Sunday, March 1, 2020

தண்டனையை நிறுத்த, 'நிர்பயா' குற்றவாளிகள் மனு

Added : மார் 01, 2020 00:56

புதுடில்லி:வரும், 3ம் தேதி துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், அதை எதிர்த்து, டில்லி மருத்துவ மாணவி, 'நிர்பயா' பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள, அக் ஷய் குமார் மற்றும் பவன் குப்தா, புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி உள்ளது. கடந்த, 2012ல், மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சித்ரவதை செய்யப்பட்ட அவர், பஸ்சில் இருந்து துாக்கி எறியப்பட்டார்; பின், மருத்துவமனையில் உயிரிழந்தார்.இந்த பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், முகேஷ் குமார் சிங், 32, பவன் குப்தா, 25, வினய் குமார் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.அதை நிறைவேற்றுவதற்கு, இரண்டு முறை நாள் குறிக்கப்பட்டன. ஆனால், பல்வேறு புதிய மனுக்களை, இவர்கள் மாறி மாறி தாக்கல் செய்ததால், தண்டனை நிறைவேற்றப்படவில்லை. மார்ச், 3ம் தேதி காலை, 6:00 மணிக்கு தண்டனையை நிறைவேற்ற, பிப்., 17ல், 'வாரன்ட்' றப்பிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், பவன் குப்தா மற்றும் அக் ஷய் குமார் சார்பில், டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் புதிய மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'துாக்கு தண்டனையை உறுதி செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'அது நிலுவையில் உள்ளது. அதனால், 3ம் தேதி தண்டனையை நிறைவேற்றக் கூடாது' என, பவன் குப்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'தண்டனையை குறைக்கும்படி, ஜனாதிபதிக்கு புதிய கருணை மனு அனுப்பப்பட்டுள்ளது. அது நிலுவையில் உள்ளதால், தண்டனையை நிறைவேற்றக் கூடாது' என, அக் ஷய் குமார் சார்பில் கூறப்பட்டுள்ளது.இவற்றை விசாரணைக்கு ஏற்ற, டில்லி நீதிமன்றம், நாளைக்கு இந்த வழக்கை விசாரிப்பதாக கூறியுள்ளது. மேலும், இவர்கள் மனு குறித்து பதிலளிக்கும்படி, டில்லி திஹார் சிறை நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.இந்த புதிய மனுக்களால், திட்டமிட்டபடி, 3ம் தேதி இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது சந்தேகமே என, சட்ட நிபுணர்கள் கூறிஉள்ளனர்.
மதுரை காமராஜ் பல்கலையில் விதிமீறல் ஆரம்பிச்சாச்சு!

Added : மார் 01, 2020 01:21

மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில், முன்னாள் பெண் பதிவாளரை மிரட்டி, சர்ச்சையில் சிக்கிய, பேராசிரியர் கலைசெல்வனுக்கு, விதிமீறி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மதுரை காமராஜ் பல்கலையின் முன்னாள் பெண் பதிவாளர், அயல்மொழிகள் படிப்பிற்கான அறைகள் ஒதுக்கீடு தொடர்பாக, அத்துறையை, 2019, நவம்பர், 5ம் தேதி பார்வையிட சென்றார்.அப்போது அவரிடம், ஆங்கிலம் மற்றும் அயல் துறை பேராசிரியராக இருந்த கலைச்செல்வன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகாத வார்த்தைகளில் பேசி, மிரட்டல் விடுத்தார்.இதுதொடர்பான புகாரின்படி, கலைச்செல்வன் மீது, சிண்டிகேட் விசாரணை நடத்தியது.அதில், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள், உண்மை என, தெரிய வந்தது. அதுதொடர்பான அறிக்கை, துணைவேந்தர் கிருஷ்ணனிடம் அளிக்கப்பட்டது.அந்த அறிக்கை, ஜன., 29ம் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்திலும் வைக்கப்பட்டு, அடுத்த கூட்டத்தில், கலைசெல்வனுக்கு,பதவி நீட்டிப்பு வழங்கலாமா, வேண்டாமா என, முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது.இந்நிலையில், மறு சிண்டிகேட் கூட்டம் நடப்பதற்குள், மீண்டும் பதவி நீட்டிப்பு உத்தரவு வழங்காத நிலையில், பல்கலை சட்டத்திற்கு புறம்பாக, அவருக்கு, பிப்ரவரி சம்பளம் வழங்கப்பட்டது.இதன் மூலம், முன்னாள்துணைவேந்தர்கள் கல்யாணி, செல்லத்துரை காலங்களில் நடந்த விதிமீறல்கள் தொடர ஆரம்பித்துள்ளதோ என, கல்வியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மருத்துவக்கல்லூரிக்கு மார்ச் 15ல் அடிக்கல்: முதல்வர், மத்திய அமைச்சர் பங்கேற்பு

