Thursday, May 30, 2019

தலையங்கம்

2–வது இன்னிங்சை தொடங்குகிறார் மோடி



இந்தியாவின் 14–வது பிரதமரான நரேந்திரமோடி 2–வது முறையாக இன்று மாலை பிரதமராக பொறுப்பு ஏற்கப்போகிறார்.

மே 30 2019, 04:00

இந்தியாவின் 14–வது பிரதமரான நரேந்திரமோடி 2–வது முறையாக இன்று மாலை பிரதமராக பொறுப்பு ஏற்கப்போகிறார். பொதுவாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாடுதான் தேர்தலின்போது காணப்படும். ஆனால், பா.ஜ.க.வோ கடந்த தேர்தலின்போது 282 இடங்களில் தனித்து வெற்றிபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 303 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த இந்தியாவை மட்டுமல்லாமல், உலகத்தையே வியக்கவைக்கிறது. நரேந்திரமோடி இன்று மாலைதான் பதவி ஏற்கிறார் என்றாலும், பதவி ஏற்றவுடன் மிக மின்னல்வேகத்தில் செயல்படப்போகிறார் என்பதை பிரதமரின் அலுவலகம், தற்போது பல்வேறு துறைகளுடன் தொடர்புகொண்டு அடுக்கடுக்காக பல தகவல்களை கேட்கும் வேகத்திலேயே தெரிகிறது.

பதவி ஏற்பு விழாவுக்கு கடந்தமுறை சார்க் நாடுகளை சேர்ந்த தலைவர்களை அழைத்திருந்தார். இப்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறி, ‘பிம்ஸ்டெக்’ என்று கூறப்படும் வங்காள விரிகுடா கடலின் ஓரமாக உள்ள வங்காளதேசம், இலங்கை, பூடான், நேபாளம், மியான்மர், தாய்லாந்து நாடுகளின் தலைவர்களையும், கிர்கிஸ்தான், மொரீசியஸ் தலைவர்களையும் அழைத்திருக்கிறார். இந்த பட்டியலின் அடிப்படையில், அவர் அழைப்புவிடுத்திருப்பதால், பாகிஸ்தான் இந்த பட்டியலில் வரவில்லை. இன்று பதவி ஏற்றதும், பிரதமர் அடுக்கடுக்கான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறார். அடுத்த சிலநாட்களில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யவேண்டிய கட்டாயம் இருப்பதால், உடனடியாக பிரதமரும், புதிதாக பொறுப்பேற்கப்போகும் நிதி மந்திரியும் பட்ஜெட் தயாரிப்பில் மிகத்தீவிரமாக ஈடுபட வேண்டியநிலை உள்ளது. ஒவ்வொரு துறையிலும் அடுத்த 100 நாட்களில் நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பாஜ.க. தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் நிறைவேற்றவேண்டும். முதல்கட்டமாக வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தொழில்துறையிலும் வேலைவாய்ப்புகள் வேண்டும், வேளாண்துறையிலும் வேலைவாய்ப்புகள் வேண்டும், தொழில்துறையில் வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கவேண்டுமென்றால், தனியார் தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். வெகுநாட்களாக தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பான நிறுவன வரிகுறைப்பை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்புகள்.

விவசாயத்தை பொறுத்தமட்டில், கிராமத்தில் உள்ள விவசாயிகளின் பையில் பணம் இருந்தால் ஊரக பொருளாதாரம் உயரும் என்பது நியதி. எனவே, அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். 2022–ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகப்போவதை ஒட்டி, அதை இலக்காக வைத்து பிரதமர் நரேந்திரமோடி 1,000 நாளில் அவரது அரசாங்கம் நிறைவேற்றவேண்டிய திட்டங்களை எல்லாம் வகுத்து செயல்படுவார் என்ற நம்பிக்கை நாட்டு மக்களுக்கு நிறைய இருக்கிறது. கடந்த தேர்தலின்போது அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘அனைவரோடும் இணைவோம், அனைவரும் முன்னேறுவோம்’ என்ற முழக்கத்தை வெளியிட்டிருந்தார். ஆனால், இப்போது அவர் பேசும்போது, ‘இந்த முழக்கத்தோடு அனைவரின் நம்பிக்கையையும் பெற்று’ என்ற வாசகத்தை சேர்த்திருக்கிறார். ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களிடம் பேசும்போது, ‘நமக்கு எதிராக ஓட்டளித்தவர்களும் நம்மவர்கள்தான்’ என்று கூறியிருக்கிறார். இது தமிழக மக்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. தமிழக மக்களின் எதிர்பார்ப்பான கோதாவரி–காவிரி இணைப்பு திட்டத்துக்கான முயற்சிகளை உடனடியாக தொடங்கி, தமிழக மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும். மொத்தத்தில், இந்தமுறை அவரது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கப்போகிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அவரது 2–வது இன்னிங்சில் எத்தனை ரன்கள் குவிப்பார் என்பதை வருங்காலம் காட்டும்.

No comments:

Post a Comment

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefits

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefit...