Saturday, April 2, 2016

எம்ஜிஆர் 100 | 35 - எம்.ஜி.ஆருக்கு முதுகிலும் கண்! தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

எம்ஜிஆர் 100 | 35 - எம்.ஜி.ஆருக்கு முதுகிலும் கண்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
M.G.R. எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பதை உன்னிப்பாக கவனித்தபடி இருப்பார். அவர் கவனிப்பது பிறருக்குத் தெரியாது. சில நேரங்களில் தெரிந்தது போல காட்டிக் கொள்ளவும் மாட்டார். ஆனால், தனக்குத் தெரியும் என்பதை பின்னர் பூடகமாக வெளிப்படுத்திவிடுவார். அவரது கூரிய பார்வையில் இருந்து எதுவும் தப்பாது.

திரையுலகில் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் மிகவும் கண் டிப்பானவர். அவரிடம் பேசவே பிறர் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவரிடம் முன்னணிக்கு வந்து கொண்டிருந்த நடிகராக இருந்தபோதும் தனக்கு சரி என்று பட்டதை எம்.ஜி.ஆர். தயங்காமல் சொல்வார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயா ரித்த ‘சர்வாதிகாரி’ படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகன். அந்தப் படம் ‘தி கேலன்ட் பிளேடு’ (The gallant blade) என்ற ஆங் கிலப் படத்தின் தழுவல். அதற்கு ‘வீர வாள்’ என்று முதலில் பெயரிடப்பட்டது. கதைக்குப் பொருத்தமாக படத்தின் பெயரை ‘சர்வாதிகாரி’ என்று மாற்றி யதே எம்.ஜி.ஆர்.தான். அதை டி.ஆர். சுந்தரமும் ஏற்றுக் கொண்டார்.

இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் அஞ்சலி தேவி நடித்தார். நடிகை அஞ்சலி தேவி மீது எம்.ஜி.ஆருக்கு மதிப்பு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவ ராக இருந்த நடிகை என்ற பெருமை அஞ்சலி தேவிக்கு உண்டு. அவர் தலை வராக வருவதற்கு எம்.ஜி.ஆர். முக்கிய காரணம். எம்.ஜி.ஆருக்குப் பிறகு 1959-ம் ஆண்டில் நடிகர் சங்கத் தலைவரானார் அஞ்சலி தேவி. ‘சர்வாதிகாரி’ படப்பிடிப் பின்போது ஒரு பாடல் காட்சியில் அஞ்சலி தேவி பம்பரமாக சுற்றிச் சுழன்று தரையில் விழ வேண்டும். அதன்படியே, நடித்து முடித்தார். எல்லாருக்கும் காட்சி திருப்தியாக இருந்தது. டைரக்டரும் ஓ.கே.சொல்லிவிட்டார்.

ஆனால், எம்.ஜி.ஆர். மட்டும் ‘‘மறுபடி யும் ஒரு ‘டேக்’ எடுங்க’’ என் றார். காட்சி நன்றாகத் தானே வந்திருக் கிறது, எதற்காக மறுமுறை எடுக்கச் சொல்கிறார்? என்று யாருக்கும் புரிய வில்லை. எம்.ஜி.ஆரின் வற்புறுத்த லால் காட்சி மீண்டும் படமாக்கப்பட் டது. மறுபடியும் அஞ்சலி தேவி அதேபோல நன்றாகவே நடித்தார். இம் முறை எம்.ஜி.ஆருக்கும் திருப்தி. காட்சிக்கு அவரும் ஓ.கே. சொன்னார். இரண்டு ‘டேக்’கிலும் ஒரே மாதிரிதானே அஞ்சலி தேவி நடித்தார்? எதற்காக மறுபடியும் ‘ரீ டேக்’ எடுக்கச் சொன் னார்? என்று எல்லோரும் எம்.ஜி.ஆரை பார்த்தனர்.

எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘முதல் முறை அஞ்சலியம்மா பம்பரம் போல சுற்றி வரும்போது அவரது பாவாடை குடை போல விரிந்து முழங்கால் வரை ஏறிவிட்டது. படத்தில் விரசமாகத் தெரியும் என்பதால்தான் காட்சியை மறுமுறை எடுக் கச் சொன்னேன்’’ என்று விளக்கம் அளித்தார். எம்.ஜி.ஆரின் கண்ணியத்தை அறிந்து அஞ்சலி தேவி நெகிழ்ந்து போனார். ஒரு காட்சி படமாக்கப்படும்போது நடிகர்களின் நடிப்பு மட்டுமின்றி, கேமரா கோணம், ஒளி அமைப்பு, ஒப்பனை, உடை அமைப்பு என எல்லாவற்றையும் எம்.ஜி.ஆர். நுட்பமாக கவனிப்பார்.

