Sunday, July 14, 2019

களத்தில் இறங்குது ரசிகர் மன்றம் ஏ.சி.சண்முகத்திற்கு ரஜினி ஆதரவு

Added : ஜூலை 14, 2019 02:27 

வேலுார் லோக்சபா தேர்தலில் போட்டியிடும், புதிய நீதிக் கட்சி தலைவர், ஏ.சி.சண்முகம், தன், 35 ஆண்டு கால நண்பர் என்பதால், அவருக்கு ஆதரவாக, தேர்தல் பணி செய்யும்படி, வேலுார், திருவள்ளூர் மாவட்ட மன்ற நிர்வாகிகளுக்கு, நடிகர் ரஜினி உத்தரவிட்டுள்ளார்.

வேலுார் லோக்சபா தேர்தல், அடுத்த மாதம், 5ல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி ஆதரவில், ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து, தி.மு.க., பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிற்கிறார். இரண்டு வேட்பாளர்களும், பண பலத்தில் சம பலம் உடையவர்கள் என்பதால், தொகுதியில் தண்ணீராக, பணம் பாயும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

ஆளுங்கட்சி சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் இடம் பெற்ற தேர்தல் பணிக் குழுவும், தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மாவட்டச் செயலர்கள் அடங்கிய தேர்தல் பணிக் குழுவும் களத்தில் இறங்கி உள்ளன.சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், வரும், 21 முதல் வேலுாரில் முகாமிட, இரு கட்சியினரும் திட்டமிட்டுள்ளனர்.அ.ம.மு.க., சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்பதால், அக்கட்சியின் ஆதரவாளர்கள், தி.மு.க., வேட்பாளருக்கு மறைமுகமாக, தேர்தல் பணி செய்வரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தினர், மன்ற கொடியை பயன்படுத்தாமல், ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக பணியாற்ற வேண்டும் என, வேலுார், திருவள்ளூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு, ரஜினி தரப்பிலிருந்து, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டுஉள்ளது.
இது குறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:ரஜினியும், ஏ.சி.சண்முகமும், 35 ஆண்டு கால நண்பர்கள். அரசியல் பிரவேசத்தில் ரஜினி குதித்ததும், சென்னை, மதுரவாயலில் உள்ள, ஏ.சி.சண்முகத்திற்கு சொந்தமான கல்லுாரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள, எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழாவில் சிறப்புரை ஆற்றினார்.

இந்த விழாவில், எம்.ஜி.ஆர்., பற்றி ரஜினி புகழ்ந்து பேசி, எம்.ஜி.ஆர்., ரசிகர்களையும், தொண்டர்களையும் ஈர்த்தார். ரஜினி மக்கள் மன்றம் சார்பில், பொது மக்களுக்கு இலவச தண்ணீர் லாரிகளை அனுப்பி வைப்பதற்கு, ஏ.சி.சண்முகமும் உதவி புரிந்துள்ளார்.எனவே, அவருக்கு ஆதரவாக, தேர்தல் பணியாற்ற வேண்டும் என, எங்கள் தலைமை உத்தரவிட்டு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அத்திவரதரிடம் கட்சி கொடி!

ஓரிரு நாளில், காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை, தன் குடும்பத்தினருடன் தரிசிக்க, ரஜினி முடிவு செய்துள்ளார். அப்போது, தன் கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்ட விபரங்களை எழுதி எடுத்துச் சென்று, அத்திவரதரிடம் வைத்து, ஆசி பெற, ரஜினி திட்டமிட்டு உள்ளார்.அடுத்த மாதத்தில், மன்ற மாநாடு நடத்தி, கொடி, சின்னத்தை அறிமுகப்படுத்த, ரஜினி தயாராகி வருவதாக, மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...