Added : மார் 01, 2020 01:36

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவ கல்லுாரிக்கு மத்திய அரசு ரூ.325 கோடி அனுமதி வழங்கியது. அடியனுாத்து கிராமம் ஒடுக்கத்தில் 8.61 எக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நிலத்தை சமமாக்கும் பணி நடக்கிறது. மார்ச் 5ல் முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டுவதாக இருந்தது.மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பங்கேற்க உள்ளதால் அடிக்கல் நாட்டுவிழா மார்ச் 15க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணியை விரைந்து முடித்து 2020--21 கல்வியாண்டில் 150 மாணவர்கள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலை பேராசிரியர் நியமன முடிவுக்கு எதிர்ப்பு

Added : மார் 01, 2020 00:26

சென்னை:அண்ணா பல்கலையில், ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மறு நியமனம் செய்யும் முயற்சிக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அண்ணா பல்கலையின் ஒவ்வொரு துறையிலும், பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றை முறைப்படி நிரப்ப வேண்டும் என, ஆராய்ச்சி படிப்பு முடித்த பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.ஆனால், பல்கலையில் ஏற்கனவே பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றியவர்களை, அண்ணா பல்கலை பேராசிரியர்களாக மறு நியமனம் செய்ய, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி, அண்ணா பல்கலைக்கு துணைவேந்தராக வந்துள்ள, பேராசிரியர் சுரப்பாவின் நடவடிக்கைகள், தமிழகத்தில் உள்ள பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை குறைக்கும் வகையில் உள்ளதாக, குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழக அரசின் நிதியில் செயல்படும் அண்ணா பல்கலையில் பணியாற்ற, தமிழகத்தில் தகுதியான பட்டதாரிகள் காத்துஇருக்கின்றனர். எனவே, அவர்களிடம் முறைப்படி விண்ணப்பம் பெற்று, பணி நியமனம் செய்ய வேண்டும் என, பட்டதாரிகள் உட்பட, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.
பிரமாண்டம்! ராமநாதபுரத்தில்ரூ. 345 கோடியில் மருத்துவக்கல்லூரி....இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் இ.பி.எஸ்.,

Added : மார் 01, 2020 00:16

சென்னை:ராமநாதபுரத்தில், 345 கோடி ரூபாய்; விருதுநகரில், 380 கோடி ரூபாய் செலவில், புதிதாக, இரு அரசு மருத்துவக் கல்லுாரிகள், பிரமாண்டமாக கட்டப்பட உள்ளன. இக்கல்லுாரிகளுக்கு, இன்று முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழகத்தில், மருத்துவக் கல்லுாரி இல்லாத மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, அனுமதி கோரி, மத்திய அரசிடம் தமிழக அரசு விண்ணப்பித்தது. அதை பரிசீலனை செய்த மத்திய அரசு, 2019 அக்., 23ல், ஒரே நேரத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்கவும்; அதே மாதம், 27ம் தேதி, மேலும் மூன்று அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்கவும், தமிழகத்திற்கு அனுமதி அளித்தது.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு, அரியலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது. ஒரே நிதியாண்டில், 11 புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி பெற்றது, தமிழக அரசின் சாதனையாக அமைந்தது. இக்கல்லுாரிகளை துவங்க, மத்திய அரசு, 2,145 கோடி ரூபாய்; மாநில அரசு, 1,430 கோடி ரூபாய் வழங்க உள்ளன.கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட, ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு, முதல்வர் நேரில் சென்று, அடிக்கல் நாட்ட உள்ளார். 

அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கும் பிரமாண்ட விழாவில், 345 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள, புதிய மருத்துவக் கல்லுாரிக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டு கிறார். இன்று மாலை, 3:00 மணிக்கு, விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் விழாவில், 380 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும், அம்மாவட்டத்துக்கான புதிய அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.மேலும், புதிய திட்டப் பணிகளையும், முடிவுற்ற பணிகளையும் துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளையும், முதல்வர் வழங்குகிறார்.

இக்கல்லுாரியில், வரும் கல்வியாண்டு முதல், 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.இவ்விழாவிற்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தலைமை வகிக்க உள்ளார். வரும், 4ம் தேதி, கிருஷ்ணகிரி; 5ம் தேதி நாமக்கல்; 7ம் தேதி நாகப்பட்டினம் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார். கரூரில், 5ம் தேதி மாலை, ஏற்கனவே கட்டப் பட்ட புதிய மருத்துவக் கல்லுாரியை முதல்வர் திறந்து வைக்கிறார்.

திருவாரூரில், 7ம் தேதி மாலை, விவசாயிகள் நடத்தும் பாராட்டு விழா வில் பங்கேற்கிறார்.

எம்.பி.பி.எஸ்.,இடங்கள் அதிகரிக்கும்புதிதாக, 12 அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவக்கப்பட உள்ளதால், தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழகத்தில், தற்போது, 24 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. அவற்றில், 3,350 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.புதிதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள, 11 அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் கரூர் அரசு மருத்துவ கல்லுாரியில், தலா, 150 எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, 5,150 ஆக அதிகரிக்கும்.
மின் சிக்கனம் அவசியம் வெயிலால் கட்டணம் எகிறும்

Added : பிப் 29, 2020 23:52

வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வீடுகளில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வில்லை எனில், அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும்.

தமிழக மின் வாரியம், 2 கோடி வீடுகளுக்கு, 100 யூனிட் இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. அதற்கு மேல் மின்சாரம் சென்றால், முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இலவசம் மற்றும் மானிய மின்சாரத்திற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்கு கிறது. கோடை காலத்தில், வீடுகளில் வழக்கத்தை விட, மின் பயன்பாடு அதிகம் இருக்கும். மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, 'ஸ்டேடிக்' என்ற, மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதில், முந்தைய மீட்டர்கள் போல இல்லாமல், மின் பயன்பாடு துல்லியமாக பதிவாகிறது. உதாரணமாக, 'சுவிட்ச் ஆன்' செய்து விட்டு, 'டிவி'யை இயக்கவில்லை என்றாலும், அதற்கான மின் பயன்பாடு, மீட்டரில் பதிவாகும்.மேலும், மின் ஊழியர்களும், குறித்த காலத்தில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்க வருவதில்லை. இதனால், வீடுகளில் மின்சாரத்தை சிக்கனமாகவும், கவனமாகவும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக, அதிக மின் கட்டணத்தில் இருந்து தப்பிக்கலாம். இல்லையெனில், வழக்கத்தை விட, மின் கட்டணம் அதிகம் வந்து விட்டதாக கூறி, மின் வாரிய அலுவலகங்களுக்கு அலைய வேண்டி இருக்கும். - நமது நிருபர் -

30 ஆயிரம் மருத்துவமனைகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப அரசு முடிவு

Updated : பிப் 29, 2020 23:47 | Added : பிப் 29, 2020 23:37

சென்னை:தமிழகத்தில் பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காத, 30 ஆயிரம் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, நடவடிக்கை எடுக்க, மருத்துவச் சேவைகள் இயக்கம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், கிளினிக்குகளும் உள்ளன. இவை, பதிவு உரிமம் பெறுவதும், ஐந்தாண்டுக்கு ஒருமுறை புதுப்பிப்பதும் கட்டாயம்.இதுவரை, சென்னையில், 2,000 உட்பட, மாநிலம் முழுவதும், 36 ஆயிரத்து, 598 மருத்துவமனைகள் மட்டுமே, பதிவு உரிமம் கோரி, மருத்துவச் சேவைகள் இயக்ககத்தில் விண்ணப்பித்துள்ளன. பதிவு உரிமம் கோரியவற்றில், 7,000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இதில், 500 மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இருப்பதால், அவற்றுக்கு, ஓரிரு வாரங்களில், பதிவு உரிமம் வழங்கப்பட உள்ளது. போதிய உள்கட்டமைப்பு இல்லாத மருத்துவமனைகளில், அவற்றை மேம்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காமல், தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள் செயல்படுவது தெரிய வந்துள்ளன.இந்த மருத்துவமனைகள், பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காதது குறித்து, 15 நாட்களில் பதிலளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்ப, மருத்துவச் சேவைகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. இவற்றையும் பொருட்படுத்தாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, மருத்துவச் சேவைகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

NEWS TODAY 31.01.2026