Tuesday, July 11, 2017

 DAILYTHANTHI

ஜி.எஸ்.டி. வரியால் ஓட்டல்களில் கூட்டம் குறைந்தது: சென்னையில் கை ஏந்தி பவனில் களைகட்டும் உணவு விற்பனை



ஜி.எஸ்.டி. வரியால் ஓட்டல்களில் விற்பனை குறைந்துள்ளது. சென்னையில் உள்ள கை ஏந்தி பவனில் கூட்டம் அலைமோதுகிறது. ‘டிப்-டாப்’ உடை அணிந்தவர்களும் வரிசையில் நின்று சாப்பிடுகின்றனர்.

ஜூலை 11, 2017, 05:15 AM
சென்னை,

மத்திய அரசு கடந்த 1-ந் தேதி நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. எனும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தியது.

ஓட்டல்களின் தரத்துக்கு ஏற்ப 5, 12, 18 என்று ஜி.எஸ்.டி. வரி விகிதம் அமைந்துள்ளது. அதன்படி ஏ.சி.வசதியுடன் கூடிய உயர்தர சைவ உணவகத்தில் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் ரூ.700-க்கு காலை டிபன் சாப்பிட்டால், 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி ரூ.126 சேர்த்து ரூ.826 ‘பில்’ கட்டணமாக செலுத்த வேண்டி உள்ளது.

வயிற்றில் அடி

ஜி.எஸ்.டி. வரியால் ஏற்பட்டுள்ள கட்டண உயர்வு ஓட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ள உணவு பிரியர்கள் வயிற்றில் அடிப்பதாக அமைந்து இருக்கிறது.

வாரத்தில் 6 நாட்கள் வீட்டு சாப்பாடு சாப்பிட்டாலும், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று ஓட்டலில் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ள குடும்பங்களின் மாத ‘பட்ஜெட்’டில் கட்டண உயர்வு கை வைத்து உள்ளது.
கட்டண உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவு சாப்பிட வருவோர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாக ஓட்டல் உரிமையாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

கை ஏந்தி பவன்

ஓட்டல்களில் கூட்டம் குறைந்ததால், சாலையோர உணவு கடைகளில் கூட்டம் நிரம்பி வழிய தொடங்கி உள்ளது. ஓட்டல்களில் சாப்பிட்டு பழகியவர்களும் தற்போது ‘கை ஏந்தி பவன்’ என்று அழைக்கப்படும் சாலையோர உணவு கடைகளை நாட தொடங்கி உள்ளனர். ‘டிப்-டாப்’ உடை அணிந்தவர்களும் வரிசையில் நின்று சாப்பிடுவதை காண முடிகிறது. சாலையோர உணவு கடைகளில் சாப்பிடுவதை கவுரவ குறைச்சல் என்று கருதுபவர்கள் பார்சல் வாங்கி செல்கின்றனர்.

சாலையோர உணவு கடைகளில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதால், கூடுதலாக உணவுகளை கடைக்காரர்கள் சமைக்கின்றனர். வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப விதவிதமான உணவு வகைகளையும் விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர்.

மகிழ்ச்சி

இதுகுறித்து சாலையோர உணவு கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் மகிழ்ச்சியாக கூறியதாவது:-

கூலி தொழிலாளர்கள், ஏழை-எளிய மக்களின் பசியை சாலையோர கடைகள் போக்கி வருகின்றன. ஒரு சில ஓட்டல்களில் ரூ.80-க்கு மதிய உணவு சாப்பிட்டாலும் அரைகுறையாக தான் வயிறு நிரம்பும். ஆனால் சாலையோர கடைகளில் ரூ.40-க்கு சாப்பிட்டாலும் வயிறு நிறைந்துவிடும்.

தற்போது ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால், நடுத்தர மக்கள் பலரும் சாலையோர கடைகளை தேட தொடங்கி உள்ளனர். அதிகளவில் பார்சல்களும் விற்பனையாகிறது. இதனால் உணவு வகைகள் உடனடியாக விற்று தீர்ந்துவிடுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2025