Sunday, October 26, 2014

இன்று காலி சோடா ஆகிவிட்டது கோலி சோடா.

டேய்... தம்பி! ஓடிப்போய் ரெண்டு கலர் சோடா வாங்கி வாடா!’-வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு உடைத்து கொடுத்து உபசரிக்கும் எளிமையான பானம்.

'வயிறு சரியில்லை... காலையில் இருந்து ஒரே பொறுமல், ஜிஞ்சர் சோடா ஒன்னு கொடுங்கண்ணே..!'-திடீர் உபாதைகளை தீர்க்கும் நிவாரண பானம்.

'தலைவரே! சோடா குடிச்சிட்டு பேசுங்க...'- குரல் கம்மும் மேடை பேச்சாளருக்கு தொண்டர்கள் தரும் புத்துணர் பானம்.

'தாகம் தீர பன்னீர் சோடா கொடுங்க...' -திருவிழா கடை வீதி சுற்றி களைத்து நாவறண்டு வருவோர் குடிக்கும் கமகம பானம்.

'வாட மாப்ளே! சோடா கலர் குடிச்சு வரலாம்...' -திரைப்பட இடைவேளைகளில் தியேட்டர் கேண்டீனில் வாங்கிக் குடித்த ஆரஞ்சு சோடா ஒரு நட்பு பானம்.

திருவிழா பம்மலில் காதலியை ஒரங்கட்டி ஊருக்கு தெரியாமல் வாங்கி கொடுத்து அன்பை வளர்த்த ப்ரியபானம். துண்டு சைக்கிள் டியூப்பினுள் சொருகிய வட்டதிறப்பான் எழுப்பும் ‘கீச்ச்ச்‘ ஓசையில் திறக்கும் கோலி குண்டு. சுரீர் கியாஸ் நுரைக்கும் பானத்தை பருகியதும் மூக்கில் வெளியேறும் சுள் ஏப்பம்... இந்த தலைமுறைக்கு கிடைக்காத தனி சுகம்.

‘சோடாக்காரர் வீடு எதுங்க?’ எந்த ஒரு ஊருக்குள் சென்றும் பொத்தம் பொதுவாக அங்கிருப்பவர்களை நீங்கள் விசாரித்தால் கூட, கண்டிப்பாக ஒரு சோடாக்காரர் அங்கிருப்பார்.
மரத்தடி பெட்டிக்கடை தொடங்கி மட்டத்திண்ணை மளிகைக்கடை வரை கட்டாயம் விற்பனையில் இருக்கும் பானம் கோலிசோடா என்றால் அது மிகையில்லை. மண் பானை, பக்கெட், சிமெண்ட் தொட்டி இவைகளில் தண்ணீர் ஊற்றி நிரப்பி அதனுள் சோடா பாட்டில்களை கடை வாசலில் அடுக்கி வைத்திருப்பார்கள். தாகம் தீர்க்கமட்டும் அல்ல, பலவித காரணங்களினால் சோர்வடைந்து மயக்கம் அடைந்தவர்களின் முகத்தில் சோடாவை தெளித்து, குடிக்க கொடுத்தால் குளுக்கோஸ் போல செயல்பட்டு உடனடி நிவாரணம் தரும்.

சிறுது கல் உப்பு, அரைத்துண்டு எலுமிச்சை சாறு இவை இரண்டையும் சோடாவுடன் கலந்து குடிக்க, வாயுப்பிடிப்பு வந்த வழி ஓடிப்போகும். அஜீரணம், சேரா உணவு போன்றவைகளால் ஏற்படும் வயிற்று வலிக்கு ‘இஞ்சிச்சாறு கலந்த மஞ்சள் கலர் ஜிஞ்சர் சோடாவை உடைத்து கொடுத்தால், அடுத்த சிலநிமிடங்களில் போயே போயிடும் வயிற்றுவலி.

இப்படி பழம் பெருமை புகழ் வாய்ந்த கோலி சோடாவை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனம். 1872 ஆம் வருடம் வாக்கில் அறிமுகமான சோடா, கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக பட்டிதொட்டி தொடங்கி பட்டணம் வரை தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தது.

கிராமப்புறங்களில் ஒரு கௌரவமும் அதற்கு இருந்தது. 1960கள் வரை, மோர், கம்பங்கூழ், பதநீர், மல்லி கருப்பட்டி காஃபி, புளி வாழைப்பழம் கலந்த பானகம் போன்ற பானங்கள் தான் புழக்கத்தில் இருந்து வந்தது. திருவிழாக்காலங்களில் இதற்கான தண்ணீர் பந்தல் பல இடங்களில் அமைக்கப்படும். பெரிய பெரிய மண் மொடாக்களில் இவைகள் நிரம்பியிருக்கும். தாகத்தோடு வருபவர்களுக்கு இந்த பானங்கள் இலசமாக வழங்கப்பட்டது. 

