Monday, December 17, 2018

` ஒரு மாத்திரை சாப்பிட்டால் போதும்!' - சென்னையில் சிக்கிய நைஜீரிய போதை ஆசாமி

எஸ்.மகேஷ்




சென்னையில் சிக்கிய நைஜீரியாவைச் சேர்ந்த போதைக் கும்பலிடம் உள்ள போதை மாத்திரைகளில் ஒன்றைச் சாப்பிட்டால்போதும் 12 மணி நேரத்துக்குச் சந்தோஷமாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் தடைச் செய்யப்பட்ட போதை மாத்திரைகள் கிடைப்பதாக எஸ்.ஆர்.எம்.சி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் போதைக் கும்பலைப் பிடிக்க அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில் எஸ்.ஆர்.எம்.சி உதவி கமிஷனர் சந்திரசேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையில் எஸ்.ஐக்கள் ராஜா, சுரேஷ் மற்றும் காவலர்கள் வினோத், ஜெயராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் போதைக் கடத்தல் கும்பலை ரகசியமாகக் கண்காணித்தனர்.

இந்தநிலையில் நைஜிரியைச் சேர்ந்த ஒருவர் போதைப் பொருள்களுடன் மதுரவாயல் பைபாஸ் டோல்கேட் பகுதிக்கு வரும் ரகசிய தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குத் தனிப்படை போலீஸார் சென்றனர். அப்போது, நைஜீரியாவைச் சேர்ந்தவரும் அதை வாங்க வந்த சென்னையைச் சேர்ந்த 2 பேர் என மூன்று பேர் சந்தித்துப் பேசினர். அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி மதுரவாயல் பைபாஸ் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டோம். அப்போது நைஜிரீயாவசைச் சேர்ந்த சுக்வா சைமன் ஓபினா என்பவரை சென்னையைச் சேர்ந்த குமரேசன், அருண் திவாகர் ஆகியோர் சந்தித்தனர். சுக்வா, கொடுத்த போதை மாத்திரைகளை அவர்கள் வாங்கியபோது மடக்கிப் பிடித்தோம். சுக்வாவிடமிருந்து 500 போதை மாத்திரைகள் (Ecstasy tablets), 18 கிராம் கோகைன் இன்னும் சில போதைப் பொருள்கள், லேப்டாப், செல்போன்கள், வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். அதன்மதிப்பு பலலட்சம் ரூபாயாகும்.



ஒரு போதை மாத்திரையின் விலை 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழில் இந்த மாத்திரைக்குப் போதையின் பேரானந்தம் என்று சொல்லப்படுகிறது. கூகுளில் தேடினால் அந்த மாத்திரை குறித்த விவரங்கள் வருகின்றன. கோவா மூலம் பெங்களூருக்கு முதலில் இந்த மாத்திரை கடத்தப்படுகிறது. பிறகு, அங்கிருந்து சென்னைக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்த மாத்திரைகள், கேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் ரகசியமாக சப்ளை செய்யப்படுகிறது. குறிப்பாக, வார விடுமுறை நாள்களில் கேளிக்கை விடுதிகளுக்குச் செல்லும் தம்பதியினரில் சிலரும் இந்த மாத்திரையைப் பயன்படுத்துவதுண்டு. ஆணுக்கோ பெண்ணுக்கோ ஒரு மாத்திரையைக் குளிர்பானங்களில் கலந்து கொடுத்தால் போதும். அதன்போதை 10 மணி முதல் 12 மணி நேரம் வரை இருக்கும். மேலும், இந்த மாத்திரை செக்ஸ் உணர்வைத் தூண்டும். இதனால், இந்த மாத்திரைகள் ரகசியமாகப் படுஜோராக விற்பனை செய்யப்படுகின்றன. விலை அதிகம் என்றாலும் அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை.



இந்தப் போதைக்கு அடிமையானவர்கள் மூலமே மற்றவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, போலீஸாரிடம் சிக்கிக்கொள்ளாமலிருக்க முன்எச்சரிக்கையுடன் இந்தக் போதைக் கடத்தல் கும்பல் செயல்படுகிறது. ஒருவர் மீது நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே மாத்திரைகள் சப்ளை செய்யப்படும். இந்தப் போதை மாத்திரையைச் சாப்பிடுபவர்களின் பட்டியல் பரம ரகசியமாக உள்ளது.



சினிமா நட்சத்திரங்கள், ஐ.டி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என சமூகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களைக் குறி வைத்தே இந்தப் போதை கும்பல் மாத்திரைகளை விற்பனை செய்கிறது. எங்களிடம் சிக்கிய குமரேசனும் அருண் திவாகரனும் கோவாக்குச் சென்றபோதுதான் இந்தப் போதைக் கும்பலின் அறிமுகம் கிடைத்துள்ளது. அங்கு இருவரும் அந்த மாத்திரையைச் சாப்பிட்டுள்ளனர். அவர்கள் மூலம் சென்னைக்கு சப்ளை செய்யத்தான் சுக்வா வந்துள்ளார். அப்போதுதான் மூவரையும் பிடித்துள்ளோம். இன்டர்நேஷனல் போதை மாஃபியா கும்பலுடன் தொடர்புள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக விசாரித்துவருகிறோம்" என்றனர்.

சுக்வா, உயரமாக பருமனாகவும் இருக்கிறார். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸாரோ சுக்வாவின் தோள்பட்டைக்கு கீழே இருந்துள்ளனர். அதைப்பார்த்த போலீஸ் உயரதிகாரி ஒருவர் இவரையா நீங்கள் பிடித்தீர்கள் என்று ஆச்சர்யத்துடன் கேட்டுள்ளார். அதோடு தனிப்படை போலீஸாரையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...