Tuesday, November 14, 2017


கவர்னர் மாளிகை தோட்ட அதிகாரி இடமாற்றம் : 'தினமலர்' செய்தியால் நடவடிக்கை

நவ 13, 2017 21:54

கவர்னர் மாளிகையில் நடைபெறும், முறைகேடுகள் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளாக, அங்கு பணியிலிருந்த, தோட்டக்கலை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக கவர்னர் மாளிகையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, புகார்கள் எழுந்தன.

போலி 'பில்' : பூந்தொட்டிகள் வாங்காமலே, வாங்கியதாக போலி, 'பில்' கொடுத்து, பணம் பெறப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகைக்கு வாங்கியதாகக் கூறி, செம்மண் உட்பட, தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டு, அங்குள்ள அதிகாரிகள் வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகின்றன என, ஊழியர்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து, சமீபத்தில், நமது நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், கவர்னர் விசாரணை மேற்கொண்டுள்ளார். புகாரை தொடர்ந்து, தோட்டக்கலை அதிகாரியை இடமாற்றம் செய்தால், உயர் அதிகாரிகளும் சிக்க வேண்டும் என்பதால், தோட்டக்கலை அதிகாரி, பாலசுப்ரமணியம், இடமாறுதல் கேட்டு தோட்டக்கலைத் துறை இயக்குனருக்கு விண்ணப்பித்தார்.
அதன் அடிப்படையில், சிட்லபாக்கம் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனராக, அவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

பெண் நியமனம் : எனினும், அவர் கவர்னர் மாளிகையிலேயே தங்க, அதிகாரிகள் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தோட்டக்கலை அதிகாரியாக, யோகநாதன் நியமிக்கப்பட்டுஉள்ளார். அதேபோல, ராஜ்பவன் உதவி கணக்கு அலுவலர் சிவக்குமாரை இடமாற்றம் செய்து, பெண் ஒருவரை அப்பதவிக்கு நியமித்து, உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை இயக்குனர் உத்தரவிட்டார். ஆனால், கவர்னர் மாளிகை உயர் அதிகாரிகளின் சிபாரிசால், அந்த இடமாற்றம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இது, ராஜ்பவன் ஊழியர்களிடம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இங்கு நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க, பல ஆண்டுகளாக, தொடர்ந்து கவர்னர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என, கவர்னர் மாளிகை ஊழியர்கள், கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...