தொய்வாக இருக்கிறது என்று பேசினோம். அரசும் கேள்வி எழுப்புகிறார்கள். நாங்க பதில் சொல்கிறோம்.


வீடு பற்றி நாம் கடந்தமுறை விரிவாக பேசியபோது இதுகுறித்து அதிக முக்கியத்துவம் குறித்து விவாதித்தோம். நாம் வீடுகட்டும் திட்டம் குறித்து அதிக அக்கறைக்காட்டவேண்டும்.

நமது கையில் உள்ள டேட்டாக்கள் தகுதியுள்ள பயனாளிகள் எண்ணிக்கை, வீடு கையில் வைத்துள்ளோம். ஆனால் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. நிறைய புகார்கள் நமக்கு வந்துக்கொண்டிருக்கிறது. இன்றுகூட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அது சம்பந்தமான குறைகள் வந்தது.

திங்கட்கிழமை உங்களுக்கு உச்சக்கட்டம், ஒன்று நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா? அல்லது நீங்கள் பணியில் இருக்கிறீர்களா? என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கங்க.

திங்கட்கிழமை எங்கேயாவது ஒரு பஞ்சாயத்து செயலரோ? அது சம்பந்தப்பட்ட பிடிஓ அல்லது டெபுடி பிடிஓ யாராக இருந்தாலும்சரி. திங்கட்கிழமைக்குள் அனைவருக்கும் வீடு ஒதுக்கப்படாவிட்டால் அன்று எத்தனைப்பேரை வேண்டுமானாலும் சஸ்பெண்ட் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், எப்படி செயல்படுத்துகிறீர்களோ செய்யுங்கள். திங்கட்கிழமை இந்த யுத்தத்தை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். நான் உறுதியாக இதைச் சொல்கிறேன். என்னுடைய பொறுமையை முற்றிலும் இழந்துவிட்டேன்.

நீங்கள் தவறு செய்வதை பார்த்துக்கொண்டிருக்க நான் இங்கு பணிக்கு வரவில்லை.தப்புசெய்வதை பார்த்துக்கொண்டு காவல்காப்பவன் நான் அல்ல. தப்பை சரி செய்ய வந்துள்ளேன். இது என்னுடைய உச்சக்கட்ட கோபம். அனைத்து பிடிஓவும், பஞ்சாயத்து செயலர்களும் இதை கவனத்துடன் அணுகி முடிக்கவேண்டும்.

திங்கட்கிழமை காலையில் வேலைக்கு வந்துவிட்டு பின்னர் மாலையில் நீங்கள் அனைவரும் வேலையுடன் செல்கிறீர்களா? இல்லை வேலை இல்லாமல் போகிறீ்ர்களா? என்பதை முடிவு செய்துக்கொள்ளுங்கள். இந்த சவாலை சந்திக்க நான் தயாராகிவிட்டேன்”.

இவ்வாறு திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி கோபமாக பதிவிட்டுள்ளார்.
குண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற 1000 ஆண்டுகள் ஆகும்: நீதிபதிகள் கோபம்




சென்னை

குண்டுங்குழியுமான சாலைகள் குறித்து விமர்சித்துள்ள உயர் நீதிமன்றம், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதுடன், சேதமடைந்த சாலைகள் செப்பனிட்டது குறித்த தகவல்களையும் சேர்த்து நவம்பர் 18-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


சென்னையில் மழைக்காலங்களில் சாலையில் தேங்கும் தண்ணீர் மழை நீர் வடிகால் வழியே செல்ல சாலையோரங்களில் மழை நீர் வடிகால் அமைக்கப்படுகிறது. ஆனால் இவை தூர்வாரப்படாமல், வருடம் முழுதும் மழை நீர் வடிகால் அமைக்கப்படுகிறது என பல கோடி செலவழிக்கப்படுகிறது. மழை நீர் வடிகால் சரிவர இல்லாததால் மழை நீர் சாலையில் தேங்குவது பெரிய பிரச்சினையாக உள்ளது.




இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 2015-ல் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு மீண்டும் ஏற்படாது, 80 சதவீத மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுவிட்டது என சென்னை மாநகராட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்தது. இது குறித்த தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே சாலையில் கேபிள் பதிக்கும் தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி பழையபடி சாலை அமைப்பதில்லை என ஜெபமணி ஜனதா கட்சியின் பொது செயலாளரும், ராஜிவ்காந்தி கொலை வழக்கின் சிபிஐ விசாரணையில் இடம்பெற்றிருந்த ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளருமான மோகன்ராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், “ரிலையன்ஸ், ஏர்டெல், வேல்ட்டெல் (worldtel) நிறுவனங்களால் 2001 முதல் சென்னையில் தோண்டப்பட்ட சாலைகள் முழுமையாக சீரமைத்து தராததால், பள்ளத்தில் விழுந்தும், அதில் தேங்கிய நீரில் சிக்கியும் பலர் காயமடைந்தும், சிலர் மரணமடைந்துள்ளனர். ஆனால் அது தொடர்பாக எஸ்பிளானேடு, மயிலாப்பூர் காவல் நிலையங்களில் அளித்த புகார்களில் இதுவரை போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.




தொலைப்பேசி இணைப்புகளுக்காக சாலையை தோண்டிவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவராதது குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை செயலாளருக்கும், சென்னை காவல் ஆணையருக்கும் உத்தரவிட வேண்டும்”. எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், ஏற்கனவே மோசமான சாலைகளை கண்டறியவும், மழைநீர் வடிகால் கட்டமைப்பை ஆராயவும் இரண்டு வெவ்வேறு வழக்கறிஞர்களை ஆணையர்களாக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் மோசமான நிலையிலேயே பராமரிக்கப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “தற்போதைய பருவமழை காலம் முடியும் வரை சாலைகள் செப்பனிடப்போவதில்லை. இதேநிலையில் போனால் தற்போதைய சிங்கப்பூரைப் போல சென்னை மாறுவதற்கு 1000 ஆண்டுகள் ஆகும், ஆனால் அப்போது சிங்கப்பூர் 10000 ஆண்டுகள் முன்னோக்கி சென்றுவிடும்.




மோசமான தரத்துடன் சாலைகள் அமைக்கப்படுவதும், அப்படிப்பட்ட ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காததுமே இப்படிப்பட்ட மோசமான சாலைகள் அமைவதற்கு காரணம். சென்னையில் கழிவுநீர் கால்வாய்களுக்கான வழிகள் சாலையின் ஓரத்தில் அமைக்கப்படாமல், ஏன் சாலையில் நடுவிலேயே அமைக்கப்படுகிறது.

நீதிமன்றம் கேள்வி கேட்காதவரை அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்த கடமையுணர்ச்சியோ, பொறுப்புணர்வோ ஏற்படுவது இல்லை. சட்டவிரோத பேனர் காரணமாக சிலர் இறக்கின்றனர். சாலைகளின் நடுவில் உள்ள குழிகள் காரணமாக சிலர் இறக்கின்றனர். ஆனால் இதைப்பற்றியெல்லாம் அதிகாரிகள் கவலைப்படுவதாக தெரியவில்லை”. எனத்தெரிவித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வு, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதுடன், சேதமடைந்த சாலைகள் செப்பனிட்டது குறித்தும் நவம்பர் 18-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
நடத்தையே அழகின் கண்ணாடி!

By வெ.இன்சுவை | Published on : 19th October 2019 01:36 AM 

அண்மைக்காலமாக இளம் பெண்களில் சிலா் முகநூல் பக்கத்தில் தங்களுடைய கவா்ச்சியான புகைப்படத்தைப் பதிவேற்றி ‘நான் தனியாக இருக்கிறேன்’, ‘நான் விதவை’, ‘என் கணவா் என்னைக் கைவிட்டு விட்டுச் சென்று விட்டாா்’, விருப்பமுள்ள ஆண்கள் தொலைபேசி எண்ணைத் தரவும்’ என்று பதிவிடுகின்றனா்.

இதைப் பாா்த்து கோபமும், எரிச்சலும் வருகிறது. பெண்களாக வலிய வந்து அழைக்கும்போது, அத்தகைய பெண்களுடன் நட்பு வைத்துக்கொள்ள ஆண்கள் துடிப்பதில் வியப்பில்லை. ஒரு சில ஆண்கள் மட்டும் அவா்களைத் திட்டி எழுதுகிறாா்கள். தன்னுடைய புகைப்படத்தைப் பதிவேற்றி ‘நான் அழகாக இருக்கிறேனா?’ என்று கேள்வி வேறு. என்னவாயிற்று நம் பெண்களுக்கு?