அந்தக் காலக்கட்டத்தில் தேநீர் கடை என்பதே கிராமப்புறங்களில் அரிதாக இருந்தது. வெளியூர் செல்பவர்கள் கால்நடையாகவே சென்று வந்தனர். தங்களின் பசி போக்க கட்டுசாப்பாடு எடுத்து செல்லும் வழக்கம் இருந்து வந்தது. அப்படி செல்பவர்களின் இளைப்பாறும் இடமாக இந்த தண்ணீர் பந்தல்கள் விளங்கியது.

1960களுக்கு பின்பு கிராமபுற வளர்ச்சியில் பெருமாற்றம் ஏற்பட்டது. அதுவரை வாரச்சந்தைகளை மட்டுமே உணவுபொருள் தேவைக்காக நம்பிக்கொண்டிருந்த கிராமங்களில், பலசரக்கு மற்றும் டீக்கடைகள் தோன்றியது. தேநீர், காஃபி, சோடா என்று நுகர்வுப்பொருட்களும் தலையெடுக்க தொடங்கியது. குறிப்பாக சோடாக்கலர்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. கிராமங்கள் தோறும் குடிசைத்தொழில் போன்று சோடா பானம் தயாரிப்பு பரவலானது.

திரவ கார்பன் டை ஆக்ஸைடை தேவையான அளவில் தண்ணீரில் கலந்து பாட்டிலில் அடைத்து விற்கும் மின்சாரம் தேவைப்படாத எளிய தொழில்தான் சோடா தயாரிப்பு. மாப்பிள்ளைக்கல் என்கிற இளவட்டக்கல் பெரிய உருண்டைக்கல் ஒன்று இன்றும் பல கிராமங்களின் முச்சந்தியில் இருப்பதைக் காணலாம்.

அந்த கல்லை 'ஒரே தம்மில்' அலேக்காக தலைக்கு மேல் தூக்கி காட்டும் இளைஞர்கள் தங்கள் வீரத்தை ஊருக்கு பறை சாற்றுவார்கள். அதன் குறியீடாக சோடா பாட்டில் கோலிக்குண்டை கட்டை விராலால் அழுத்தி திறப்பதும் ஒரு வீரமாக பார்க்கப்பட்டது உண்டு.
பாட்டில் சோடா பானத்தை இறுக்கமாக அடைத்திருக்கும் கோலிக்குண்டை அழுத்தி பாட்டிலை திறப்பது கடினம். அதை திறப்பதற்கு என்று மரச்சாவி ஒன்று உண்டு. ஆனால், அந்த காலகட்டத்தில் கட்டை விரலை சாவியாக பயன்படுத்தி ஒரே அழுத்தில் கோலிகுண்டை திறக்கசெய்யும் வீர தீர செயல்களையும் சிலர் பந்தயம் போட்டு செய்வார்கள்.

திருவிழா, கல்யாணம், பொதுக்கூட்டம், துக்கவீடு என்று ஒரு நூற்றாண்டாய் நம் வாழ்வில் பின்னிப்பிணைந்துள்ள பானம் கோலிசோடா. இன்று காணாமல் போகும் நிலையில் உள்ளது. நவநாகரீக மோகம், நுகர்வு கலாச்சார மாற்றம், இடைவிடாமல் வீட்டுக்குள் புதிய புதிய நுகர்வை கவர்ச்சியாக கொண்டுவரும் சேனல்கள், அதன் மூலம் பன்னாட்டு நிறுவன குளிர்பானங்களின் வரவு, பிரபலமானவர்களைக் கொண்டு கொடுக்கப்படும் பல்வேறு விளம்பரங்கள் போன்ற மாற்றங்களினால், பழம் பெருமை சொல்லும் உள்ளூர் சோடாவின் ‘மௌசு’ குறைந்து போனது.

விளைவு பன்னாட்டு குளிர்பானங்களின் தாக்கம் குக்கிராமங்களிலும் கரங்களை விரித்து ஆக்டோபஸாக ஆக்கிரமித்து விட்டது. அதன் விளைவு, இன்று காலி சோடா ஆகிவிட்டது கோலி சோடா.

இதை நம்பி பிழைப்பு நடத்திய பல ஆயிரம் சோடாக்காரர்கள் வாழ்வை இழந்து ,வயிறு பொறுமி கிடக்கிறார்கள்.. அதை போக்கிட அவர்களுக்கு யார் கொடுப்பது சோடா?

-ஜி.பழனிச்சாமி

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...