Friday, December 5, 2014

மன்னிப்பு கேட்டார் மந்திரி; வேறு என்ன வேண்டும்?

21–ம் நூற்றாண்டில் மக்களின் மனதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லோருமே அவரவர் வழிபடும் தெய்வங்கள், அவரவர் பின்பற்றும் மதங்கள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்களேதவிர, பெரும்பாலான மக்களுக்கு மதங்கள் மீது வெறி இல்லை. மதத்தலைவர்கள்கூட அடுத்த மதங்களின் தலைவர்களோடு நட்புபாராட்டும் நல்ல பண்பு வளர்ந்துவருகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டுத்தான், சமீபத்தில் கிறிஸ்தவ மதத்தலைவரான போப் ஆண்டவர், துருக்கி நாட்டுக்கு சென்றதும், அங்கே இஸ்தான்புல் நகரில் உள்ள ஹாகியா சோபியா மசூதிக்கு சென்று வழிபாட்டில் கலந்துகொண்டதும், நல்ல மதநல்லிணக்கத்துக்கு அச்சாரமாக விளங்குகிறது. மதங்களுக்கிடையே நல்ல பேச்சுவார்த்தைகள் இருப்பதன் மூலம், நல்ல உறவுகளை வளர்த்து, தீவிரவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்று கூறியிருக்கிறார். அதேபோல இந்தியாவிலும், பிரதமர் நரேந்திரமோடி, இந்துமத கோட்பாடுகளில் அதிக நம்பிக்கை உள்ளவர் என்றாலும், அடுத்தமத தலைவர்களுக்கு உரியமரியாதையை கொடுக்க தவறியதில்லை.


இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் பா.ஜ.க. மந்திரி சபையில் 21 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். அதில், நிரஞ்சன் ஜோதி என்ற பெண் சாமியார் சேர்க்கப்பட்டார். உத்திரபிரதேசத்தில் ஒரு பிற்பட்டவகுப்பில் பிறந்த இந்த 47 வயது பெண் சாமியார், ஏற்கனவே மந்திரிசபையில் இருக்கும் உமாபாரதி போல, ஒரு துறவிதான். காவி உடைதான் அணிந்திருப்பார். பத்தேப்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்முறை எம்.பி., ஒரு ஆசிரமத்தில் சேர்ந்துள்ள நிரஞ்சன் ஜோதி சாமியார், ராமர் கோவில் பற்றி சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். டெல்லியில் சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, பா.ஜ.க. சார்பில் ஒரு பேரணி நடந்தது. இந்த பேரணியில், நிரஞ்சன் ஜோதி சற்று உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ராமரின் மக்களே. நாட்டை விற்றுவிட்ட சிலர் நாட்டை திவாலாக்கிவிட்டனர். அத்தகையவர்களுக்கு மக்கள் ஓட்டுப்போடமாட்டார்கள் என்று சொன்னதெல்லாம் சரி, அதன்பிறகு அவர் பேசிய பேச்சுக்கள்தான், நாடு முழுவதிலும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிவிட்டது. முஸ்லீம்கள் மசூதிக்குசென்று வழிபடுகிறார்கள். நாங்கள் அதை ஆட்சேபிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்கிறார்கள். நாங்கள் அதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால், ராமர் பற்றி பேசினால் மட்டும் அதை மதவாதம் என்று சொல்கிறார்கள். நான் என்னை மதவாதி என்று சொல்பவர்களிடம் கேட்கிறேன், நீங்கள் இப்படி சொல்கிறீர்களே அதைவிட என்ன மதவாதம் இருக்கிறது?, இன்னும் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன், இந்த நாட்டில் கிறிஸ்தவர்களாக இருக்கட்டும், முஸ்லீம்களாக இருக்கட்டும், அவர்களெல்லாம் ராமரின் குழந்தைகள்தான். இதை நம்பமறுப்பவர்கள், இந்த நாட்டையே நம்பமாட்டார்கள். நான் டெல்லி மக்களை கேட்கிறேன், ராமரின் குழந்தைகள் ஆளும் அரசு வேண்டுமென்று நினைக்கிறீர்களா?, அல்லது ராமரை நம்பாத முறைகேடாக பிறந்தவர்கள் ஆளும் அரசு வேண்டுமா? என்று கேட்டார். இது, நாடு முழுவதிலும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தனது கோபத்தின் வெளிப்பாடாக, இதுபோன்ற பேச்சுக்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. நாட்டுக்கு புது விலாசத்தை கொடுக்கவேண்டாம் என்று கண்டன கணைகளை வீசிவிட்டு, மத்திய மந்திரி நிரஞ்சன் ஜோதி சாமியாரை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறிவிட்டார். பெண் சாமியார் நிரஞ்சன் ஜோதியும், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். ஆனாலும், எதிர்க்கட்சிகள் இதை ஏற்றுக்கொள்ளாமல், மந்திரியை ‘டிஸ்மிஸ்’ செய்யவேண்டும் என்று அவையில் அமளி ஏற்படுத்தி நடத்தவிடவில்லை. பிரதமரும், மந்திரி மன்னிப்பு கேட்டுவிட்டார், அதை ஏற்றுக்கொண்டு, அவையை நடத்துவோம் என்று கேட்டார். நிச்சயமாக பெண் மந்திரி பேசியது தவறுதான். ஆனால், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலுமே அவர், ‘மன்னிப்பு கேட்டபிறகு, வேறு என்ன வேண்டும்?’. பொதுவாக, திருவள்ளுவர் சொன்னதுபோல, ‘யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப்பட்டு’ என்பது அரசியல்வாதிகள் அனைவரும் பின்பற்றவேண்டிய ஒன்றாகும்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...