Sunday, July 28, 2019

தில்லானா மோகனாம்பாள்’ கதையை 12,500க்கு வாங்கிய ஏ.பி.நாகராஜன்; நாகேஷின் ’வைத்தி’ கேரக்டரில் நடிக்க விரும்பினார்; படத்தைப் பார்க்க மனமில்லாத கொத்தமங்கலம் சுப்பு



வி.ராம்ஜி

தில்லானா மோகனாம்பாள் - 51

உச்சரிக்கும் போதே ஓர் கம்பீரம் தொற்றிக்கொள்ளும் அடைமொழி. அது... நடிகர்திலகம். சிவாஜி நடித்த படங்களில், பிடித்த படங்களைப் பட்டியலிடுங்கள், ஆனால் ஒருவர் எழுதுவது ஒருவருக்குத் தெரியக்கூடாது என்று சொல்லிவிட்டு, எழுதச் சொன்னால், பலரும் எழுதிய அந்தப் பட்டியல் ஒவ்வொன்றிலும் நிச்சயமாக பல படங்கள் இருக்கும். அதில் அவர் எழுதியதை இவரும், இவர் எழுதியதை அவருமாக என பலரும் எழுதியிருப்பார்கள். அந்தப் படம்... ‘தில்லானா மோகனாம்பாள்’.
சிவாஜியின் வாழ்வில் மிக முக்கியமான படம். ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் ஆகச்சிறந்த படம். பத்மினியின் படங்களில் முதலில் எழுதவேண்டிய படம். கே.வி.மகாதேவன் இசையில் வெளியான படங்களில், கவனம் ஈர்த்த படம். அந்தக்காலத்து வண்ணப்படங்களில், நம்மை வெகுவாகக் கவர்ந்த படம். பொதுவாக ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால்... தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படம்... ’தில்லானா மோகனாம்பாள்’.

கொத்தமங்கலம் சுப்பு விகடனில் எழுதிய தொடர்கதை இது. எழுதும்போதே எல்லோராலும் வாசிக்கப்பட்டது; நேசிக்கப்பட்டது. சிவாஜி, பத்மினி, நாகேஷ், மனோரமா, பாலையா, பாலாஜி என பலரும் நடிக்க வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ திரையில் காட்டிய ஜாலம்... வர்ணஜாலம். படம் ரிலீசான போது, மக்கள் பார்த்துப் பரவசமானார்கள். கொண்டாடித்தீர்த்தார்கள். இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டே இருக்கிறார்கள்.
’சிவாஜி ஓவர் ஆக்டிங் பண்ணுவாருப்பா’ என்று கேலி பேசியவர்கள் கூட, சிக்கல் சண்முகசுந்தரம் என்கிற கேரக்டரை சிவாஜி செய்ததை ரொம்பவே ரசித்துச் சிலிர்த்தார்கள். படத்தில், ஒரு இடத்தில் கூட மிகையான நடிப்பை வழங்கியிருக்கவே மாட்டார் சிவாஜி. அதேபோல், பத்மினியும் தன் இயல்பான நடிப்பால் நம்மைக் கட்டிப்போட்டுவிடுவார்.

நாகேஷ், நம்பியார், மனோரமா, பாலாஜி, சி.கே.சரஸ்வதி, ஏவிஎம்.ராஜன் முக்கியமாக பாலையா என எல்லோரும் அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பார்கள்.

ஓர் உண்மையான கலைஞனுக்கே உண்டான கர்வம். ஆகவே நாட்டியமாடும் மோகனாவை அலட்சியமாகவே பார்ப்பார் நாகஸ்வரக் கலைஞர் சிக்கல் சண்முகசுந்தரம். ஆனால் உள்ளுக்குள்ளே பிரியத்தை இருவருமே வைத்திருப்பார்கள். நடன மங்கை மோகனாவை அடைவதற்காக ஒவ்வொரு தருணத்திலும் யார் யாரோ சூழ்ச்சிகள் செய்வார்கள். ஆனால் அதற்கெல்லாம் மயங்காமல், நடனத்தை ஒரு கண்ணாகவும் சிக்கல் சண்முகசுந்தரத்தின் மீதான காதலை இன்னொரு கண்ணாகவும் கொண்டு உறுதியுடன் நிற்பார்.
கொத்தமங்கலம் சுப்பு, தனது ‘தில்லானா மோகனாம்பாள்’ கதையில், ஒவ்வொரு கேரக்டரையும் மிக அழகாக வடித்திருப்பார். ஆனந்த விகடனில், இரண்டு வருடங்கள் தொடராக வந்த கதை. அந்த இரண்டு வருடங்களும், புத்தகத்தை கையில் வாங்கியதும், இந்தத் தொடரைப் படித்துவிட்டுத்தான் அடுத்த பக்கங்களுக்குத் தாவுவார்கள் வாசகர்கள்.