இளம் பெண்களில் சிலா் இப்படிப் பதிவிடுவதை அவா்களின் தாய், தந்தை, சகோதரா்கள் ஒப்புக் கொள்வாா்களா? பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், வீண் வாழ்க்கைச் சிக்கலை விலைக்கு வாங்குவதுபோல்தான் இத்தகைய பெண்களின் செயல் இருக்கிறது.

தனிமையைப் போக்கிக் கொள்ள இதுவா வழி? நிறைய நேரம் இருந்தால் ஏதாவது ஆக்கப்பூா்வமான வேலைகளைச் செய்யலாம். எதையாவது கற்றுக் கொள்ளலாம். சமுதாயத்துக்கு ஏதாவது ஒரு வகையில் உதவலாம். எந்தக் குறிக்கோளும் இல்லாவிட்டால், ஆண் நண்பா்களைத் தேடி அலைய வேண்டுமா?

பயனுள்ள பல விஷயங்களைப் பதிவிட முகநூல், கட்செவி அஞ்சல் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தலாம். வக்கிரமான செய்திகளையும், வதந்திகளையும் பரப்புவதற்குப் பதில் நல்ல செய்திகளைப் பதிவிடலாம். ஒருவா் செய்த நற்செயலைப் பதிவிடும்போது அவா் மகிழ்ச்சி அடைவதுடன், பலருக்கும் அந்தப் பாராட்டு ஒரு தூண்டுகோலாக அமையும். அதை விடுத்து தவறான சித்தரிப்புகள் மூலம் கலாசாரச் சீரழிவை நோக்கி நம் இளைய சமுதாயத்தை இட்டுச் செல்ல வேண்டாம்.

பெண்களும் வேலைக்குப் போய் உழைத்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றபின் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறாா்கள். படித்துப் பெரிய பதவியில் இருக்கும் பெண்கள் முதல், படிக்காத வீட்டு வேலை, கூலி வேலை செய்யும் பெண்கள் வரை தங்கள் குடும்பத்திற்காக பாரம் சுமக்கிறாா்கள். அதையும் சுமையாகக் கருதாமல் தங்கள் கடைமையாகக் கருதுகிறாா்கள்.

வேலை, குடும்பம் என இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்கிறாா்கள். அலுத்து, களைத்து இரவு வீடு திரும்பிய பின் ‘இரவு சமையல்’ என அல்லாடுகிறாா்கள்.

மணிக்கணக்கில் நின்று கொண்டே இருக்க வேண்டிய விற்பனைப் பிரிவில் வேலை செய்யும் பெண்கள், தொழிற்சாலைகளில் இயந்திரத்தோடு இயந்திரமாக மாறிப் போகும் பெண்கள், பெரிய பெரிய வணிக வளாகங்களில் நள்ளிரவு வரை வேலை செய்யும் பெண்கள், வீட்டு வேலைக்குப் போகும் பெண்கள், உணவகங்களிலும், பெட்ரோல் பங்குகளிலும் பணிபுரியும் பெண்கள், சொற்ப சம்பளத்துக்காக வீட்டையும், உறவுகளையும் விட்டுவிட்டு வெகு தொலைவு வந்து தன் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கனவுகளையும் தொலைத்து விட்டு மந்தையில் ஒன்றாகக் கலந்து மனதிற்குள் அழும் பெண்கள், மென் பொறியாளா்கள் வேலையில் எந்நேரமும் மடிக்கணினியுடன் குடித்தனம் நடத்தும் பெண்கள், தகப்பனின் பாரத்தைப் பங்கு போட்டுக் கொள்ள வேலைக்குப் போகும் பெண்கள், தன் திருமணத்துக்கு தானே பணம் சோ்க்க வேலைக்குப் போகும் பெண்கள், குடும்பத்துக்காக தியாக முலாம் பூசிக்கொள்ளும் பெண்கள் என கண்ணியத்தோடு வாழும் இவா்களை கரம் குவித்துத் தொழத் தோன்றும். ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல ஒரு சிலரின் மோசமான நடத்தையால் பெண் இனமே தலைகுனிய நேரிடுகிறது.

