Friday, November 10, 2017

ஒரே ஒரு நபருக்காக ஓட்டுச்சாவடி

ஒரே ஒரு நபருக்காக ஓட்டுச்சாவடி
ஆமதாபாத்: குஜராத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும், ஒரே ஒரு நபருக்காக, ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, டிச., 9, 14ல், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 
அனைத்து தொகுதிகளிலும், ஓட்டுச்சாவடி அமைக்கும் பணிகள் நடக்கும் நிலையில், அடர்ந்த கிர் வனப்பகுதியில் வசிக்கும் ஒருவருக்காக, ஓட்டுச்சாவடியை, மாநில தேர்தல் கமிஷன் அமைக்கிறது. 

இது குறித்து, மாநில தேர்தல் கமிஷனின் ஓட்டுச்சாவடி அதிகாரி, சிமன்பாய் ருபாலா கூறியதாவது: சோம்நாத் மாவட்டத்தில், அடர்ந்த கிர் சரணாலயத்தின் மத்தியில், பானேஜ் கிராமம் உள்ளது. இங்கு, வரலாற்று சிறப்புமிக்க, பானேஷ்வர் மஹாதேவ் கோவிலில், பாரத்தாஸ் குரு தர்ஷன் தாஸ் என்பவர், பல ஆண்டுகளாக பூசாரியாக உள்ளார்.
மக்கள் வசிக்க அனுமதி இல்லாத, அடர்ந்த வனப்பகுதியில், பூசாரி மட்டும் தனியாக, கோவிலிலேயே தங்கி உள்ளார். இவருக்காக, ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. மற்ற ஓட்டுச்சாவடிகளை போல, இந்த சாவடியிலும், தேர்தல் அதிகாரி, ஓர் அலுவலக உதவியாளர், இரண்டு போலீசார், ஒரு மத்திய ரிசர்வ் படை வீரர் ஆகியோர், தேர்தல் பணியில் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026