‘மீனவ நண்பன்’ படத்தில் இயக்குநர் ஸ்ரீதரிடம் எம்.ஜி.ஆரின் ஒப்பனையாளர் பீதாம்பரத்தின் மகனும் பிரபல இயக்கு நருமான பி.வாசு உதவி இயக்குநராக பணியாற்றினார். படத்தில் எம்.ஜி.ஆருக் கும் நடிகை லதாவுக்கும் டூயட் பாடலான ‘கண்ணழகு சிங்காரிக்கு விழியிரண்டில் கண்ணி வைத்தேன்...’ பாடல் காட்சி கர்நாடக மாநிலம் மங்களூர் கடற்கரை யில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பின் போது பாடலில் ஒரு வரிக்கு எம்.ஜி.ஆர். சரியாக வாயசைக்கவில்லை என்று உதவி இயக்குநர் பி.வாசுவுக்கு தோன்றி யது. இயக்குநரான ஸ்ரீதர் அதை கவனிக்க வில்லை. காட்சியை எடுத்து முடித்ததும் ஸ்ரீதர் ஓ.கே.சொல்லிவிட்டார். ஆனால், பி.வாசுவுக்கு இதில் திருப்தி இல்லை.

எம்.ஜி.ஆருக்கு பின்னே நின்றிருந்த அவர், இயக்குநர் ஸ்ரீதருக்கு ஜாடை காண்பித்து ‘பாடல் வரிகளுக்கு எம்.ஜி.ஆரின் உதட்டசைவு சரியில்லை’ என்று சைகையில் விளக்கினார். ஸ்ரீதர் புரிந்துகொண்டார். எம்.ஜி.ஆரிடம் வந்து, ‘‘அந்தக் காட்சியை மீண்டும் ஒருமுறை படமாக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார். ‘‘எதற்காக?’’ என்று விளக்கம் கேட்டார் எம்.ஜி.ஆர்.!

பலர் முன்னிலையில் மிகப் பெரிய நடிகரான எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘உங் கள் வாயசைப்பு சரியில்லை என்று தோன்றுகிறது. அதனால் மீண்டும் ஒரு முறை...’ என்று சொன்னால் நாகரிகமாக இருக்காது. எம்.ஜி.ஆரும் தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வது? என்று தயங்கிய ஸ்ரீதர், ‘‘கேமரா ரிப்பேர், காட்சி சரியாக பதிவாகவில்லை’’ என்று சொல்லி சமாளித்தார்.

மீண்டும் குறிப்பிட்ட அந்தக் காட்சியை எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்தார். ஸ்ரீதர், பி.வாசு உட்பட அனைவருக்கும் திருப்தி. அப்போதுதான் எதிர்பாராமல் அந்தக் கேள்வியை எம்.ஜி.ஆர். கேட்டார்.

பி.வாசுவைப் பார்த்து ‘‘என்ன வாசு? காட்சி ஓ.கே.வா? திருப்தியா?’’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார். வெலவெலத்துப் போய்விட்டார் வாசு. தான் ஸ்ரீதரிடம் ஜாடை காண் பித்தது எம்.ஜி.ஆருக்கு எப்படியோ தெரிந்துவிட்டதே என்று வாசுவுக்கு தர்மசங்கடம். ஸ்ரீதருக்கு வாசு ஜாடை காட் டியதை பக்கவாட்டில் திரும்பியபடி ஓரக்கண்ணால் எம்.ஜி.ஆர். கவனித் திருக்கிறார். அவரது கேள்விக்கு ‘‘ஓ.கே. சார்’’ என்று வாசுவும் வெட்கப் புன்னகையுடன் பதிலளிக்க, அவரைப் பார்த்து மீண்டும் சிரித்தார் எம்.ஜி.ஆர்.!

காட்சி ஏன் மீண்டும் படமாக்கப்படு கிறது என்ற நிலைமையைப் புரிந்து கொண்டு, இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோருக்கு திருப்தி அளிக்கும் வகையில் முழு ஒத்துழைப்பு அளித்து மீண்டும் நடித்துக் கொடுத்ததுடன், நடந்தது தனக்கும் தெரியும் என்பதை சூசகமாக பி.வாசுவுக்கு எம்.ஜி.ஆர். உணர்த்திவிட்டார்.

எம்.ஜி.ஆருக்கு முதுகிலும் கண்!

- தொடரும்...

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...