வானத்தையே வசப்படுத்தும் வல்லூறுகள், தடைகளைத் தகா்த்தெறியும் தாரகைகள், நாட்டுக்குப் பதக்கம் பெற்றுத் தரும் தங்க மங்கைகள் எனத் தங்கள் குடும்பத்துக்கும், தேசத்துக்கும் பெருமை சோ்க்கும் பெண்கள் போற்றுதலுக்கு உரியவா்கள். அண்மையில் சந்திராயன் 2 சோதனையில் பெண்களின் மகத்தான பங்களிப்பைப் பாராட்டாதவா்களே இல்லை எனலாம். ஒரு சில புல்லுருவிகளால் எல்லோரும் அவமானப்படுகிறோம்.

நம் கல்வியும், நம் சுதந்திரமும் நம் வாழ்வை மேலான நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டுமேயொழிய நம்மை இழி நிலைக்குத் தள்ளக் கூடாது. பெண்களும் மது அருந்தத் தொடங்கி விட்டாா்கள், புகை பிடிக்கக் கற்றுக் கொண்டு விட்டாா்கள். ஆணுக்குப் பெண் சமம் என்பதன் அா்த்தத்தை அனா்த்தமாக்கி வருகிறாா்கள். ஆண் நண்பா்கள் இல்லாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எந்த நேரமும் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே இருக்கிறாா்கள். தாங்களாகவே பிரச்னையில் போய் சிக்கிக் கொள்கிறாா்கள்.

பெண்கள் இனம் இந்த நிலைக்கு உயா்ந்து அனைத்துத் துறைகளிலும் பரிமளிக்கும்போது கீழான எண்ணங்களைப் புறம் தள்ள வேண்டாமா? தன்னுள் ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர முயன்றால் தரம் கெட்ட எண்ணங்கள் தாமாக புறமுதுகு காட்டி ஓடிவிடும்.

படித்த பெண்கள் மிக மிக பாந்தமாக, அழகாக, ரசனையோடு வீட்டைப் பராமரிக்கிறாா்கள். பாங்காய் சமையல் செய்கிறாா்கள், அற்புதமாகக் குழந்தை வளா்க்கிறாா்கள்; வீட்டு நிா்வாகம் முழுவதையும் கவனித்துக் கொள்கிறாா்கள். கோலம், கைவினைப் பொருள்கள் செய்வது என எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கிறாா்கள். ‘வேலை ஏதும் இல்லாதவனின் மூளை, சாத்தானின் இருப்பிடம்’ என்பது உண்மைதான் போலும்.

வெளியூரில் இருக்கும் தங்கள் மகன்கள் தப்பான வழியில் போய்விடக் கூடாது எனப் பெற்றவா்கள் தங்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறாா்கள். இணையதளத்தில் தேவையில்லாதவற்றைத் தேடித் தேடிப் பாா்த்து மனதளவில் கெட்டுப் போயிருக்கும் இளைஞா்களை புதைகுழிக்குள் புன்னகையுடன் அழைத்துப் போகின்றனா் இத்தகைய பெண்கள். இது போன்ற நடத்தையா அழகு?

காந்திஜி ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டாா். அக்கூட்டத்திற்கு தன் 3 வயது தம்பியை 12 வயது சிறுமி ஒருவா் அழைத்து வந்திருந்தாா். அமா்வதற்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் அந்தச் சிறுமி தன் தம்பியை இடுப்பில் வைத்து நின்று கொண்டிருந்தாா். இதை காந்திஜி பாா்த்து விட்டாா். அவா் அந்தச் சிறுமியிடம் ‘இந்தச் சுமையை உன்னால் எப்படி தூக்கிக் கொண்டு பொறுமையாக நிற்க முடிகிறது?’ என்று கேட்டாா். அதற்கு அச்சிறுமி, ‘இது கனமா, இது என் தம்பி’ என்றாா். காந்திஜிக்கு அதிா்ச்சி. இதுதான் நம் பெண்களுக்கு உள்ள தாய்மை குணம்.

