Tuesday, January 21, 2020


வெளிநாடுகளில் வெறும் கூலிகளாக பரிதவிக்கும் தமிழக தொழிலாளர்கள்

Added : ஜன 21, 2020 01:50



சிவகங்கை:தமிழகத்தில் இருக்கும் ஏஜன்ட்கள் சிலர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் தொழிலாளிகளிடம் கூலிப்படை மூலம் பணம் பறிக்கின்றனர்.

கூலிப்படையிடம் சிக்கிய சிவகங்கை வாலிபர், கலெக்டரின் முயற்சியால் மீட்கப்பட்டார்.சிவகங்கை மாவட்டம், பெரிய உஞ்சனையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 35.பணிக்காக, 2016ல் மலேஷியா சென்றவர், கூலிப்படையினரால் கடத்தப்பட்டு, சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் முயற்சியால் மீட்கப்பட்டார்.நேற்று கலெக்டரை சந்தித்த அவர் கூறியதாவது:மதுரை ஏஜன்ட் ஒருவரிடம், 1.30 லட்சம் ரூபாய் கொடுத்து, மலேஷியா சென்றேன். ஏற்கனவே, 10 ஆண்டு பணி அனுபவம் இருந்ததால், நல்ல சம்பளம் கிடைத்தது.ஆனால், பாஸ்போர்ட்டை ஏஜன்ட் வாங்கி வைத்து, கூலிப்படை மூலம் மிரட்டி, மாதந்தோறும் பணம் வசூலிக்க துவங்கினார். மூன்று ஆண்டுகளில், 11 லட்சத்துக்கும் அதிகமாக கொடுத்தேன். பணம் தர மறுத்த போது, கூலிப்படை மூலம் கடத்தி உணவு, தண்ணீர் கொடுக்காமல், ஆறு நாட்கள் அடைத்து வைத்தனர். என் தாய்க்கு போன் செய்து, '5 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் உயிரோடு விடுவோம்' என மிரட்டினர்.என் தாய், கலெக்டரிடம், கடந்த நவம்பரில் புகார் கொடுத்தார். இந்திய துாதரகத்துக்கு, கலெக்டர் கடிதம் அனுப்பியதால், என்னை விடுவித்தனர். மீண்டும் வேலைக்கு சேர்ந்த என்னிடம், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், துாதரகத்தில் தஞ்சம் அடைந்து, சொந்த ஊர் வந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதுபோன்ற புகார் வரும் போது, தமிழக போலீசாரை ஏஜன்ட்கள் சரிக்கட்டி விடுவதாகவும், அதனால், 'இது வெளிநாட்டில் நடந்தது' என, போலீசார் தட்டிக் கழித்து விடுவதாகவும், தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.
போலியோ சொட்டு மருந்து சும்மானாச்சுக்கும் கொடுத்தேன்'

Added : ஜன 21, 2020 01:39

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர், தன், 8 வயது மகனுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுத்த புகைப்படம் மற்றும் 'வீடியோ' பதிவுகள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம், 19ம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது.பெரம்பலுார் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனராக பணியாற்றுபவர், டாக்டர் கீதாராணி. இவர், 19ம் தேதி, பெரம்பலுார் புது பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த, போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமிற்கு, தன், 8 வயது மகனை அழைத்து சென்றார். அங்கு, தன் மகனுக்கு, சொட்டு மருந்து கொடுத்துள்ளார்.இதை, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபர், 'வாட்ஸ்ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இது குறித்து, துணை இயக்குனர் கீதாராணி கூறியதாவது:என் மகன், 3ம் வகுப்பு படிக்கிறார். அவர், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமிற்கு என்னுடன் வந்தார்.குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைப் பார்த்து, 'எனக்கும் வேண்டும்' என, கேட்டார்.
நான், மறுப்பு தெரிவித்தேன். 'சொட்டு மருந்து கொடுப்பது போல, போஸ் மட்டும் கொடுங்கள்... அப்பாவுக்கு, போட்டோ அனுப்பலாம்' என்றார். அதனால் நான், அவருக்கு சொட்டு மருந்து கொடுப்பது போல், போட்டோ எடுத்தேன். அந்த படத்தை, எங்கள் குடும்ப வாட்ஸ்அப் குழுவில் பதிவிடுவதற்கு பதிலாக, தவறுதலாக, மாவட்ட அளவிலான மருத்துவ அலுவலர்களுக்கான குழுவில் பதிவிட்டேன். இவ்வாறு, அவர் கூறினார்.
புதிதாக, 2,000 டாக்டர்கள் தேர்வு செய்ய அரசு முடிவு

Added : ஜன 21, 2020 00:11

சென்னை:மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, இந்தாண்டில், 2,000 டாக்டர்கள் உட்பட, 5,000 மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதிதாக தோற்று விக்கப்படும் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2012ல் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் துவங்கப்பட்டது.இதுவரை, டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உட்பட, 30 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், 2020ம் ஆண்டு தேர்வுகள் குறித்த அறிவிப்பை, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்கூறியிருப்பதாவது:உதவி டாக்டர்கள், சித்தா உதவி மருத்துவ அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பு, பிப்ரவரியிலும்; ஓமியோபதி, ஆயுர்வேதம், யோகா உள்ளிட்ட உதவி மருத்துவ அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பு, மார்ச்சிலும் வெளியிடப்படும்.

