Friday, May 29, 2015

ஸ்பீடு போஸ்ட்டா அல்லது ஸ்லோ போஸ்ட்டா?


க்களிடையே அதிக நம்பிக்கை பெற்ற மத்திய அரசு துறை அஞ்சல்துறைக்கு, கிராமம் முதல் நகரம் வரை அதிக வரவேற்பு இருந்தது ஒருகாலம். ஆனால், இன்றோ கூரியர் சேவையாலும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும் அஞ்சல் துறை ஆரவாரமில்லாமல் அமைதியாக செயல்படுகிறது. அஞ்சல் துறை கொஞ்சம் கொஞ்சமாக பின்னடவை சந்திக்க நேர்ந்தது. 

இதன்விளைவு, அஞ்சல் துறையின் முக்கியமான சேவைகளில் ஒன்றான தந்தி சேவைக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. அஞ்சல் துறையின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அக்கறை செலுத்தத் தொடங்கியது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நன்மதிப்பு பெற்ற அஞ்சல் துறை 'போஸ்டல் லைப் இன்ஸ்சூரன்ஸ்', 'தங்க நாணயங்கள் விற்பனை' ஆகியவற்றில் கால்பதித்தது. தனியார் பங்களிப்புடன் செயல்படும் தங்க நாணய விற்பனை சில தலைமை தபால் நிலையங்களில் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. வங்கிகளைப் போல சேமிப்பு கணக்கு சேவையையும் விரிவுப்படுத்திய அஞ்சல் துறை இப்போது ஏ.டி.எம் மையம் வரை தொடங்கி இருக்கிறது. 

அடுத்தக்கட்டமாக, ஷாப் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், அஞ்சல் துறையில் கடமைக்குப் பணியாற்றுபவர்களின் சிலரால் அதன் அணுகுமுறை மக்கள் மத்தியில் பெரியளவில் சென்றடையவில்லை. சமீபத்தில் 'செல்வமகள்' என்ற சேமிப்புத் திட்டம் அஞ்சல் துறை மீண்டும் மக்களை தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அஞ்சல் துறையில் விரைவு தபால் (ஸ்பீடு போஸ்ட்) என்ற சேவை உள்ளது. இதற்கு சாதாரண தபால் சேவையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், சாதாரண தபாலை விட விரைவாக இது செயல்படும். இதன் காரணமாக இந்த சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆனால், சில ஊழியர்களின் மெத்தனப் போக்கு சில நேரங்களில் ஸ்பீடு போஸ்ட், ஸ்லோ போஸ்ட்டாக மாறி விடுகிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மும்பையிலிருந்து ஸ்பீடு போஸ்ட்டில் அனுபப்படும் தபால்கள் அல்லது பார்சல்கள் மூன்று நாட்களுக்குள் சென்னைக்கு வந்து, சென்னை முகவரி இருந்தால் அது உடனடியாக டெலிவரி செய்யப்பட வேண்டும். ஆனால், சமீபத்தில் மும்பையிலிருந்து ஸ்பீடு போஸ்ட் மூலம் ஒரு பார்சல் அனுப்பப்பட்டது. அந்த பார்சலை அஞ்சல் துறை ஊழியர்கள் பந்தாடிய சம்பவம் இது.


கடந்த 7-ம் தேதி மும்பையிலிருந்து சென்னை திருநின்றவூருக்கு ஒரு பார்சல் முன்பதிவு செய்யப்படுகிறது. 9-ம் தேதி சென்னை அண்ணா சாலைக்கு அந்த பார்சல் வந்து சேருகிறது. பிறகு அங்கிருந்து 12-ம் தேதி விழுப்புரத்துக்கு செல்கிறது. (விழுப்புரத்துக்கு எதற்காக அனுப்பப்பட்டது என்று தெரியவில்லை). பின்னர் அங்கிருந்து மீண்டும் சென்னை அண்ணா சாலைக்கு அனுப்பப்படுகிறது. அண்ணா சாலையிலிருந்து 13-ம் தேதி திருநின்றவூருக்கு அனுப்பப்படுகிறது. 

திருநின்றவூரில் பார்சலின் முகவரி தவறு என்று குறிப்பிட்டு 14-ம் தேதி அண்ணா சாலைக்கு திரும்ப அனுப்பப்படுகிறது. 15-ம் தேதி அண்ணா சாலையிலிருந்து மும்பைக்கு முன்பதிவு செய்த இடத்துக்கே திரும்ப அனுப்பப்படுகிறது. 16-ம் தேதி மும்பைக்கு சென்றடைந்த அந்த பார்சல் 17-ம் தேதி சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் டெலிவரி செய்யப்பட்டு விடுகிறது. இவ்வாறு 7-ம் தேதி மும்பையில் முன்பதிவு செய்யப்பட்ட அந்த பார்சல், அங்கிருந்து வரும் போது தாமதமாகினாலும் மீண்டும் அனுப்பும் போது விரைவாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதற்காக அந்த பார்சல் திரும்ப அனுப்பப்பட்டது என்று விசாரித்தபோது முகவரியில் வீட்டின் எண் மாறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அஞ்சல் துறையினர் தெரிவித்தனர். சரியான முகவரி இல்லை என்று சொல்லும் அஞ்சல் துறையினரின் வாதம் சரி என்று எடுத்துக்கொள்ளலாம். ஸ்பீடு போஸ்ட் என்பது விரைவான சேவையாகும். அந்த சேவையில் குறிப்பிட்ட தினத்துக்குள் டெலிவரி செய்யப்பட வேண்டும். ஆனால், அஞ்சல்துறையில் சிலரின் கவனக்குறைவு மற்றும் மெத்தனப்போக்கு காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நிகழ்வதால் பொது மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "மும்பையிலிருந்து சென்னைக்கு ஸ்பீடு போஸ்ட் சேவை மூலம் அனுப்பப்படும் எந்த ஒரு பொருளும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவருக்கு டெலிவரி செய்து விடப்படும். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் எதற்காக கூடுதல் நாட்கள் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர் புகார் கொடுத்தால் அதற்கு காரணமாக ஊழியர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

நுகர்வோர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், "இந்திய அரசின் அஞ்சல் துறையில் சிலர் செய்யும் தவறுகளாலும், நுகர்வோருக்கு அங்கு போதிய வரவேற்பு இல்லாததாலும் தனியார் கூரியர் நிறுவனங்களைத் தேடி மக்கள் செல்கிறார்கள். அஞ்சல் துறையை விட கூடுதல் கட்டணம் என்றாலும் கூரியர் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியடைந்து வருகிறது. மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த பார்சலை அஞ்சல் துறை ஊழியர்கள் தவறுதலாக விழுப்புரத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள். 

இதனால், காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட நுகர்வோர், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். வழக்கு தொடர்ந்தால் சேவையில் குறைபாடு என்ற காரணத்துக்காக அஞ்சல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு (நிவாரணத் தொகை) பெற சட்டத்தில் வழிவகை உள்ளது. அடுத்து பார்சல் அனுப்பிய நிறுவனம் தவறுலாக வீட்டின் முகவரியில் எண்ணை மாற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதுவே பார்சல் திரும்ப அனுப்பபட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்டவர் சரியான முகவரியை கொடுத்து இருக்கிறார். இதனால் கவனக்குறைவு என்பதற்காக அந்த நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கலாம். நுகர்வோர் சேவையில் குறைபாடு ஏற்படும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் நீதிமன்ற கதவை தைரியமாக தட்டலாம்" என்றார்.

- செல்வ மகேஷ் ( திருநின்றவூர்)

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...