Sunday, January 11, 2015

வாங்க பொங்கல் வைக்கலாம்!

தை மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் பொங்கல் தினம் பிரதானமானது. அதுவும் பானை வைத்து கொண்டாடும் பொங்கல் மட்டுமில்லாமல் பலவகையான பொங்கலும் அந்த தினங்களில் உண்டு என்கிறார் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த இல்லத்தரசி லட்சுமி மணிகண்டன்.
 "மிக்ஸி, கிரைண்டர், ஓவன், கியாஸ் அடுப்பு  என்று அதிநவீன அடுப்பறை சாதனங்கள் பல தோன்றி விறகில்லா சமையலை வினாடி நேரத்தில் செய்து முடிக்கும் ‘ஈஸி’ கிச்சன் யுகத்தில்தான் நாம் இருக்கிறோம்.  பண்டிகை பட்சணங்கள், பலகாரங்களைக்கூட மெனக்கெட்டு வீட்டில் செய்வதில்லை யாரும். குளுகுளு கண்ணாடி ஷோரூம் அலமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள இனிப்புகளை, கைவீசிப்போய் கணக்குப் பார்க்காமல் காசு கொடுத்து பை நிரப்பி கொண்டுவந்து ருசித்து கொண்டாடுகிறோம். தை முதல் நாள் பொங்கலைக்கூட குக்கர் விசில் குலவையிட கொண்டாடும் காலம் இது.
அந்தக்காலத்தில் அப்படியில்லை.... தை மாதம்தான் விவசாயிகள் உள்ளிட்ட கிராம மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகம் இருக்கும். முக்கிய அறுவடை காலமும் அதுதான். பருவமழை தவறாமல் பெய்த காலத்தில், ஆடிப்பட்ட விவசாயம் அமோக விளைச்சலை கொடுத்தது. தினை, சாமை, வரகு, குதிரைவாலி என்று சிறுதானிய வெள்ளாமை தை மாத அறுவடையில் வீடு வந்து சேர்ந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு தோதாக மூன்று நாள் பொங்கல் பண்டிகையை முகம் மலர்ந்து கொண்டாடினார்கள்.

முதல் நாள் வாசல் பொங்கல்:  மெழுகிக்கோலமிட்ட வாசலில் அடுப்புக்கல் கூட்டி, தோகை சரசரக்கும் தோரணக்கரும்பு ஊன்றி, மஞ்சள் கொத்து கோர்த்து பானைகளில் தொங்கவிட்டு, பூசுற்றி பொட்டுவைத்து  பகலவனுக்கு ஒரு பச்சரிசி பொங்கல், குலசாமிக்கு ஒரு தினை அரிசி பொங்கல், மூத்தகுடியாம் முன்னோர் நினைவாக வரகரிசி பொங்கல் என்று மூன்று பொங்கல் வைத்து முதல் நாளை கொண்டாடுவார்.

 இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல்:  தொழுவம் மெழுகி, கால்நடைகள் கழுவி, கழுத்து மணி மாட்டி, கொம்புச்சாயம் பூசி, வண்ணப்பொடிகள் தூவி, சந்தனம் தெளித்து, குங்குமம் இட்டு, மாட்டுக்கு ஒரு பொங்கல், பட்டிகாக்கும் நாய்க்கும் ஒரு பொங்கல், ஆட்டுக்கு ஒரு பொங்கல், களத்து மேட்டு காவல்
தெய்வத்துக்கும் ஒரு பொங்கல் என்று பல பொங்கல் வைத்து, மஞ்சு விரட்டி மாடு பிடித்து படையலிட்டு பழமும் சர்க்கரை பொங்கலும் கலந்து ஆவினுக்கு ஊட்டி கொண்டாடும் பொங்கல் அது..

மூன்றாம் நாள் காணும் பொங்கல்: வீட்டில் செய்த பலகாரங்கள் கரும்புடன் கனிகள் பல கூடையில் நிரப்பி, புத்தாடை பளபளக்க, பூவாசம் கமகமக்க, கொம்பு, சேகண்டி, மத்தளம், உருமை, வாத்தியங்கள் முழங்கும் சத்தம் முன்செல்ல... இளசுகள் சேர்ந்து ஓடைக்கரை மரநிழலில் கூடி, அரளி, ஆவாரை, சரக்கொன்றை பூக்களைப்பறித்து வீசி விளையாடி, பேசி உறவாடும் காணும் பொங்கல் காளையரும் கன்னியரும் கண்ணால் பேசி காதலை பரிமாறும் பொங்கல். இப்படியாக, நடக்கும் பொங்கல் பலகாரம் படைக்க, அன்றைய மக்கள் பயன்படுத்தியது ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், உலக்கை மண்பானை, கலயம், சுட்ட அடுப்பு, ஆரோக்கியம் கெடுக்காத சிறுதானியங்கள்.

காலம் அதை மறந்து போனாலும், எங்களைப் போன்ற சிலர் இன்னும்  அதை கடை பிடித்து கொண்டாடி வருகிறோம்.

வாருங்கள் எங்கள் வீட்டிற்கு... பணியாரம், கொழுக்கட்டை, கைமுறுக்கு, கம்புசாதம், கைகுத்தல் அரிசி சோறு, கீரைகுழம்பு, கொள்ளுரசம், வாழைதண்டு பொரியல், ராகிதோசை என்று ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல் உலக்கை, விறகு அடுப்பு பயன்படுத்தி சமைக்கிறோம்... வெண்பொங்கல், தினை, வரகு, சாமை, கைகுத்தல் அரிசி பொங்கல் என்று தினம் ஒரு பொங்கல் சமைக்கிறோம்... பாரம்பரியம் காக்கிறோம்" என்கிறார்.

- ஜி.பழனிச்சாமி

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...