Tuesday, January 6, 2015

விலை, எடை... நிறுவனங்களின் உத்தி!

கோப்புப் படம்

கிட்டத்தட்ட நமது கண்ணை மறைக்கும் சாதனையை செய்து வருகின்றன நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள். நுகர் வோராக நீங்கள் இந்த வித்தியா சத்தை உணர்ந்திருக்கக்கூடும். அதை உணராதவர்கள் இதை படித்த பிறகு இன்னும் எச்சரிக்கையாக இருக்கலாமே?

நாம் வழக்கமாகப் பயன்படுத்தும், சோப், பற்பசை, ஷாம்பு மற்றும் தினசரி பயன்படுத்தும் இதர பொருட்களின் விலையை ஏற்றிவிட்டால் என்ன செய்வோம். அந்தப் பொருளை பயன் படுத்துவதை விட்டுவிடுவோம். அல்லது அந்த பொருளுக்கு நிகரான தரத்தோடு குறைந்த விலையில் வேறு நிறுவனப் பொருளை பயன்படுத்த தொடங்குவோம். பிராண்டை மாற்ற முடியாத அளவுக்கு பழகிவிட்டோம் என்றால் மட்டுமே அந்த பொருளைத் தொடர்ந்து வாங்குவோம்.

பொருளுக்கான விலையை ஏற்றும் உத்தி என்பது நிறுவனங்கள் கடைபிடிக்கும் உத்திகளில் ஒன்று. இது அவர்களின் உரிமை. பொருளுக்கான தயாரிப்பு செலவுக்கு ஏற்ப விலையைத் தீர்மானிக்க சட்டம் அவர்களுக்கு இந்த உரிமையை கொடுத்துள்ளது. ஆனால் இந்த உத்தியால் வாடிக்கையாளர்களை இழக்கும் அபாயமும் நிறுவனங்களுக்கு இருக்கிறது. இந்த அபாயத்தைச் சந்திக்க தயாராக இல்லாத நிறுவனங்கள் குறுக்கு வழியில் கண்டுபிடித்த உத்திதான் விலையை ஏற்றாமல், அளவு அல்லது எடையைக் குறைக்கும் உத்தி.

இந்த எடைக்குறைப்பை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. பளிச்சென்று எந்த வித்தியாசமும் தெரியாது. நீங்கள் உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே இதைக் கண்டு பிடிக்க முடியும். எந்த அறிவிப்பும் இல்லாமல் இப்படிச் செய்வது வாடிக்கை யாளர்களை ஏமாற்றும் உத்தி ஆகிவிடாதா? இது குறித்து ஒரு நிறுவனத்தின் விற்பனை மேலதிகாரியிடம் கேட்டோம்.

``எடை குறைப்பு செய்வதால் வாடிக்கையாளரை நாங்கள் ஏமாற்று வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்த பொருளின் எடை, அளவு அதற் கான விலை போன்ற விவரங்களை வழக்கம் போல பொருளின் பேக்கிங்கில் தெளிவாக அச்சடித்துதான் தருகிறோம். வாடிக்கையாளர்கள் அதைப் பார்த்து விட்டுத்தான் வாங்குகின்றனர்.

பொருளும் தேவை, விலையும் வாங்குவதுபோல இருக்க வேண்டும் இதுதான் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விஷயம். எடை கொஞ்சம் குறைந்தாலும் பராவாயில்லை என்பதுதான் மக்கள் எண்ணம். அவர்களை ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு அறவே இல்லை’’ என்றார். நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் இந்த விஷயம் குறித்து என்ன நினைக்கின்றன என்பதற்காக அவர்களையும் தொடர்பு கொண்டோம்.

கலப்படப் பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்களால் ஏமாறும் மக்களை முன்னணி நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு இதுபோன்று எடை குறைப்பு செய்து ஏமாற்றுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. இது போன்ற எடை குறைப்பு சமாசாரங்களை மக்கள் கண்டுகொள்வதில்லை என்று நிறுவனங்கள் நம்புகின்றன. மூலப் பொருட்களின் விலை ஏறுவதும், போக்குவரத்து மற்றும் விநியோக செலவுகள் அதிகரிப்பதும் நிறுவனங்களுக்கு விலை ஏற்ற வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது என்றால் அதை மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை நிறுவனங்களுக்கு இருக்கிறது.