‘’அப்பாவுக்கு ‘தில்லானா மோகனாம்பாள்’ கதையை சினிமாவாக்கணும்னு ஆசை. அதுவும் ஜெமினி நிறுவனமே தயாரிக்கணும்னு ஆசை. இதுதொடர்பா, வாசன் சார்கிட்ட அப்பா சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தன்னோட ஆசையைச் சொல்லிக்கிட்டே இருந்தார். இதே சந்தர்ப்பத்துல, ‘கதையோட உரிமையைக் கொடுங்க’ன்னு நிறைய தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் அப்பாகிட்ட கேட்டுக்கிட்டே இருந்தாங்க. ஆனா, ஜெமினி தயாரிக்கணுங்கறதுல உறுதியா இருந்தார் அப்பா.

அந்த சமயத்துலதான், ஏ.பி.நாகராஜன் இயக்கத்துல, சிவாஜியும் பத்மினியும் நடிக்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’ படப்பிடிப்பு ஆரம்பம்னு பேப்பர்ல விளம்பரம் வந்துச்சு. கதையை, 10,000 ரூபாய்க்கு கொடுத்துட்டதாச் சொன்னார். இதுல அப்பாவுக்கு ரொம்பவே வருத்தம்தான்’’ என்கிறார் எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்புவின் மகன்களில் ஒருவரான சீனிவாசன்.
அவரே மேலும் தொடர்ந்தார்...

‘’அப்புறம் என்ன நினைச்சாரோ தெரியல. ‘இந்தாங்க...’என்று பத்தாயிரம் ரூபாயை அப்பாவுக்கு கொடுத்துட்டார் வாசன். அதன் பிறகு, அப்பாவுக்குக் கண்ணுல ஆபரேஷன். ஏ.பி. நாகராஜன் ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்தார். ’ஜீவனுள்ள கதை. நடிகர்களை நல்லபடியா நடிக்கவைச்சு, நல்ல படம்னு பேரு சம்பாதிக்கணும். வாழ்த்துகள். ஆசிகள்’னு அப்பா சொன்னார். அப்போ ஏ.பி.நாகராஜன், ‘இந்தாங்க... இந்தத் தொகையையும் வைச்சுக்கங்க’ன்னு சொல்லி, 2,500 ரூபாய் கொடுத்தார். ஆக, ‘தில்லானா மோகனாம்பாள்’ கதையை 12,500க்கு வாங்கி, சினிமாவா எடுத்தாங்க.

இந்த சமயத்துல ரெண்டு விஷயத்தைச் சொல்லியாகணும். கதையை எழுதின அப்பாவுக்கு நாகேஷ் பண்ணின வைத்தி ரோல்ல நடிக்கணும்னு ஆசைப்பட்டார். அதேபோல, படம் வெளியாச்சு.எல்லாரும் படம் பிரமாதம்னு அப்பாகிட்ட சொன்னாங்க. ‘ஒரு நாவல், சினிமாவாகறது லேசுப்பட்ட காரியம் இல்ல. ஆனா ஏ.பி.நாகராஜன் அவ்வளவு அழகா, கையாண்டிருக்க்கார். சிவாஜி, பத்மினின்னு எல்லாருமே நடிப்புல தனிக்கவனம் செலுத்தியிருக்காங்க. இதெல்லாம் தெரிஞ்சவங்களும் படம் பாத்தவங்களும் சொல்லித்தான் தெரியும். ஏன்னா... ‘தில்லானா மோகனாம்பாள்’ கதையை எழுதின அப்பா கொத்தமங்கலம் சுப்பு, கடைசிவரைக்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தைப் பாக்கவே இல்லை.

இவ்வாறு கொத்தமங்கலம் சுப்புவின் மகன் சீனிவாசன் தெரிவித்தார்.
1968ம் ஆண்டு, ஜூலை 27ம் தேதி, ‘தில்லானா மோகனாம்பாள்’ ரிலீசான நாள். இன்றுடன் படம் வெளியாகி, 51 வருடங்களாகிவிட்டன. இத்தனை வருடங்கள் கழித்து மட்டுமின்றி, காலமெல்லாம் சண்முகசுந்தரத்தையும் மோகனாம்பாளையும் கொண்டாடிக் கொண்டே இருப்பார்கள் ரசிகர்கள்!

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...