Friday, January 2, 2015

தமிழகத்தில் 1½ கோடி சமையல் கியாஸ் இணைப்புகளுக்கு நேரடி மானிய திட்டம் அமலுக்கு வந்தது வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ.568 5–ந் தேதிக்குள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்

தமிழகத்தில் 1½ கோடி சமையல் கியாஸ் இணைப்புகளுக்கு மானிய தொகையை நேரடியாக வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் 5–ந் தேதிக்குள் தலா 568 ரூபாய் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்துக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

நேரடி மானிய திட்டம்

எனவே, சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், மானிய தொகையை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் இந்தியா முழுவதும் 54 மாவட்டங்களில் கடந்த நவம்பர் மாதம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, புத்தாண்டு தினமான நேற்று முதல் இந்த திட்டம் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமலுக்கு வந்தது.

1½ கோடி இணைப்புகள்

தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் ‘சப்ளை’ செய்து வருகின்றன. இந்த 3 எண்ணெய் நிறுவனங்களிலும் சேர்த்து தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 54 லட்சம் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப் புகள் உள்ளன. இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘இண்டேன்’ சமையல் கியாசுக்கு அதிகபட்சமாக ஒரு கோடி இணைப்புகள் உள்ளன.

வங்கி கணக்கின் மூலம் நேரடியாக மானியம் பெறும் திட்டத்திற்காக சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் வங்கி கணக்கு, ஆதார் அடையாள அட்டை தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றன.

இண்டேன்
வாடிக்கையாளர்கள்

இந்தியன் ஆயில் நிறுவனமும், ‘இண்டேன்’ சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் விவரங்களை சேகரித்து வருகிறது.

இந்த பணியை விரைவுபடுத்துவதற்காக தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கீழ் திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவை ஆகிய 4 பகுதி அலுவலகங்களின் கீழ் உள்ள பகுதிகளில் விடுமுறை நாட்களில் சிறப்பு பதிவு முகாம்களை நடத்தி வாடிக்கையாளர்களிடம் இருந்து, சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பெற்று வருகிறது. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு பொதுமக்களுக்கு உதவ அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வங்கி கணக்கில் மானியம்

இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 1–ந்தேதியான நேற்று முதல் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களை அளித்து இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்த (‘லிங்’) வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் மானிய முன்பணம் செலுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென்மண்டல அலுவலக செய்தித்தொடர்பு முதுநிலை மேலாளர் வி.வெற்றிசெல்வகுமார் கூறியதாவது:–

53 லட்சம் பேர் இணைப்பு

தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் 1 கோடியே 54 லட்சம் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் மட்டும் ஒரு கோடி வாடிக்கையாளர்கள் கையாளப்பட்டு வருகின்றனர். சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த டிசம்பர் 31–ந்தேதி வரை 53 லட்சம் பேர் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 52.83 சதவீதம் பேரும், குறைந்த பட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 சதவீதம் பேரும் இணைந்து உள்ளனர். இதில் 38.75 சதவீதம் பேர் ‘ஆதார்’ அட்டை மற்றும் வங்கி கணக்கும், 22.98 சதவீதம் பேர் வங்கி கணக்கு எண்ணை மட்டும் இணைத்து உள்ளனர். மீதம் உள்ள அனைவரையும் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

வருகிற 15–ந்தேதி வரை 4 பகுதி அலுவலகங்களின் கீழ் உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம்கள் நடத்தப்பட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும். மார்ச், 31–ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அதுவரை மானியம் சேர்க்காமல், அதாவது பழைய விலைக்கே வீட்டு உபயோக சிலிண்டர்கள் வினியோகிக்கப்படும். வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரை மானியம் சேர்க்கப்பட்டு அப்போதைய சர்வதேச சந்தையின் விலை மதிப்பில் வசூலிக்கப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு

கடைசி தேதி மார்ச்–31 என்று அறிவிக்கப்பட்டு
இருப்பது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணைதளத்தில் இணைவதற்கான தேதி ஆகும். எனவே கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக முகாம்களிலோ அல்லது டீலர்களிடமோ விண்ணப்பங்களை அளித்து மானியத்தை தங்கள் வங்கி கணக்கில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆதார் அட்டை இல்லையே என்று இருக்கவேண்டாம், வங்கி கணக்கு இருந்தால் உடனடியாக அதனை முன்பதிவு செய்யலாம்.

‘ஆதார்’ அட்டை இருப்பவர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பதிவு செய்ய னீஹ்றீஜீரீ.வீஸீ என்ற இணையதள முகவரியில் ‘ஆதார்’ அட்டை எண்ணை பதிவு செய்யலாம். இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சினிமா ஸ்லைடு, துண்டு பிரசுரம், செல்போன் குறுஞ்செய்தி, பெட்ரோல் பங்க் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்து வருகிறது. வங்கிகளும் விரைந்து செயல்படுவதற்காக வங்கி உயர் அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

53 லட்சம் பேருக்கு மானியம்

விண்ணப்பங்களை முறையாக செலுத்தி (கடந்த 31–ந்தேதி நிலவரப்படி) இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்த 53 லட்சத்து 42 ஆயிரத்து 260 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரும் 5–ந்தேதிக்குள் தலா ரூ.568 வீதம் முன்பணம் (மானிய தொகை) செலுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் ரூ.404.50 விலையிலும், வர்த்தக நிறுவனங்களுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ.1,500 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஜனவரி மாதம் முழுவதும் மானியம் அல்லாத வீடுகளுக்கான 14.2 கிலோ சிலிண்டர் ரூ.729–க்கு விற்பனை செய்யப்படும். இந்த மானிய திட்டம் யாருக்கு போய்ச் சேரவேண்டுமோ, அவர்களுக்கு விரைவாக சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 12 ஆயிரம் பேர் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று கோரி மனு அளித்துள்ளனர். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...