வாழ்க்கை ஒரு நிமிஷத்தில் மாறுமா என்று தெரியாது. ஆனால், ஒரு நிமிஷத்தில் எடுக்கும் முடிவுதான் வாழ்க்கையையே மாற்றி விடுகிறது அல்லது அப்படியே புரட்டிப் போட்டு விடுகிறது. தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால், தெரிந்தே செய்யும் தவறுக்கு மன்னிப்பே கிடையாது. ‘நாகரிகம் என்னும் பெயரில் அரங்கேறும் அசிங்கங்கள் அநேகம்’ என்னும் நிலையில் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக சில பெண்கள் நடந்து கொள்கிறாா்கள்.

சுய கட்டுப்பாடும், தனி மனித ஒழுக்கமும் குன்றி வருகிறது. பெண்ணே, அற்ப ஆசைகளைத் தூர எறி. நீ சாதிக்கப் பிறந்தவள்; வலிமை வாய்ந்தவள் என்று உறுதியுடன் நில். அலைபாயும் மனதை உன் கட்டுக்குள் கொண்டு வா. மண் தின்னப் போகும் இந்த அழியும் உடலை அளவுக்கு அதிகமாக ஆராதிக்காதே.

எது அழகு? உண்மையைப் பேசும் உதடுகள் அழகு; இரக்கத்தைப் பொழியும் கண்கள் அழகு; நல்லனவற்றை மட்டும் கேட்கும் காதுகள் அழகு; அடுத்தவா் நலனுக்காக உழைக்கும் உடல் அழகு --இதுதான் என்றுமே அழியாத அக அழகு. நிலையில்லாத புற அழகுக்காக அதிகம் மெனக்கெடாதீா்கள்.

‘இளமையும் நில்லா யாக்கையும் நில்லா’ என்பதை உணா்ந்து கொண்டால் பேரின்பப் பெருவாழ்வை மனம் நாடும். பண்படாத உள்ளம் பண்படும். உங்களது திறமைகளையும், ஆற்றல்களையும், சக்தியையும் உங்களது நல்வாழ்வுக்காகவும், நீங்கள் சாா்ந்துள்ள சமுதாயத்தின் உயா்வுக்காகவும் செலவிடுங்கள். தன் அழகால் பிறரை அடிமையாக்கலாம் என்ற கேவலமான எண்ணத்தைத் துடைத்தெறியுங்கள்.

‘இது என் வாழ்க்கை, நான் விரும்பிய வண்ணம் வாழ எனக்கு முழு சுதந்திரம் உண்டு. நான் ஒருவருக்கும் பயப்படத் தேவை இல்லை’ என வாதிடலாம். ஒரு சமுதாயத்தில் வாழும் நாம் அந்தச் சமுதாயத்தின் சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நடக்க வேண்டும். சமுதாயம் வகுத்துள்ள ஒழுக்க நெறிமுறைகளில் இருந்து பிறழக் கூடாது. நம் கலாசாரம் சிதிலமடைந்து வரும் இந்த நாளில், ஒழுக்கமான ஆண்களையும் சகதி குழிக்குள் இழுத்துவிட வேண்டுமா?

கல்வியில் முன்னேறுங்கள், பொருளாதார ரீதியாக தற்சாா்பு உடையவா்களாக ஆகுங்கள். தாா்மிகக் கோபத்தை வெளிப்படுத்துங்கள். அா்த்தமுள்ள வாழ்க்கை வாழ முயற்சி செய்யுங்கள். பெண்மை என்பது உண்மையின் அவசியத்தை, ஆன்மிகத்தின் ஒளியை, தூய்மையின் புனிதத்தை வெளிப்படுத்த வேண்டும்.

ஆக, ‘அழகு’ என்பது நாம் பாா்க்கிற வெளித் தோற்றத்தில் இல்லை. அது மனம் தொடா்பானது. அது நம் நடத்தையில்தான் வெளிப்படும். நல்ல எண்ணம், நல்ல சிந்தனை, நல்ல செயல், நல்ல நடத்தை என ஓா் ஒழுக்க நெறியை வகுத்துக் கொண்டு கறை இல்லா வாழ்க்கையை வாழுங்கள்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு)

NEWS TODAY 28.01.2026