தவிர முன் அறிவிப்பு இல்லாமல் எடை குறைப்பதற்கு சட்டமும் அனுமதிக்கிறது. முன்பு 25 கிராம் 50 கிராம் என்று ரவுண்டாகத்தான் எடை இருக்க வேண்டும் என்று இருந்த சட்ட விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. 7 கிராம், 14கிராம், 48 கிராம் என பேக்கிங் செய்து கொள்வதற்கு ஏற்ப சட்டமும் சாதகமாக உள்ளது. இதை பேக்கிங்கில் அச்சடித்தால் போதும் என்பதுதான் நிலைமை. எனவே நுகர்வோர் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டியிருக்கிறது என்கின்றனர்.

சில பிராண்டு பொருட்களில் எடை குறைத்தது மட்டுமல்ல, விலையையும் அதிகரித்து விட்டனர். உதாரணமாக ஒரு முன்னணி பிராண்ட் சோப் முன்பு 100 கிராம் இருந்தது என்றால் இப்போது 90 கிராம்தான் உள்ளது. விலையையும் உயர்த்தி உள்ளனர். வழக்கமாக வாங்கும் பொருள், பழக்கப்பட்ட பிராண்ட் என்கிற நம்பிக்கையில்தான் அந்த பொருட்கள் நுகர்வோரை ஈர்க்கிறது.

சோப்பு, ஷாம்பு, எண்ணெய் போன்ற தினசரி பயன்படுத்தும் பொருட்களில் குறிப்பிட்ட பிராண்டுக்கு பழகிவிட்டால் மாறுவதற்கு மனசு இருப்பதில்லை. விலை ஏறினாலும் அதே பொருட்களைத்தான் விரும்புகின்றனர் நுகர்வோர்கள்.

அவர்களின் கேள்வி இதுதான். சலுகை என்றால் டமாரம் அடிப்பதும், எடை குறைப்பை வெளியில் சொல்லாமல் கமுக்கமாக செய்வதும் ஏன்? நுகர்வோர்கள் விழிப்போடு இருப்பது ஒன்றுதான் இதற்கு ஒரே வழி.

எப்படி கண்டுபிடிப்பது?

வழக்கமாக 100 கிராம் சோப் என்று நினைத்து வாங்குவோம். 90 கிராம்தான் இருக்கும். 50 கிராம் பேஸ்ட் என்று நம்பி வாங்கினால் 40 கிராம்தான் பேக் செய்யப்பட்டிருக்கும். அதற்குத்தான் விலை குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு முன்பு 100 கிராமும், 50 கிராமும் என்ன விலையில் விற்பனை ஆனதோ அதே விலையில் தற்போது 40 கிராமும், 90 கிராமும் விற்பனை செய்யப்படுகிறது.

சோப்பு, பேஸ்ட், டீ தூள், பிஸ்கட் முதல் மசாலா பொருட்கள் வரை அனைத்திலும் இந்த வகையிலான எடை குறைப்பு வித்தை சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இதில் நிறுவன பேதமே கிடையாது. பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களுமே இந்த உத்தியைக் கடைபிடிக்கின்றன.

ஏமாற்றும் உத்தியா?

விலை ஏற்றினால் வாடிக்கையாளரை இழக்கலாம் என நினைக்கும் நிறுவனங்கள் இந்த உத்தியை நேரடியாக நுகர்வோரிடத்தில் சொல்லலாமே என்கிற கேள்வி எழுகிறது. 50 காசு விலை குறைத்தால் பல லட்சம் செலவு செய்து விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் இந்த விஷயத்தை மட்டும் ஏன் இருட்டடிப்பு செய்கின்றன.

இருக்கும்... ஆனா இருக்காது...

விலையும் ஏற்றக்கூடாது, லாபமும் குறையக்கூடாது, தரத்திலும் சறுக்கக் கூடாது, வாடிக்கையாளர்களையும் இழக்கக்கூடாது என்கிற பலமுனை யோசனைகளிலிருந்து நிறுவனங்கள் இந்த உத்தியை கடைப் பிடிக்கின்றன. பிஸ்கட்டின் வழக்கமான அளவை விட சற்று சிறிய சைஸ் ஆக இருக்கிறது என்று தோன்றுகிறதா... இதுதான் அந்த இருக்கும்... ஆனா இருக்காது...

நிறுவனங்கள் குறுக்கு வழியில் கண்டுபிடித்த உத்திதான் விலையை ஏற்றாமல், அளவு அல்லது எடையைக் குறைக்கும் உத்தி.

maheswaran.p@thehindutamil.co.in

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...