ஆய்வக உதவியாளர் கிரேட் -2 பணியிடத்துக்கான அறிவிப்பு, ஏப்ரல் மாதத்திலும்; உதவி சிறப்பு டாக்டர் தேர்வுக்கான அறிவிப்பு, மே மாதம்; இ.சி.ஜி., தொழில்நுட்பவியலால் தேர்வுக்கான அறிவிப்பு, செப்டம்பரிலும் வெளியிடப்படும்.

உணவு பாதுகாப்பு அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பு அக்டோரிலும்; மருந்தாளுனர் அறிவிப்பு, நவ., மாதமும் வெளியாகும்.

அறிவிப்பு வெளியான ஓரிரு மாதங்களில், எழுத்து தேர்வு வாயிலாகவும், நேரடி சான்றிதழ் சரிப்பார்ப்பு வாயிலாகவும், தேர்வு செய்யப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்யப்படுவர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'இந்தாண்டில், 2,000 டாக்டர்கள், நர்ஸ்கள், இதர பணியாளர்கள், 3,000 ஆயிரம் பேர் என, மொத்தம், 5,000 பேர் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர்' என்றனர்.
பொங்கல் இன்று கடைசி

Added : ஜன 21, 2020 00:03

சென்னை:ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு வாங்குவதற்கான அவகாசம், இன்றுடன் முடிகிறது. தமிழக ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, இரண்டு கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, 1,000 ரூபாய் அடங்கிய, பரிசு தொகுப்பு வழங்கும் பணி, இம்மாதம், 9ம் தேதி துவங்கியது.இதுவரை, 1.96 கோடி கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு வாங்கி உள்ளனர். பொங்கலுக்கு சொந்த ஊர் சென்று, பரிசு தொகுப்பு வாங்காதவர்களின் வசதிக்காக, 21ம் தேதி வரை, வாங்கிக் கொள்ள அவகாசம் வழங்கப் பட்டது. அப்படி இருந்தும், பரிசு தொகுப்பு வாங்காதவர்கள், நேற்றும், அவற்றை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், பொங்கல் பரிசு வழங்குவதற்கான அவகாசம், இன்று மாலை முடிகிறது.
நவஜோதிர்லிங்க யாத்திரைக்கு தனி ரயில் இயக்குது ஐ.ஆர்.சி.டி.சி.,

Added : ஜன 20, 2020 22:56

சென்னை:நவஜோதிர்லிங்க கோவில்களுக்கு சென்று வர, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., தனி சிறப்பு ரயிலை இயக்குகிறது.

இந்த ரயில், திருநெல்வேலியில் இருந்து, வரும், பிப்ரவரி 19ல் புறப்பட்டு, மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை பெரம்பூர் வழியாக செல்லும். இப்பயணத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், திரையம்பகேஷ்வர், பீம்சங்கர், குருஸ்ணேஸ்வர், அவுங்நாக்நாத், பார்லி வைத்யநாத், குஜராத்தில் சோம்நாத் கோவில்களுக்கு செல்லலாம். மத்தியபிரதேசத்தில், ஓம்காரேஸ்வர், உஜ்ஜையினி மஹாகாலேஸ்வர், ஆந்திராவில் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆகிய, ஒன்பது ஜோதிர்லிங்கங்களை தரிசித்து வரலாம். மொத்தம், 13 நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 15 ஆயிரத்து, 320 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.மேலும் தகவலுக்கு, சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., மையத்துக்கு, 90031 40680, 82879 32121 என்ற மொபைல் போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

திருப்பதியில் துவங்கியது பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டம்


Updated : ஜன 20, 2020 20:55 | Added : ஜன 20, 2020 20:53

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்கும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் இன்று முதல் இலவச லட்டு வழங்கும் திட்டம் துவங்கியது.


திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஜன. 1-ம் தேதி முதல் ஏழுமலையானை தரிசிக்க வரும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஒரு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்க முடிவு செய்தது. இந்த புதிய அறிவிப்பின்படி இன்று பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

அதன்படி ஒருநாளைக்கு 20 ஆயிரம் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இலவச லட்டு என்ற முறையில் தினசரி 80 ஆயிரம் லட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 24 லட்சம் லட்டு பிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்தாக தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

‛‛பத்த வச்சிட்டியே பரட்டை...'': அமைச்சர் ஜெயக்குமார்

Updated : ஜன 20, 2020 13:47 | Added : ஜன 20, 2020 13:04




சென்னை: துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதனை தவிர்த்திருக்கலாம் எனவும், பரட்டை பற்ற வைத்துவிட்டார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கில், சமீபத்தில் நடந்த, துக்ளக் பத்திரிகையின் பொன்விழா ஆண்டு விழாவில், ரஜினி பேசிய பேச்சு சர்ச்சையானது. ஈ.வெ.ராமசாமி குறித்து, அவர் தெரிவித்த கருத்துக்கு பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர். 'ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சில கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் சர்ச்சை கருத்தை பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும். பரட்டை பற்ற வைத்தது தமிழகம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்காது. மாநில அரசின் அனுமதியின்றி எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வரமுடியாது. இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.

சீமான் சலிப்பு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ரஜினியின் பேச்சையெல்லாம் கண்டுக்கொள்ள தேவையில்லை. அவரை புறந்தள்ளி விடவேண்டும், என்றார்.

NEWS TODAY 28.01.2026