Sunday, July 28, 2019

mampala-niram
நீலநிறப்பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்.
அத்திவரதர் பெருவிழாவினை முன்னிட்டு 27-ஆவது நாளான சனிக்கிழமை அத்திவரதர் தரிசனத்துக்கு சுமார் 6 மணி நேரமானது.
அத்திவரதர் நீலநிறப் பட்டாடையிலும், அதே நிற அங்கவஸ்திரத்திலும், முத்து கிரீடத்துடனும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
செண்பகப்பூ மற்றும் கதம்பத்தால் செய்யப்பட்ட மாலையும், பெருமாளுக்கென்றே பிரத்யேகமாக செய்யப்பட்ட ஏலக்காய் மாலையும் அணிந்திருந்தார். அதிகாலையில் சகஸ்ரநாம அர்ச்சனையும் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பட்டாச்சாரியார்கள் நன்கொடையாளர்களால் தயாரித்து கொடுக்கப்பட்ட அத்திவரதர் திருஉருவப்படங்களை இலவசமாக வழங்கினர்.
கூடுதல் போலீஸ் பாதுகாப்பு: 
கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வரிசையில், பொது வரிசையில் வரும் பக்தர்கள் வந்ததாலும், காவல் துறையினர் பாரபட்சமாக செயல்பட்டு  தங்களுக்கு வேண்டியவர்களை முக்கிய பிரமுகர் வரிசை வழியாக அனுப்பியதாலும் போலீஸாருக்கும், பக்தர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. சனிக்கிழமை இதனை தவிர்க்கும் வகையில் முக்கிய பிரமுகர்கள் வரிசையின் நுழைவுவாயில் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவின் பேரிலும், எஸ்.பி.கண்ணன் தலைமையில் ஏ.எஸ்.பி.ராஜேஷ்கண்ணா, டி.எஸ்.பி.மகேந்திரன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். 
மேலும் முக்கிய பிரமுகர்கள் வருவதற்காக மேற்கு கோபுர வாயில் பகுதியில் இரவோடு இரவாக இரும்பாலான தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் நெரிசலின்றி, பக்தர்கள் வந்ததால் முக்கிய பிரமுகர்கள் வரிசை ஓரளவுக்கு சீராகியது.
சுவாமியை தரிசிக்க 6 மணி நேரம்: அத்திவரதரை பொதுவரிசையில் சென்று தரிசிக்க சுமார் 6 மணி நேரம் வரை ஆனதாக  பக்தர்கள்  தெரிவித்தனர். முக்கிய பிரமுகர்கள் வரிசையில் சிறப்பு அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஒரு மணி நேரத்தில் சுவாமியை  தரிசிக்க முடிந்தது.
ளிமாவட்டங்களிலிருந்து அத்திவரதரை தரிசிக்க வருவோர் முதல் நாள் நள்ளிரவே வந்து பேருந்துநிலையம்,கடை வீதிகள் ஆகியனவற்றில் படுத்து உறங்குகின்றனர். அவர்கள் போதுமான கழிப்பறை வசதியில்லாமலும், கழிப்பறைகள் இருக்கும் இடம் தேடி அலைவதையும் காண முடிந்தது. 
கூட்டம் அதிகமாக இருந்ததால், காணாமல் போனவர்கள் குறித்து காவல்துறையினர் அவ்வப்போது கோயில் வளாகத்தில் உள்ள ஒலிபெருக்கியில் ஒலிபரப்பிக் கொண்டிருந்தனர். திருக்கோயில் மாட வீதிகளில் பக்தர்கள் விட்டுச்சென்ற காலணிகள் மலைபோலக் குவிந்து கிடந்தன. ஒரு சில இடங்களில் தனியார் சிலர் நடைபாதைகளை ஆக்கிரமித்துக் கொண்டு காலணிகளை பாதுகாக்க ரூ.5 வீதம் வசூலித்ததையும் பார்க்க முடிந்தது.
சுவாமி தரிசனம் செய்த முக்கிய பிரமுகர்கள்: அத்திவரதரை தரிசனம் செய்ய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. சுவாமி தரிசனத்துக்குப் பின்னர் கடவுள் நம்பிக்கை இருந்தால் தனிமனித ஒழுக்கம் மேம்படும். 
நமது நாடு சைவம், வைணவம் என அனைத்து வகையிலும் சிறப்பாக விளங்குகிறது என்பதை சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் மதக் கோட்பாடுகளை காக்கும் உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார். திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் நீதிபதிகள், தமிழக அரசு உயர் அதிகாரிகள் பலரும் சுவாமி தரிசனம் செய்தனர்.
அத்திவரதரை சனிக்கிழமை 2.30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

பாா்வை மாற வேண்டும்!

 பாா்வை மாற வேண்டும்!  ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. 14.04.2025 கோதை ...